இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


வானை அளப்போம் ! கடல் மீனை அளப்போம் ! . . . .
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் !

மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

Fig. 1
Top Mission Picture

“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை ! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் ! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”

டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

அக்கினி இடித் தாக்கம்!
அசுர வல்லமை ஊக்கம்!
அவ்விதம்
பொறுமை யற்ற புயலிலே
புது நெறி படைக்கப்
புறப்படும் எமது கனவுகள்!

டாக்டர் அப்துல் கலாம், பாரத ராக்கெட் விஞ்ஞானி
Fig. 1A
Chandrayaan Mission
Summary Image

“தேச விண்வெளித் திட்டத்தில் வரலாற்று மைல் கல்லான முதல் எட்டுவைப்பு என்று இதைப் பாராட்டுகிறேன். எங்கள் விஞ்ஞானக் குழுவினர் மீண்டும் ஒருமுறைச் சாதித்துத் தேசப் பெருமையை நிலைநாட்டினர். இந்த தேசமே அவருக்குத் தலை வணங்குகிறது.”

மேன்மை தங்கிய இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்.

“நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது. மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது. சந்திரயான் துணைக்கோள் செய்யப் போகும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்படச் செய்யும்.”

எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

“இது தேசத்தின் ஒரு வரலாற்றுப் படைப்புத் தருணம். இன்று ஓர் இந்திய விண்ணுளவி சந்திரனுக்குப் பயணம் செய்ய நாங்கள் ஒரு மகத்தான பாதை வகுத்து விட்டோம். அது பூமிக்கு நெருங்கிய அண்டக் கோளும் ஒரே ஓர் இயற்கைத் துணைக் கோளுமான நிலவில் ஒளிந்திருக்கும் இரகசியங்களை வெளியே கொண்டு வர முயற்சி செய்யும்.”

டாக்டர் மாதவன் நாயர், தலைவர் இந்திய விண்வெளித் திட்ட நிறுவகம் [Chief Indian Space Research Organization (ISRO)]

Fig. 1B
Rocket Trajectory Path
To Moon

“கனவு காண், கனவு காண், கனவு காண், கனவுகளைப் பிறகு எண்ணங்கள் ஆக்கிச் செயலில் வடிவாக்கு. சிந்தனை செய்பவை பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படி முனைந்தால்தான் பெருமளவில் நாம் முன்னேற முடியும்.”

டாக்டர் அப்துல் கலாம், (இளைஞருக்குக் கூறியது )

நிலவை நோக்கி இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் ஆந்திரப் பிரதேசத் தீவான ஸ்ரீஹரிக்கோட்டா (Sriharikota, Andhra Predesh) ஸ்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் அக்டோபர் 22, 2008 ஆம் தேதி காலை 06:20 மணிக்கு இந்தியாவில் ஆக்கிய ஏவுகணையில் ஒன்றரை டன் எடையுடைய சந்திரயான் -1 விண்ணுளவி (துணைக்கோள்) ஏவப்பட்டு பாரதத்தின் முதல் மனிதரற்ற நிலவுப் பயணம் துவங்கி விண்வெளி வரலாற்றில் இந்தியா ஒரு மைல் கல்லை நாட்டியது. அது பூமியை நீள்வட்ட வீதியில் இருதரம் சுற்றி புவி யீர்ப்பாற்றலைத் தாண்டி நிலவை நோக்கி 400,000 கி.மீடர் (240,000 மைல்) தூரத்தை 5 நாள் பயணத்தில் கடந்து செல்லும். அதன் பிறகு விண்ணுளவி வேகம் தளர்ந்து நிலவின் ஈர்ப்பாற்றலில் இறங்கி வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும். நிலவை 100 கி.மீடர் வட்ட வீதி உயரத்தில் விண்ணுளவி இரண்டு ஆண்டுகள் சுற்றித் தகவலைப் பூமிக்கு அனுப்பி வரும்.

Fig. 1C
Rocket Assembly Building

விண்ணுளவியின் முக்கிய குறிப்பணி வெண்ணிலவின் மேற்தளத்தை ஆராய்வது. நிலவின் துருவப் பரப்பில் அடித்தள நீர்ப்பனி உள்ளதா என்று அறிவது. பூமியில் அரிதாக இருக்கும் ஹீலியம்-3 ஏகமூல வாயு (Helium-3 -An Isotope of Helium-4 Gas) இருப்பைக் கண்டறிவது. எதிர்கால அணுப்பிணைவுச் சக்தி உற்பத்திக்கு ஹீலியம்-3 வாயு எரிசக்தியாகப் பயன்படும் என்று நம்பப் படுகிறது. இந்தப் பேரிச்சை விண்வெளித் திட்டத்துக்கு இந்தியா 78 மில்லியன் டாலர் (3800 மில்லியன் ரூபாய்) (2008 ஆகஸ்டு நாணய மதிப்பு) செலவு செய்கிறது !

உலக நாடுகள் நிலவுக்கு ஏவிய முந்தைய விண்ணுளவிகள்

1957 ஆண்டு முதல் சோவியத் ரஷ்யா 45 முறைகள் தனது மனிதரற்ற ஏவுகணைத் திட்டங்களான லூனா நிலவுப் பயணங்களை (Luna Moon Missions) முயன்றதில் 17 தடவைதான் வெற்றியடைந்தது ! லூனா-1 முதன்முதல் நிலவு உதையீர்ப்பு உந்து சக்தியில் (Flyby Swing) வீசப்பட்டுப் பரிதியின் சுற்று வீதியைப் பற்றி வலம் வந்தது ! 1959 இல் அமெரிக்கப் பயனீர் நிலவுத் திட்டங்களில் (Pioneer Moon Missions) பயனீர்-4 மட்டும்தான் முதன்முதல் சந்திரனைச் சுற்றிவர முடிந்தது !

Fig. 1D
Indian Moon Mission

பிறகு ஆசியாவில் 1990 ஆம் ஆண்டில் ஜப்பான் அனுப்பிய முதல் ஹைடன் விண்ணுளவி (Hiten Spacecraft) நிலவை 10 முறைச் சுற்றிவந்து பழுதுகள் உண்டாகிச் சந்திர தளத்தில் வேண்டுமென்றே வீழ்த்தப் பட்டது ! அதன் பின் சைனா 1997 இல் பூமியைச் சுற்றிவர ஏவியத் தனது ஆசீயசாட் (AsiaSat) விண்ணுளவியில் பழுதுகள் ஏற்பட்டு அது சந்திரனுக்கு அனுப்பப் பட்டது ! அதுவே புதுப் பெயருடன் (HGS-1) சைனாவின் முதல் நிலவுப் பயணமாகக் கருதப்படுகிறது. இத்தகைய முன்னோடி முயற்சிகள் எல்லாம் என்ன சொல்கின்றன ? நிலவைச் சுற்ற அனுப்பும் முதற் பயணம் யாவும் சவாலான சாதனை என்பதே ! இந்தியாவின் முதற்படி முயற்சியான சந்திரயான் -1 விண்ணுளவி இன்னும் ஐந்து நாட்களில் (அக்டோபர் 27-28, 2008 தேதியில்) சந்திர ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கி வெற்றிகரமாகச் சுற்றி வரும் ஓர் வரலாற்று அற்புதத்தை ஆவலுடன் நாம் எதிர்பார்ப்போம் !

Fig. 1E
Rocket Launch Pad

PSLV ஏவுகணை & விண்ணுளவி பயண விபரங்கள்

சுமார் ஒன்றரை மீடர் சதுரப் பக்க வடிவான சந்திரயான் பூமியில் 1300 கிலோ கிராம் எடையும், நிலவில் வீதியில் சுற்றும் போது சுமார் பாதி எடையும் (590 கி.கிராம்) கொள்வது. அதைத் தூக்கிச் செல்லும் ராக்கெட் PSLV (Polar Satellite Launch Vehicle) 1995-2005 ஆண்டுகளில் 8 தடவைத் துணைக் கோள்களைப் பூமியைச் சுற்ற அனுப்பி அனுபவம் பெற்றது. அது 45 மீடர் (150 அடி) உயரம் உள்ளது. மேம்படுத்தப் பட்ட PSLV ராக்கெட் 316 டன் எடை கொண்டது. அது தூக்கிச் செல்லும் விண்ணுளவியை முதலில் பூமியைச் சுற்ற வைக்கும் போது (240 கி.மீடர் X 24000 கி.மீடர்) நீள்வட்ட வீதியில் சுற்றி வரும். முதலில் 1300 கிலோ கிராம் இருந்த துணைக்கோள் இப்போது 590 கி. கிரோம் எடையாகப் பாதியாகி விடும். காரணம் பூமியின் ஈர்ப்பாற்றல் உயரே போகப் போகக் குன்றுகிறது.

Fig. 1F
Spacecraft going around
The Moon

பிறகு விண்ணுளவி பன்முறை தள்ளப்பட்டு 386000 கி.மீடர் நீண்ட ஆரமுள்ள வட்ட வீதிக்கு நகர்த்தப் படுகிறது. அதுவே சந்திரனை நெருங்கும் “கடப்புச் சுற்று வீதி” (Tranfer Orbit) என்று அழைக்கப் படுகிறது. அந்த வீதியின் நீள் ஆரத்தில் செல்லும் போது அது சந்திரனை நெருங்கிறது. அப்போது விண்ணுளவியின் எதிர் உந்து கணைகள் (Spacecrafts Retro-Jet Engines) இயங்கி அதன் வேகத்தைக் குறைக்கும். விண்ணுளவியின் வேகம் தளர்ந்தவுடன் நிலவின் ஈர்ப்பாற்றல் அதைத் தன் மண்டலத்தைச் சுற்ற இழுத்துக் கொள்கிறது. இந்த இயக்கங்கள் சரியான கால நேரத்தில் பூமியின் ஆட்சி அரங்கிலிருந்து தூண்டப் பட்டு நிகழ வேண்டும்.

விண்ணுளவி நிலவைச் சுற்றி வரும் முதல் வட்ட வீதி 1000 கி.மீடர் இருக்கும். பிறகு விண்ணுளவியின் எதிர் உந்துகணைகள் வேகத்தைத் தளர்த்தி முடிவான வட்ட வீதி 100 கி.மீடர் (60 மைல்) உயரத்தில் இருக்குமாறு கட்டுப் படுத்தப்படும். விண்ணுளவி இரண்டு வருட காலம் அந்த வட்ட வீதியில் நிலவைச் சுற்றி வர உந்து கணைகளில் எரிசக்தித் திரவம் நிரப்பி வைக்கப் பட்டுள்ளது.

சந்திரயான் விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள்கள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவகம் படைத்த [Indian Space Research Organization (ISRO)] சந்திரயான்-1 விண்ணுளவி ஏழு விதமான உபகரணங்களை ஏந்திச் செல்கிறது. அதனில் இந்திய நிபுணர் ஆக்கிய 5 இந்தியக் கருவிகளும் அன்னிய நாடுகள் செய்த ஆறு கருவிகளும் அமைக்கப் பட்டுள்ளன. உபகரணங்களில் முக்கியமானவை இரண்டு : 700 வாட்ஸ் மின்சக்தி அளிக்கும் பரிதித் தட்டும் (Solar Panel) நிலவில் தள்ளபடும் உளவியும் (Moon Impact Probe).

Fig. 1G
Moon Impact Probe

1. முதற் கருவி [Chandrayaan Energetic Neutral Analyser (CENA)]

2. 30 கிலோ கிராம் எடையுள்ள நிலவில் வீழும் உளவி [Moon Impact Probe (MIP)]. சந்திரனை 100 கி.மீடர் மைல் உயரத்தில் தாய்க் கப்பல் சுற்றி வரும் போது தளத்தில் தள்ளப்படும் உபகரணம் இது. தளத்தில் விழும் போது உளவி நிலா மண்டலத்தில் பரவிய நலிந்த வாயுக்களின் அளவைப் பதிவு செய்யும்.

3. கதிரியக்கத் தாக்கமானி [Radiation Dose Monitor (RADOM)]

4. நிலவுத் தளப் பதிப்புக் காமிரா [Terrain Mapping Camera (TMC)]

5. நிலவுத் தாதுக்கள் பதிப்புமானி [Moon Mineralogy Mapper (M3)]

6. மெக்னீஸியம், இரும்பு போன்ற பல்வேறு மூலகங்களின் செழிப்பைக் காணும் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [Chandrayaan -1 X-Ray Spectrometer (C1XS)]. இதன் மூலம் நிலவின் மூலத்தையும், தோற்றத்தையும் பற்றி எழும் வினாக்களுக்கு விடை கிடைக்கும். ஒரு காலத்தில் உருகிய தாதுக் கடல் நிலவில் இருந்ததா என்று அறிய உதவலாம். மெக்னீஸியம் இரும்பு இருப்பு வீதம் எத்தனை அளவு நிலவு உருகிய நிலையில் இருந்தது என்று விபரம் கூறும். மேலும் டிடேனியம் போன்ற அரிய உலோகம் கொண்ட பாறைகள் உள்ளனவா என்றும் அந்தக் கருவி சோதனை செய்யும்.

7. 700 வாட்ஸ் மின்சக்தி அளிக்கும் பரிதித் தட்டு [700 Watts Solar Panel]

Fig. 1H
Fusion Energy

சந்திர மண்டலத்தில் எரிசக்திக்குப் பயன்படும் ஹீலிய வாயு !

பூமியைப் போல் ஈர்ப்பாற்றல் மிகையாக இல்லாத நிலவுக்கு வாயுச் சூழ்வெளி இல்லை என்று விஞ்ஞானிகள் ஒரு சமயம் நம்பினார்கள். ஆனால் நிலவை ஆழ்ந்து உளவியதில் மிக நலிந்த வாயுச் சூழ்நிலை உள்ளது என்று அறியப் பட்டிருக்கிறது. சந்திரனுக்கு வாயுச் சூழ்வெளி இரண்டு வித மூலாதாரச் சேமிப்புகளிலிருந்து உண்டாகலாம். ஒரு சேமிப்பு : நிலவின் உட்கருப் பாதாளத் தளத்திலிருந்து கசியும் அரிய ரேடான் வாயு (Rare Gas Radon) ! பேரளவில் ரேடான் வாயுவுடன் வெளியாகும் நைடிரஜன், கார்பன் டையாக்ஸைடு, கார்பன் மானாக்ஸைடு வாயுக்கள்.

அடுத்த சேமிப்பு : விண்வெளியிலிருந்து வாயு மூலக்கூறுகள் நிலவுத் தளத்தைத் தாக்கித் தளர்ந்து வெளியாகும் வாயுக்கள் ! இவை குளிர்ந்த உஷ்ணத்தில் நகர்ந்து நிலவின் குளிர்ப் பகுதியில் படிந்தவை. பிறகு வெப்பமாகி ஆவியாகி விண்வெளியில் நீங்கலாம். அந்த வழியில் படிந்தவைதான் துருவப் பகுதியின் நீர்ப்பனியும் பரிதிப் புயலில் தப்பி விழுந்த ஹீலியம்-3 ஏகமூலமும் ஆகும். ஹீலியம்-3 நிலையான ஹீலியம்-4 இன் ஏகமூலம். ஏகமூலங்கள் என்பவை அணுக்கருவில் ஒரே எண்ணிக்கை புரோட்டான்களும் மாறான எண்ணிக்கை நியூட்ரான்களும் கொண்டவை. (Isotope : Atoms having same number of Protons but different number of Neutrons in the Nucleus)

Fig. 2
Spacecraft Details -1

சந்திரனின் மெலிந்த ஈர்ப்பாற்றல் பூமியின் அசுர ஈர்ப்பாற்றலில் ஆறில் ஒரு பங்காக இருப்பதால், நிலவுக்குக் குடைபிடிக்கும் வாயு மண்டலம் கிடையாது. ஆயினும் சந்திரனில் ஹீலியம்-3 வாயு தொத்திக் கொண்டிருப்பதை சந்திரயான்-1 விண்ணுளவி கண்டுபிடிக்க முனையும். ஹீலியம்-3 வாயு அணுப்பிணைவு சக்தி (Fusion Power) உற்பத்தி செய்ய உதவும் சேர்க்கை வாயுவாகும். இந்தியாவில் கிடைக்கும் கனநீரில் உள்ள டியூடிரியம் (Deuterium) மூலக்கூறும் ஹீலியம்-3 ஏகமூலமும் அணுப்பிணைவு உலையில் இணையும் போது உண்டாகும் பேரளவு வெப்பசக்தியில் மின்சாரம் உண்டாக்கலாம். அணுப்பிணைவு உலைகளில் கதிரியக்க மில்லை. சூழ்வெளி மாசுக்கள் வெளியாகா ! சிறிதளவு எரிசக்தி வாயுக்களுடன் மலிவாக எதிர்காலத்தில் பிரம்மாண்டமான மின்சக்தி நிலையங்கள் கட்டலாம். அணுப்பிணைவு நிலையங்களுக்கு வேண்டிய எரிசக்தி மூலப் பொருட்களுக்குப் பஞ்சமே இல்லை !

சந்திரயான் விண்ணுளவி புரியும் விஞ்ஞான ஆய்வுகள்

1. பூமியிலிருந்து நோக்குவோர் கண்ணுக்குப் புலப்படாத நிலவின் இருண்ட பின்புறத்தைச் சந்திரயான் விண்ணுளவி சுற்றிவரும் போது ஆராயும். சந்திரனின் பின்புறத்தில் உள்ள குழிகளின் எண்ணிக்கை அதிகம். முன்புறத்தில் இருப்பதை விட வேறான தளப்பண்பாடு கொண்டது பின்புறம்.

Fig. 3
Spacecraft Details -2

2. இருபுறத்திலும் உள்ள நிலவுச் சூழ்வெளியில் ஓர் முப்புற முகப்படத்தைத் (3D Atlas with Spatial & Altitude Resolusion of both side Moon) தயார் செய்யும்.

3. மாக்னீஷியம், அலுமினியம், ஸிலிகான், கால்சியம், இரும்பு, டிடானியம் போன்ற சிற்றளவு அணு எண் கொண்ட மூலகங்களையும், ரேடான், யுரேனியம், தோரியம் போன்ற உயர் அணு எண் கொண்ட கன மூலகங்களையும் தேடிப் பதிவு செய்யும்.

4. சந்திரனின் தோற்ற வரலாற்றை அறியவும் மேற்தள தட்டு இரசாயனப் பண்பாடுகளை உளவவும் தகவலைச் சேகரிக்கும்.

இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதை

டாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த ஜெர்மன் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ·பான் பிரௌன் [Wernher Von Braun]. அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் ·பான் பிரௌன் முழுமையாக ஈடுபட்டார். பாரத நாட்டில் டாக்டர் ·பான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம். அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார். இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம். அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது ! 1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார். உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில் பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.

Fig. 4
Ground Segment
Details

புதிய பாரதத்தைச் செதுக்கிய பொற்காலச் சிற்பி

சுதந்திர சூரியன் பாரத தேசத்திலே உதித்ததும், மேதைகளிடம் அடங்கிக் கிடந்த ஆக்க வெள்ளத்தை மடைதிறந்து விட்டவர், பிரதமர் ஜவஹர்லால் நேரு! விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விக்ரம் சாராபாயைக் கண்டு பிடித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research] நிறுவி, அவரை அதிபர் ஆக்கியவர், நேரு. இப்போது இந்தியா ஆசியாவிலே அண்டவெளி ஏவுகணை விடுவதில் முன்னணியில் நிற்கிறது. அண்டவெளி ஏவுகணைகள், துணைக் கோள்கள் முழுக்க முழுக்க இந்தியப் படைப்பு. அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகள் நிகழ்ந்த, இருபதாம் நூற்றாண்டின் ஒளிமயமானப் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலம் என்று பாரத வரலாற்றில் அழுத்தமாக எழுதி வைக்கலாம்!

Fig. 5
Dr. Abdul Kalam

சந்திரயான் விண்வெளிப் பயணம் இந்தியாவுக்குத் தேவையா ?

பாரத நாட்டுக்கு ராணுவ வல்லமை அளிக்க வேண்டும் என்று ராக்கெட் மேதை டாக்டர் அப்துல் கலாம் ஏவுகணைத் திட்டங்களை நிறைவேற்றி உலக மையத்தில் இந்தியா உயர்ந்த பீடத்தில் நிமிர்ந்து நிற்கிறது ! மகாத்மா காந்தி பிறந்த பாரத நாட்டுக்குக் கைப்பலம், ஆயுதப் பலம், படைப்பலம் தேவையில்லை என்று தர்க்கமிடுவோரும் இருக்கிறார். சந்திரயான் விண்வெளிப் பயணத்துக்கு ஆகும் 78 மில்லியன் டாலர் (3800 மில்லியன் ரூபாய்) செலவை வறுமை ஒழிப்புக்குப் பயன்படுத்தலாம் என்று குற்றம் கூறுவோர் பலர் இருக்கிறார். இந்தியாவுக்கு அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேடல் பயணம் எல்லாம் அவசியமில்லை என்பாரும் இருக்கிறார்.

Fig. 6
Indian Rockets Developed By
Dr. Abdul Kalam

அதே போல் வான ஊர்திகள் வளர்ச்சி அடையும் போது விமானப் பயணம் எதற்கு என்று வினாவியோரும் இருந்திருப்பார் ! கணினிகள் எனப்படும் கம்பியூட்டர்கள் எதற்கு என்றும் சிலர் வாதிடலாம் ! இவர்கள் யாவரும் காலக் குயவன் கடிகார முட்களைப் பின்னோக்கிச் செல்ல முனைபவர். கால வெள்ளம் முன்னேறுமே தவிரப் பின்னோக்கிச் செல்லாது ! விமானங்கள் பழுதாகி விழுந்தாலும் மனிதர் அவற்றை ஒதுக்கிவிட்டு ரயில் பயணத்திலும் கப்பல் யாத்திரையிலும் போவதில்லை ! இத்தகைய விஞ்ஞானப் பொறியியல் தேடல்களால் இந்தியருக்கு ஏற்படும் பலாபலன்கள் என்ன ? இந்தியரின் விஞ்ஞான அறிவு வளர்ச்சி. தொழிற்துறை நுணுக்க வளர்ச்சி. ஆயிரக் கணக்கான இந்தியருக்குத் தொடர்ந்த வேலை விருத்தி. உலக அரங்கிலே இந்தியருக்கு பெருமதிப்பு.

மனிதருக்கு வயிற்றுப் பசி, உடற்பசி, மூளைப் பசி என்று முப்பெரும் பசிகளைக் கடவுள் அளித்திருக்கிறார். மூன்றிலும் வயிற்றுப் பசியே முதன்மையானது. வறுமைக் கொடுமை உடற்பசியையும், ஞானப் பசியையும் வளர விடாது என்பது யாவரும் அறிந்த உண்மை. ஏழ்மையை ஒழிக்க அரசாங்கமும், செல்வந்தச் சீமான்களும், பொது மக்களும் ஒன்று கூடித் தொடர்ந்து செய்ய வேண்டிய கடமைகள் பல. பணம் மட்டும் போதாது. அப்பணிகள் ஒருபுறம் நிகழ்ந்து வரும் போது, ஓரளவு நிதி வளத்தை ஒதுக்கி மறுபுறம் விஞ்ஞானத்தை விருத்தி செய்யாவிட்டால் “ஞானப் பசி” மூளையை அரித்து மனிதரைக் கோளாறாக்கி விடும் ! இந்தியாவும் ஒரு பிற்போக்கு நாடாகி விடும் !

Fig. 7
Celebration of Launching the
PSLV Rocket

திருவள்ளுவர் “செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்று இசைக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதைச் சிறிது மாற்றி “ஞானப் பசி இல்லாத போது மனிதர் ஊனப் பசிக்கு இடப்படும்” என்று சொல்லிக் கொள்ளலாம் !

ஊனப் பசியடங்கும் மானிடர்க்கு விண்வெளி
ஞானப் பசியிலாத போது !

கட்டுரை ஆசிரியர்

++++++++++++++++++++++++++++++++++++++

நிலவுப் பயணம் பற்றி தமிழ்-இந்து வலைத்தளப் படங்கள்
சிறப்புக் கட்டுரையை படிக்க :

1. http://www.tamilhindu.com/2008/10/launch-of-chandrayaan/ [தமிழ் இந்து இணைய தளம்]

2. http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu.jpg [படங்கள் -1]

3. http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu2.jpg [படங்கள் -2]

நன்றி அரவிந்தன் நீலகண்டன்

++++++++++++++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

*******************

தகவல்:

Picture Credits : ISRO Indian Website & www.Tamilhindu.com

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
1A Stars & Planets By : Duncan John [2006]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4 Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html
14 http://www.tamilhindu.com/2008/10/launch-of-chandrayaan/ (Article & Pictures)
15 http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu.jpg (Pictures)
16. http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu2.jpg (Pictures)
17. BBC News : India Moon Probe Ready for Launch [Oct 21, 2008]
18. BBC News : India Sets its Sights on the Moon [Oct 21, 2008]
19. BBC News : Date Set for Indian Moon Mission By Sunil Raman [2003]
20. BBC News : India’ Growing Strides in Space [Oct 21, 2008]
21. Indian Space Research Organization (ISRO) – Scientific Objectives, Spacecraft, of Chandryaan -1
23. BBC News – India in Multi-satellite Launch
24. Times Now – India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]
25. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]
26 Cosmos Magazine – The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]
27. http://jayabarathan.wordpress.com/2008/05/24/fusion5/ [Fusion Power -1]
28. http://jayabarathan.wordpress.com/2007/09/29/nuclear-fusion-power/ [Fusion Power -2]

******************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 23, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா