ஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

சித்ரா ரமேஷ்,சிங்கப்பூர்


நான் சென்ற வாரம் ஹிந்தி படிக்கும் தமிழருக்கு சரியான சவுக்கடி கொடுத்து விட்டதாக என் நண்பர்கள் சிலர் வெகுவாக பாராட்டினார்கள். வரிகளுக்கிடையில் படிப்பது என்பது இதுதானா ? ஹிந்தி, ஃபிரெஞ்ச், சம்ஸ்கிருதம், பாலி என்று எதை வேண்டுமானாலும் படிக்கட்டும். ரசிக்கட்டும். தமிழை வேண்டாம் என்று ஏன் புறக்கணிக்கிறார்கள் என்றுதான் எழுதியிருந்தேன். டில்லியில் வாழும் தமிழர்கள் கூட தமிழ்ப் பள்ளி வைத்து (எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அங்கே தான் தமிழ் ஆசிரியராக இருந்தார்.) தமிழ் படிக்கும் போது தமிழ் நாட்டில் தமிழ் சூழலில் வாழ்ந்து வரும் தமிழருக்கு ‘டமில் எப்படி டிஃபிகல்ட்டா மாறும் ? ‘ விஞ்ஞானம், கணிதம், வரலாறு, புவியியல் எல்லாம் தமிழில் படிக்க வேண்டாம். தமிழை மட்டுமாவது தமிழில் படிக்கலாமே! என்னதான் முயன்று ஹிந்தி, ஜெர்மன், ஃபிரெஞ்ச் என்று படித்தாலும் அதை தொடர்ச்சியாக பயன் படுத்தும் நிலைமை வராத போது அது அந்நியப்பட்டு போய் விடுகிறது என்பது உண்மைதானே! தமிழ் நன்றாகத் தெரிந்த தமிழர்கள் மற்ற மொழிகள் ஆங்கிலம் உட்பட சரியாகத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லையென்றால் ‘தேமதுரத் தமிழோசை ‘ உலகமெங்கும் பரவுவது எப்படி ? மொழி பெயர்ப்பு என்ற அற்புதக்கலை வளர்வது எப்படி ? ராகி ரங்கராஜனின் ‘பட்டாம்பூச்சியை ‘ ரசிக்காதவர் யார் ? ஆல்பெர் காம்யூவின் ‘அந்நியன் ‘ அந்த்வான்த்செந்த் எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன் ‘ இவற்றை போன்ற உலக இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்காவிட்டால் நம்மால் படித்திருக்க முடியுமா ? வெளி நாடுகளுக்குச் செல்லும் போது சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்திருப்பது அதிக தன்னம்பிகைத் தருகிறது.மேலும் மற்ற மொழிகள் கற்றுக் கொள்ள ஆங்கிலம் ஒரு தொடர்பு மொழியாகவும் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் என்னவோ தெரியவில்லை தமிழில் பேசிக்கொண்டேயிருப்பார்கள். தீடாரென்று நமக்கு இங்கிலிஷ் சரியாக பேச வராது என்று யாராவது தப்பாக நினைத்து விடுவார்களோ என்ற படபடப்பு

தமிழர்களுக்கு அதிகமாகி விடுகிறது. உடனே ஆங்கிலத்திற்குத் தாவி விடுகிறார்கள். ஆகவே தமிழர்களே! தமிழ் மட்டுமல்லாது இன்னும் முடிந்தவரை பல மொழிகள் கற்றுத் தேர்ந்து உங்கள் தொப்பிகளில் மேலும் சிறகுகள் சேர்த்துக் கொள்ளுங்கள்!! (எப்படி இந்த மொழி பெயர்ப்பு)

‘அடுத்த வருடம் அநேகமாக முதல் குழந்தை பெற்றுக் கொள்ளத் திட்டமிடுவோம் என்று நினைக்கிறேன் ‘ அடேயப்பா! எத்தனை ஜாக்கிரதையாக சொல்லப்பட்ட வரிகள். என் தோழி ஒருத்தி திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும். அவள் தந்த தகவல். குழந்தை பிறந்து அது முப்பது வயது வரை படிப்பதற்குத் தேவையான பணம் சேர்த்து, சொந்த வீடு வாங்கி அதில் ஒரு அறையை ‘நர்ஸரி ‘ ஆக்கி இளஞ்சிவப்பு நிற வர்ணம், இள நீல நிற வர்ணமடித்து பொம்மைகள், உடைகள் வைப்பதற்கு அலமாரி அமைத்து நிலாவை கட்டித் தொங்கவிட்டு, நட்சத்திரங்கள் பதித்து என்று பில்கேட்ஸ் அளவு திட்டமிடுகிறார்கள். அந்தக் குழந்தையோ பிறந்து மூன்று வருடங்களிலேயே ‘மை ரூம் டூ சைல்டிஷ் ‘ என்று சொல்லிவிட்டு வரவேற்பறையில்

தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டு காலம் கழிப்பார்கள். அப்புறம் கொஞ்ச நாள் கழித்து அவர்கள் அந்த அறையை விட்டு ரொம்பத் தேவைப்பட்டால் மட்டும் வெளியே வந்து தலையைக் காட்டி விட்டு நாம் உள்ளே போக வேண்டுமென்றால் கூட கதவைத் தட்டி அநுமதி வாங்கிக் கொண்டுதான் போகமுடியும் அளவிற்கு தனிமைச் சிறையில்!!(என்ன தனிமைச் சிறை! தொலைபேசி, கணினி, தொலைக்காட்சி உள்ளே ஒரு குடித்தனமே நடத்திக் கொண்டு) முதல் குழந்தை தப்பித் தவறி சீக்கிரம் பிறந்து விட்டால்

அடுத்ததையாவாது சரியாக திட்டமிடவேண்டும் என்று தீர்மானித்து முதல் குழந்தைக்கு பத்து பன்னிரண்டு வயதாவது ஆனபிறகுதான் அடுத்தது. அந்த அண்ணனோ அக்காவோ பிறகு எப்படி இரண்டாவது குழந்தைக்கு விளையாட்டுத் தோழன் ஆக முடியும் ?

திருமணமாகி முதல் வருடத்திலேயே முதல் குழந்தை அநேகமாக பிறந்து விடும். பிறகு ஒரு பத்தாண்டுகளில் ஒரு பெரிய தலைமுறையே வளர்ந்து விடும் காலமது. குழந்தைகள் அறைக்குச் சென்றாலும் கதவைத் தட்டி விட்டுத் தான் செல்ல வேண்டும். என்ன அகால நேரத்தில் நம் டானேஜ் பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வந்தாலும் யார் என்று கேட்காமல் தொலைபேசியை கொடுக்கின்ற நாகரிகமெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரியாது. திருமணமாகி விட்டால் அடுத்தது குழந்தைப் பிறப்பு என்பது இயல்பான விஷயமாக இருந்தது. அதற்காக வீட்டில் செய்யப்படும் திட்டமிடல்கள் பழைய வேட்டி, புடவைகளை சேகரித்தல், தூளி கட்ட தக்க இடம் பார்த்து உத்திரத்தில் வளையம் மாட்டுவது போன்றவைதான். முதல் குழந்தை அதுவும் ஆண் குழந்தையாகப் பிறந்து விட்டால் பெண்ணுக்கு சமூகத்தில் தனி அந்தஸ்தும் அங்கீகாரமும் கிடைத்து விடும். முதல் குழந்தைக்கு நடக்கும் உபசாரங்கள் இருக்கிறதே அது உலகை ஆளும் சக்ரவர்த்திக்குக் கூட கிடைக்காது. தாத்தா பாட்டியிலிருந்து வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வரை எல்லொருடைய அன்பையும் கவனிப்பையும் பெறும். அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகள் பெரிய குழந்தையை வைத்துத்தான் கணிக்கப்படுவார்கள். ‘என்னயிருந்தாலும் பெரிய தம்பி போல நிறம் இல்லேம்மா ‘ ‘பெரியவனாட்டம் அத்தனை பொறுப்பு சமத்து இல்லை ‘ என்று நடுவில் பிறக்கும் குழந்தைகளின் தவழல், சிரிப்பு, படிப்பு எல்லாவற்றிற்கும் தரம் அளக்கும் கருவி அந்த பெரிய தம்பிதான்!

வீட்டின் கடைசிக் குழந்தை! இந்தக் குழந்தை பெரும்பாலும் அப்பாவின் கவனிப்பில் வளரும். முதல் குழந்தை பிறக்கும் போது நல்ல இளமைத் துடிப்போடு இருக்கும் அப்பா கடைசிக் குழந்தை பிறக்கும் போது நடுத்தர வயது வந்து முதிர்ச்சியடைந்து முன் போல் வெளியில் சுற்றி கொண்டிருக்காமல்

வீட்டில் தங்கி வீட்டு நிலவரங்களை கவனிக்க ஆரம்பித்து விடுவார். முதல் இரண்டு மூன்று பிரசவங்களை அம்மாவின் பிறந்த வீட்டினர் துடிப்போடு கவனித்துக் கொள்வார்கள். பின்னால் தொடரும் பிரசவங்களில் அசிரத்தை வந்துவிடும். அம்மா பிரசவம் என்று இரண்டு மூன்று மாதங்கள் கிளம்பிப் போய் விட்டால்

மூன்று நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படி சமாளிப்பது என்ற மலைப்பில் அப்பா ‘நீ எங்கேயும் போக வேண்டாம் நான் கவனித்துக் கொள்கிறேன் என்று அம்மாவுக்கு வலி எடுத்ததும் தானே ஆஸ்பத்திரியில் சேர்த்து குழந்தை பிறப்பின் போது உடன் இருந்து எல்லா உதவிகளையும் செய்து அந்தக் குழந்தையையும் தன் நேரடி கண்காணிப்பில் வளர்க்க ஆரம்பித்து விடுவார். அம்மாவும் நிறைய குழந்தைகளை பெற்று வளர்த்த அலுப்பில் யாராவது சின்னதை வளர்த்தால் சரி என்று விட்டு கொடுத்து விடுவாள்.

முதல் குழந்தை அதுவும் ஆண் குழந்தையாக இருந்தால் அம்மா பிள்ளையாகவும் (இந்த பாசப் பிணைப்பைப் பற்றி ஐந்து பாகம் எழுதலாம்) கடைசிக் குழந்தை ‘அப்பா செல்லமாக ‘ வளருகின்ற மர்மம் இதுதான். எங்களைப் போல் நடுவில் பிறக்கும் குழந்தைகள் என்னதான் செய்வது ? வேறென்ன ?

‘உயிர் வாழ்தலுக்குத் தேவையான போராட்டங்களை ‘ தேவைக்கு அதிகமாக செய்து கொண்டு டார்வினின் கோட்பாடுகளோடு வளர்வோம்.

முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் அம்மாவுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். வாசல் தெளிப்பதிலிருந்து, இட்லிக்கு அரைத்து கொடுத்து, தோசை சுடுவது, துணி உலர்த்துவது என்று எல்லாவேலைகளையும் பகிர்ந்து கொள்வாள். தம்பி தங்கைகளை பொறுப்பாக ஸ்கூலுக்கு கூட்டிக் கொண்டு போய் மதிய இடைவேளையில் டிபன்பாக்ஸ் கழுவித் தந்து தண்ணீர் பிடித்துத் தந்து ரொம்ப பெரிய பெண்ணாகதான் நடந்து கொள்வார்கள். ஆனால் சமயத்தில் தாய்மை உணர்வு அதிகமாகி நம் டாச்சரிடம் வந்து நம்மைப் பற்றி விசாரித்து வீட்டில் அம்மாவிடம் கோள் சொல்லி விடுகிற அபாயங்களும் அதிகம்தான்!

அதே அண்ணனாக இருந்து விட்டால் இந்த மாதிரி ‘பொறுப்புகளை ‘ நிறைவேற்றுவான் என்று எதிர்பார்க்க முடியாது. ஸ்கூலுக்கு கிளம்பும் போது எல்லோரும் ஒன்றாக கிளம்பினாலும், தம்பி தங்கைகளை பொறுப்பாக பள்ளிக்கூடம் அழைத்துப் போவது உன் கடமை என்று அம்மா சொல்லியிருந்தாலும் கேட் தாண்டியதும் தலையில் ஒரு குட்டு குட்டி மிரட்டி விட்டு மின்னலென மறைந்து விடுவான். அதுவும் பதின்ம வயதில் தங்கையை எங்காவது வெளியில் அழைத்துப் போக வேண்டும், பள்ளியிலிருந்து வர லேட்டாகி அண்ணனைப் போய் கூட்டிக் கொண்டு வா என்று அனுப்பிவிட்டால் அதை விட அவமானகரமான விஷயம் வேறெதுவும் இல்லை என்பதைப் போல் பல்லைக் கடித்துக் கொண்டு எனக்குப் பத்தடி பின்னால் தள்ளி வா என்று அதிகாரம் செய்து தலையை தொங்கப் போட்டுக் கொண்டு யாராவது நண்பர்கள் பார்த்து விட்டால் என்ற எண்ணத்தில் விடுவிடுவென்று நடந்து வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் ‘இனிமே அவ லேட்டா வந்தா அவளே தனியா வரட்டும் என்னை அனுப்பாதே ‘ என்று கத்திக் கொண்டிருப்பான்.

ஆண்பிள்ளை என்பதால் அதிக சுதந்திரமும் சலுகைகளும் தரப்பட்டு அதை முழுமையாக உபயோகித்து சாகஸங்கள் செய்யும் அண்ணனாக இஇஇருந்து விட்டால் அவனைப் போல் ‘வாழும் கலை ‘ சொல்லித் தரும் குரு வேறு யாருமிருக்க முடியாது. நாற்காலி மேலேறி ரேடியோவில் சிற்றலை வரிசை வைப்பது, பல்ப் ஃப்யூசாகி விட்டால் ஃப்யூஸ் போடுவது, மரமேறுவது, அணில் கூடுகளை கண்டறிவது, காற்றாடிக்கு சூத்திரம் போடுவது, மாஞ்சா போடுவது,கொய்யா மரக் கிளைகளை சீவி கிட்டி புள் செய்வது, அப்பாவுக்குத் தெரியாமல் சைக்கிள் எடுத்து குரங்கு பெடல் ஓட்டிப் பழகுவது, சைக்கிள் பங்சர் ஒட்டுவது, சினிமா பாட்டு புத்தகங்கள் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்குவது, அம்மா முந்திரி பருப்பு,வேர்க்கடலை, பொட்டுக்கடலை, கிரீம் பிஸ்கெட் போன்ற தின்பண்டங்களை எங்கே ஒளித்து வைத்திருப்பாள் என்று தடயங்கள் தருவது, போன்ற சின்ன விஷயங்களிலிருந்து, தீபாவளிக்கு எந்த கடையில் என்ன பட்டாசு வாங்குவது, வெடிக்காமல் போன பட்டாசிலிருந்து மருந்தையெல்லாம் சேகரித்து எப்படி ரீசைக்கிள் செய்வது, வார பத்திரிகைகளிலிருந்து தொடர் கதைகளை கிழித்து பைண்ட் செஇய்வது,

எந்த திரைப்படத்திற்கு அதிக வசூல், எந்த பாட்டு சூப்பர் பாட்டு போன்ற பெரிய விஷயங்கள் வரை ‘ஜென் ‘ குருவாகத்தான் இஇஇருப்பான். இஇஇதை படித்து விட்டு அண்ணன் என்னவோ எஸ்வி ரங்காராவ் போல் ‘முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ‘ என்று ‘பாசமலராக ‘ பாடி நம்மை வழி நடத்திச் செல்வான் என்றெல்லாம் கற்பனை செய்து விட வேண்டாம். இஇதெல்லாம் முறை சாராக் கல்வியாக அவன் விஷமம் செய்யும் போது கூடவே இ இஇருந்து அவனுக்கு எடுபிடி வேலைகள் எல்லாம் செய்து கற்றுக் கொள்ள வேண்டியதுதான்.இஇஇதைத்தான் ‘ஜென் ‘குரு என்று குறிப்பிட்டேன். எந்த ஜென் ‘ குருவாவது தன் சீடனுக்கு உட்கார்ந்து முறையாக எதையாவது சொல்லிக் கொடுப்பாரா ? சீடர்களே குரு பின்னாலேயே அலைந்து நாலு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்!

வயது ஏற ஏற அப்பாவுக்கும் அண்ணனுக்கும் அபிப்ராய பேதங்கள் அதிகமாகிக் கொண்டேப் போகும். முதலில் சைக்கிள் ஓட்டுவது பற்றி. அப்பாவுக்குத் தெரியாமல் சைக்கிள் எடுத்து விட்டு திரும்ப அதை அப்படியே வைத்து விட்டதாக நாங்கள் நினைத்துக் கொண்டிருப்போம். அப்பா வீட்டில் நுழைந்ததும் நேராக அம்மாவிடம் போய் ‘என் சைக்கிளை யார் எடுத்தது ? ‘ என்று விசாரிப்பார்.

சும்மா யூகித்து கேட்கிறாரா இஇஇல்லை ஹாண்டில் பார் வளைந்து,சைக்கிள் டயரில் புழுதி சகதி எல்லாம் படிந்து, எங்கள் சட்டைகளில் கிரீஸ் படிந்திருப்பதைப் பார்த்து (பின்னே சைக்கிள் செயின் கழன்று விட்டால் திரும்ப மாட்டும் போது கிரீஸ் படாமல் இஇஇருக்குமா ? கவலையே படாமல் சட்டையில் துடைத்துக் கொண்டு விடுவோம்) கேட்பாரோ தெரியாது. அம்மா கணவனா மகனா என்ற பாசக் குழப்பத்தில் குழந்தைகளை காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று ‘ஆமா சைக்கிளை நான்தான் எடுத்தேன் ‘ என்று சொல்லி சமாளிக்கப் பார்ப்பாள். அம்மாவுக்கு குழந்தைகளை வளர்க்கத் தெரியவில்லை என்ற திட்டோடு அண்ணனுக்கு அடி விழும். நடந்த விபத்துக்கு முழு பொறுப்பேற்று பதவி விலகும்

ரயில்வே மந்திரி போல நடந்த தவறுக்கு முழு பொறுப்பேற்றுக் கொண்டு இஇஇரண்டு அடி வாங்கிக் கொள்வான். அவன் பின்னாலே ஓடி குரங்குப் பெடல் போட்ட எங்களை ஒன்றும் சொல்லமாட்டார். பிறகு அப்பாவே வெறுத்துப் போய் நாங்கள் சைக்கிளை எடுத்துஇ உடைத்து ஓடு பொறுக்கினாலும் சைக்கிள் என்று ரெண்டு சக்கரத்தை மட்டுமே கொண்டு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலைமைக்கு வந்து விடுவார். அதே போல் மீசை வளர்ப்பது, லுங்கி அணிவது, பூப்போட்ட சட்டை போடுவது, செஇய்தித்தாள் பிரின்ட் செஇய்த சட்டைத் துணி வாங்குவது, தலை முடி வளர்ப்பது, நண்பர்களுடன் சுற்றி விட்டு லேட்டாக

வீட்டுக்கு வருவது என்று எல்லாவற்றிற்கும் ஆட்சேபம் தெரிவிக்கும் அப்பா அடுத்த பிள்ளைகளிடம் இஇதையெல்லாம் பற்றி வாயேத் திறக்க மாட்டார். அண்ணன் இதை கண்டு பிடித்து முணுமுணுத்தால் ‘ஆமா பெரியவனா லட்சணமா நான் சொல்றதை கேக்கலை. இஇப்ப நான் யாரைக் கண்டிக்கறது ‘ என்று அதற்கும் அவன்தான் திட்டு வாங்க வேண்டும். இ அண்ணன்கள் மட்டும்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதில்லை. அக்காக்களும் செய்வார்கள் என்று நினைக்கிறேன். அக்கா இ இஇல்லாத்ததால் அவ்வளவு உணர்வு பூர்வமாகத் தகவல் தர முடியவில்லை.

குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதை சின்ன சின்ன எதிர்ப்புகள் மூலம் உணராலாம். முதலில் தலைமுடியிலிருந்துதான் தொடங்கும். அம்மா எவ்வளவு இறுக்கமாக பின்னி விட்டாலும் விளையாடுகிற அவசரத்தில் ஓடி விளையாடி முடிக்கும் போது ஒற்றை பின்னல் அவிழ்ந்திருந்தாலும் அதைப் பற்றி அக்கறை காட்டதப் பெண்கள் ‘ முடியை ஏன் இப்படி இறுக்கி பின்னறே ‘ முதல் எதிர்ப்பு.பிறகு அதை அவிழ்த்து அவர்களே தளர பின்னி கண்ணாடி முன்னால் நின்று ஜடையை அப்படி இப்படி திருப்பிப் பார்த்து நாசூக்காக பூவைத் தொங்க விட்டுக் கொள்வதில் தொடரும். ஆண் பிள்ளைகள் அப்பாவுடன் சலூனுக்குப் போவதை தவிர்த்து விட்டு தனியாக போய் முடி வெட்டிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அப்பாவுடன் சலூனுக்குப் போனால் கொடுக்கிற காசுக்கு வஞ்சனை இல்லாமல் முடி வெட்டப் படுவதை எந்த பையனாவது பார்த்துக் கொண்டிருக்க முடியுமா ? பிறகு அப்பா அம்மா வாங்குகிற துணி வகைகள், நிறம், தைக்கப்படும் விதம் எல்லாவற்றிலும் அதிருப்தியை காட்டத் தொடங்குவார்கள். இதையெல்லாம் கவனித்தும் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்பதை அப்பா அம்மா உணராமல் குழந்தைகளுக்கு என்ன தெரியும் ? என்ற நினைப்பிலேயே நம்மை தொந்தரவு செய்ய போராட்டம் தொடங்கும்.

(அடுத்த வாரம்)

kjramesh@pacific.net.sg

Series Navigation