ஆண்பால் பெண்பாலுக்கு அப்பால்…

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

அருணகிரி


தினத்தந்தியிலிருந்து டில்பர்ட் வலைப்பதிவு வரை அனைத்து மீடியாக்களிலும் வந்த செய்திதான். என்றாலும் இக்கட்டுரையின் நோக்கம் செய்தி விளக்கம் மட்டுமே அல்ல. அதையும் தாண்டி இயற்கையின் பாலியல் பிரிவின் அறிவியல் சிக்கல்களையும் அவற்றின் சமுதாயத் தாக்கங்களையும் பார்ப்பதே என் நோக்கம்.
தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ. பந்தயத்தில் வெள்ளி மெடல் வாங்கிய சாந்தி சவுந்திரராஜன் அவர்களிடமிருந்து அநத மெடலைப் பறிக்க இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது நடத்தப்பட்ட பாலியல் சோதனையில் அவர் தோல்வியடைந்தது, காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அவர் 1200 மீ. பந்தயத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. முதல்வர் கருணாநிதி அறிவித்த 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை திரும்பப் பெறப்படவில்லை என்பது ஓர் ஆறுதல். பொருளாதாரத்தில் கஷ்ட நிலையில் உள்ள சாந்தி அவர்களின் குடும்பத்திற்கு இது பெரிதும் உதவும்தான். (1 லட்ச ரூபாய்க்கு பிளாஸ்மா டிவி தரப்பட்டுள்ள அபத்தத்தை ஒதுக்கி விடுவோம்). இதற்காக முதல்வருக்கு நன்றி. ஆனால் விஷயம் இத்துடன் முடிந்து விடவில்லை.
மற்ற இடங்களை விட விளையாட்டு மைதானங்களில்தான் பாலியல் சோதனைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்குக்காரணம் ஆண் தன்மை அதிகம் இருக்கும் பெண் வீராங்கனைகளுக்கு, உடற்கூறு, வலிமை ஆகியவற்றின் அடிப்படையில், பெண்களுக்கான விளையாட்டில் வெல்ல சாத்தியங்கள் அதிகம் என்பதுதான்.
இந்தப் பாலியல் சோதனை முதலில் அறிமுகமானது பனிப்போர் உச்ச கட்டத்தில் இருந்த அறுபதுகளில்தான். சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனி ஆகிய கம்யூனிஸ்டு நாடுகளின் சில வீராங்கனைகள் தொடர்ந்த அதிக வெற்றிகள் பெற்றது கண்ட மேற்கு நாடுகள், வெற்றி பெற்ற வீராங்கனைகள் ஆண்களா பெண்களா என்ற சந்தேகத்தை எழுப்பின. (பல பதக்கங்கள் குவித்த ஒலிம்பிக் சோவியத்தைச் சேர்ந்த சேர்ந்த ப்ரெஸ் சகோதரிகள் என்ற இரு வீராங்கனைகள் 1966-இல் பாலியல் சோதனை முதலில் புகுத்தப்பட்டதும், போட்டியிலிருந்தே விலகிக்கொண்டனர்- இது சோவியத்தின் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படச் செய்தது). பிறப்புறுப்பு, ஆண் பெண் பால் உறுப்புகளின் வளர்ச்சி ஆகியவை உள்ளடக்கிய உடலியல் சோதனை மட்டுமே பாலியலை நிர்ணயிக்கும் என்றிருந்த நிலையை, மருத்துவமும், உயிரியலும், மரபணுத்துறையும் கண்ட முன்னேற்றம் வெகு விரைவில் மாற்றியது.
குரோமசோம்கள், மரபணுச் செய்திகளை உள்ளடக்கியவை. மரபணுக்கள் ஆணா பெண்ணா என்பவை உட்பட்ட அனைத்து உடலியற்கூறுகளையும் நிர்ணயிக்கின்றன. எனவே இவற்றினடிப்படையில் மேலதிக சோதனைகள் உருவாக்கப்பட்டன.
X மற்றும் Y குரோமசோம்கள் பால் (செக்ஸ்) குரோமசோம்கள் எனப்படுகின்றன. இரண்டு X குரோமசோம்கள் இருந்தால் ஆண் (பெண்களுக்கு XY) என்ற அடிப்படையில், முதலில் குரோமசோம்களின் அடிப்படையிலான டெஸ்ட் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஆண் உடற்கூறு உள்ள ஒருவருக்கு Y குரோமசோம் இருக்கலாம் (XXY) மற்றும் ஒரேஒரு X குரோமசோம் கொண்ட பெண்ணும் இருக்கலாம் என்பதால் இதன் நம்பகத்தன்மை விரைவிலேயே கேள்விக்குள்ளானது. மட்டுமன்றி XY குரோமசோம்கள் இருந்து விதை வளர்ச்சிகூட அடைந்து ஆனால் பாலியலில் பெண்களாக இருப்பவர்களும் உண்டு. இந்த நிலையை androgen insensitivity syndrome (AIS) என்கின்றனர். அதாவது ஆண்ட்ரோஜன் மரத்த நிலை எனலாம். டெஸ்டோஸ்டீரோன் என்ற ஆண்ட்ரோஜன்தான் ஆண் உடற்கூறுகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்றது என்பதால், AIS உள்ள பெண்கள் ஆணுக்குள்ள உடல்வாகு, வலிமை போன்ற அம்சங்களைப்பெறாமல் பெண்ணுக்கான உடல்வாகுடனேயே வளர்கின்றனர். பெண்ணாகவே உணர்கின்றனர். இவர்களுக்கு மாதவிடாய் தொடங்குவது தாமதப்படலாம்- அல்லது இல்லாமல் போகலாம். இதன் அடிப்படையில் அட்லாண்டாவில் 1996 நடந்த கோடைக்காலப் பந்தயங்களில் AIS நிலை இருந்த ஏழு பெண்கள் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். (இந்த Y குரோமசோம்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் இன்று சாந்தியிடம் உள்ள பதக்கம் கேள்விக்குறியாகியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது). இதன் காரணமாக இப்படிப்பட்ட போட்டிகளில் மற்ற சில சோதனைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
1990-இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இது சம்பந்தப்பட்ட பலதுறை வல்லுநர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து அவர்களின் தீர்ப்பே இறுதியானது எனச் சொன்னது.
1992 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்ரய் (SRY- Sex-determining Region Y) என்ற மரபணு சோதனை புகுத்தப்பட்டது. உயிரணு ஏழாவது வாரத்தில்தான் ஆண் அல்லது பெண் என்ற பாதையைத் தேர்ந்தெடுக்கின்றது. அதுவரை இரட்டை நிலைதான். இந்தத் தேர்தலை முடிவு செய்வதுதான் ஸ்ரை மரபணு. ஸ்ரை இருந்தால் ஆண் என்ற பாதையையும், இல்லாவிட்டால் பெண் என்ற பாதையையும் தேர்ந்தெடுத்து பிறப்புறுப்புக்கள் நகர (வளரவும் சுருங்கவும்) தொடங்குகின்றன. இதனால் ஸ்ரை இருந்தால் ஆண் எனலாமா என்றால், அதுவும் கிடையாது. பெண்ணுக்கும் கூட ஸ்ரை இருக்கலாம். இயக்கம் இழந்த நிலையில் பெண்ணுக்கும் ஸ்ரை இருப்பது சாத்தியமே. எனவே இதனை ஸ்ரையை மட்டும் வைத்து அறுதியிட முடியாது.
அது மட்டுமா? பருவம் எய்தும் வரை (ஆண் பெண் இரு பாலாருக்கும்) பல மரபணுக்களும் ஒன்றாக, ஒரு சீரான ஸிம்பொனிபோல் இணைந்தியங்கி செல்களின் வளர்ச்சியைச் சரியாகக் கொண்டு செலுத்த வேண்டும். இதில் ஒரு மரபணு தடுக்கினாலும் பாலியல் வளர்ச்சி முழுமையடையாமல் போகக்கூடும். இதனால் ஸ்ரை மரபணுவுக்கு மட்டும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதும் ஏற்கப்படவில்லை.
இடையில் இந்த சோதனைகள் உண்டானதற்கான ஆதிமூலக் காரணமான சோவியத் யூனியன் சிதறுண்டு பனிப்போர் முடிவுக்கு வர, 1999 -இல் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை இந்த கட்டாய பாலியல் சோதனையை முடிவுக்குக் கொண்டு வந்தன. ஆனாலும் யாரும் சந்தேகம் கொண்டு புகார் செய்தால் சோதிக்கப்படலாம். அதனடிப்படையில் சக போட்டியாளர் ஒருவரின் சந்தேகப் புகாரின் பேரில் பாலியல் சோதனைகள் செய்யப்பட்டு சாந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் சொல்கின்றன.
இதன் பின்னணியில் எழுந்துள்ள பல கேள்விகளுக்கான பதில்கள் அரசின் விசாரணையின் முடிவில் தெரிய வரலாம். அது அல்ல நம்முன் உள்ள பெரிய கேள்வி.
ஆண் யார்? பெண் யார்? உடலியல் ரீதியாக ஆண் பெண் என நிர்ணயம் செய்ய முன்னேறும் சமுதாயம் எதனை நியாயமான அடிப்படையாகக் கொள்ள வேண்டும்? என்பதே உண்மையில் கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும்.
ஆண் என்ற நிலையும் பெண் என்ற நிலையும் தீர்மானமான ஒற்றை நிலைகள் அல்ல; மாறாக அழுத்தங்கள் வெவ்வேறு அளவில் அமையப்பெற்ற ஒரு தொடர்க்கட்டமைப்பே ஆண்பாலென்றும் பெண்பாலென்றும் சமூக அடையாளம் பெற்று உள்ளது . இந்த அழுத்தங்களின் உடலியல் மற்றும் உளவியல் அளவுகளே பாலியல் தன்மையை நிணயிக்கின்றன என்பது இன்றைய அறிவியலாளரின் கருத்து. உமையொரு பாகனாய் அமர்ந்த சிவசக்திக் கோலம் நமக்குத்தரும் இறையியலும் இதுதான். எந்த ஒரு அறிவியற் சோதனையாலும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாத விஷயம் இது. பெண்ணாய்ப் பிறந்து பெண்ணாய் வளர்ந்து பெண்ணாய் உணரும் சாந்தி அவர்கள்தான் இதனை உண்மையில் அறுதியிட முடியும்.
ரயில்வே துறையில் சாந்திக்கு விளையாட்டு வீராங்கனை கோட்டாவில் வேலை மறுக்கப்பட்டதற்கு இத்தகைய பாலியல் சோதனை முடிவுகள் காரணமாய்க் கூறப்பட்டுள்ளன. நார்வே போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட பாலியல் சோதனைகள் (மருத்துவக் காரணங்கள் அல்லாத பிற அனைத்து விஷயங்களிலும்) முழுவதுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. அறுதியிட முடியாத வகையில் பல குழப்பங்களும் கேள்விகளும் உள்ளதாலும் , தனிமனித உணர்வையும் பாதிக்கும் அம்சம் இது என்பதாலும், அனைத்து மக்களின் பிரதிநிதியாக உள்ள அரசாங்கமும் அதன் துறைகளும் இதனை மிகவும் பரிவுடனும் உண்மையான அக்கறையுடனும் கையாள வேண்டும். சாந்தி பாலியல் அறுவை சிகிச்சை எதுவும் செய்து உடற்கூறு மாற்றியவர் அல்லர். இவரைப் பெண்ணல்ல என்று அரசின் ரயில்வே நிர்வாகம் சொல்லி வேலையை மறுத்திருப்பது எனக்கு சிறிதும் நியாயமற்ற செயலாகவே தெரிகிறது. மஹாபாரத காலத்திலேயே ஆண்தன்மை கொண்ட பெண்ணான சிகண்டி போர்க்களத்தில் பங்களிப்பது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்க, இந்த நவீன யுகத்திலோ நம் அரசு யந்திரம் தன் குழப்பமான சட்டங்களால் பாலியல் அடிப்படையில் வாழ்வியல் பறிக்கும் அநியாயம் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறது. இந்த வேலை மறுப்பை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இப்படிப்பட்ட பிரச்னைகளில் மேல் முறையீடு செய்வது என்பது தெளிவற்றதாகவும், மிகவும் குழப்பமானதாகவும் உள்ளது. இதனைச் சீர் செய்யவும், இப்படிப்பட்ட குழப்பமான சோதனைகளின் முடிவின் அடிப்படையில் பதக்கப்பறிப்புகள் நடத்தப்படுவதை எதிர்த்தும் இந்திய விளையாட்டுத்துறை ஆசிய விளையாட்டு அரங்கில் அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். ஆசியாவின் முக்கிய சக்தியாக உருவெடுக்கும் இந்தியா, விளையாட்டுத்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் வலுவாகத் தன் முற்போக்குக் கருத்துகளை முன் வைப்பது அவசியம்.
சாந்திக்குக் கிடைத்திருக்கும் பரிசுத்தொகை அவருக்கு ஆறுதல் தரும் என்றாலும், வென்ற பதக்கம்தான் அவர் இதற்காகச் சிந்திய வேர்வைத்துளிகளுக்கு முழுமையான அர்த்தம் கொடுக்கும். இந்தக் குழப்பங்களிலிருந்து அவர் மன வலுவுடன் வெளிவந்து, மேலும் பல பதக்கங்கள் வென்று பாரதத்திற்குப் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.


Series Navigation

அருணகிரி

அருணகிரி