இது(ரு) வேறு வாழ்க்கை

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

முத்துசாமி பழனியப்பன்


வசைக்குச் சோம்பல் முறித்தெழுந்து
ஊதுகுழாய் ஒத்தடம் பெற்றுப் பின்
கருவேலங் குச்சியை கடித்துத் துப்பி
கருப்பட்டித் தண்ணீர் குடித்து முடித்து
நட்புக்களை ஒரு சுற்று நலம் விசாரித்து
நேற்றிரவு கொள்ளவில்லையென
மீதம் வைத்த சோற்றை இன்றைக்கு
கரைத்து காலையுணவு முடித்துவிட்டு
ஆடு மாடுகளை காடுகளில் மேயவிட்டு
அங்கிங்கு தெ(தி)ரியும் நட்புக்களை
இழுத்து – சோளத்தட்டையும் கிழங்கும்
பின் கம்பும் காவல்கார பொம்மைக்கு
தெரியாமல் சுட்டுத் தின்று
எல்லை மீறி மேய்ந்த ஆடுகளுக்காய்
அடுத்த காட்டுக்காரனிடம் அடிவாங்கி
அரிப்புக் கொள்ளாமல் ஓடுமொரு ஆற்றில்
குதித்து அலுப்பும் அழுக்கும் நீங்கக் குளித்து
அம்மா மதியம் கொண்டு வரும் கூழும் தயிரும்
சேர்த்துக் குடித்து வேப்பமர நிழலில் காட்டுத்
தலைவன் போலப் படுத்துறங்கிப் பின்
மாலையில் பண்டங்கள் கொட்டகையடைத்து
மீண்டுமொருமுறை நட்புக்களைச் சேர்த்து
ஏரிக்கரையில் வலம் வந்து கதை பேசிக்
களைத்து வீடேறி ஆவி பறக்கும்
நெய்ப்பருப்புண்டு நிலாப் பார்த்துப்
படுத்துறங்கும் – அந்த வாழ்க்கை
பெருமையாகவும்; வேப்பமர நிழலாகவும்
இனிக்கிறது – இந்த வாழ்க்கைக்கு..,

muthusamypalaniappan@gmail.com

Series Navigation