இந்த வாரம் இப்படி நவம்பர், 4, 2000

This entry is part [part not set] of 10 in the series 20001104_Issue

சின்னக்கருப்பன்


நார்வேஜியன் தூதுவர் பிரபாகரன் சந்திப்பு

தூரத்தில், வெகு தூரத்தில் ஒரு நம்பிக்கை வெளிச்சம் இதனால் தெரிகிறது. தமிழ் மக்களின் ஈழக்கனவு இதனால் நிறைவேறினால் மகிழ்ச்சி. அந்தப் பகுதி குழந்தைகள் மீண்டும் குழந்தைகளாக வலம் வருவார்களா ? வன்முறை குறையுமா ? அடக்குமுறை ஒழியுமா ? காலமும், தலைவர்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.

எந்த கோட்பாடும், எந்த கொள்கையும் ஒரு குழந்தை கொல்லப்படுவதையும் ஒரு குழந்தை ஏகே47 வைத்துக்கொண்டு நிற்பதையும் நியாயப்படுத்திவிட முடியாது.

காஷ்மீர ஷியா வகுப்பைச்சார்ந்த அரசியல் தலைவர் ஹிஜ்புல் முஜாஹிதீனால் கொலை

காஷ்மீரில் போராடும் பல தீவிரவாதக்குழுக்களும், தலைவர்களும் சன்னி வகுப்பைச் சேர்ந்தவர்கள். சன்னி வகுப்பு சவூதி அரேபியாவின் அரசாங்க வகுப்பு. ஈரான் தவிர மற்றெல்லா நாடுகளிலும் சன்னி வகுப்பாரே பெரும்பான்மை. பாகிஸ்தானில் இருக்கும் பல தீவிரவாத குழுக்கள் சன்னி வகுப்பைச் சேர்ந்தவை. இவை ஷியா வகுப்பார் முஸ்லீமே இல்லை என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஷியா வகுப்பார் கல்லரைகளில் குண்டு போடுவதும், ஷியா மசூதிகளில் குண்டு போடுவதும் மிக மிக சாதாரணம். இதில் சிப்பாஹிசாஹிபா என்ற தீவிர வாத அமைப்பு மிக முக்கியமானது. இது பாகிஸ்தானுக்குள்ளேயே போராடும் அமைப்பு. ஷியா வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஈரானிய தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் மீது குண்டு எறிந்து கொலை செய்தது. சமீபத்தில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை பாகிஸ்தானிய ராணுவ அரசு விடுவித்தது ஈரானிய அரசின் கோபத்துக்கு காரணமாகி விட்டது. பாகிஸ்தானிய அரசுக்கு ஏதோ வேறொரு காரணம் இருப்பதாக தோன்றுகிறது.

காஷ்மீரில் ஷியாக்கள் இந்திய ஆதரவாக இருப்பது பாகிஸ்தானின் கோபத்துக்கு காரணமாக இருக்கலாம். அதற்காக ஷியா தலைவரை கொன்றது, பாகிஸ்தானிய ஷியாக்களின் கோபத்துக்கு பாகிஸ்தானிய அரசு ஆளாக நேரிடலாம். பஸ்மாஸ்வர வரமாக, பாகிஸ்தான் ஆதரவு கொடுக்கும் தீவிரவாதம் அதற்கே ஆபத்தாக விடியும் நாள் வெகு விரைவில் இல்லை.

கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் விசாரணை முடிவு

கிரிக்கெட் சூதாட்டத்தில் குற்றம் சாட்டப் பட்டுள்ளவர்களாய் அஜாருதீன் மற்றும் மூவர் உள்ளனர். கபில் தேவ் மீது குற்றம் இல்லையென்று சொல்லியுள்ளார்கள். இந்த முடிவை பிரபாகரும், ஜடேஜாவும் ஆட்சேபிக்கிறார்கள்.

என்ன இருந்தாலும் ஒரு சாதாரண ரசிகனுக்கு கிரிக்கெட்டில் மீண்டும் ஆர்வம் வருவதற்கு வெகு காலம் ஆகும் என்றே தோன்றுகிறது.

புதிய மாநிலங்கள் உருவாக்கம்.

சோனியா விசுவாசியான அஜித் ஜோகிக்கு சத்தீஸ்கார் மாநில முதல்வர் பதவி பரிசாகக் கிடைத்துள்ளது. அவர் பழங்குடியினரே அல்ல என்று சிலர் சொல்கிறார்கள். மாநில முதலமைச்சராக பதவி ஏற்கும் நாள் அன்று எல்.கே.அத்வானியிலிருந்து பல அமைச்சர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்திருக்கிறார்கள். பல அரசியல் கசப்புகளுக்கு நடுவில் ஜனநாயக பண்பாடு தொடர்ந்து காப்பாற்றப்பட எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு செயலும் பாராட்டப்பட வேண்டியது.

ஜார்கண்ட் மானிலத்திற்காகப் போராடிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டது கிடைக்கவில்லை. அங்கு பாஜக முதலமைச்சர் பதவியை கைப்பற்றும் என்று தெரிகிறது. ஜார்க்கண்ட் தலைவருக்கு அந்த கட்சியிலேயே பெருத்த ஆதரவில்லை என்பது அவருக்கு கசப்பான செய்தியாக இருக்கிறது.

மதுரையில் தமிழ் நாட்டில் இன்னொரு மானிலம் கோரி பல அரசியல் கட்சிகள் கூடி ஒரு மாநாடு ஒன்று நடந்துள்ளது. இது ஒரு முக்கியமான திருப்பு முனை என்றுசொல்ல வேண்டும். நான் தான் தமிழினத் தலைவர் என்று ஆளாளுக்கு மார் தட்டிக் கொண்டு மக்களிடம் வெறியைப் பரப்புவது இதனால் குறைய வாய்ப்புண்டு. குறைந்தது சென்னையில் மட்டும் கொள்ளையிடப்படும் மக்கள் பணம் பரவலாக பலராலும் கொள்ளையிடப்பட்டால் பல பேர் பணக்காரராக வாய்ப்புண்டு.

டான்ஸி ஊழல் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை.

இந்தத் தள்ளிவைப்பின் அர்த்தம் என்னவென்று புரியவில்லை. தண்டனை ரத்து செய்யப் படவில்லை. எனவே தேர்தலில் ஜெயலலிதாவும், அசிஃப்பும், சசிகலாவும் போட்டியிட முடியாது என்று எண்ணுகிறேன். அப்பீலில் குற்றமற்றவர் என்று நிரூபணம் பெற்று தண்டனை ரத்து செய்யப் பட்டால் தான் தேர்தலில் நிற்கும் தகுதியை மீண்டும் பெறமுடியும்.

இந்த செய்தியை என் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். லோ லோ என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அந்தம்மா குடுகுடு கிழவியாய் ஆனால் கூட இந்த வழக்கு முடியவில்லை என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். எப்போதோ செய்த தவறுக்கு இப்போது தண்டனையா என்று பேச ஆரம்பித்தால் கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை. தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி கொடுக்கப்படாத நீதி Justice delayed is justice denied என்பது முக்கியமாக இந்த நீதிபதிகள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

கொள்ளையிடப்பட்டிருப்பது மக்கள் வரிப்பணம். மக்கள் நடுவில் அது ‘அந்தம்மா என் பணத்தையா எடுத்துத் தின்னிச்சி ? எனக்கென்ன போச்சி ? ‘ என்றும், ‘உன் பணத்தையா அந்தம்மா எடுத்திச்சி ? நீ ஏன் அந்தம்மாவை பழிவாங்கறே ? ‘ என்றும் பேசப்படுவது வருந்தத்தக்கது.

இதற்கெல்லாம் மூல காரணம், மக்கள் அனைவரும் மறைமுக வரி செலுத்துவதுதான். நேர்முக வரியாக செலுத்தும்போது அவர்களுக்கு வருடா வருடம் தான் கொடுக்கும் வரி எவ்வளவு என்பது தெரிந்திருக்கும். அப்போது, மேல் மட்டத்தில் ஊழல் செய்த செய்தி வரும்போது, தன் பணம் கொள்ளையடிக்கப்பட்டது உணரப்பட்டிருக்கும்.

***

ஜாக்கி சானும் பிரபு தேவாவும்.

எனது அபிமான நடிகரான ஜாக்கி சான் நடித்த இரு படங்களைப் பார்த்தேன் (Shanghai Noon, Legend of the Drunken Master). தன் ஸ்டண்ட் காட்சிகளைத் தானே செய்கிற ஜாக்கி சான், சண்டையிடுவது எனக்கு பிரபு தேவாவின் நடனத்தை நினைவூட்டுகிறது. இருவருக்குமே நகைச் சுவை உணர்வும், தம்மை அவ்வளவாய்ச் சீரியஸாய் எடுத்துக் கொள்ளாத ஒரு ‘லேசான ‘ தன்மையும் உள்ளன. பிரபு தேவாவின் நடனத்தில் ஒரு எக்களிப்பும், பிரமாதமான மகிழ்ச்சி வெளிப்பாடும் உள்ளது போலவே, ஜாக்கி சானின் சண்டையிலும், ரத்தம் பீறிடல், வெட்டிக் கொள்ளுதல் எதுவும் இல்லாமல், அழகியல் ததும்பும் அசைவுகளும், சைகைகளும் உள்ளன.

பிரபுதேவாவின் ‘சின்ன ராசாவே சித்தெரும்பு என்னை கடிச்சிதாம்.. ‘ என்ற பாடலைப்பாருங்கள். காரும் புடவையும் கூடையும் எப்படி பிரபுதேவாவின் ஜீனியஸில் நடனமாடுகின்றன என்பது தெரியும். எதிர்பார்க்காத நடன ஆச்சரியம் பிரபுதேவா.

இந்த வாரம் இவர்களை தமிழ் அரசியல் பாணியில் வாழ்த்தி முடிக்கிறேன்.

வாழ்க அண்ணன் ஜாக்கிசான்! வளர்க, அவரது சண்டை!!

வாழ்க தம்பி பிரபுதேவா! வளர்க அவரது நடனம்!!

Series Navigation