இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

முனைவர் மு.இளங்கோவன்தமிழ்மொழி இயல்,இசை,நாடகம் என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது.தமிழின் இயல் பற்றியபரந்துபட்ட ஆய்வுகள் காலந்தோறும் வளர்ந்துள்ளனவே தவிர ஏனைய இசை,நாடகம் குறித்த ஆய்வுகள் அவ்வளவாக வளர்ச்சிபெறவில்லை. மேலும்இசை,கூத்தோடு தொடர்புடைய நாட்டியம் பற்றிய செய்திகளில் முறையே தெலுங்கு,வடமொழியின் சார்புச் செய்திகள் புனைந்துரைக்கப்பட்டன.தமிழிசை பற்றியும்,நாட்டியம் பற்றியும் தமிழக அறிஞர்கள் சொன்ன செய்திகள் யாவும் கவனிப்பாரின்றிப் போயின.

அத்தகு நிலையில் ஆபிரகாம்பண்டுவர் அவர்கள் தமிழிசைக்கு என உழைத்து உருவாக்கிய கருணாமிருத சாகரம் என்னும் நூல் இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை வளர்ச்சிக்கு மிகப்பெரிய வித்திட்டது.இந்நூலைத் தொடர்ந்து தமிழிசை இயக்கமும்,தமிழிசை ஆய்வுகளும் தமிழகத்தில் இசை மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தன.இத்தகு தமிசை ஆய்வுக்கெனத்தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பிறமொழி இசை ஆதிக்கத்தை ஒற்றை மாந்தராக எதிர்த்ததுடன் தமிழிசைக்கு அரணாகப் பழந்தமிழ்இசை உண்மைகளைக் கண்டுரைத்தவர் அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் ஆவார்.இவர்தம் தமிழிசை வாழ்வையும்,ஆராய்ச்சி நூல்களையும் இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது.

வீ.ப.கா.சுந்தரம் இளமைப்பருவம்

மதுரை மாவட்டம் உத்தமபாளையத்துக்கு அருகே உள்ள கோம்பை என்னும் ஊரில் 05.09.1915 இல் பிறந்தவர்.பெற்றோர் வீ.பரமசிவம்பிள்ளை,காமாட்சி ஆகியோராவர்.இளமையில் நாடகம் பார்ப்பதில் நாட்டம்கொண்டவர்.பாடல்கள் பாடுவதில் வல்லவர்.பட்டப்படிப்பு முடித்தபின் மதுரையில் பசுமலை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பதினேழு ஆண்டுகள் பணிபுரிந்தவர்.பின் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.அங்கிருந்து ஓய்வுபெற்றபின் மதுரையிலுள்ள அரசரடி இறையியல் கல்லூரியில் மேல்நாட்டு மாணவர்களுக்கு இசையும்,கருவிஇசையும் பயிற்றுவித்தார்.மதுரை பசுமலையில் இருந்த தம் ஞானசம்பந்தர் மனையில் தம் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.இவர் சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வித்துவான்.தமிழ் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர்.இவர் மதுரை காமராசர்பல்கலைக்கழகத்தில் பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

மதுரைப் பசுமலையில் வாழ்ந்தபொழுது நாவலர் சோமசுந்தரபாரதியாரின் தொடர்பு ஏற்பட்டது.அவர்தம் தொல்காப்பியம் குறித்த நூலிலிருந்த பிழைகளைப் பட்டியலிட்டுச் சென்றதாகவும் அவற்றைக் கண்ட நாள்முதல் தம்மீது நாவலருக்கு மிகுந்த அன்பு ஏற்பட்டதையும் வீ.ப.கா.சுந்தரம் அடிக்கடி கூறுவார்.தமிழின் ஆழ்ந்த புலமைபெற நாவலரின் தொடர்பே காரணம் என்பார்.ஐந்தாண்டுகள் அவரிடம் தொல்காப்பியத்தையும்,சங்க இலக்கியத்தையும் பாடம் கேட்ட பெருமைக்குரியவர்.

மதுரையில் வாழ்ந்த சி.சங்கரசிவனார் என்னும் இசையறிஞரிடம் இசையியல்,காலக்கணக்கியல்,கஞ்சிரா முழக்கம் பற்றிப் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பாடம் கேட்டவர்.

வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் பல நிறுவனங்களில் பணிபுரிந்தாலும் அவருக்கு எங்கும் ஓய்வுஊதியமோ, பொருந்திய ஊதியமோ கிடைக்கவில்லை.பற்பல ஊர்களில் நடைபெறும் இசை ஆய்வரங்குகளில் உரையாற்றியும், ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தும் தம் இசை ஈடுபாட்டை நிலைநிறுத்தி வந்தார்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் இசைஆய்வுஅறிஞராகப் பணிபுரிந்தார்.தாம் பல காலமாக எழுதிவந்த கட்டுரைகளைத் தொகுத்துத் தமிழிசைவளம் என்னும் பெயரில் நூலாக்கினார்.பல்கலைக்கழக வெளியீடாக அந்நூல் வெளிவந்தது.

தருமையாதீன நிகழ்ச்சியொன்றில் அந்நாள் பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் ச.முத்துக்குமரனாரைக் கண்டதாகவும் அவர்தம் விருப்பப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்(1988-2000) பணிபுரிய வாய்ப்பு அமைந்ததையும் வீ.ப.கா.சுந்தரம் குறிப்பிடுவதுண்டு.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியேற்றது முதல் அவர் பல்லாண்டுகளாகத் தொகுத்து ஆய்வுசெய்து கண்ட முடிவுகளை நான்கு தொகுதிகளாகத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் என்னும் பெயரில் வெளியிட்டார்.பன்னிரண்டு ஆண்டுகள் முயன்று இந்நான்கு தொகுதிகளும் வெளிவந்தன.எனினும் இத்தொகுதிச் செய்திகள் யாவும் ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கும் மேலான உழைப்பாகவும்,கண்டுபிடிப்பாகவும் கொள்ளுதல் தகும். மொத்தம் 2232 தலைமைச் சொற்கள் இக் கலைக்களஞ்சியத்தில் மயக்கமற விளக்கப்பட்டுள்ளன.இன்னும் பல ஆயிரம் கிளைச்சொற்களும் போகிறபோக்கில் இசைமேதை அவர்களால் விளக்கப்பட்டுள்ளதைத் தமிழிசை வல்லார் உணர்வர்.இந்தியாவிலும்,தமிழகத்திலும் வெளிவந்துள்ள இசைக் கலைக்களஞ்சியங்களில் இந்நூலே மிகப்பெரிய நூலாகும்.
வீ.ப.கா.சுந்தரம் பாரதிதாசன்பல்கலைக்கழகத்தில் களஞ்சியப்பணி நிறைவுற்றதும் மதுரையில் பசுமலையில் அமைந்த அவர்தம் ஞானசம்பந்தர் மனையில் இசையாய்வுகள் நிகழ்த்திவந்தார்.இறுதியாக முறம்பு என்னும் ஊரில் அமைந்திருந்த பாவாணர் கோட்டத்தில் உரை நிகழ்த்தி வந்த சில நாளில் ( 09.03.2003) இயற்கை எய்தினார்.அவர்தம் தமிழுடல் பசுமலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழிசைக்கலைக்களஞ்சியத்தின் நான்கு தொகுதிகளுள்ளும் இசை,நாட்டியம்,இசைக் கருவிகள்,பாடல் இயற்றியோர் வரலாறு,பண்களின் தோற்றம்,வளர்ச்சி,தாளக் கொட்டு, முழக்குமுறை மிகச்சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழிசை,நாட்டியம் குறித்த செய்திகளை,விளக்கங்களைத் தர வீ.ப.கா.சுந்தரம் பல்வேறுபடங்கள்,கட்டகங்கள்,ஓவியங்கள்இவற்றைப்பயன்படுத்தியுள்ளார்.

இசைவல்லார் இன்று பயன்படுத்தும் பிறமொழிச்சொற்களுக்கு வீ.ப.கா.சுந்தரம்அவர்கள் பலநூறு தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டு பிடித்துள்ளார்.தமிழ்க் கலைச்சொல் வரலாற்றிலும்,வேர்ச்சொல்லாய்விலும் இவருக்குத் தனித்த இடம் உண்டு. தமிழிசைக் கலைக் களஞ்சியத்திற்குத் தமிழின் முதல்நூலான தொல்காப்பியம் தொடங்கி சங்கநூல்கள்,சிலப்பதிகாரம்,காரைக்காலம்மையார் பாடல்கள்,பக்திப்பனுவல்கள்,பெரியபுராணம்,பிற்கால நூல்கள்,தெலுங்கு,வடமொழி நூல்கள்.உலகநாடுகளின் இசைகுறித்த நூல்கள் யாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு நம் வீ.ப.கா.சுந்தரம் விளக்கம் தந்துள்ளார். இதுநாள்வரை விளக்கம் பெறாமல் இருந்த பல்வேறு இசைக்கலைச் சொற்களைப் பல்லாண்டு பட்டறிவால் விளக்கிச் சென்றுள்ளமையை எதிர்காலத் தமிழகம் போற்றிச் சொல்லும்.

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் நூல்கள்:

1.தமிசைவளம் (1985) ம.கா.பல்கலைக்கழகம்
2.பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்(1986) கழகம்
3.மத்தளவியல்(Art Of drumming),(1988 ) ஆசியவியல் நிறுவனம்
4.அருட்குறள்
5.பைந்தமிழ்ப் பயிற்று முறை
6.இன்றுள்ள இசைத்துறை வடசொற்களுக்குத் தமிழ்ச்சொல்
7.சிறுவர் இன்பம்
8.பஞ்சமரபு(1991) கழகம்
9.தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள்(1994) உ.த.நி
10.பழந்தமிழ் இலக்கியத்தில் தாளமுழக்கியல்(1995), செல்வி பதிப்பகம்
11.ஆளுடைய பிள்ளையாரும் அருணகிரியாரும்
12.தமி ழிசைக் கலைக்களஞ்சியம்
முதல்தொகுதி (1992)
இரண்டாம் தொகுதி (1994)
மூன்றாம் தொகுதி (1997)
நான்காம் தொகுதி (2000) பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியீடு.

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் இசைத்துறைப் பங்களிப்பு

வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் இசையை மறவாத இசைவாணர்.தன் கைவிரல்கள் எந்த நேரமும் தொடைப் பகுதியில் தாளம் முழக்கிக் கொண்டிருப்பதை அருகில் இருந்தார் அறிவர்.விழிப்பு,வினைப்பாடுகள்,ஓய்வு,உறக்கம் எல்லா நிலைகளிலும் இசை,கூத்துப் பற்றிய நினைவில் இருப்பார்.புல்லாங்குழல் இசைப்பதில் வல்லுநர். புல்லாங்குழல் தமிழரின் முதல் இசைக்கருவி என்பதும் முல்லைப் பண்ணே முதல் பண் எனவும் நிறுவியவர். முல்லை நிலத்துப் புல்லாங் குழலைக் கிறித்தவ தேவாலயங்களில் இசைக்கத் தொடக்க காலங்களில் இருந்த எதிர்ப்பைத் தன் அறிவால் தகர்த்து வாசித்ததை இசைமேதை அவர்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார்.

தாளக் கருவிகளை முழக்குவதில் தனியாத ஈடுபாடு கொண்டவர்.ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சி பார்க்கும்பொழுது அதில் இடம்பெறும் நாட்டியநிகழ்ச்சிகளில் இடம்பெறும் இசைக்கட்டுகளை நுட்பமாகச்சுவைப்பவர். இசையரங்குகளில்,பண்ணாராய்ச்சி மாநாடுகளில் உரையாற்றும் பொழுது எந்தச் சூழலிலும் தம்கருத்தைத் துணிவாக எடுத்துரைக்கும் ஆண்மையர்.இவர்தம் கருத்துகளில் மாறுகொண்டவர்கள் தம்மை மீண்டும் அழைக்கவில்லை என்றாலும் தம்கொள்கையை வலியுறுத்திக்கொண்டே இருப்பார்.

பொள்ளாச்சி அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் நம் வீ.ப.கா.சுந்தரம் அவர்களை நன்கு மதித்துப் போற்றிய பெருந்தகையாளர்.அருட்செல்வரிடத்து மிகுந்த மதிப்புக் கொண்டவர் வீ.ப.கா.சுந்தரம்.பஞ்சமரபு நூலுக்குச் செப்பமான உரைவரையும் ஆற்றல் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்கு உண்டு என்பதை அறிந்த அருட்செல்வர் அவர்கள் அப்பணியை அவரிடம் வழங்கினார்.அப்பணியை மிகத் திறம்படச் செய்தவர் வீ.ப.கா.சுந்தரம். அருட்செல்வர் நடத்தும் பல்வேறு இராமலிங்கர் பணிமன்ற விழாக்களில் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்குப் பெருமை செய்யும் வகையில் உரையாற்ற வாய்ப்பு நல்குவார்.ஆனால் தமக்கு இத்தகு வாய்ப்பினை அருட்செல்வர் வழங்குவதால் அவர்தம் கொள்கைகளை வீ.ப.கா.சுந்தரம் ஏற்றுக் கொண்டாரில்லை. வடமொழிச்சார்புக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்ப்பதாக வீ.ப.கா.சுந்தரம் அருட்செல்வரைப் பற்றிக் கூறும்பொழுது கூறுவார்கள்.கருத்துநிலையில் இருவரும் வேறுபடுவார்களே தவிர ஒருவரை ஒருவர் அன்புபாராட்டுவதில் நிகரின்றி விளங்கினர்.

வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் பெற்ற சிறப்புகள்

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் இசையாய்வுகளை உணர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குச் சிறப்புச்செய்துள்ளன.அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக இலங்கிய முத்தையா செட்டியாரின் பிறப்புமங்கல பரிசிலான உரூவா ஐம்பதாயிரம் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.சென்னைப் பண்ணாய்வு மன்றக் கூட்டங்களில் ஏழு ஆண்டுகள் இவர் ஆற்றிய உரைப்பொழிவுகள் விழாமலரில் இடம்பெற்றுள்ளன.

அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் மூவர்தேவார இசைவிழாக்களில் வாய்ப்பு நல்கியுள்ளார்.பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் சிறுவர் இன்பம் என்னும் வீ.ப.கா.சுந்தரம் நூலுக்கு வழகியுள்ள அணிந்துரையில் இவரை அறிஞர் எனவும் தம் நண்பர் எனவும் போற்றியுள்ளார்.வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசை ஆய்வில் மதிப்புவைத்த அமெரிக்காவாழ் தமிழர்கள் இவரை அமெரிக்க நாட்டிற்கு அழைத்துச் சிறப்புச்செய்துள்ளனர்.அமெரிக்கா முதலான நாடுகளுக்குச் சென்றபொழுது அங்குள்ள இசைக்கருவிகள்,இசையமைப்பு முறைகள் முதலானவற்றைக் கற்றுவந்து தம் ஆய்வுநூல்களில் அவ்வறிவுச் செல்வங்களை வழங்கியுள்ளார்.பல்வேறு கல்வி நிறுவனங்கள் இவரை அழைத்துத் தமிழிசை அறிவுச் செல்வத்தைப் பெற்றன.

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் நெஞ்சில் நின்றவர்கள்

வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் வாழ்க்கை ஆய்வுவாழ்க்கை.எனவே தம் குடும்பப் பணிகளைவிட ஆய்வுப்பணிகளில் மூழ்கிக்கிடந்தவர்கள்.
தம் நெஞ்சில் சில கொள்கைகளை வைத்திருந்தார்.சில புதிய கண்டுபிடிப்புகளை வைத்திருந்தார்.இவற்றோடு உடன்படுவோரை மேலாக மதித்தார்.தம் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியான அறிஞர்களைக் கடவுளாகவே எண்ணி மதித்தவர்.தாம் ஒரு கிறித்தவராக இருந்தும் தம் இல்லத்திற்குத் தமிழிசை முன்னோடிகளில் ஒருவரான தாளவேந்தர் என வீ.ப.கா.சுந்தரம் அவர்களால் போற்றப்பட்ட
ஞானசம்பந்தர் பெருமானின் பெயரினைத்தம் மனைக்கு வைத்திரந்தார்.அதுபோல் இசையாய்வு முன்னோடிகளான தமிழிசை மூவர்களான அருணாசலக் கவிராயர்.மாரிமுத்தா பிள்ளை,முத்துத்தாண்டவர் ஆகியோரைத் தம் எழுத்துகளில் உயர்வாகப்போற்றி எழுதியுள்ளார்.

தமக்குப்பணி வழங்கித் தமிழிசைக் கலைக்களஞ்சியம் உருவாக்க காரணமாக அமைந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் முனைவர் ச.முத்துக்குமரனார்,முனைவர் வீர.முத்துக்கருப்பன்,முனைவர் பெ.செகதீசன்.முனைவர் சி.தங்கமுத்து ஆகியோரை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் எஞ்ஞான்றும் மறந்தாரில்லை. அதுபோல் அறிஞர் வ.சுப.மாணிக்கனார், பேராசிரியர் தமிழண்ணல்
பேராசிரியர் சீத்தா முதலானவர்களையும் மதித்தவர்.திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வ.சுப்பையாபிள்ளை, இரா.முத்துக்குமாரசாமி ஆகியோரையும் நன்கு மதித்தார்.மருத்துவர் இரா.கலைக்கோவனிடத்து வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்கு நல்ல பற்றுமை இருந்தது.

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் வழியில் இசையாய்வை இன்று நிகழ்த்துபவர்கள் முனைவர் அரிமளம் பத்மநாபன்,மதுரை மம்முது,
நிர்மல்செல்வமணி.செ.அ.வீரபாண்டியன் முதலானவர்கள்.

வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் இசையாய்வு குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார்.பல கட்டுரைகளை வரைந்துள்ளார்.பல ஆய்வரங்குகளில் உரை நிகழ்த்தியுள்ளார்.இன்னும் பல நூல்களை எழுதத் திட்டமிட்டிருந்தார்.அவற்றுள் யாழ்பற்றிய நூலொன்று அவர் உள்ளத்தில் கருக்கொண்டிருந்தது.அது வெளிவராமல் போனது தமிழர்களின் போகூழேயாகும்.எனெனில் ஒருமாலைப்பொழுதில் யாழ்பற்றிய பேச்சு வந்தது.மறுநாள் அவ் யாழ்பற்றிய கட்டுரையுடன் ஐயாஅவர்கள் வந்தமை எளியேனை வியப்படையச் செய்தது. தொல்காப்பியம், சங்க
நூல்களில் இடம்பெறும் யாழ்குறித்த அனைத்துச் சொற்களையும் திரட்டி உருவம் கொடுத்திருந்தமையும் யாழ்நூலாரினும் புதிய உண்மைகள் சில இடம்பெற்றிருந்ததையும் அந்நாளில் கண்ட நினைவுகளுடன் இச் செய்தியைப் பதிவு செய்கிறேன்.

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் கண்டுபிடிப்புகள் பலவும் அவர்தம் தமிழிசைக் கலைக்களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளன.நூல்வடிவம் பெறாமல் பல்வேறு ஏடுகளில் சிதறிக்கிடக்கும் அவர்தம் கட்டுரைகள் தொகுக்கப் பெறுவதும்,நூலுருவம் பெறுவதும் காலத் தேவையாகும்.ஏனெனில் இக்கட்டுரைகளில் பல்வேறு உண்மைகள் பொதிந்திருக்கக் கூடும். வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் தாமே பாடுதுறையை அறிந்தும்,கருவியிசையை அறிந்தும்,தாளம் பற்றிய பேரறிவு கொண்டும்,தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்லபயிற்சி கொண்டும்,வேர்ச்சொல்லாய்வில் தோய்ந்தும்,உலக இசைபற்றிய அறிவுகொண்டும்,பயிற்றுவித்தலில் நற்றிறம் கொண்டும் விளங்கியதால் இவர்தம் களஞ்சியப்பணிக்கு நிகரான வேறொருவரின் உழைப்பை இசைத்துறையில் ஒப்புமைகாட்ட இயலாதவர்களாக உள்ளோம்.

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் சில இசையாய்வு முடிவுகள்

சிலப்பதிகாரப் பதிகவுரையை ஆய்வாளர்கள் முழுமையாக ஆராயாததால் பல்வேறு குழப்பங்கள் இசையாய்வுகளில் ஏற்பட்டுள்ளன. இப்பதிக உரையை முழுமையாக வீ.ப.கா.சுந்தரம் விளக்கியுள்ளார். பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட ஐந்து நிலங்களுக்கும் உள்ள இசையை இளங்கோவடிகள் தம் நூலில் குறிப்பிட்டுள்ளதை வீ.ப.கா.சுந்தரம் எடுத்துக் காட்டியுள்ளார்.அவை : 1.முல்லையாழ், 2.குறிஞ்சியாழ், 3.மருதயாழ், 4.நெய்தல்யாழ் 5.சுடுபாலை. இவற்றின் இன்றைய பெயராக அரிகாம்போதி, நடபைரவி, கரகரப்பிரியா, தோடி,
சங்கராபரணம் உள்ளதைதையும் வீ.ப.கா.சுந்தரம் கண்டுகாட்டியுள்ளார். பழங்காலத்தில் யாழ் என்றும்,பின்னர்ப் பாலை என்றும் இன்று மேளகர்த்தாராகம் என்றும் இசை வழங்கப்படுவதைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் தொன்மைக் காலத்தில் ஏழ்பெரும் பாலைகளுக்கும் தலைமையாக விளங்கியது செம்பாலையாகும்.இது அடிப்படைப் பாலையாகவும் இருந்தது. இது சங்க காலத்தில் முல்லையாழ்(பெரும்பண்) என்னும் பெயரினைப் பெற்றிருந்தது. தலைமைச் சிறப்பால் பாலையாழ் எனவும் அழைத்தனர். பின்பு செம்பாலை எனப் பெற்றது. இன்று அரிகாம்போதி என்பது பண்டு செம்பாலை எனப்பட்டது. சிலம்பின் ஆய்ச்சியர்குரவையில் செம்பாலையை உரையாசிரியர்கள் அரிகாம்போதியின் நரம்புகளை உடையது எனத் தெளிவூட்டியுள்ளனர்.

வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் பழந்தமிழ் நூல்களில் பொதிந்துகிடக்கும் இசையுண்மைகளை வெளிக்கொண்டு வந்ததுடன் இசையறிஞர்கள்
தந்திருந்த சில தவறான விளக்கங்களையும் தம் நுண்ணறிவால் தெளிவுப்படுத்தியுள்ளார்.பஞ்சமரபு நூலுக்கு அவர் வரைந்த நுண்ணுரை
பல்வேறு புதிய இசையுண்மைகளை இசைத்துறைக்கு வழங்கியுள்ளது. இதுநாள்வரை விளக்கப்படாமல் இருந்த வரிக்கூத்தின் குலம்
விளக்கம் பெற்றமை,யாழ் என்ற இசைக்கருவி காலந்தோறும் மாறிய விதத்தை விளக்கியுள்ளமை, காரைக்காலம்மையார், திருஞான
சம்பந்தர்,திருநீலகண்ட யாழ்ப்பாணர்,சேக்கிழார்,அருணகிரியார் முதலானவர்களின் இசைத்தொண்டினை நினைவு கூர்ந்துள்ளமை,
விளக்கியுள்ளமை இவரின் பெரும்பணியாகக் கொள்ளலாம். இசைத்துறையில் பல்லாயிரம் தனித்தமிழ்ச் சொற்களை உருவாக்கித் தந்தமை,நாட்டிய முத்திரைகளை விளக்கியுள்ளமை,அரங்கேற்று காதையை விளக்கியுள்ளமை என இவர்தம் தமிழிசைப் பணியைப் பட்டியலிடலாம்.
சிலப்பதிகாரப் பதிகத்திற்கு அடியார்க்குநல்லார் வரைந்து காட்டியுள்ள உரை முறையில் பண்டைத்தமிழின் இசையிலக்கண முறை உள்ளதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் முதன்முதல் கண்டுகாட்டியுள்ளார்.தமிழர்கள் பண்டைக்காலத்தில் இசை,நாட்டியம்,கூத்துக்கலையில் வல்லவர்கள் என்பதைப் பழந்தமிழக இலக்கியச் சான்றுகளுடன் நிறுவ இவர்தம் நூல்கள் அடிப்படைச் சான்றாதாரங்களாக விளங்குகின்றன.


muelangovan@gmail.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்