இந்த வாரம் இப்படி (ஜெயலலிதா கட்டளை, முஷாரஃப் வருகை,காமராஜர் பிறந்த நாள்)

This entry is part [part not set] of 17 in the series 20010715_Issue

இரா மதுவந்தி ( சூலை 15, 2001 )


ஜெயலலிதா மாவட்ட கலெக்டர்கள் மூலம் கேபிள் டிவி நடத்துபவர்களுக்கு கட்டளை

ஒரு தனியார் நடத்தும் கேபிள் டிவிக்களில், கட்டாயமாக ஜெயா டிவி தயாரித்த ஒரு அரசாங்கப் படத்தை, தினமும் ஆறுமுறை, கட்டாயமாகக் காண்பிக்கப் படவேண்டும் என்ற மாவட்ட ஆட்சியாளர்கள் எழுதிய கடிதத்தை தினமலர் வெளியிட்டிருக்கிறது.

அப்படி ஆணையிட ஒரு மாநில அரசாங்கத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. உதாரணமாக தினமலர் என்ற பத்திரிக்கை எனக்கு அரசாங்க விளம்பரங்கள் வேண்டாம் என மறுக்கும் உரிமை அதற்கு இருக்கிறது. கட்டாயம் அரசாங்க விளம்பரத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என கட்டாயப் படுத்த முடியுமா ? (இந்த விளம்பரத்துக்கு அரசாங்கம் அவர்களுக்கு என்ன பணம் அளிக்கிறது என்று தெரியவில்லை. அப்படி அளித்தால் அதை மறுக்கும் அதிகாரம் நிச்சயமாக அந்த கேபிள் டிவி நடத்துபவர்களுக்கு உண்டு என்றே கருதுகிறேன்)

அடுத்தது என்ன ? ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கேஸட் அனுப்பப் பட்டு அந்த கேஸட்டை கட்டாயம் தினமும் 6 முறை பார்த்தே ஆக வேண்டும், பார்த்த நேரம் என்ன என்று ஒரு படிவத்தில் எழுதி கையொப்பமிட்டு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கவும் என்று கடிதம் வருமா என்று தெரியவில்லை. (ஏறத்தாழ தாலிபானும் இதைத்தான் செய்கிறது எனக் கருதுகிறேன். அவர்களும் கட்டாயம் 5 முறை எல்லா முஸ்லீம்களும் தொழுகை நடத்தியே ஆகவேண்டும் என்று கட்டாயப் படுத்தி, தொழுகை செய்யாதவர்களுக்கு சவுக்கடி கொடுக்கிறார்கள்.) ஜெயா டிவி தயாரித்த கருணாநிதி வீடியோ பார்க்காதவர்களுக்கு சவுக்கடி கொடுக்கப்படுமா என்பதைப் பற்றி கலெக்டர்களிடமிருந்து ஏதேனும் கடிதம் வந்ததா என்று தெரிந்தால் நல்லது.

***

முஷாரஃப் இந்தியாவுக்கு வருகை

பாகிஸ்தானிய சர்வாதிகாரி முஷாரஃப் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். நான் இந்த வருகை யாருக்கும் நல்லதல்ல என்று கருதும் ஆள். முக்கியமாக இந்தியாவுக்கு.

இந்தியா பாகிஸ்தானிடமிருந்து பத்து தடவை பாடம் கற்றுக்கொண்டாலும், இந்திய தலைவர்களுக்கு அது தலையில் ஏறுவதாகத் தெரியவில்லை. இந்தியா பாகிஸ்தானுக்கு கடந்த 50 வருடங்களாக உதவி வருவதைப் பார்த்தால் எனக்கு ஒரு பழைய கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு சாமியார் காவிரியில் குளித்துக் கொண்டிருந்தார். தண்ணீரில் ஒரு தேள் முழுகி தத்தளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த சாமியார் அந்தத் தேளை எடுத்து கரையில் விட முயன்றார். கையில் எடுத்ததும் தேள் கொட்டியது. கையிலிருந்து தேள் விழுந்துவிட்டது. மீண்டும் தண்ணீரில் தத்தளித்தது தேள். மீண்டும் சாமியார் அதை கையில் எடுத்து அதனை வெளியே விட முயன்றார். மீண்டும் கொட்டியது. தேள் விழுந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர். ‘சாமி, தேள்தான் கொட்டுகிறதே, அதனை ஏன் எடுத்து வெளியே விட முயல்கிறீர்கள் ? ‘ என்று கேட்டார். அதற்கு சாமியார், ‘கொட்டுவது தேளின் தர்மம். அதனை காப்பாற்றுவது என் தர்மம். தேள் கொட்டுவதை நிறுத்தவில்லை. நான் ஏன் அதனை காப்பாற்றுவதை நிறுத்த வேண்டும் ‘ என்றார். (தேள் கொட்டியதில் சாமியார் செத்துத் தொலைந்தாரா என்று தெரியாது) இதுபோலத்தான் இந்தியாவும் பாகிஸ்தானுக்கு உதவி வந்திருக்கிறது. பாகிஸ்தான் ஒவ்வொருமுறை இந்தியாவிடம் மரண அடி பட்டதும், எல்லா உலக நாடுகளும், பாகிஸ்தானுக்குப் பரிந்து கொண்டுவர, இந்திய தலைவர்களும் போனாற் போகிறது என்று தோல்வியடைந்த அந்த நாட்டை மரியாதையுடன் அனுப்பி வைக்க, மீண்டும் அது இந்தியமக்களை கொல்வதற்கும், இந்தியாவை உடைப்பதற்கும், முன்னணியில் வேலை செய்கிறது. சாமியார் மாதிரி தனி வாழ்க்கையில் இருக்கலாம், 100 கோடி மக்களை காப்பாற்ற சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்தவர்கள் அப்படி நடக்க முடியாது. குடும்பஸ்தர்கள் மாதிரி, தேளை எடுத்தால் என் கையில் தான் அது கொட்டும் என்ற ஞானத்தோடு விலகி கொள்ள வேண்டும்.

இன்றோ நாளையோ என்று பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருக்கும் இப்போது, அதற்கு பிராணவாயு போல இந்த வரவேற்பு நடந்திருக்கிறது. ஆனாலும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் போல, அது காஷ்மீர் காஷ்மீர் என்று தூக்கத்தில் எழுப்பினாலும் புலம்பிக் கொண்டிருக்கிறது. இது தேவையில்லாத வேலை. வந்த சர்வாதிகாரி, வெளியுறவு அமைச்சரை மட்டும் கூப்பிட்டுக் கொண்டு வந்திருக்கிறார். வியாபாரம், தொழில் என்று எந்த மந்திரியையும் கூட்டிக்கொண்டு வரவில்லை. இதில் வேறு நம் தலைவர்கள் எல்லாம் நம் மக்களைப் போலவே ‘அவன் வெளிப்படையாக பேசுகிறான் ‘ என்று புல்லரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதைவிடவும் கூத்து, எந்த சர்வாதிகாரியுடனும் போடும் ஒப்பந்தம் அடுத்த சர்வாதிகாரி வந்ததும் காலாவதியாகிவிடும். தாஷ்கெண்ட் ஒப்பந்தம், சிம்லா ஒப்பந்தம், லாகூர் ஒப்பந்தம் எல்லாம் காலாவதி என்று இன்று இவர் பேசுகிறார். இவர் போடும் ஆக்ரா ஒப்பந்தத்தை எதிர்கால பாகிஸ்தானிய சர்வாதிகாரி குப்பை என்று சொல்வார். ஆனால் இந்தியா மட்டும், தன் பக்கத்து ஒப்பந்தத்தை நிறைவேற்றும். நிறைவேற்றாவிட்டால், ஊரெல்லாம் போய் இந்தியா ஒப்பந்தம் போட்டு நிறைவேற்றவில்லை என்று இவர்கள் புலம்ப, உலகமே ‘என்னப்பா இந்தியா, என்னமோ, ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்கிறாய், நீ நிறைவேற்ற வேண்டாமா ‘ என்று கேட்பார்கள். உதாரணத்துக்கு நேரு ஐநாவில் சொன்ன வாக்குறுதியை வைத்துக்கொண்டு இன்னமும் ஊரெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பொதுவாக்கெடுப்பு உறுதி, வாய்மொழிதானே தவிர ஒப்பந்தம் கூட அல்ல. ‘நீ பாகிஸ்தானைப் போய் கேள் ‘என்று இந்தியா சொன்னால், ‘பாகிஸ்தான் சர்வாதிகார நாடு, அவர்கள் கதைதான் தெரிந்தது. அவர்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்தியா ஜனநாயக நாடு. அவர்கள் செய்ய வேண்டாமா ‘ என்று பதில் வரும். அதைவிட மோசம், ஒப்பந்தம் போட்டுவிட்ட பாகிஸ்தானிய தலைவர் அடுத்த இரண்டு வருடங்களுக்கு இருக்க மாட்டார். ஒன்று கொலை இல்லையென்றால், நாடு கடத்தல். மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி.

கேட்டுப் புளித்து விட்டது.

****

காமராஜர் பிறந்த நாள்

காமராஜர் என்ற முன்னாள் முதல்வரை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருப்பார்கள் எனத்தெரியவில்லை. காமராஜர் ஆட்சி கொண்டுவரப்போகிறேன் என்று பேசியர்களே இன்று எம்ஜியார் ஆட்சி வர உழைப்போம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். (நல்லவேளை இன்று இல்லை. இருந்திருந்தால் அவரையும் நடுராத்திரியில் கைது செய்து போலீஸ் குண்டுக்கட்டாய் தூக்கி ஜெயிலில் போட்டிருப்பார்கள். சோ, மூப்பனார், வீரமணி, மணிசங்கர ஐய்யர் எல்லோரும் அதனை ‘கைது செய்தது சரிதான், ஆனால் மாண்புமிகு முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் சற்று வன்முறையை குறைத்திருக்கலாம் ‘ என்று சட்டம் பேசியிருப்பார்கள் )

மகனுக்கு ராஜ்ய சபா எம்பி பதவிக்காக யார் யாரிடமோ தொங்கிக் கொண்டிருக்கும் ராமதாஸ், மூப்பனார் போன்றவர்களுக்கு, குடும்பமே இல்லாமல் இருந்துவிட்டு போன காமராஜரை எப்படி ஞாபகம் இருக்கும் ?

காமராஜர் தொண்டனாக இருந்து உயர்ந்து நாட்டின் பிரதமர் பதவிக்கு சற்று முன்வரை சென்றவர். மேல்சாதியில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று, வக்கீலாக தொழில்செய்து, நாட்டின் அமைச்சர்களாகவும் காங்கிரஸ் தலைவர்களாகவும் இருந்தவர் போலல்ல.

எங்கோ எல்லோருக்கும் நல்லது பண்ணவேண்டும் என நினைத்துக்கொண்டு தன்னால் முடிந்த வரை ஒரு சின்ன விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டிருக்கும் பெயர் தெரியாத நல்ல மனிதர்கள அனைவருக்கும் என் காமராஜர் தின வணக்கங்கள்.

***

Series Navigation