இசட் பிளஸ்

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

எஸ். ஷங்கரநராயணன்பரிசுத்தராஜனுக்குத் தமிழே கொஞ்சம் பேஜார்தான். தமிள்ம்பான். டமிள்னா ஆங்கில வாடையாவது இருக்கும். ஆனால் அவன் ‘’அட” சொல்கையில் ‘’அத” என மற்றவர்களின் மொண்ணைக் காதுகள் குறித்துக் கொள்கின்றன. ‘’அழ” அல்ல அள” தான். தமிள் வாள்க.
பளம் பாடல்களின் ரசிகன். பாட்டுப் போடுவதில் சிவாசியால கடேசிவரை அண்ணன்கிட்ட நிக்க முடியவில்லை. எம்சியார் பாட்டில் அவனுக்குப் பிடிச்ச பாடல் -“அளகிய தமிள் மகள் இவள் – இரு விளிகளில் எளுதிய மதல்”
எப்பேர்ப்பட்ட பாடகர் எம்சியார். பேசும்போது கொளகொளன்னாலும், பாடும் போது சரியா உச்சரிக்கிறாரு.
எம்சியார் இறந்துட்டாரு. இல்லாட்டி சினிமாவில் அவரிடம் அடிவாங்கிய பெருமை அவனுக்கு ஒருவேளை கிடைத்திருக்கும்.
தந்தை எட்டடி எனில் குட்டி பதினாறடி பாயும் புலி. இளம் பிராயத்தில் இருந்தே வன்முறைப் பிரியன். அப்ராணி சுப்ரமணிகளைக் கண்டால் உற்சாகம். ஒதுங்கிப் போகிற நாயைக் கண்டால் இளக்காரம். தனி பொம்பளையாளைப்பார்க்கவே கிளர்ந்தெளும் ரகம். எதாவது எம்சியார் பாடல் பாடுவான். இன்னொரு ரசிகனிடம் ஸ்பெசல் ட்ரெய்னிங் எடுத்து ஊய்யென விசில் கற்றுக் கொண்டான்.
இராப் பொளுதில் தனி சைக்கிள் பயணம் போக நேர்ந்தால் பாட்டு விசில் வடிவில் வரும். இது மென்மை – சுத்த சைவம் ரகம். வீடு வந்து சேரும்வரை மாத்தி மாத்திப் பாட்டு. பாட்டுப் பிரளயம், அந்தக் காலப் பாகவதர் படம் போல. அந்தாள் என்ன மனுசன். உடம்பில் ஈ மொய்த்ததுக்கெல்லாம் பாட்டு எடுக்கிறான். ஈ மொய்ச்சா தட்டி வுட்டுப் போவியா…
எதிர்ல வாத்தியார் வந்தால் மாணவர்கள் சைக்கிளை விட்டு இறங்கிப் போவர். நம்மாள் பரிசுத்தராஜன் எதிரில் வர, வாத்தியார் சைக்கிளிலேர்ந்து இறங்கி ஓரமா நின்னு வளி விட்டார்.
‘வணக்கோம் சார் ‘ என்றான். ‘வணக்கம் ரெண்டு சுளியா? மூணுசுளியா? ‘
‘அது உன் சவ்ரியமப்பா ‘ என்றார் வாத்தியார்.
சில பேர் வெத்திலை பாக்கு போட்டபடி ருசி தட்ட தட்டப் பேசும். பரிசுத்தராஜன் கெட்டவார்த்தைப் பிரியன். ரெண்டு வாக்கியம் பேசினால், ஒண்ணிலாவது இடைப்பிறவரலாய் ஒரு வசைச் சொல்லாவது கிடக்கும். மீன் குளம்பில் மீன் போல.
வன்முறைக் கலைகள் அவனுக்குத் தனிக் கவர்ச்சியளித்தன. சிலம்பாட்டம், குஸ்தி என கொஞ்சகாலம் கிரியாப்பாவிடம் பயிற்சி. வட்டி பைசல் பண்ணித் தருகிற வேலை என ஐயாவுக்கு ஒத்தாசை செய்ய உத்தேசம். ‘அட நாய்ப்பயலே! எம்பாடுதான் இப்பிடிக் களிஞ்சிட்டு. நீ ஓம்பாட்டுக்குப் படிக்கலாம்லடா ? ‘ என்றார் ஐயா. பையன் உருப்படாமல் எங்கும் சிக்காத மாதிரி அலையடித்துப் போவதில் அவர் துயரப் பட்டார்.
உள்ளூர்த் திருவிளாச் சமயம் வீர விளையாட்டு நிகள்ச்சிகள் பிடித்தமானவை. எலேய், வாளைக்கொலை நல்ல பெருந்தண்டு பாத்துக்க. பத்து ரூவா பந்தயம். ஒற்ற வெட்டுல போட்டுத் தள்ளீறணும். முடியுமா ?…
தள்ளி நில்லும். ஒம்ம வாளத் தண்டு பத்திரம்! – வெட்டிக் காட்டுவான்!
பெருமீசைக்காரன். சலூனில் அதற்கு பிரத்யேகக் கவனிப்பு நடக்கும். அதில் கவனப் பிசகா சேதாரங் கீதாரம் ஆச்சி “த்தாய.. வகுந்திருவேன்” என்பான். அதுவரை நிதானமாய்ச் சவரம் செய்தாளுக்கே அப்பதான் கை உதற ஆரம்பிக்கும். உடம்பு பூராவும் கறுகறு சுறுசுறுவென முடி. அரிக்க ஆரம்பிச்சா கதி என்னாவும்னு இருந்தது.
கபடி நிபுணன். அவன் பாய்ந்து அமுக்க வருமுன்பே மூச்சு நின்றது அவனவனுக்கு. அவன் கிட்ட நெருங்குமுன் உடல் பதறியது. காலை உதறிக்கொண்டு ‘பாடி’ வந்தால் ‘body’ பார்த்தே பதட்டப் பட்டார்கள். இந்த உடம்புக்கு அடியில் மாட்னா சட்னி சால்னாதான். தாராளமான ஆகாரங்கள். தட்டு நிறைய முட்டைகள் வைத்துக் கொண்டு உடைத்து உடைத்துக் குடிப்பான். கோழியும் இறைச்சியும் அவன் கடித்து இளுக்கிற இளுப்பில் பார்க்கிறவனுக்குப் பல் என்னமோ செய்யும். என் சொத்தையெல்லாம் தின்னே அளிச்சிருவாம் போலுக்கய்யா, என்பார் ஐயா ஆயாசமாய்.
புஜங்களைப் பயன்படுத்துவதை ஓயாமல் சோதிக்கிறவனாய் எப்படியோ பளகிக் கொண்டிருந்தான். சில வெத்துவேட்டு ஆட்கள் களுத்து நரம்பை ‘மளுக்’னு சும்மா ஒரு இதுக்கு சொடக்கெடுக்கும். அதைப்போல நம்மாள் நடந்தால் ரெண்டு கையும் வீசி வீசித்தான் நடப்பான். உற்சாகத்தில் கையைப் பின்பக்கமாய் வீசி தட்டிக் கொள்வான். கிரிக்கெட் பெளலிங் போல கையை மேல்கீள் வட்டமாய்ச் சுளற்றுதல், கையில் கம்பெதுவும் கிடைத்தால் அதை காத்தாடிச் சுத்து சுத்துதல், தெருவளிப் போகையில் மரத்தில் காய் கண்டால் கல்லைத் தேடுதல். காயைக் கண்டால் கல்லைக் காணம், கல்லைக் கண்டால் காயைக் காணம் – இது அவன் பளமொளி.

ஆபத்தை வரவேற்று காத்திருக்கிறது அவன் இயல்பாய் இருந்தது. நான் அறியாமல் என் பிடரில சின்ன மயிரைக்கூட எவனும் தொட முடியாது, என்பான். உடல் பலத்திலும் அலாதி நம்பிக்கை. கடும் உடற் பயிற்சிகள் காலைகளில் மேற்கொண்டான். கரளாக்கட்டை சுத்தி சுத்தி நாளடைவில் கட்டை பார்க்க சின்னதாயும் அவன் புஜங்கள் புடைத்தும் ஆகிவிட்டன. அக்கா குளந்தைகளை தன் கையை மடக்கி அதில் தூளியாடச் சொல்வான். கையைத் தளர்த்தாமல் அப்படியே தாங்குவான். அக்கா சிரிப்பாள். வயசென்னவோ இருபதுக்குள். வாசல் ப்பக்கம் கூரையெடுத்து டெல்லி எருமை கட்டியிருந்தது. வீட்டுக்குள் அவன். எலேய், ரெண்டு பேரையும் சேர்ந்து ஒரு ஃபோட்டோப்படம் எடுத்து மாட்டி வைக்கணும்டா, என்பார் அப்பா.
வயக்காட்டு வேலைகளுக்கும் லாயக்கில்லை. நாலு எளுத்து படிச்சானில்லை. ப்ளஸ் டூ – ப்ளஸ் த்ரீயானது அவனைப் பொறுத்த மட்டில். பிளாஸ்திரி ஆகாமல்… அந்தளவு பரவாயில்லை. உடல் திமிர் பிடித்துத் திரிகிறது. வீட்டு வாசல் வளாகத்தில் புல்-அப்ஸ் எடுக்க கம்பிகள் பதித்துக் கொண்டான். தொளுவத்தைக் களுவுகையில் மாட்டை அங்கே சம்சாரிகள் கட்டினார்கள். புல்அப்ஸ் எடுக்க மாடு வந்ததைப் போலிருந்தது.

இவன் தினவை அடக்க என்ன வளி ?… ‘எலேய் பட்டணத்தில் உங்க சித்தப்பு இருக்கான். அவன்ட்ட அனுப்பறேன். உனக்கு ஒரு வளி காட்டி விடட்டும் ‘ என அனுப்பி வைத்தார் ஐயா.
ஆஜானுபாகு உருவமும் நடையும் சற்று வித்தியாசமாகவும் கலவரமாகவும் இருந்தது. சித்தப்பா இவன் ஆளைப் பார்த்ததுமே போலீஸ் வேலை மாதிரி எங்காவது இளுத்து விடத்தான் சரியாகும் என்று முடிவு பண்ணிவிட்டார். உடற்பயிற்சி களகங்கள் – ஜிம் என்று அவனை அவர் அனுப்பினார். சித்தப்பாவுக்கு பூஞ்சை உடம்பு. சக்தி கிடையாது. நடந்தாலே இளைக்கும். பூமியில் நிளல் காணாத தேகம்!… நெட்டுக்க நிற்கும் சாரைப்பாம்பு. ரொம்பக் காத்தடிச்சா வெளிய இறங்க மாட்டார்.
டேக்வான்டோ என்று கராத்தே கொரியக் கலை, குங்ஃபு இத்யாதி அடிதடிக் கலைகளில் அவன் கவனம் திரும்பியது. எதற்கோ அடிக்கு முன் அவர்கள் கத்துகிறார்கள். அடி வாங்கியவன்ல கத்தணும். அன்னிக்கு ஒருத்தன் பரிசுத்தனுடன் மோதினான். நட்பாட்டம் தான். ‘யீய்ய்யேய்’ என பெருஞ்சத்தத்துடன் மோதி, ‘ஊ…’ என அலறி விழுந்தான். “எலேய் அவசரப்படாதே, படார்னு நான் நகர்ந்துட்டா உன் கொட்டை தேன்கூடா ஆயிருக்கும்.’ என்றான்.
நாய்க்காதுகள் அவனுக்கு. வாசல் நாதங்கியை யாராவது தொட்டாலே சூட்சுமம் சிலிர்த்தது. ஆர்றாது – என இவன் அதட்டலில் வாசல் ஆளுக்கு மூத்திரம் நெருக்கியது. சிக்கலான சப்தக் கோர்வையைக் கூட தரம் பிரித்து கல்-நொய் நீக்கி தனித்தனி சப்தமாய்க் குறித்துக் கொள்ள முடிந்தது அவனால்.
வீட்டில் ஒரு மணல்பொதி கட்டி அதை சும்மானாச்சும் குத்திட்டிருப்பான். சித்தப்பா பல் குத்தியபடி அதைப் பார்த்திட்டிருப்பார். அதை ஊஞ்சலாட்டி நெஞ்சிலும் முதுகிலும் அடிவாங்கிக் கொள்வான். பார்க்கவே சித்தப்புவுக்கு மூச்சு திகைக்கும். நம்ம வம்சத்துல தப்பிப் பிறந்த பிள்ளை.
சொளகாட்டம் கைகள். களுத்து ஒடுங்கி மண்டை கூட அத்தனை இல்லை. நெஞ்சுக்கூடு முக்கோண எடுப்பில் அகலமோ அகலம். முதுகில் துணி தோய்க்கலாம். ஊசி கீசி டாக்டர் போட்டாக்கூட உள்ளிறங்காது போலிருந்தது. வியாதி வெக்கை அண்டவில்லை. இத்தனை உடம்புக்கும் அதிர்வே தெரியாமல் பூனை நடை நடந்தான். தலைமுடியை வளர்த்து பின் பக்கமாய் முடிபோட்டு கட்டிக் கொண்டான்.
போலீசுக்கு ஆள் எடுக்கிறார்கள், என்று கேள்விப்பட்டிருந்தார் சித்தப்பு. வீடு வந்து அவனிடம் சொல்ல ஆளைத் தேடினால் காணவில்லை. சாவகாசமாய் சாயந்தரமா வந்து சேர்ந்தான்.
‘எலேய் மடப்பய மவனே உன்னிய எங்கெல்லாம் தேடுறது… ‘
‘என்னா விசயம் சித் ‘ என்றான்.
‘போலிசுக்கு ஆள் எடுக்கறாளுகளாம்ல… நீ… ‘ அவர் முடிக்குமுன் தாளை நீட்டினான். அவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான்.
சிறு பிராயத்தில் இருந்தே முதலில் நாயிடம், அப்புறம் மாமரத்தில், பிடிக்காத வாத்தியாரை… குறி பார்த்துப் பளகியவன்தான். இருந்தாலும் துப்பாக்கி அவனுக்குப் புதியது. நேராய் கருப்பு வட்டம். சுடு என்றார்கள். சுட்டான். வட்ட அளவு சின்னதாகிக் கொண்டே போனது. சுட்டான். நின்றபடி, படுத்தபடி, பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்து, உருண்டபடி, சட்டென்று திரும்பி…
வீட்டில் ‘எலேய் சுட்றாத ‘ என்று பயந்தலறினார் சித்தப்பு. ‘இது டம்மி. சுடாது ‘ என்று சிரித்தான்.
வேலை அவனுக்கு ரொம்பப் பிடித்து விட்டது.
விறுவிறுவென்று எத்தனை ஆர்வமாய் முன்னேறினான்.
புதுசாய் சஃபாரி சூட் தந்தார்கள். கொஞ்சம்போல ஆங்கிலம் சொல்லித் தந்தார்கள். பெரிய வி.ஐ.பி.க்கு பாதுகாப்பு என அவனை அனுப்பும் அளவு விரைவில் தேறினான் பரிசுத்தன். பார்வை எப்பவும் அலைந்து கொண்டே இருந்தது. உற்று கவனித்தபடி இருந்தது. புலன்கள் தயாராய் விபத்துக்கும் ஆபத்துக்கும் காத்திருந்தன. பெரிய பெரிய அரசு மேடை, அரசியல்வாதிகள் பேசும் மேடை எனில் முன்கட்டமாக அவன்போய் தற்காப்பு ஏற்பாடுகளை, முன்நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தான்.
வெடிகுண்டுகள். கையெறி குண்டுகள். கண்ணி வெடிகள். சினிமாவில் சோளத்தட்டை திங்கிறாப்போல எவ்வளவு அநாயாசமாய்க் கைக்குண்டுகளைக் கடித்து எறிகிறார்கள். ஒருமுறை எறிந்து பார்த்தான். சோடா பாட்டில்களை ஒன்றை மேலே வீசி மற்றதால் நச்ச்…
கையில் மெட்டல் டிடெக்டர். பிறகு ரிவால்வர். பிறகு கத்தித் துப்பாக்கி. தற்போது குண்டுபூட்டிய பெரிய துப்பாக்கி… என அந்தஸ்து கூடிக் கொண்டே போனது.
மீசையெடுப்பும் அதுவுமாய் பெரிய துப்பாக்கி, சஃபாரி சூட் என பந்தாவுடன் பெரிய அரசு அதிகாரி, அமைச்சர்கள் பின்னால் நின்றபடி கூட்ட மேடையில் இருந்து கண்காணிப்பது வேலை. தினசரி அடிக்கடி செய்திகளில் மேடையைக் காட்டும்போது பின்னணியில் அவன். ஊரே ஜன சமுத்திரமே சிரித்தபோது, மண்ணாய் கல்லாய் சிலையாய் அப்படியே நிற்க வேண்டும. நம்ம சென்னை VGP கோல்டன் பீச் ஆள்போல. யார் என்ன பேசுகிறார்கள் என்று காது கேட்காது. முன்னணியில் எந்தத் தலையாவது சந்தேகப் படும்படி இருக்கிறதா என்று உற்றுத் துழாவுவான்.
முதுகு அரிச்சால்கூட சொறிந்து கொள்ள ஏலாது!
புதிதாய் ஒரு கட்சி பதவிக்கு வந்திருந்தது. புதிய அமைச்சர் ஒருவர். அவன் அறிந்த ஆள்தான். திகைப்பாய் இருந்தது. பண்ணாத அக்கிரமம் இல்லை. நாட்டைக் காக்கும் அமைச்சர்!
‘எலேய் நீயா ? ‘ அமைச்சர் ஆச்சரியப்பட்டார்.
‘ஆமாங்கய்யா ‘ என்றான் பவ்யமாய்.
‘இங்க என்ன பண்றே, கோளிமுட்டைக்கு மயிர்புடுங்கறியா ? ‘ தன் நகைச்சுவைக்குத் தானே சிரிக்கிறார். பொட்டி மவனே, வாழ்வுடா!…
அடக்கமாய் ‘உங்களுக்குப் பாதுகாப்பு ஐயா ‘ என்றான்.
‘எலேய் ஊர்ல என்னைப் பார்த்து நாலு பேர் கலங்கறான். என்னை யாரும் ஒண்ணுஞ் செஞ்சிற முடியாது. பாதுகாப்பு எனக்குத் தேவையில்லை ‘ என்றார் அவர்.
‘அமைச்சர்னா அது ஒரு இதுங்கய்யா ‘ என்றான் மேலும் பொறுமையாய்.
‘என்னைப் பாதுகாக்கிற அளவு நீ பெரிய ஆளா… ‘
‘நான் ரொம்ப கவனமானவன் ஐயா. உங்க மேல தூசி தும்பு அண்ட விடமாட்டேன்… ‘
‘கிளிச்ச. இந்தா உன் பர்ஸ் ‘ என்று அலட்சியமாய் நீட்டினார்.

‘இது ஒரு அடையாளம்டா. என் முழு பாகமுங் காட்டினா நீ தாங்கேலாது. நீ
இஸெட்னா, நான் கதையின் தலைப்புடா ‘ என்றார்.

Series Navigation

எஸ். ஷங்கரநராயணன்

எஸ். ஷங்கரநராயணன்