இந்த வாரம் இப்படி (சூலை 29, 2001)

This entry is part [part not set] of 18 in the series 20010729_Issue

இரா மதுவந்தி


கார்கில் தினம்

ரீடிஃப் வலைத்தளத்தில் ராணுவத்தலைவராக இருந்த மாலிக் அவர்களது பேட்டி வெளிவந்திருக்கிறது.

எல்லைக்கோட்டைத் தாண்டக்கூடாது என்ற இந்தியாவின் கொள்கைக்காக பல இந்திய வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள். அந்தக் கொள்கைக்குக் காரணம், இந்தியத் தலைவர்களின் பயம்தானே தவிர, எல்லைக் கோட்டை மதிக்கும் நினைப்பால் அல்ல.

காஷ்மீரில் ஒப்புக்கொண்ட செயல்முறை எல்லைக்கோடு இந்தியா ஒப்புக்கொள்ளாததாக இருந்தாலும், அதைத் தாண்டுவது அகில உலக அளவில் இந்தியாக்கு பாதகமானது என்ற எண்ணமும் இருந்திருக்கிறது.

எவ்வளவுதான் இந்தியா சுயக்கட்டுப்பாடோடு இருந்தாலும், இந்தியத்தலைவர்கள் அழிவைக்குறைக்க விரும்பினாலும் அது இந்தியாவுக்கு நல்ல பெயர் தருவதில்லை. நல்ல பெயர் வராவிட்டாலும் பரவாயில்லை, கெட்ட பெயர் வராமல் இருந்தால் சரி என்று கூட நினைக்க முடியாது. கார்கில் போரை உருவாக்கிய முஷாரஃப் இந்தியாவுக்கு வந்து இந்திய பத்திரிக்கையாளர்களிடமே சபாஷ் வாங்கிக் கொண்டு போவது என்பது இந்தியாவில் தான் நடக்கும்.

சிலர் இஸ்ரேலை இந்தியாவுடன் ஒப்பிட்டு, இந்தியாவும் இஸ்ரேல் போல பாகிஸ்தானை ஆக்கிரமித்து பின்னர் அவர்களை சுதந்திரத்துக்குக் கெஞ்ச விட வேண்டும் என்று பேசுகிறார்கள். எனக்குக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இருப்பினும், இஸ்ரேலின் சந்தைகளில் வெடிக்கும் பாலஸ்தீன மனிதர்களையும், குண்டுகளையும், அது மீண்டும் மீண்டும் ஒரு மாயச்சுழலை உருவாக்கி எல்லோரையும் அதனுள் இழுத்துக்கொண்டு செல்வதையும் பார்க்கும் போது, இஸ்ரேல் போல இந்தியா ஆகாமல் இருப்பது நல்லதுதான் என்று தோன்றுகிறது.

இந்தியாவின் நோக்கம், இந்தப் பகுதியில் வல்லரசாக இருப்பதாக இருக்கக் கூடாது. ஒரு கான்பெடரேஷனை நோக்கி அழைத்துச் செல்லும் பெருந்தன்மையான நண்பனாகவும் சகோதரனாகவும் இந்த அருகாமை நாடுகளுக்கு இருக்க வேண்டும். அதே நேரத்தில், இந்தியா தன் வலிமையையும், ஒற்றுமையையும் விட்டுக்கொடுக்காததாகவும், பலவிதமான மக்களும் பல மொழிகளும், பல மதத்தினரும் இணைந்து வாழும் இந்த அற்புதமான அமைப்புக்கு குந்தகம் விளைந்து விடாமலும், இந்த அமைப்பை முன்னெடுத்துச் செல்லவும், இதில் உள்ள குறைகளை களையவும் தொடர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டும். இதன் பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிம் மட்டும் இல்லை. ஒவ்வொரு இந்தியர்களிடமும், இந்திய பத்திரிக்கையாளர்களிடமும் இருக்கிறது.

பாகிஸ்தான் தலைவர்கள் செய்யும் முட்டாள்த்தனத்தால் கார்கிலிலும் இன்னும் பல பெயர் தெரியாத சிறு சிறு போர்களிலும் தீவிரவாதிகளின் குண்டுகளில் உயிர்நீத்த இந்திய பாகிஸ்தானிய போர் வீரர்களுக்கும், இந்தப் போர் வீரர்களால் உயிர்நீத்த இந்திய பாகிஸ்தானிய குடிமக்களுக்கும் என் அஞ்சலி.

***

புலான் தேவி என்றொரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்

இந்தியாவின் ஜனநாயகத்துக்கும், இந்தியாவின் அணைத்துச் செல்லும் மனப்பாங்குக்கும் உதாரணமாக இருந்த மறைந்த எம்பி புலான் தேவிக்கு திண்ணை அஞ்சலி செலுத்துகிறது.

புலான் தேவியின் கதை இன்னொரு முறை சொல்ல வேண்டிய தேவை இல்லாதது. பெண்களும், கீழ் ஜாதியினரும் ஏன் புலான் தேவிக்கு ஓட்டுப் போட்டார்கள் என்பது புலான் தேவி கதையைத் தெரிந்தவர்களுக்கு தெளிவாகத் தெரியும். அப்படி அடிபட்ட பெண்களும், கீழ் ஜாதியினரும் புலான் தேவியை தங்களது பிரதிநிதியாகவும், தாங்கள் செய்ய விரும்புவதை செய்த மனிதராகவும் பார்த்தார்கள்.

இருப்பினும், வன்முறைக்கு பதில் வன்முறை அல்ல என்பதாலேயே புலான் தேவி காந்தி படத்தின் முன்னர் தன் துப்பாக்கிகளை போட்டுவிட்டு அன்றைய உ பி முதல்வரான வி பி சிங் அவர்களால் உந்தப்பட்டு சரணடைந்தார். பின்னர் அதே வி பி சிங்கால் ஆதரிக்கப்பட்டு அரசியலில் இணைந்து இரண்டு முறை எம்பியாகவும் ஆனார்.

வன்முறை வஞ்சம் தீர்க்கக் கூடியது என்பது திரும்பத்திரும்ப நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அது புலான் தேவி விஷயத்திலும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவர் பாஹ்மாய் கிராமத்துக்குத் திரும்பிச் சென்று மன்னிப்புக் கேட்டிருந்திருக்கலாம். எல்லோரையும் அணைத்துச் செல்ல உறுதி மொழி கொடுத்திருக்கலாம். எல்லா சாதியினரையும் சமமாக மதிக்க முயற்சி செய்வேன் என்று மேல் சாதி தாகூர்களை அவர் சமாதானப்படுத்தியிருக்கலாம். அவரால் விதவையாக்கப்பட்ட அவர் போன்ற பெண்களுக்கு உதவி செய்திருக்கலாம். எத்தனையோ லாம்-கள். ஜாதிகளை தீர்க்கப்படுத்தி, மக்களை தீவிரவாத அரசியலுக்கு அழைத்துச் சென்று ஓட்டு வங்கியாக்கும் இன்றைய அரசியல் அதற்கு இடம் கொடுக்கவில்லை போலும்.

இருப்பினும் புலான் தேவி தான் இருந்த 37 வருடங்களில் ஒரு சாதனையை, கீழ்மட்ட மக்களுக்கு நம்பிக்கையை, பெண்களுக்கு உத்வேகத்தை கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். அவர்களது ஓட்டும் இந்தியாவில் எண்ணப்படுகிறது என்ற விஷயத்தை உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார்.

அதற்காக இந்தியா அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.

***

ராம்தாஸ் தேசீய முன்னணியில் இணைந்துவிட்டார்.

ராம்தாஸ் தேசீய முன்னணியில் இணைந்து மந்திரிப் பதவி கேட்டிருக்கிறார். பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கடுப்படித்திருக்கிறார். அவரவர் தேவைப்பட்டால் வருவதும் தேவைப்பட்டால் போவதுமாக, தேசீய முன்னணி ஒரு சத்திரம் போல ஆகி விட்டது என்று பேசியிருக்கிறார்.

அப்படி பேசினாலும், பாஜகவுக்கு இப்போதைக்கு பதவி போகும் ஆபத்து இல்லை என்றாலும், வரக்கூடிய கட்சிகளை உதறும் நிலையில் பாஜக இல்லை என்பதுதான் உண்மை.

உதாரணமாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தேசீய முன்னணிக்கு ஆதரவை எடுத்துக்கொண்டால், மூன்று நாட்களுக்குக் கூட பாஜக அரசில் நிற்க முடியாது. இத்தனைக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தேசீய முன்னணிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருகிறது.

நாளைக்கு பாஜக ஆட்சியில் இல்லை என்றால் இதே ராமதாஸ் காங்கிரசுக்கு ஓடி அங்கு மந்திரிப் பதவி கேட்க முனைவார். காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஒப்புக்கொள்ளாததே இன்னும் பலரை தேசீய முன்னணியில் வைத்திருக்கிறது. கூட்டணி அரசு சரி என்றும் முலயாம் சிங்குக்கு பிரதமர் பதவி என்றும் சொன்னால், நாளைக்கே இன்னொரு ஆட்சி மத்தியில் இருக்கும். ராமதாசும், மம்தா பானர்ஜியும் அங்கே இருப்பார்கள்.

அதுவல்ல வேடிக்கை. திடாரென்று அவர்களுக்கு பாஜக இந்துக்கட்சி என்பது தெரிந்து விடும். திரும்பப் பெரியார் தரிசனம் தர ஆரம்பித்து விடுவார். நம் ஊர் நிறப்பிரிகையாளர்களுக்கு மீண்டும் உயிர் வந்துவிடும். மீண்டும் ராமதாஸ் தலித்துகளின் காவலராக ஆகி விடுவார்.

***

மேலவளவு தீர்ப்பு

மேலவளவு உள்ளாட்சி மன்றத்தலைவர்களை அவர்கள் தலித்துகள் என்பதற்காக வெட்டிக்கொன்றவர்கள் ஆயுள்தண்டனை பெற்றிருக்கிறார்கள்.

அவர்களுக்கு தூக்குத் தண்டனை தராததற்காக நான் சந்தோஷப்படுகிறேன். அவர்களுக்குத் தூக்குத் தண்டனை தந்திருந்தால், தலித்துகளும், இன்றைக்கு அவர்களை எதிர்ப்பவர்களும் காலம் காலமாக ஒன்று சேரமுடியாமல் போயிருந்திருக்கலாம்.

ஆயுள் தண்டனை பெற்றவர்களின் குடும்பங்கள் கதறி அழுகிறார்கள். உள்ளாட்சி மன்றத் தலைவர்களைக் கொன்றபோது இதே குடும்பத்தார் சந்தோஷப்பட்டார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், தலித்துகளின் குடும்பங்கள் இதே போலக் கதறி இருக்கும்.

இன்று இந்த ஜாதிகள் தங்கள் ஜாதிப் பகைமையின் முட்டாள்தனத்தை உணர வேண்டும் என விரும்புகிறேன். இதே குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஊர் விழா கொண்டாடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விட்டுக்கொடுப்பதற்கும், மனிதர்களுக்கு ஜாதிகள் தாண்டி மரியாதை செய்யவேண்டியதையும் நாம் காலப்போக்கில்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு வெட்டி வீராப்பு உதவாது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைதான் உதவும்.

***

Series Navigation

இரா மதுவந்தி

இரா மதுவந்தி