அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1. நெய்தல் சுவடுகள் ஆவணப்படுத்தப்படவேண்டிய கடல்சார்ந்த வாழ்க்கையின் கண்ணீரும் ரத்தமும் கலந்த சமகால வரலாறு. சிப்பிகளும், சோளிகளும், மீன்களும் ஒதுங்கும் கடற்கரை மணற்பரப்புகளிலும் பாறைகளையே மிரட்சியுறச்செய்து ஓயாது வீசிக்கொண்டிருக்கும் அலைகளின் படிமங்களிலும், ஈரம் ததும்பும் காற்றின் வருடல்களிலும் புதையுண்டு கிடக்கும் உணர்வலைகளை, வாழ்வின் துடிப்புகளை இந்த திறந்த குறிப்பேடு ரகசியமாய் பாதுகாத்து வைத்திருக்கிறது. முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் தேர்வு செய்து கொண்டதொரு ஆய்வியல் அணுகுமுறை மேலிலிருந்து கீழ் என்றில்லாமல், வரலாற்றையும் வாழ்வையும் கீழிருந்துமேலாக காணும் பார்வை. இதனை வேறுவார்த்தைகளில் அடித்தள மக்களின் பார்வை என்றே சொல்லலாம். மையத்திலிருந்து விலகி, விளிம்புகளில் தவித்து போராடிக் கொண்டிருக்கும் மக்களின் குரலை, உரிமையை நிலைநிறுத்தும் தீட்சண்யமிக்க பார்வை.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், வைதீகமயமாக்கல் இந்திய தமிழக சூழலில் தனது வன்முறையை விவசாயிகள் மற்றும் சாதாரண உழைக்கும் மக்கள் மீது தீவிரமாக செலுத்துகிறது. அறிவு – அதிகாரம் வெளிகளினூடே பிரதேச நலன்களையும், அடையாளங்களையும் அழித்தொழித்துவிட்டு ஒற்றை பேரடையாளத்தை பரிந்துரை செய்கிறது. ஏகபோக ஆதிக்கம்சார், தனியார் மயமாக்கலையும், மனித உழைப்பை பயன்படுத்தாத துரித வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்துகிறது. இச்சூழலில் மீனவ சமூகத்தின் பொருளியல், அரசியல், பண்பாடு, சூழலியல் பரிமாணங்களை உள்ளடக்கி விரிகிற இந்நூலின் ஆய்வுகள் மிகவும் கவனிப்பை பெற வேண்டியவையாகும். தொடர் விவாதங்களையும், கொள்கை முடிவுகளையும் உருவாக்கி கொள்வதற்கான விரிவான சாத்தியக் கூறுகள் இதில் உள்ளன.

2. நவீனமயமாக்கலும், பெருந்தொழில்நுட்பமும் எவ்வாறு இயற்கைசார்ந்த இயல்பான மீனவ வாழ்க்கையை நிலைகுலையச் செய்கிறது என்பதே மெளனமாக இக்கட்டுரைகள் எழுப்பும் ஓசையாகும். இந்த ஓசைகளினுள் மூடி பொதியப்பட்ட இழப்பின் சோகங்களை கண்டடையலாம். கட்டுமரம் x விசைப்படகு, மீன்பிடிதுறைமுகம் x வாத்தக துறைமுகம், கடலோர மீனவர் x உள்நாட்டு மீனவர்; மீன்பிடித்தல் x மீன் பத னிடுதல், சுற்றுலாதுறை வளாச்சி x மீனவர் இடப்பெயர்ச்சி, அருங்கனிம மணல் அகழ்வு x கதிரியக்க உயிர்ச்சிதைவு, நிறுவன கிறிஸ்தவம் x நாட்டார் கிறிஸ்தவம் என்பதான பல்வேறு இருமைகளின் வழியாக இந்த படைப்புகளன்கள் உருவாகி இருக்கிறது. நீர் அரசியல், நில அரசியல் என்பதான புதுத்தளங்களையும் இது கண்டடைந்துள்ளது.

நவீன அறிவியல் தொழில் நுட்பத்தின் செல்வாக்கு சமூக கட்டமைவை தீவிர வளாச்சியை உருவாக்கும் நிலையில் மீன்பிடித்தொழிலில் அது ஏற்படுத்தும் சாதக/பாதக விளைவுகள், மீனவ பொருளாதாரத்தில் அதன் தாக்கம் என பல நிலைகள் இங்கு ஆய்விடப்படுகிறது. மீனவ தொழில் சார்ந்த விஞ்ஞான தொழில் நுட்பம் அம்மக்கள் சார்ந்த சமச்சீர் வளர்ச்சியை உருவாக்குகிறதா என்ற அளவுகோல் மு ன்வைக்கப்படுகிறது. அறுபதுகளில் நுழைந்த விசைப்படகு தொழில் நுட்பம் இதற்கொரு சாட்சி. ஒரு திசையில் கட்டுமர, நாட்டுப்படகு மீன்பிடிப்பும், மறுதிசையில் எந்திரப்படகு, ஆழ்கடல் விசைப்படகு மீன்பிடிப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட திசையிலும் பயணத்தை தொடர்ந்தன. இந்நிலையில் கட்டுமரம் x எந்திரப்படகு x விசைப்படகு x வெளிநாட்டு ஆலைக்கப்பல் என்கிற எதிர்வுகளில் மீன்பிடிதொழில்நிலைப் பிரச்சினைகள் _ 87ழுந்த வண்ணம் உள்ளன. விசைப்படகு தொழில் நுட்பத்தையும், வளர்ச்சியையும் அங்கீகரிக்கும் அதே சமயம் மடிவலை கலாசாரத்தையும், பாரம்பர்ய மீனவர் நலன்களையும் பாதுகாக்கும் பொருட்டு பனிரெண்டு கிலோமீட்டருக்கு உட்பட்ட கரைக்கடற்பகுதியில் மீன்வாரி இயக்குதலை தடைசெய்தல் பருவகாலங்களில் விசைப்படகு மீன்பிடித்தலை கட்டுப்படுத்துதல், தூண்டில் வளைவுகள் நிறுவுதல், செயற்கை மீன் வளத்திட் டுகள் அமைத்தல் என்பதான கருத்துருவங்கள் இப்படைப்பினூடே நடைமுறைப்படுத்தலுக்காக விவாதிக்கப்படுகின்றன.

உலகமயமாக்கலும் மறுகாலனியாதிக்கமும் மீன்பிடித் தொழிலை மிகவும் நசிவடையச் செய்துள்ளன. இந்திய எல்லைக்குட்பட்ட கடல்பரப்பின் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு ஆலைக் கப்பல்களை மீன்பிடிக்க இந்திய அரசு அனுமதித்திருப்பது இதன் வெளிப்பாடே. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் தேசிய மீன் இறக்குமதிக் கொள்கையும் இந்திய மீனவத் தொழிலுக்கு பாதகத்தை உருவாக்குவதாவே அமைந்துள்ளது. இந்த முக்கிய கருத்தாக்கங்களை இக்கட்டுரைகள் மிகவும் துல்லியமாகப் பேசுகின்றன. இவற்றை நவீனமயமாதலின் விளைவாக பாரம்பரிய நிலையிலிருந்து மீன்பிடித்தொழிலின் உற்பத்திக் கருவிகள், உற்பத்தி சாதனங்கள், உற்பத்தி முறைகளில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களாக கருதலாம். ஆனால் இம்மாற்றங்கள் கடலையும், கரையையும் ஜீவாதாரமாகக் கொண்டு வாழ்கின்ற எண்ணற்ற அடித்தட்டு மீனவ மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதாகவும், பன்னாட்டு நிறுவன ஆக்ரமிப்பு, ஏகபோக முதலாளித்துவ சுரண்டலை பரிந்துரைப்பதாகவும் இருப்பதே துயரமிக்க இதன் இன்னொரு காட்சியாகும்.

3. மீனவ தொழில் சார்ந்து உருவாகியிருக்கும் மீன் பதனிடும் தொழிற்சாலைகள் பற்றியும் இத்தொகுப்பு பேசுகின்றது. மீனைத்துண்டுகளாக்கி தோடுகள் நீக்கி, சுத்தம் செய்து, பனிக்கட்டியிலிடுதல், தரம்பிரித்தல், சிப்பம் இடுதல், எடைபோடுதல், உறைய வைத்தல், புகையூட்டுதல், கொதிக்க வைத்தல், வெப்பமூட்டி நீர் அளவைக் குறைத்து டப்பாக்களில் இடுதல் மற்றும் உலர்த்துதல், உப்பிடுதல் உள்ளிட்ட பணிமுறைமைகள், அதில் ஈடுபடும் பெண் தொழிலாளர் வாழ்நிலை, இரவு நேரப்பணி, குறைந்த ஊதியம், சுகாதாரம் குறித்தும் கவனக்குவிப்பை செய்கின்றன. மீன் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மேற்கொள்ளும் வலை பின்னுதல், ஏலமிடுதல், சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளையும் இத்தோடு இணைத்துப் பார்க்கலாம். மீனவப் பெண்களின் வேலைவாய்ப்பு சார்ந்த அம்சங்களாக கருதினாலும் கூட இவர்கள் படும் நெருக்கடிகளிலிருந்து விடுபடுதல் சமூக பொருளாதார பாதுகாப்பு நலத்திட்டங்களாக நடைமுறை வாழ்வில் இன்னும் உருப்பெற வேண்டி இருக்கிறது.

4. நவீன பெருந்தொழில் நுட்பம் நெய்தல் நிலத்தையும், மீனவர் வாழ்வையும், இருப்பையும், இருப்பிடங்களையும், சுற்றுப்புற சூழலியலையும் அழிக்கும் ஒன்றாக பேருரு கொண்டு எழுந்துள்ளது. வர்த்தக துறைமுக உருவாக்கம், சுற்றுலா வளர்ச்சி கட்டமைப்புகள், மணல் ஆலைத் தொழில் நிறுவனங்கள், சேது சமுத்திர கால்வாய் திட்டம் என இவற்றை வரிசைப்படுத்தலாம்.

வர்த்தக துறைமுகம் பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுக பெரிய கப்பல்கள் நங்கூரமிட்டு செய்யும் ஏற்றுமதி இறக்குமதி பரிவர்த்தனை சார்ந்தும், ராட்சச கிரேன்கள் டிரக்குகள் கனரக வாகனங்கள் பயன்பாடு சார்ந்தும் உருவாக்கம் கொள்கிறது. இதற்கு மாற்றாக மீன்பிடித்துறைமுகமோ, மீன்பிடிகலன்கள் பாதுகாப்பாக கரையிறங்குதல், மீன் அறுவடையை எளிதாக சந்தைப்படுத்துதல், தூண்டில் வை 0ளவுகள், தங்கு தளங்கள், செயற்கை மீன்வள திட்டுகள் அமைத்தல், மீன் பதனிடு நிலையங்கள், பனிக்கட்டி உற்பத்தி மையங்கள் மீன் சந்தை மையங்கள், தொலை உணர் நுட்ப திறன் மீன்வளம் கண்டறியும் எதிரொலிப்பான், இடங்கணிப்பான் தொடர்பியல் கருவிகள், மின்னணுவியல் உபகரணங்கள் அமைத்தல் என சகலவித மீன்பிடி சார்பு தொழில் வசதிகளை உள்ளடக்கியதாக அமைகிறது. இந்த வித்தியாசப்படுத்துதலை முன்வைத்து கடழு dகரை பகுதிகளில் வர்த்தக துறைமுகம் அமையுமெனில் அது பல்லாயிரக்கணக்கான பாரம்பர்ய மீனவர்களின் வாழ்வையும் தொழிலையும் அழித்தொழித்து விடும் அபாயம் நேரிடும். இவ்வகையில் விவாதிக்கும் கட்டுரையாளர் வெகுஜன உளவியலில் சாதகமானதாக வளர்ச்சி அம்சம் கொண்டதாக கருதப்படும் துறைமுகம் என்ற ஒற்றைச்சொல்லாடலுக்குள் ஒளிந்திருக்கும் மாயையையும், பேரபாயத்தையும் கட்டுடைத்து செல்கிறார். மீனவ சமுதாய வளர்ச்சிக்கு தேவை மீன்பிடித்துறைமுகமே தவிர வர்த்தக துறைமுகமல்ல என்கின்ற கருத்தாக்கமாக அது இங்கே விரிகிறது. தமிழக கடற்கரையின் நீளம் 1206 கி.மீ.

இதில் குமரிக் கடற்கரை 68 கி.மீ. நீளத்தைக் கொண்டுள்ளது. இவ்வேளையில் இதன் இன்னொரு தொடர்ச்சியாக சுற்றுலா தொழில் பெயரில் கடல்வளங்கள், கடற்கரைசார் நில உரிமை மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட அவை நட்சத்திர ஓய்வுகால விடுதிகளாக, ஏகபோக முதலாளித்துவ வளர்ச்சிக்கு தீனியாகப் போடப்படுகின்றன என்பதையும் நூலாசிாயா சுட்டிக்காட்டுகிறார்.

5. இயற்கை, உயிர் வாழ்தல் சார்ந்த, சூழலியல் சமன்பாட்டை குலைக்கின்றவகையில் கடற்கரை பகுதிகளில் இடம்பெறுகிற மணல் குன்றுகளின் அழிப்பு, கழிமுக மணல் அகழ்வும் கடற்கரை தாவரங்கள், மூலிகை வளங்கள், கடல் ஆமைகள் மற்றும் விலங்கினங்களின் வாழியல் சூழலையே முற்றிலுமாக அழித்துவிடுகிறது. யுரேனியம், தோரியம் உள்ளிட்ட அணுசக்தி அருங்கனிம அகழ்வு மணல் ஆலைப் பொருளாதார நடவடிக்கைகள் பன்மட_ 9bகு கதிரியக்க தாக்கங்களை விளைவிப்பனவாகவும் மீனவர்வாழ்வில் தீவிரமான சூழலியல் பிரச்சினைகளையும், உடல் சார்ந்து புற்றுநோயை உருவாக்குவதாகவும் அமையப்பெற்றுள்ளன. இது மரணவிளிம்பில் உயிர் பற்றிய அச்சத்தை திரும்பத்திரும்ப உற்பத்தி செய்தவாறு உள்ளது.

6. மீனவர் வாழ்வு என்பது சமய வழிபாடுகள், பண்பாட்டு நடத்தைகள், தொன்ம நம்பிக்கைகள் என்பதான விரிவான களத்தினுள் கலாச்சாரரீதியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகீசிய மிஷினரி தூய சேவியர் வருகை மீனவமக்களை கத்தோலிக்க கிறிஸ்தவத்தின்பால் பிணைத்து வைத்தது. குமரி மாவட்ட நிலவியல் எல்லைக்குள் சமய ரீதியாக கிறிஸ்தவ அடையாளமும் முக்குவர், பரவர், சவளைக்காரர் என்பதான பிற அடையாளங்களும் உருவாகின. கடல் மீனவர் என்பதான எல்லைதாண்டி மீன்வணிகத்திற்காக கடலோரத்திலிருந்து இடம்பெயர்ந்த மீனவ சமூகங்கள் உள்நாட்டு மீனவர்களாகவும் அவர்கள் வசிக்கும் இருப்பிடங்கள் சவளக்கார தெருக்களாகவும் அறியப்பட்டன. சேவகத்தன்மை மனோபாவமற்ற இறக்குமதி செய்யப்பட்ட வாடகத்தலைமைகளான மதகுருக்களாலும், நிதியை மட்டுமே குறிவைக்கும் ெ தாண்டு நிறுவனங்களாலும் மீனவ சமூகத்தின் வளர்ச்சிக்கு தடைகள் உருவாவதை ஆய்வாளர் எவ்வித மனத்தடையுமின்றி கோடிட்டுகாட்டுகிறார். எனினும் சமயபண்பாட்டுநிலைகளில் நிறுவன கிறிஸ்தவத்திற்கு மாற்றான குரல்களையும், நாட்டார் கிறிஸ்தவ நம்பிக்கைகள் தமிழகத்தில் கிறிஸ்தவத்தை பரப்புவதில் பங்களிப்பு செய்த புனிதர்கள் நினைவு சார்ந்த குருசடிகள் உள்ளிட்ட சமய அரசியல் தன்மைகளை சாதகமாக பு ரிந்து கொள்வதில் ஆசிரியருக்கு சிரமம் இருக்கிறது. இந்த தருணத்தில் நவீனத்துவம் சார்ந்த அவர்தம் பார்வை மீனவ சடங்கியல்களில் பண்பாட்டு மானுடவியல் சார்ந்த மறுவாசிப்பினைவேண்டியே நிற்கிறது.

7. மீனவர் வாழ்வின் முழுமையை வெளிப்படுத்தும் மற்றுமொரு களமாக விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி நகரும் விதத்தில் அரசு அதிகாரத்தையும், அரசியல் அதிகாரத்தையும் பங்கிடுதல் குறித்த அணுகுமுறையைச் சொல்லலாம். 1989-ல் முக்குவர் இனம் மிகவும் பிற்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்பட்டதன் விளைவாக கல்வி வேலைவாய்ப்புகள் உருவாகின. இந்த இடஒதுக்கீட்டு அரசியல் அரசு நிர்வாகத்தில் பங்கேற்றல் என்பதற்கான வாசலைத் திறந்தது. இதன் இன்னொரு பரிமாணமாகவே உள்ளூா பஞ்சாயத்துமுதல் சட்டசபை எனத்தொடரும் அரசியல் அதிகாரத்தின் பங்கேற்பாளர்களாக மாறுதல் என்கிற கண்ணோட்டமாகும். இதன் ஒருமித்த குரலே தேர்தல் ஜனநாயகத்தில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் கடலோர சட்டமன்ற தொகுதிகள் உருவாக்குதல் கோரிக்கையாக வலுப்பெற்று எழுகிறது. தலித்திய மழு dறும் பெண்ணிய இயக்கங்களின் அரசியல் அதிகாரம் நோக்கிய பாய்ச்சலைப் போன்றே இதையும் மதிப்பிடமுடியும்.

‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘ நூலை படைத்தளித்த முனைவர் வறீதையாவின் உழைப்பும். ஆழ்ந்தநோக்கும். அர்ப்பணிப்பும் உண்மையிலேயே நம்மை அதிசயிக்க வைக்கிறது. கடல்வாழ் மக்களுக்காக எப்போதும் சிந்தித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும், மக்கள் இயக்கங்களினூடே வாழ்ந்து கொண்டும் இருக்கிற அந்த கரிசனமிக்க படைப்பாளியை காலம் கண்டெடுத்து நமக்கு தந்திருக்கிறது. அபூர்வமாக கிடைக்கிற இதுபோன்ற சிந்தனையாளர்களின் தோள்களின் மீதுதான் நாளைய விழிப்புணர்வுமிக்க சமூகத்தின் வரலாறு இளைப்பாறிக் கொண்டிருக்கிறது.

—-

mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்