இந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

மஞ்சுளா நவநீதன்


ஐந்தாவது வகுப்பில் அரசுத் தேர்வு இல்லை

இப்போதைக்கு ஐந்தாவத் வகுப்பில் அரசுத் தேர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. இப்போதைக்கு என்ற சொல்தான் கொஞ்சம் தடுமாற்றத்தை அளிக்கிறது. திடாரென்று யோசனை வந்து கல்வி பற்றி ஏதும் அறியாத கல்வி அமைச்சர் யாரேனும் ஐந்தாவது, ஆறாவது , ஏழாவது என்று வரிசையாக அரசுத் தேர்வுகள் நடத்த ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு தேர்வின் மிடிவில் ஒரு மாணவனின் எதிர்காலமே தொங்கிகொண்டிருக்கும் ஒரு அவலமான கல்வித்திட்டம் நம்முடையது. இப்படிப்பட்ட தேர்வுகளின் அச்சுறுத்தல்கள் போக வேண்டுமானால், எப்போது வேண்டுமானாலும், எந்த வயதிலும் இந்தத் தேர்வுகளை எழுதலாம் என்பது போல் குறைந்தபட்சமாய் ஒரு முடிவு எடுக்கப் பட்டால் மாணவர்கள் மீது சற்று சுமை குறையலாம். அது போல் பள்ளித் தேர்வுகளுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் உள்ள உயர்வயது வரம்பையும் போக்கினால் நல்லது.

*********

முஷரஃப் – ஒரு முக்கிய பேச்சு – பல இடைவெளிகள்.

மேற்கு நாடுகளின் நிர்ப்பந்தத்தால் – முக்கியமாக அமெரிக்காவின் நெருக்குதலால் – பாகிஸ்தானிய சர்வாதிகாரி சில வரவேற்கத்தக்க முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். சில பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. மதப்பள்ளிகள் சீர்திருத்தம் செய்யப்பட்டு மத அடிப்படைவாதத்திலிருந்து விலகி மற்ற அறிவியல் போன்றவற்றையும் பயில்விக்கும் என அறிவித்திருக்கிறார்.

இவருடைய பேச்சைப் பாராட்டுபவர்கள் சில அடிப்படையான விஷயங்களை உணர்ந்ததாய்த் தெரியவில்லை. ஒரு நாட்டின் அடிப்படையான நாகரீகம் மற்ற அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவு கொள்வதும், அங்கு உள்ள பிரசினைகளைப் பெரிது பண்ணித் தூண்டிவிடாமல் இருப்பதும் ஆகும். தம்முடைய மக்களின் அன்றாட வாழ்வின் நலன் கருதி, போரைத் தவிர்ப்பதும், சமாதான சகவாழ்வுக்கான முயற்சிகள் மேற்கொள்வதும் ஒரு நாட்டின் தலைவர்களின் கடமை. இந்த அடிப்படையைப் பேணிப் பாதுகாக்கும் அளவில் பாகிஸ்தான் எதிர்காலத்தில் முயலும் என்று நம்பிக்கை தரும் வகையில் முஷரஃபின் பேச்சு அமையவில்லை. மாறாக தற்காலிகத் தப்பித்தலாக ஒரு சில அமைப்புகளைத் தடை செய்வதாய்த் தான் உள்ளது. இந்த வேடத்தை நம்பி இந்தியா நிச்சயம் ஏமாறலாகாது.

காஷ்மீர்ப்பிரசினையில் மற்ற பாகிஸ்தான் தலைவர்கள் போலவே பாகிஸ்தானுக்கு காஷ்மீர்ப் பிரசினை தலையாயது என்று அறிவித்திருக்கிறார். அதாவது காஷ்மீர்ப் பிரசினையில் தலையீடு இருக்காது என்று திட்டவட்டமாக அறிவிக்கவில்லை.

முஷரஃப் பாகிஸ்தான் ராணுவ சாதியின் பிரதிநிதி. தேர்தல்களிலோ , மக்களாட்சியிலோ சற்றும் நம்பிக்கையில்ல்லாத ஒரு வர்க்கம் பாகிஸ்தான் ராணுவம். பாகிஸ்தானில் தம்முடைய ஆட்சி தொடர்வதற்காக காஷ்மீர்ப் பிரசினையை உயிர்ப்புடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் மக்களிடமும் இது ஏதோ அனைத்து பாகிஸ்தான் மக்களின் பிரசினை என்ற பிரமையை உருவாக்கி வளர்த்து வரும் ஓர் அமைப்பு பாகிஸ்தான் ராணுவம். எனவே முஷ்ரஃப் இருக்கும் வரைக்கும், பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் பாகிஸ்தான் இருக்கும் வரைக்கும், பாகிஸ்தான் ஒரு நட்புறவு கொள்ளத் தக்க நாடாக மாறும் என்று நம்பிக்கை யாருக்கும் வராது.

**********

போப்பாண்டவர் மன்னிப்புக் கேட்கிறார்.

தற்போதைய போப் பல விதங்களில் மிக வித்தியாசமானவர். யூதர்களின் மீதான வெறுப்பு மிகத் தவறு என்று அறிவித்தவர். மதத்தினால் வன்முறையை நியாயப்படுத்துவது மிகத்தவறு என்று அறிவித்தவர். கலிலியோவிற்கு நிகழ்ந்த அநீதி பற்றியும் வருத்தம் தெரிவித்தவர். இப்போது பசிஃபிக் தீவுகளில் கிருஸ்தவ மதம் பரப்புவோர் செய்த அநீதிகளுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதும் அதில் நடந்த அநீதிகளை அங்கீகரித்து அவற்றிற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் வரலாற்றைப் பயில்வதும் தான், சரியான எதிர்காலப் பாதையினை அமைக்க துணை செய்யும்.

இப்படி முற்போக்குக் கொள்கைகள் கொண்ட அவருடைய சமீபத்திய கட்டளையில் ஒன்று மிக உறுத்தலாய் இருக்கிறது. கத்தோலிக்கப் பாதிரியார்களின் தவறான நடத்தைகளை – முக்கியமாய் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்யும் போக்குகள் – உள்ளூர்க் காவல் துறையினருக்குத் தெரிவிக்கலாகாது , மாறாக கத்தோலிக்க அமைப்பின் மேலாளர் பொறுப்பில் இருப்பவர்களிடம் முறையீடு செய்ய வேண்டும் என்ற ஒரு வழிகாட்டல் செய்திருக்கிறார். இது கத்தோலிக்க பாதிரியார்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடும் வாய்ப்பு உள்ளது.

*********

கமல் ரஜனி ரசிகர்கள் மோதல்

இது வரையில் எம் ஜி ஆர் -சிவாஜி ரசிகர்கள் மோதல் கேள்விப்பட்டிருக்கிறோம். திருவரங்கத்தில் ரஜனி – கமல் ரசிகர்கள் மோதல் என்ற செய்து வெளியாகியுள்ளது. சிவாஜி – எம் ஜி ஆர் வெவ்வேறு கட்சிகளில் இருந்தனர என்பது முந்திய மோதல்களுக்குக் காரணமாய் இருந்திருக்கலாம். இன்று ரஜனியோ கமலோ எந்த அரசியல் கட்சியிலும் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் அல்ல என்பதால் , இந்தச் சண்டை வியப்பு அளிக்கிறது. ஏதாவது காரணம் கொண்டு சண்டையிட்டே ஆக வேண்டிய மன உளைச்சலில் இவர்கள் தவிக்கிறார்களா என்ன ?

*******

மூன்று இடைத்தேர்தல்களும் மூன்றாவது அணியும்.

பொதுவாக தமிழ் நாட்டு அரசியலில் , நான் மூன்றாவது அணிக்கு அதரவாகத் தான் நான் குரல் கொடுத்து வந்துள்ளேன். ஆனால் இப்போது நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்கள் மூன்றாவது அணியின் பரிசோதனைக் கூடமாக மாறுவது மிகவும் தவறான ஒரு செய்கை.

அ தி மு க இப்போது பல கூட்டணிக் கட்சிகளை இழந்து நிற்கிறது. ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகளும், த மா கவும் அ தி மு க அணியை விட்டு விலகியுள்ளன. வை கோவின் ம தி மு க பொதுத் தேர்தலிலேயே தனித்து நின்றது. இந்த முறையும் தனித்து நிற்கும் என்று தோன்றுகிறது. இந்த இடைத்தேர்தல்களில் மூன்றாவது அணி தவிர்க்கப்பட்டு, ஜெயலலிதாவிற்கு எதிரான அணி என்ற முறையில் கட்டப் பட்டால் தான் மக்கள் ஆதரவு பற்றிய ஓர் அச்சத்துடன் ஜெயலலிதா மிஞ்சிய ஆட்சிக் காலத்தில் செயல்படுவார். இல்லையெனில், ஜெயலலிதாவின் தான்தோன்றித்தனமான போக்குகள் தொடரத்தான் செய்யும்.

ஏற்கனவே ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் பணம் வாரி இறைக்கப் படும், அதிகாரிகள் அ தி மு க ஆட்கள் போலவே செயல்படுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது. இத்துடன் மூன்றாவது அணியும் சேர்ந்து கொண்டால், ஜெயலலிதா வெற்றி பெறும் வாய்ப்பே அதிகம்.

கருணாநிதி முந்திக்கொண்டு தி மு க எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தது ஒரு தவறு. கட்சி சார்பில்லாமல் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி இவர்கள் பரிசீலிக்க வேண்டும். சிதம்பரம், ஜி கே வாசன் அல்லது வைகோவை ஜெயலலிதாவிற்கு எதிராக நிறுத்திப் போட்டியிடச் செய்வது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.

***********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்