இடக்கரடக்கல்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

பத்ரிநாத்


வாசலில் அவர்கள் பதற்றமாக நின்று கொண்டிருந்தார்கள் என்பது தூரத்திலேயே தெரிந்தது..நான் அருகில் வரவும் சிலர் மிரட்சியுடன் பார்க்க, ஒரு பெண் மெலிதாகத் தேம்பவும் ஆரம்பித்தாள்.. விசித்திர மெளனம் நிலவியது.. உள்ளே சென்றேன்.உடனே மைத்துனியைதான் என்னுடைய கண்கள் தேடின.. அதோ.. அந்த அறையின் மூலையில் புழுவைப் போல உடலைச சுருக்கிக் கொண்டு முகத்தைத் தரையில் புதைத்துக் கொண்டிருந்தாள்.. தரையெங்கும் சற்று ஈரம்.. வேர்வையா.. கண்ணீரா.. ? என் மனைவி, மாமியார்,அவர் நாட்டுப் பெண்..சின்ன மாமனார் என்று அவளைச் சுற்றிலும் பெண்களும் ஆண்களும் புலம்பிக் கொண்டிருந்தனர்..

‘ ‘கலா..எந்துரு.. ‘ ‘, என்றேன்..

‘ ‘எப்படி மாப்பள எந்துருப்பா.. ஊர்ல தலை காட்ட முடியாம ஆக்கிப்பட்டானே.. கடங்காரன்.. ‘ ‘, என் மாமியார் தீடாரென்று குரலை உயர்த்தி அழ ஆரம்பிக்க – அப்படி அவர் என் முன் அழுது பார்த்ததில்லை.. ‘ ‘நாசமா போறவன்.. அக்கா தங்கச்சிகளோட பொறக்கவே இல்ல போலருக்கு.. ‘ ‘,

‘ ‘லோகமே கெட்டுப் போயிண்டு இருக்கு..நாமதான் ஜாக்கரதையா இருக்கவேண்டிருக்கு.. ‘ ‘, அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்ததைக் கூறினர் ..

‘ ‘எதுக்கும் ஒங்கப் பிள்ளைக்கு ஃபோன் போடலாமா.. ? ‘ ‘ என்றார் நாட்டுப் பெண்..

‘ ‘ஆமாண்டி.. துபாய்லேர்ந்து இதுக்காக பிளேன்ல வரவைக்கறதா.. ? வேண்டாம்.. இந்தக் கண்ராவிய அவன் வேற வந்து பாக்கணுமா.. ?.. ‘ ‘

‘ ‘என்ன செய்யப் போறேள்ி.. ‘ ‘, என்று விசனத்துடன் முனகினாள், என் மனைவி என் காதருகில்..

பலமாக யோசித்த வண்ணம் இருந்தேன்.. சேச்சே என்ன உலகம் இது.. இப்படியும் நடக்குமா.. என் மனைவி அலுவலகத்தில் போனில் விஷயத்தைச் சொன்ன போது ஏற்பட்ட கோபமும் ஆச்சரியமும் தற்போது குறைவாகவே இருந்தது எனக்குப் பெரிய குழப்பமாக இருந்தது.. என்ன இது.. சாதாரண விஷயமா.. ? அயோக்கியத்தனமில்லையா.. ?

அலுவலகத்தில் எனக்கு போன் வந்து நான் எடுத்த போது, மனைவி சற்று பதற்றம் நிறைந்த குரலில் பேசினாள்..

‘ ‘கொஞ்சம் ஆத்துக்கு வரரேளா.. அர்ஜண்டு.. கலாவுக்கு கொஞ்சம் பிரச்சன ஆயிடுத்து.. ‘ ‘,

‘ ‘என்னடி.. என்ன ஆச்சு.. ஆக்ஸிடெண்டா.. அய்யோ.. ‘ ‘,

‘ ‘அதில்லன்னா.. அதாவது.. அதாவது.. ஏரிக்கரை தெருவுல கலா நடந்து வரும் போது, ஒரு காலிப் பய கட்டிப் புடிச்சு.. ‘ ‘,

‘ ‘ என்னது.. என்னடி உளர்ற.. ‘ ‘,

‘ ‘அய்யோ.. உளர்ல.. நீங்க வாங்கோ.. ஆத்துல பேசிக்கலாம்.. ‘ ‘, என்று முடித்துக் கொண்டாள்..

இப்போது மனைவியைத் தனியாக அழைத்துக் கேட்டேன்.. ‘ ‘உன்னத் தவிர வேற யார்ட்டையும் கேக்க முடியாது..கட்டிப் புடிச்சுட்டு வேற ஒண்ணும் பண்ணலயே.. ‘ ‘,

‘ ‘வேறன்னா.. ? அய்யோ.. கஷ்டகாலம்.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. ‘ ‘,

சற்று ஆறுதலாக இருந்தாலும் .. சே..ரெளத்திரம் தலைக்கேறியது.. எப்படிச் சாத்தியம்..தலையெழுத்து.. ஒழுங்காக நகரில் வசித்து வந்தார்கள்.. நான்தான் பையனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு தனியாக பெண்களுடன் இருக்கவேண்டாம் என்று இந்தப் புறநகர்ப் பகுதியில் தங்குமாறு என் வீட்டுக்குப் பக்கத்தில் வீடு பார்த்துக் கொடுத்தேன்..பாவம் கலா.. பத்தொன்பது வயதில் இப்படிப்பட்ட விபத்து தேவையா..நான் அவள்ி வாழ்க்கையே சீரழித்துவிட்டேனோ.. அவனை அப்படியே கொலை பண்ண வேண்டும் போலத் தோன்றியது..யார் அந்த ரவுடிப் பயல்.. விசாரித்ததில் தற்போது மேலும் சில விசயங்கள் தெரியவந்தது.. அவன் பெயர் குமாராம்.. அவளுடன் கம்ப்யூட்டர் கிளாசில் படித்தவனாம்.. தாய் இல்லை.. தந்தையுடன் எரிக்கரைத் தெருவில்தான் வசிக்கிறானாம்.. சின்ன மாமனார் சில நபர்களோடு அவன் வீட்டுக்குச் சென்று வந்தாராம்.. வீடு பூட்டிக் கிடந்ததாம்..

‘ ‘இப்ப மறுபடியும் ஒரு எட்டுப் பாத்துட்டு வந்துறலாம்..முதல்ல ஒரு கம்ளெயண்ட் ரெடி பண்ணுங்கோ..போலீஸ் ஸ்டேசன் போய்க் கொடுத்துட்டு வந்துடுவோம்.. என் சினேகிதர் பையன் கமிஷனர் ஆபீசுல வேல பாக்கறான்.. அவங்கிட்டச் சொல்லி கேச ஸ்ட்ராங்கா போடச் சொல்லலாம்.. ‘ ‘ , என்றார் அவர்..

‘ ‘ போலீசுக்குப் போய்த்தான் ஆகணுமா..அதால பிரச்சன ஒண்ணும் வராதே.. ? ‘ ‘,மாமியார் வழக்கமான பயத்துடன் கேட்டாள்..

‘ ‘நீங்க சும்மா இருங்கோ மன்னிி.. இது என்ன அந்தக் காலமா.. இப்போ நெறய சட்டங்க இருக்கு.. ஈவ் டாசிங் அது இதுன்னு..நீங்க ஓரண்ட.. ‘ ‘, என்றார் சின்ன மாமனார்..

‘ ‘நாம அவன் வீட்டுக்கு ஒண்ணும் அலைய வேண்டியது இல்ல.. போலீசு பாத்துகிடும்.. அதுவுமில்லாம அவன் ஓடிப் போயிருப்பான்ப்பா.. திருட்டுப் பய.. அவன் அப்பங்காரன் ஒரு மொடாக் குடியன்.. அவன் எப்பவாச்சும்தான் வீட்டுக்கு வருவானாம்.. ‘ ‘, என்றார் பக்கத்து வீட்டுக் காரர்.. மிகவும் படபடப்புடன் காணப்பட்டார்..பின்னே இருக்காதா.. அவர் வீட்டில் திருமணமாகாத இரண்டு பெண்கள் இருக்கிறார்களே..

சமூகத்தில் தனக்கும் இதே பிரச்சனை வரக்கூடுமே என்ற பயம்தான் நமக்குப் பாதுகாப்பே என்பது புரிந்தது.. ஆனால் இத்தனையும் மீறி இப்படி நடந்திருக்கிறதே.. உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது.. சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் விடலைப் பயல்களும் பெண்களும் அசிங்கமாகக் குதியாட்டம் போடும் போது நாம் என்ன நினைக்கிறோம்..ஏதோ சிறு புன்னகையுடன் அலட்சியம் செய்கிறோம்.. அது இப்படிப்பட்ட பக்க விளைவுகளைத் தோற்றுவிக்குமே என்ற புரிதலே நம்மிடம் இருப்பதில்லை.. அப்படிப் படம் எடுப்பவர்களைவிட அதை மெளனமாகச் சகித்துக் கொள்கிறோமே நாம்தான் அதிகம் குற்றம் செய்கிறோம் என்று தோன்றியது..இப்போது வீட்டில் அதிகமாகக் கூட்டம் சேர்ந்துவிட்டது.. விசயம் கொஞ்சம் கொஞ்சமாக தெரு முழுக்கப் பரவ ஆரம்பித்துவிட்டது. பாங்கர் தங்கராஜ், நலச்சங்கத் தலைவர் ராமன், அடுத்தத் தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஏட்டு கோவிந்தசாமி என்று தலைகள் தெரிந்தது.. கிட்டத்தட்ட பத்து பதினைந்து நபர்கள்.. நம்பிக்கையாகயிருந்தது.. கூட்டம் அதிகமாக அதிகமாக சத்தமும் அதிகமானது..

‘ ‘ யாரும்மா அந்தப் பய.. ‘ ‘, என்றார் ஏட்டு

‘ ‘சார் சும்மா போலீஸ் கீலீசுன்னு சொல்லி பிரயோசனம் கிடையாது.. நாலு பேரா சேர்ந்து போய் மொத்து மொத்துன்னு மொத்திட்டு வந்தாத்தான் சரிப்படும்.. ‘ ‘, பாங்கர் தங்கராஜ்..

‘ ‘சார்.. பக்கத்தில ஏட்டு இருக்காரு.. அவர வச்சிட்டு சொல்றிங்க… ‘ ‘,

‘ ‘பிஎம் வந்தாகூட அவர வச்சுட்டு சொல்வேன்.. சும்மா கம்ப்ளெயண்டெல்லாம் சரிப்படாது.. நா சொல்ற வளிதான்.. ‘ ‘,

‘ ‘சார் அதெல்லாம் அப்பறம் பாக்கலாம்..சார்.. பெரியவரும் உங்க ஒய்பும் பொண்ண அளச்சிட்டு டாக்டரப் பாத்துட்டு வாங்க..சார் நீங்க வாங்க போலீஸ் ஸ்டேசன் போய்ப் புகார் கொடுத்துட்டு வந்துறலாம்.. ‘ ‘, என்றார் கோவிந்தசாமி என்னைப் பார்த்து..

பேசிக்கொண்டிருந்த போதே, ஊராட்சித் தலைவர் கார்த்திகேயன் வந்துவிடவே, அந்த இடமே பரபரப்பானது..

‘ ‘என்ன சார்.. எப்ப நடந்தது.. யார் அந்த ராஸ்கல்.. ‘ ‘, என்றபடி என்னைக் கேட்டார்.. சொன்னேன்..

‘ ‘பட்ட பகல் மூணு மணிக்குய்யா.. நம்ம ஏரிக்கரை ஒண்ணும் அப்படி ஆள் நடமாட்டமில்லாத எடம் கிடையாதே.. சில பேரு பாத்துருக்காங்க.. அந்தப் பய பைக்குல தப்பிச்சுப் போயிட்டான்.. ‘ ‘.

இப்போது மேலும் மேலும் கூட்டம் அதிகமானது..

அனைவரும் காவல் நிலையத்திற்குக் கிளம்பினோம்.. பதினைந்து இருபது டூ வீலர்கள் தடதட வென்று அந்தத் தெருவை அடைக்க புழுதியைக் கிளப்பிக் கொண்டு, ஏதோ போருக்குச் செல்வது போல கிளம்பினோம்.. தெருவின் முனையில் ஒரு பையனைக் காட்டி அவன் குமாரின் நண்பன் என்றார் ஒருவர்.. சிலர் பைக்கை விரட்டிக் கொண்டு அந்தப் பயலைப் பிடித்தார்கள்.. அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து வந்தார்கள்.. பொறியில் அகப்பட்ட எலியைப் போலத் தவித்தான்.. ‘ ‘சார்.. சார்.. எனக்கு ஒண்ணையும் தெரியாது சார்.. என்னய விட்ருங்க சார்.. எங்கப்பா அம்மா திட்டுவாங்க சார்.. ‘ ‘, தவித்தான்.

அவனை நெருங்கிய ஏட்டு, கன்னத்தில் விட்டார் ஒன்றை.. அவ்வளவுதான்.. ‘ ‘அய்யய்யோ..ஆங்.. ‘ ‘, என்று கல்லடிப் பட்ட நாயைப் போல ஊளையிட்டான்..அசிங்கமாக தரையில் படுத்து அழ ஆரம்பித்துவிட்டான்..

சிலர் ‘ ‘, சார் அந்தப் பயல விட்டுட்டு இவனைப் புடிச்சி என்ன பண்றது.. ‘ ‘, என்றனர்..

‘ ‘ எங்கடா ஒம் சினேகிதன் குமார் பய.. ‘ ‘, என்று அதட்டவே,. ‘ ‘தெர்ல சார்.. நா அவன்கூடப் பேசியே பல மாசம் ஆவுது..எனக்கு அவனப் பத்தியே தெரியாது சார்.. பஸ் ஸ்டான்டுல எப்பவோ பாத்தது.. ‘ ‘, என்றான் விகாரமாக அழுது கொண்டே..இனி அவனிடம் பேசிப் பயனில்லை என்று கிளம்பிச் சென்றோம்..

அதுவரை அழுது வடிந்து கொண்டிருந்த போலீஸ் ஸ்டேசன் நாங்கள் திபுதிபுவென்று உள்ளே நுழையவே, உடைகளைத் தளர்த்திக் கொண்டு லேசான தூக்கத்தில் இருந்த ரைட்டர் பரபரப்புடன் தொப்பியை மாட்டிக் கொண்டு எழுந்து நின்றார்.

‘ ‘வாங்க.. என்ன கோவிந்தசாமி சார், பிரசிடெண்ட் அய்யா என்ன பிரச்சனை.. ஐயா வந்துருவாரு.. பக்கத்திலதான் போயிருக்காரு.. ‘ ‘, என்றார்..

அவரிடம் அனைத்து விவரங்கள் சொன்னோம்..

‘ ‘கயவாளிப் பயலுக.. போன வாரம் ஐயா ஒரு கேசு பஸ் ஸ்டாண்டுல புடிச்சாரு.. இதே பொளப்பா போச்சு.. இருங்க ஐயாவ செல்லுல புடிச்சிப் பாக்கறன்.. ‘ ‘, என்று தொலைபேசியைச் சுழற்றினார்.. நம்முடைய பதட்டம், கோபம் போலீஸ்காரர்களுக்கு அவ்வளவாக இல்லாதது சற்று ஆச்சரியமாக இருந்தது, எனக்கு.. ஆமாம் நிதம் ஆயிரம் வெட்டுக் குத்து என்று பார்ப்பவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டேன்..

அன்று இரவு முழுவதும் உறக்கமே வரவில்லை.. அனைவரையும் எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன்.. கூடத்தில் அவர்கள் அனைவரும் படுத்துக் கொண்டார்கள். நான் மட்டும் அறையில்.. கூடத்தில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.. சின்ன மாமனார் சொன்னார்.. ‘ ‘ அந்தப் பயலை அடுத்த ஊரில் போலீஸ் பிடித்துவிட்டார்களாம்..செம மாத்துதாம்.. ‘ ‘,

‘ ‘நல்லா வேணும்.. ‘ ‘, என்று ஈனஸ்வரத்தில் சொன்னது யார்.. கலாவேதான்.. டாக்டரிடம் காட்டி வந்த பிறகு தற்போது தெம்பு வந்ததைப் போல காணப்பட்டாள்.. இப்போது இரண்டொரு வார்த்தைகள் வேறு பேசுகிறாள்..

‘ ‘என்னடி பண்ணினான்.. ‘ ‘. என்று கேட்டவர் என் மாமியாராகத்தான் இருக்கும்..

‘ ‘என்ன அக்கிரமம்மா.. பக்கத்தில வந்து ஒங்ககிட்ட ஒரு சமாச்சாரத்தச் சொல்லணும்னு பேசிண்டேயிருந்தவன், சடக்குன்னு கட்டிப் புடிச்சிண்டு என்னன்னமோ பண்றான். நேக்கு ஒண்ணுமே புரியல.. பெரிய கூச்சல் போட்டேன்.. ‘ ‘, என்று பயந்தவாறு சொன்னாள், கலா..

சற்று நேர மெளனம் நிலவியது..

‘ ‘சரிடி.. ஆனா இத அப்படியே விட்ருக்கலாம்.. ஏதோ பண்ணிட்டான், ஆத்தல வந்து ஜலம் விட்டுண்டு சித்த நன்னா குளிச்சா சரியாப் போய்டறது.. இத இத்தன டாம்டாம் பண்ணாமயிருந்துருக்கலாமோன்னு தோண்றது.. ‘ ‘, என்று சொன்னது என் மனைவிதான்..

என் மனைவி ஏன் அப்படிச் சொன்னாள் என்று இரவு வெகு நேரமாக யோசித்துக் கொண்டேயிருந்தேன்..

—-

prabhabadri@yahoo.com

Series Navigation