அல்லாவும் வகாபும்

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும். வகாபிகளின் தலைவரென முகமது நபியைச் சொல்வதும், வகாபுடைய கருத்துக்களே அல்குர்ஆன் என்று கூறுவதும் வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு தந்திர உத்தியாகும். தொடர்ந்து கருத்தியல் மோசடி நிகழ்த்தும் அவர் முதலில் இதை நிறுத்திக் கொண்டால் நல்லது. இல்லையெனில் வகாபிய மொழியில் இது மாபெரும் ஷிர்க். (இணை வைத்தல்) ஆகும். இணைவைப்பவர்களுக்கு மறுமையில் கொழுந்துவிட்டெரியும் பாழ்நரகம் தான் கதி.
அல்லாவின் 99 திருநாங்களில் வகாப் என்று திருத்தல்வாதம் செய்தாலும் இச்சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அல்லாவும், வகாபும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதை இனி கவனிப்போம்.
அல்லாவிற்கு பிறப்பு கிடையாது. வாப்பா, உம்மா கிடையாது. வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்.
அல்லாவின் வேதம் அல்குர்ஆன். இமாம் வகபின் வேதத்தின் பெயர் கிதாப் அல் தெளகீத் – இதன்வழி நடப்பதே வகாபிசம். இது கஷ்புஷ் சீபுஹாத், முக்தஸருல் இன்ஸாப், நஸீஹத்துல், முஸ்லிமின், உசுலுர்மான் உள்ளிட்ட 11 நூல்களை உள்ளடக்கியதாகும்.
அல்லா ஆட்சியாளராகவோ மன்னனாகவோ இருந்ததில்லை. இமாம் அப்துல் வகாப் திர்ரியாவின் ஆட்சியாளர் இப்னுசவுதுடன் இணைந்து நஜ்து உள்ளிட்ட பகுதியில் அரசாங்க மதமாக வகாபிசத்தை அறிவித்தார். இப்னுசவுதின் மரணத்திற்குபிறகு 1764 முதல் 1803 முடிய அப்துல் அஸிஸ் பின் சவூத் வகாபிசத்தின் ஆட்சியாளரானார்.
அல்லாவிற்கு வழிகாட்ட எந்த முன்னோடியும் இருந்ததில்லை. இமாம் வகாபிற்கு முன்னோடி நபி முகம்மதுவுக்கும் அவர் தம் குடும்பத்திற்கும் எதிரிகளாக செயல்பட்ட அபுசுபியான், முஆவியா, யசீது கி.பி.1263-1328 காலகட்டத்தைச் சேர்ந்த இப்னுதைமியா மற்றும் அவரது சீடர் இப்னுஅல்கய்யூம்.
அல்லா ஆட்சியை விரிவாக்கம் செய்ய யாரின் மீதும் ஆக்ரமிப்புப் போர் செய்ததில்லை. அபாசித் கலிபாவின் ஆட்சி காலத்தில் முஸ்லிம்களாக தங்களை அறிவித்த மங்கோலிய இனமக்களை காபிர்களென அறிவித்து ஜிஹாத் என்னும் புனித யுத்தம் நடத்தி அரேபிய பகுதியில் ஆக்கிரமிப்பு யுத்தம் செய்தனர் வகாபிகள்.
அல்லா நேரடியாக எந்த சமய அடையாளங்களையும் இடித்து தகர்த்ததில்லை.
இந்துத்துவா அரசு பாபர் மசூதியை இடித்ததுபோல குஜராத் மோடி அரசு வதேதராவில் இருநூறு ஆண்டு கால பழமை மிக்க தர்காவை இடித்ததுபோல இமாம் வகாப் அறுநூறுபேர் கொண்ட படையுடன் நேரடியாகப் பங்கேற்று உமர் பின் அல்கதாபின் சகோதரர் அஸ்வரின் சமாதி மக்பராவை இடித்து தள்ளி நிர்மூலமாக்கினார்.
இந்த வகாபிகள் 1801-ல் ஈராக் நகரின் கர்பலா மீது படை எடுத்து நபிமுகம்மதுவின் பேரர் இமாம் ஹ¤சைனின் சமாதி மக்பராவை உடைத்தெறிந்தனர். பத்தாயிரம் வீரர்களைக் கொண்ட ராணுவம் இந்த தாக்குதலைத் தொடுத்தது. இமாம் ஹ¤சைனின் நினைவு நாளில் கர்பலாவில் ஒன்று திரண்டிருந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வகாபிகள் 1803-ல் மக்கா மதிநாவை ஆக்ரமித்து நபி முகமதுவின் அருமை மகளான பாத்திமாநாயகத்தின் சமாதி-மக்பராவையும் உடைத்தெறிந்தனர். நபி முகம்மதுவின் நினைவிடத்தையும் நிர்மூலமாக்க முயன்றனர். 1817வரை இந்த அராஜகத்தை முன்நின்று நடத்தியவர்கள்தான் இந்த வகாபிய பாசிஸ்டுகள்.
1818முதல் பல்வேறுவிதமான அதிகார ஆட்சி, அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு 1902ல் அப்துல் அஸீஸ் பின் சவூது ¡யாதை கைப்பற்றி வகாபிய ஆட்சியினை நிறுவுகிறார். 1920களில் நபிமுகம்மதுவின் சமாதி மண்டபத்தை அழிக்க முயன்றபோது உலக முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய கிலாபத் இயக்கத் தலைவர்களில் ஒருவரான அபுல்ஹசன் அலி நத்வி இஸ்லாமிய சரித்திர சின்னங்களை நிர்மூலம் செய்ய சமய வழி ஆதாரங்கள் இல்லையென குரல் எழுப்பினார்.
1924ல் மக்கா, மதிநா புனித நகரங்கள் கைப்பற்றப்பட்டு ஹஜ் பயண நடவடிக்கைகளை தங்களது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
1926-ல் இப்னு சவூத் மன்னராக முடிசூட்டிக் கொண்டபிறகு 1932-ல் நஜ்து மற்றும் ஹிஜாஸ் மாநிலங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு மன்னர் சவூதின் குடும்பப் பெயர் வழங்கப்பட்டு சவூதி அரேபியா உருவானது.
1938-ல் அரேபிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டபின் வகாபிய கொள்கைப் பரவலுக்காக சவுதி அரசாங்கம் வகாபி சமய நிறுவனங்கள், மதரசாக்கள், பல்கலைக் கழகங்கள், ஊடகங்களுக்கு மில்லியன் கணக்கில் டாலர்களை செலவழித்த வண்ணம் இருக்கின்றன. இஸ்லாமிய தீவிரவாதம், பயங்கரவாதம் கருத்தாக்கத்திற்கான பல்வேறு உலக அளவிலான அமைப்புகளின் உருவாக்கத்திற்கும் வகாபிசமே காரணம்.
ஆப்கன் வகாபிகளான தலிபான்கள், சவுதி அரசாங்கத்தின் நிதியுதவி பெறும் வகாபி ஷிபா இ சகாபா, லஸ்கர் இ ஜஹாங்கவி உள்ளிட்ட தீவிரவாத வகாபி இயக்கங்கள் பல ஆண்டுகளாக சகோதர இஸ்லாமிய நம்பிக்கையாளர்களான ஷியா முஸ்லிம்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியை உணராமல் அல்லாவை வகாபாகவோ, அவரை தக்லீது செய்யும் வகாபிகளாகவோ நபி முகமதுவை வகாபிகளின் தலைவராகவோ உருவகிப்பது அப்பட்டமான முட்டாள்தனமும், சமகால வரலாற்று மோசடியாகும்.
—————————-
mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்