இணையம் என்றொரு வேடந்தாங்கல்!

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

புகாரி


இணையம் என்றொரு
வேடந்தாங்கலில்
எத்தனை எத்தனை அஞ்சல் பறவைகள்!

ஒவ்வோர் அஞ்சலும்
உணர்வை ஏந்துது
உயிரில் கரைந்தே உறவைத் தேடுது…!

இணைய நட்பெனும்
புனிதம் பூக்குது…!
இதயமொத்தமும் இனிப்பில் மூழ்குது…!

விழிகள் கொத்தாத
உருவக் கனிகளை
விருப்பம் போலவே மனங்கள் செதுக்குது…!

O

கண்கள் காணாத
நட்பில் வாழ்வதும்
கருத்தைக் குறிவைத்த கலப்பில் மலர்வதும்…

உலகச் செய்திகள்
அலசிப் பார்ப்பதும்
உள்ளூர்க் கதைகள் கிள்ளிச் சுவைப்பதும்…

கவிதை கட்டுரை
கொட்டிக் கொடுப்பதும்
கலைகள் பேசியே கரைந்து போவதும்…

சின்னச் சின்னதாய்
துணுக்கு மெல்வதும்
சிரிப்புச் சில்லறை அள்ளி இறைப்பதும்…

தனிமைக் கொடுமையில்
இனிமை நிறைப்பதும்
கருணை அன்புடன் கதைகள் கேட்பதும்…

அழுகைக் கணங்களில்
அள்ளி அணைப்பதும்
எண்ண விரல்களால் கன்னம் துடைப்பதும்…

முன்னம் முன்னூறு
வருசம் தாண்டியே
முதிர்ந்து வளர்ந்ததாய் பந்தம் கொள்வதும்…

இன்னும் இவைபோல்
இணைய தளங்களில்
கொள்ளும் சுகங்களும் கணக்கில் அடங்குமோ… ?

நன்றி நன்றியாய்
நன்றி கூறியே
நட்புப் சிறகுகள் நாளும் சிலிர்க்குது…!

இணையம் இணைத்ததால்
தமிழும் வளருது
தமிழர் பண்புகள் தரணி நிறையுது…!

O

காலம் பலகாலம்
யாவும் மரணிக்க
யாரும் இல்லாத ஊரில் வெந்தவன்…

தொட்ட நாள்முதல்
தொடர்ந்து வாழ்கிறேன்
நானும் மனிதனாய் நன்றி இணையமே…!

O

நேற்று சிங்கையில்
இன்று மதுரையில்
எங்கு நிற்பினும் இணையம் ஒன்றுதான்….!

உள்ளம் பாடுது
விரல்கள் ஆடுது
உயிரும் மாறியே அஞ்சல் ஆகுது…!

O

வான தேவதை
தேடி வருகிறாள்
ஓடிப் போவெனக் கூவி நிற்கிறேன்…!

இதனை மிஞ்சியோர்
வரமும் வேண்டுமோ ?
இருக்கும் இணையமே இருந்தால் போதும்…!

O

அன்புடன் புகாரி

buhari2000@hotmail.com

Series Navigation