ஆட்டோகிராஃப் ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி ‘

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

சித்ரா ரமேஷ்


எப்பவும் விளையாட்டுதானா ? படிக்கவே மாட்டாங்களா ? இப்படியெல்லாம் நினைக்கவே மாட்டாங்க! நான் எழுதுவதை பார்த்தே நாங்களெல்லாம் எவ்வளவு புத்திசாலி என்று கண்டுபிடிச்சு இருப்பீங்களே! அதெல்லாம் நல்லா படிச்சு பாஸ் பண்ணி விடுவோம். அம்மா டாச்சர் வெறே!! அதனால ஸ்கூல்ல வாலெல்லாம் சுருட்டிக் கொண்டு சமத்தா டாச்சர் சொல்வதையெல்லாம் உன்னிப்பாக கவனிப்பது போல் நடித்து அப்புறம் வீட்டுக்கு வந்து ஒழுங்கா படிச்சு மார்க் வாங்கி விடுவோம். ஃபஸ்ட் ராங்க்கெல்லாம் வாங்கவே மாட்டோம். ஆனா படிப்பு விஷயத்தில் யாரும் ஃஎப் ஐ ஆர் எழுத முடியாத அளவுக்கு மார்க் வாங்கி அம்மா மானத்தைக் காப்பாற்றி விடுவோம். இதை மாதிரி குழந்தைகளை மோடிவேட் பண்ணுவதற்கு எல்லோரும் செய்கிற ஒரே ‘டெக்னிக் ‘! படிக்காமலேயே இவ்வளவு மார்க் வாங்கறியே! படிச்சா எவ்வளவு வாங்கலாம்னு கேட்டு யோசிக்க வைப்பாங்க! இதைக் கேட்டவுடன் ஆமா உண்மைதான் என்றுதான் தோன்றும். ஆனால் வழக்கம் போல் விளையாடி விட்டு படி படின்னு சொல்லும் பொதெல்லாம் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு படிப்பது போல் ‘பாவ்லா ‘ கூட காட்ட முடிந்ததில்லை. பள்ளியில் படிக்கும் போது அம்மா டாச்சராக இருப்பது கொஞ்சம் அசெளகரியமான விஷயம்தான்! எல்லா விஷயங்களிலும் கண்காணிக்கப்படுகிறோம் என்று தோன்றும். அப்புறம் எந்தக் கதையும் விட முடியாது. ஆனா மற்ற மாணவர்களுக்கு டாச்சர் பசங்கன்னா எல்லா எக்சாம் பேப்பரும் கையில் கிடைச்சுடற மாதிரியும், எங்கியோ அதிகப்படி சலுகை வழங்கப்படுகிற மாதிரியும் ஒரு உணர்வு இருந்து கொண்டேயிருக்கும். ஆனா எங்க பேப்பர் திருத்த வந்தா இன்னும் கண்ணுல விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு திருத்தி வழக்கத்தை விட குறைச்சலா மார்க் வற சாத்தியக்கூறுகளே அதிகம் இருந்தது. அம்மா பாய்ஸ் ஹை ஸ்கூல் டாச்சர் என்பதால் என்னை விட இந்த பிரச்சனைகளை அதிகம் சமாளித்தது என் சகோதரர்கள்தான். கேர்ள்ஸ் ஸ்கூலும் பக்கத்தில்தான். எங்க ஸ்கூல் டாச்சர்களும் அம்மாவுக்கு தெரிந்தவர்கள்தான். நைன்த், டென்த் படிக்கும் போது இருந்த கிளாஸ் டாச்சர் அம்மாவின் பால்ய காலத்துத் தோழி வேறு. அப்பப்ப பாசத்தைப் பொழிவதும், திடாரென்று என் எதிர்காலத்தை உத்தேசித்து ரொம்ப ஸ்டிரிக்ட்டாக மாறுவதுமாக கேட்கவே வேண்டாம். இப்போது ஒரு உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். எனக்குப் பிறகு அடுத்தடுத்தது என் தம்பிகள் பிறந்து விட்டபடியால் அம்மாவால் எல்லா குழந்தைகளையும் சமாளிக்க முடியாது என்று என் தாத்தா பாட்டி( வேறு யார் அம்மாவின் அப்பா அம்மாதான்)என்னை தூக்கிக் கொண்டு போய் தங்களிடம் வளர்த்தார்கள். நர்சரி ஸ்கூல் பாதி எங்க ஊரில். அடுத்த பாதி எங்கேயும் இல்லை. அப்புறம் திரும்பவும் ஒன்றாவது வகுப்பு எங்க ஊரில். திரும்பவும் தாத்தாவுடன் ஊருக்கு! என்று மாறி மாறி பத்து வயது வரை வளர்ந்தேன். கிராமப் பள்ளிக் கூடத்தில் தமிழ், கணக்கு என்று ஏதோ சொல்லிக் கொடுத்தாலும் ‘இங்கிலிஷ் ‘ என்ற பாடத் திட்டமே இல்லை. மூணாங்கிளாஸில் ஏ,பி,சி,டி என்று நாலே நாலு எழுத்து சுமாரா அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. திரும்பவும் நாலாம் கிளாஸ் எங்க ஊருலே! அந்த டாச்சர் என் அம்மாவிடம் ‘ என்னங்க உங்க பொண்ணுக்கு இங்கிலீஷே தெரியலை ‘ என்று துக்கம் விசாரிப்பாள். ஐந்தாம் வகுப்பு முடிக்கும் போது ஒரு வழியாகஏ,பி,சி,டிக்கும் மேலே இருபத்தியிரண்டு எழுத்துக்கள் இருக்கின்றன. எழுத்துக்கள் சேர்ந்து சொற்களாகி,சொற்கள் சேர்ந்து வாக்கியமாகும் என்ற அடிப்படை பிடிபட ஆரம்பித்தது. இந்த அடிப்படையிலேயே முதல் ராங்க் வாங்கிக் கொண்டு வருவேன். இதனால் என் அம்மாவுக்கு ஒரு விபரீத ஆசை வந்து விட்டது. ஆறாம் வகுப்பில் இங்கிலிஷ் மீடியம் சேர்த்து விடலாம் என்று திட்டம் போட்டாள். உங்களுக்கே தூக்கி வாரி போட்டிருக்குமே.எனக்கு எப்படியிருந்திருக்கும் ? இந்த மாதிரி தமிழ் மீடியத்தில் நன்றாகப் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் ஆறாம் வகுப்பில் இங்கிலிஷ் மிடியம் சேர்க்க முயற்சி செய்வார்கள். அதற்கு ஒரு நுழைவுத் தேர்வு. ஐ ஐ டி பரீட்சை போல் ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் கோச்சிங் கிளாஸ் நடக்கும். ஒரேஒரு வகுப்புதான் இங்கிலிஷ் மீடியம் என்பதால் அந்த பரீட்சை எழுதி முதல் நாற்பது ராங்க் வாங்கி இங்கிலிஷ் மீடியம் வகுப்பு சேருவது கொஞ்சம் கஷ்டம்தான்! நான் இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் லீவ் விட்டதும் தாத்தா பாட்டியோடு ஊருக்கு கிளம்ம்பி போயாச்சு. அப்புறம் என்ன ? நுழைவுத் தேர்வில் என்ன கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. வெறும் பேப்பரை கொடுத்து விட்டு நிம்மதியாக மற்றத் தோழியரோடு ஆறாங்கிளாஸ் தமிழ் மீடியம் வகுப்புக்குப் போய் ஜோதியோடு கலந்து விட்டேன்.

தொடக்கப் பள்ளியிலும் சரி அடுத்து நடுநிலைப் பள்ளியிலும் சரி அண்ணன் காட்டிய வழிதான். அவன் ரொம்பவே நல்லாப் படிப்பான். அவனுடைய தங்கையும் நன்றாகத்தான் படிப்பாள் என்ற எண்ணத்திலேயே கொஞ்சம் மதிப்பாகத்தான் நடத்துவார்கள். நானும் அந்த மதிப்பைக் காப்பாற்றிக் கொண்டு விடுவேன். டான்ஸ், டிராமா என்று எந்த கலை நிகழ்ச்சியிருந்தாலும் நமக்கு இடம் இருக்கும். சப்ஜெக்ட் பிரைஸ், ஒப்பித்தல் போட்டி, தனி நடிப்பு இப்படி எல்லாவற்றிலும் அதிகப்படியான ஆர்வம் காட்டுவோம். ரொம்ப அலட்டிகிறேனா ? இனி வருவதைப் படியுங்கள். என் ஈகோவிற்கு எப்படியெல்லாம் அடி கிடைத்தது என்று! மறு வருடம் மீண்டும் சோதனைக் காலம்! இன்னும் இரண்டு மூன்று சீட் இருக்கு! உங்க பெண்ணை இந்த வருடம் ஏழாவது வகுப்பிலாவது இங்கிலிஷ் மீடியம் சேர்த்து விடுங்கள் என்று அம்மாவின் சக ஆசிரியர் ஒருவர் ஆலோசனத் தர அந்த வருடம் கோச்சிங் கிளாஸ் போய் வாட் இஸ் யுவர் ஃபாதர்ஸ் நேம் ? ஹெள மெனி மன்த்ஸ் ஆர் தெர் இன் ய இயர் ? ஹெள மெனி டேஸ் ஆர் தேர் இன் ய மன்த் ? போன்ற பொது அறிவுக் கேள்விகளுக்கு விடையளித்து பாஸ் பண்ணி விட்டேன். இது போன்ற நிறைய கேள்விகளுக்கு டியூஷன் கிளாஸிலேயே படித்து மனப்பாடம் செய்திருந்தாலும் ஒரே ஒரு கேள்வி அது வரை படித்திருந்தாத கேள்வி வந்த்திருந்தது. தெனாலிராமனுக்கு நண்பராக இருந்த மன்னன் யார் ? நான் ‘தி கிருஷ்ண தேவராயர் ‘ என்று விடையெழுதி அதைப் பெருமையாக டியூஷன் மாஸ்டரிடம் சொன்னேன். என் புத்திசாலித்தனத்தை மெச்சுவதற்குப் பதில் என்னை உட்கார வைத்து ‘தி கிருஷ்ணதேவராயர் ‘ என்று எழுதுவது ஏன் தவறு என்று வகுப்பெடுத்து

அனுப்பினார். என்ன அருமையான ஆசிரியர் அவர்!

ஏழாம் வகுப்பு. என்னை மாதிரியே இன்னும் மூன்று பேர். ஆக நான்கு புதுமுகங்கள் அந்த வகுப்பில் நுழைந்தோம். ஏற்கெனவே தமிழ் மீடியம் மாணவிகளைக் கடந்த ஒரு வருடமாகக் கட்டி மன்றாடிய அந்த ஆசிரியை பார்வையில் நட்புத் தெரியவில்லை. அது இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அப்பட்டமான வெறுப்புத் தெரிந்தது. ஆறாம் வகுப்பிலேயே ஒரு போராட்டம் தொடங்கியிருக்க வேண்டும். எங்க ஊர்ல இருந்த சிபிஎஸ்சி பள்ளியிலிருந்தும் சில பெண்கள் இதைப் போல வந்து சேருவார்கள். அவர்கள் நர்சரியிலிருந்து எல்லாம் ஆங்கில வழிக் கல்வி. அவர்களுக்கு இந்தத் தேர்வு, பிறகு வகுப்பில் வந்து பாடம் படிப்பது எல்லாம் ரொம்ப எளிமையாக இருக்கும். எங்களைபோல் தமிழ் வழிக் கல்வி படித்து இங்கிலிஷ் மீடியம் சேரும் போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டு காட்டு மிருகங்களோடு இங்கிலிஷில் பேசி விளையாடு என்றால் எப்படியிருக்கும் ? அதனால் அந்த ஜவஹர் ஸ்கூல் பெண்களோடு சகவாசமே வைத்துக் கொள்ள மாட்டோம். இங்கிலிஷ்ல பேசி அலட்டுராங்கன்னு! என் அப்பாவுக்கு என் தம்பிகளை ஜவஹர் ஸ்கூல்ல சேர்க்க வேண்டும் என்று சேர்த்து விட்டார். என்னையும் என் அண்ணனையும் ஏனோ சேர்க்கவில்லை. என்னையாவது ஏழாம் வகுப்பிலாவது என் அம்மா சிரத்தை எடுத்துக் கொண்டு இங்கிலிஷ் மீடியமாவது சேர்த்தாள். என் அண்ணனுக்கு அது கூட கிடையாது. ஏன் என்று புரியவில்லை. அப்புறம் ஒரு நாள் இதைப் பற்றி வருத்தப் பட்ட அவரே சொன்ன பிறகு அதனால் எங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வந்திருக்காது என்ற தெளிவு வந்து விட்டதாலோ என்னவோ நானும் என் அண்ணனும் இதைப் பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவேயில்லை. சரி! அந்த ஜவஹர் ஸ்கூல் பெண்கள் கிளாஸ்மேட்ஸா வேற வந்து டாச்சர்களின்அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி கிளாஸ் லீடர், குரூப் லீடர் என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி எங்களை நசுக்கப் பார்ப்பார்கள்.ஒருமாதிரி ஒருவருடம் சமாளித்து எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படித்து யெஸ், நோ, கம், கோ என்று பேசிப் பழகும் போது எங்களைப் போன்ற புது முகங்கள் வந்து மீண்டும் குட்டையைக் குழப்பினால் டாச்சருக்கும் மற்றப் பெண்களுக்கும் கடுப்பாகத்தான் இருக்கும். என்னுடன் ஐந்தாவது வரை படித்த தோழி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து அவளுடன் சேர்ந்து உட்காரலாம் என்று பக்கத்தில் போனால் அவள் என்னை அடித்து துரத்தாதக் குறையாய் விலகி முன்னே பின்னே பார்க்காதவள் போல் நடித்து என் துக்கத்தை அதிகப்படுத்தினாள். நான்தான் ஃபர்ஸ்ட் ராங்க் வாங்குவேன் அவள் என்னை முந்தியதே இல்லை! ஆனால் அவள் இப்போது அந்த வகுப்பின் பழங்குடியினரோடு சேர்ந்து என்னை ஒதுக்குகிறாளே அவளை நாமும் உதாசீனப் படுத்த வேண்டும் என்று என்க்குள் ஒரு வீர சபதம் அந்தக் கணமே எடுத்தேன். பிறகு இரண்டு வருடம் கழித்து மீண்டும் பழக ஆரம்பித்து நெருங்கிய தோழியான பிறகும் கூட இந்த ஃபிளாஷ்பேக்கைச் சொல்லி குத்தி கீறி காட்டிக் கொண்டேயிருந்தேன். போன வருடம் லீவுக்குப் போயிருந்த போது கூட ‘மலரும் நினைவுகளாக ‘ இதைச் சொல்லிக் காட்ட அவள் நொந்து போய் ‘உனக்கு என்னைப் பற்றி நல்ல விஷயம் எதுவுமே நினைவுக்கு வரவில்லையா ? ‘ என்று பரிதாபமாகக் கேட்டாள்.மை டியர் மீரா, இன்னியோட அதை மறந்து விட்டேன்!

ஆனால் அவள் அப்படி நடந்து கொண்டதற்கு வலுவானக் காரணம் இருந்தது. அந்த பொல்லாத டாச்சருக்கு பயந்து கொண்டுதான். நாங்கள் உள்ளே நுழையும் போதே ஹோம்வொர்க் பற்றி எதோ கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தாள். நான் புது அட்மிஷன் என்பதை மறந்து விட்டதைப் போல் நடித்து ‘வெர் இஸ் யுவர் ஹோம்வொர்க் ? ‘ என்று கேட்டு கிளாஸை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டாள். முதல் அதிர்ச்சி! அதிச்சிக்கு மேல் அதிர்ச்சியாக என்னை ஒரு சப்ஜெக்ட் விடாமல் தமிழ் உட்பட முதல் மிட்டெர்ம் பரீட்சையில் ஃபெயில் பண்ணியது! ராங்க் கார்டைப் பார்த்தாலே அதில் சிரிக்கும் சிவப்பு மலர்களாக என் மதிப்பெண்கள்!ஸ்கூல் என்றாலே சந்தோஷமாக போய் நன்றாகப் படித்து கெட்டிக்காரப் பெண் என்று பெயர் வாங்கிய எனக்கு ஸ்கூல் என்றாலே ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டை ‘ உருளத் தொடங்கியது. இதைப் போய் காதலுக்கு எப்படி வைரமுத்து எழுதினாரோ ?

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்