அழுகிறபோது எழுதமுடியுமா ?

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


அழுகிறபோது எழுதமுடியுமா ?
அழுத கண்ணீர்
அழிக்கிறது எழுத்தை!

எழுவது எப்போது ?
ஏங்கித் தவிக்கையில்
எழுதுவ தென்பது
இப்போதைக்கில்லை

அழுவது மட்டுமே
ஆறுதலானது
அழுவதொன்றே
அனவர்க்குமானது

கடற்கரை எல்லாம்
மயான மேடை
காற்றில் எல்லாம்
பிணங்களின் வாடை
கண்ணீரில் மிதக்கும்
மக்களின் கோலம்
காதுகள் கிழிக்கும்
உயிர்களின் ஓலம்
இதுதான் அங்கே
நிலவும் அவலம்

உறவுகள் இழந்து
உணர்வுகள் முறிந்து
கண்ணீர் வற்றி
காயும் வயிறுடன்
வாடும் உயிர்கள்
தேடுவது கவிதையா ?
கவிதையா இப்போது
கைகொடுக்கும் ?
இல்லை இல்லை
இல்லவே இல்லை

இதயம் வெடிக்கும் இந்தத் துயரில்
வாடும் மக்களுக்கு வாரி வழங்குவோம்
இருப்பதைக் கொடுத்து இதயத்தைக் காட்டுவோம்
இடிந்தவர் இதயம் இயங்க உதவுவோம்
மடிந்தவர் மண்ணில் மறுவாழ்வு நாட்டுவோம்

தீராக் கடல்பசி
தீர்ந்ததா ? இல்லையா ?
தெரிந்துகொள்ளாமல்
எப்படி எழுதுவது ?

கோர உயிர்ப்பலி
முடிந்ததா ? இல்லையா ?
முடிவு செய்யாமல்
எழுதுவது எப்படி ?

துயரத்தின் ஈரம்
உலர்ந்ததா ? இல்லையா ?
உலராமல் எப்படி
உணர்த்துவது கவிதையில் ?

எழுவது எப்போது ?
ஏங்கித் தவிக்கையில்
வாழ்வது இயலுமா ?
வாடி உதிர்கையில்
எழுதுவ தென்பது
இப்போதைக் கில்லை

அழுகிறபோது எழுதமுடியுமா ?
அழுத கண்ணீரே
அழிக்கிறது கவிதையை….

pichinikkaduelango@yahoo.com

Series Navigation