அறிவியல் மேதைகள் – ஓட்டோ வான் கியூரிக் (Otto Von Guericke)

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


ஓட்டோ வான் கியூரிக் ஓர் இயற்பியல் அறிஞர், பொறியாளர், மெய்யியல் மேதை. இவரே முதல் காற்றுப் பம்பைக் (air pump) கண்டு பிடித்தவர்; வெற்றிடம் (vacuum) பற்றி ஆய்வு செய்தவர்; எரியூட்டல் (combustion), சுவாசித்தல் ஆகியவற்றில் காற்றின் பங்கு பற்றி விளக்கியவர். 1602ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் மக்தேபர்க் (Magdeburg) நகரப் பணக்காரக் குடும்பம் ஒன்றில் பிறந்த கியூரிக், லெய்ப்ஜிக் (Leipzig) பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார். 1621ஆம் ஆண்டு ஜெனா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்ற இவர் 1623ஆம் ஆண்டு லெய்டன் பல்கலைக்கழகத்தில் கணக்கும், பொறியியலும் படித்தார். பின்னர் சுவீடன் நாட்டுப் போர்ப்படையில் 1631ஆம் ஆண்டு பொறியாளராகச் சேர்ந்தார்.

மக்தேபர்க் நகரத்தின் மேயராக 1646 முதல் 1681 வரை நீண்ட காலம் பணியாற்றிய கியூரிக் பிராண்டன்பர்க் (Brandenburg) நகரக் குற்றவியல் நீதிபதியாகவும் (Magistrate) பணிபுரிந்தார். ஜெர்மன் நாட்டில் 1618ஆம் ஆண்டு மிகப் பெரியதொரு போர் மூண்டு சுமார் 30 ஆண்டுகள் வரை நீடித்தது. அப்போரில் கியூரிக் ஒரு பொறியாளராகச் சேர்ந்து பணியாற்றினார். ஆனால் கியூரிக் சேர்ந்து பணியாற்றிய படை மிக மோசமானத் தோல்வியைத் தழுவியது. எதிரிப் படையினர் மக்தேபர்க் நகரைக் கைப்பற்றிச் சின்னாபின்னப் படுத்தினர். சுமார் முப்பதாயிரம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் கியூரிக் எப்படியோ தப்பி பிழைத்து அந்நகரை மீண்டும் புதுப்பித்தார்; அந்நகரின் மேயராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.

நகர மேயராகப் பணி புரிந்த கியூரிக், தமது ஓயாத அலுவல்களுக்கிடையேயும் அறிவியல் ஆய்வுப் பணிக்கென்று சிறிது நேரம் ஒதுக்கினார். ‘காற்றில்லாத வெற்றிடம் என்பது இயலாத ஒன்று ‘ என்ற அரிஸ்டாட்டிலின் கொள்கையை கியூரிக் படிக்க நேர்ந்தது. அதே நேரத்தில் கலிலியோவின் கொள்கையான ‘காற்றுக்கு எடை உண்டு ‘ என்பதையும், மேலும் இது தொடர்பான டாரிசெல்லியின் பரிசோதனைகளைப் பற்றியும் கியூரிக் அறிந்திருந்தார். இவைகளின் அடிப்படையில் 1650ஆம் ஆண்டு கியூரிக் காற்றுப் பம்பைக் கண்டுபிடித்தார்; அதை வெற்றிடம் உண்டாக்குவதற்கு பயன்படுத்தியதோடு மேலும் சில சோதனைகளுக்கும் பயன்படுத்தினார். வெற்றிடத்தில் ஒளி செல்லும் என்றும், ஆனால் ஒலியால் பயணிக்க இயலாது என்றும் கியூரிக் கண்டு பிடித்தார். மேலும் காற்றில்லாத வெற்றிடத்தில் மெழுகுவர்த்தி எரியாது என்றும், எவ்வுயிரினமும் வாழ இயலாது என்றும் சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார்.

வான் கியூரிக் வெற்றிடம் தொடர்பான பல எந்திரங்களை வடிவமைத்து உருவாக்கினார். அவற்றுள் ஒன்றாக, செம்பாலான இரு அரைக்கோளங்களைச் (hemispheres) செய்து அவற்றிற்கு மக்தேபர்க் அரைக்கோளங்கள் என்று பெயரிட்டார். இந்த அரைக்கோளங்களைப் பயன்படுத்தி வெற்றிடத்தின் வலிமை எப்படிப்பட்டது என்பதை ரீஜென்ஸ்பர்க் (Regensburg) நகர மாமன்னர் மூன்றாம் ஃபெர்டினண்ட்(Emperor Ferdinand III) அவர்கள் முன் கியூரிக் செயல் விளக்கம் செய்து காட்டினார்.

கியூரிக் இரு செம்பு அரைக்கோளங்களையும் ஒன்றோடொன்று பொருத்தி 14 அங்குல விட்டமுள்ள உள்ளீடற்ற ஒரு முழுக் கோளமாக (hollow sphere) உருவாக்கினார். கோளத்தினுள் காற்றுப் புகாவண்ணம் தடுப்பதற்காக, வளைய வடிவிலான தோல் பட்டை ஒன்று திரவ மெழுகில் தோய்த்தெடுக்கப் பெற்று இரு அரைக்கோளங்களும் சேரும் பகுதியில் பதிக்கப்பட்டது. வெற்றிடப் பம்பைப் (vacuum pump) பயன்படுத்தி, கோளத்தினுள் இருந்த காற்றும் வெளியேற்றப் பட்டது. தற்போது கோளத்தின் உட்பகுதி காற்றே இல்லாத வெற்றிடமாயிற்று. பின்னர் இரு அரைக்கோளங்களையும் பிரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோளத்தின் இரு புறமும் பக்கத்திற்கு எட்டுக் குதிரைகள் வீதம் பூட்டப்பெற்று எதிரெதிர்த் திசைகளில் இழுக்கச் செய்தனர். முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. கடைசியில் இரு பக்கக் குதிரைகளையும் அவற்றின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி இழுக்கச்செய்தபோது, பயங்கரமான வெடிப்பொலியுடன் இரு அரைக்கோளங்களும் பிரிந்தன. வெற்றிடத்தினுள் காற்றுப் புகுந்ததாலேயே அப்பேரொலி உண்டாயிற்று என்பதையும், காற்றின் பேராற்றலையும் மாமன்னரும், மற்றோரும் உணர்ந்தனர்.

இரு அரைக்கோளங்களையும் எளிதாக எவ்வாறு பிரிக்க இயலும் என்பதையும் கியூரிக் கியூரிக் செய்து காட்டினார். குதிரைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒரு அரைக்கோளத்தில் அமைந்திருந்த நெகிழ்வுக் குழாய் மூடியைச் (stop cock) சுழற்றி காற்று வெற்றிடக் கோளத்தின் உள்ளே செல்ல வழியுண்டாக்கினார். தற்போது மிக எளிதாக இரு அரைக்கோளங்களையும் பிரிக்க முடிவதைக் கண்டனர். இவ்வுத்திகளைப் பயன்படுத்திப் பின்னாளில் வெற்றிட அடிப்படையிலான பல்வேறு கருவிகள் வடிவமைக்கப்பெற்று உருவாக்கப்பட்டன.

1663ஆம் ஆண்டு ஆட்டோ வான் கியூரி, சுழலும் கந்தகப் பந்தில் உராய்வை ஏற்படுத்தி நிலை மின்சாரத்தை (static electricity) உற்பத்தி செய்யும் மின் பிறப்பியைக் (electric generator) கண்டு பிடித்தார். சில ஆண்டுகள் கழித்து 1672இல், மேற்கூறியவாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கந்தகப் பந்தின் மேற்புறத்தை ஓளிரச் செய்வதையும், இந்நிகழ்வு மினொளிர்வு (electro luminescence) என்றும் கண்டறிந்து வெளியிட்டார்.

கியூரிக், வானியல் துறையிலும் ஆய்வு மேற்கொண்டு விண்வெளியிலிருந்து அவ்வப்போது வரும் வால் மீன்களைப் (comets) பற்றிய கருத்துகளை உலகுக்குத் தெரிவித்தார். பல்வேறு துறைகளிலும் தமது நுண்ணறிவை வெளிப்படுத்திய கியூரிக் எண்பது வயது வரை வாழ்ந்து 1686இல் ஹாம்பர்க் நகரில் மறைந்தார்.

***

டாக்டர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan

பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD

Email: ragha2193van@yahoo.com

Series Navigation