அழியாத சின்னங்கள் !

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

சி. ஜெயபாரதன், கனடா


வஞ்சகர் பெருகும் யுகத்தில்
கொஞ்சமல்ல
நெஞ்சில் குத்திய
முட்கள் !
வலி மிகுந்து
பையில் கனத்துப் போய்
பொற்கைப்
பாண்டி யனாய் மாறி
இல்லக் கதவுகள்
எல்லாம்
தட்டி வந்தேன் !

மதிப்புக் குரிய மாபெரும்
மதத் தூதரின்
ஒளித் தலையில்
இரட்டைக் கொம்புகளை மூடர்
வரைந்த போது
உள்ளக் கடலில்
வெள்ளம் அடித்தது !
பிள்ளையார் சிலையைப் பகுத்தறிவுப்
பெரியார் உடைத்த போது
முறிந்தது இதயம் !
ஆயிரத்தி இருநூறு ஆண்டுக்கு முன்
கவிச் சக்கரவர்த்தி படைத்த
இராம காதையைக் கிழித்து
எரித்த போது
வருந்திடும் கீதை !

பாப்ரி மஸ்ஜித்
பாரத வரலாற்றுச் சின்னம் !
ஓரிரவிலே
இராம பக்தர்கள்
இடித்துத் தகர்த்த போது
எழுந்தது பூகம்பம் !
ஒரிஸாவில்
கிறித்துவ ஆலயம்
எரிக்கப் பட்டு
பாதிரியார்
உடன்கட்டை ஏறிய போது
பைபிள் கதறியது !

ஈராயிரம் ஆண்டு
இந்துகுஷ் மலைத் தொடரில்
நிமிர்ந்து நின்றது
உன்னதச் சிலை !
ஒரே ஏவுகணை வெடியில்
தாலிபான் படை
சுட்ட போது
புத்தர்
சொத்தென வீழ்ந்தார் ! ஆயினும்
ஆவி தெரியுது
காலி செய்த இடத்தில் !

********
S. Jayabarathan (jayabarat@tnt21.com) Feb 27, 2008

Series Navigation