அறிவியல் மேதைகள் லூயி பாஸ்டர் (Louis Pasteur)

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


லூயி பாஸ்டர் வேதியியல் அறிஞராகத் தமது வாழ்வைத் துவக்கியவர்; பின்னர் பாஸ்டராக்கம், நாய்க்கடிக்கான தடுப்பூசி போடும் முறை ஆகிய தமது கண்டுபிடிப்புகளால் உலகப் புகழ் பெற்றார். நோய்களைப் பொறுத்தவரை, அவர் வாழ்ந்த காலத்து மக்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்தனர்; நோய்த் தடுப்புக்கான சிகிச்சை முறைகளில் மக்களின் மூட நம்பிக்கையை எதிர்த்துப் பாஸ்டர் புரட்சிப் போர் தொடுக்க வேண்டியிருந்தது.

லூயி பாஸ்டர், 1822 ஆம் ஆண்டு திசம்பர் 27 ஆம் நாள் பிரான்சு நாட்டில் டோல் (Dole) என்ற சிறு கிராமத்தில் பிறந்தார். அவர் தந்தை பெயர் ஜோசப், தாய் எதியா நெயில். படைவீரரான ஜோசப், தன் மகன் ஆசிரியராக வரவேண்டுமென்று விரும்பினார். லூயி பாஸ்டர் தமது துவக்கக் கல்வியை அப்ராய் (Abroi) நகரில் இருந்த பள்ளி ஒன்றில் தொடங்கினார். குடும்பச் சூழ்நிலையால் அங்குக் கல்வியைத் தொடர இயலாமல் பாரிஸ் நகரின் ஈகோல் (Ecole) பள்ளியில் படிப்பை மேற்கொண்டார். அங்கும் அவரால் தொடர்ந்து படிக்க இயலவில்லை. மேற்கூறிய இரு கல்விக்கூடங்களிலும் அவர் மிகச் சாதாரண மாணவராகவே விளங்கினார். மீண்டும் அப்ராய் நகருக்கே திரும்பி அங்கிருந்த ஜோபன்சன் கல்லூரியில் (Jobenson College) படித்துப் பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் டுமாஸ் (Dumas) அவர்களின் சொற்பொழிவைப் பாஸ்டர் கேட்க நேர்ந்தது. டுமாஸின் பேச்சால் கவரப்பெற்ற பாஸ்டர் தான் ஒரு வேதியியல் அறிஞராக விளங்க வேண்டுமென்று முடிவெடுத்தார். பின்னர் தனது ஆய்வுப்படிப்பைத் தொடர்ந்த பாஸ்டர் அக்கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றார்.

ஈகோல் பள்ளியில் மாணவராக இருந்தபோதே பேராசிரியர் லாரண்ட் (Laurent) அவர்களிடம் பாஸ்டர் ஆய்வுக்கூட உதவியாளராகப் பணியாற்றினார். அப்போது டார்ட்டாரிக் அமிலப் (Tartaric acid) படிகங்களைக் (crystals) கூர்ந்து ஆய்வு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. படிகங்களின் தட்டை முகங்கள் (facets) வலப்புறம், இடப்புறம் ஆகிய இரு வகைகளிலும் அமைந்திருப்பதைப் பாஸ்டர் கண்டறிந்தார். இவ்வகைச் சீர்மையற்ற (asymmetrical) தட்டை முகங்களின் விளைவால் நுண்ணுயிர்களின் உற்பத்தி நடைபெறக்கூடும் என்ற நம்பிக்கை அவருக்கு உண்டாயிற்று. மேலும் பண்டங்கள் நொதித்துப் (fermentation) போவதற்கான கரைசல் (solution) பற்றிய ஆய்விலும் அவர் கவனம் ஈர்க்கப்பெற்றது. இந்நிலையில் லூயி பாஸ்டர் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வை மேற்கொண்டார்; அவரது வாழ்க்கைத் துணைவியான மேரியும் அறிவியல் ஆய்வில் மிகுந்த ஆர்வம் உடையவராக விளங்கினார். எனவே இருவரும் இணைந்து பல்வேறு அறிவியல் பிரச்சினைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

சில பொருட்கள் தமது தொடக்க நிலை அல்லது மூல நிலையிலிருந்து பிறழ்வதற்கு, நொதிப்புத் தன்மை ஒரு வேதியியல் காரணமாக விளங்குகிறது. எடுத்துக்காட்டாகத் திராட்சையிலிருந்து ஒயின் எனப்படும் மதுவகை தயாராவதற்கும், பால் புளித்துப் போவதற்கும் நொதிப்புத் தன்மையே காரணம் எனலாம். ஆனால் இந்நொதிப்புத்தன்மை எத்தகைய நிலைமைகளில் உருவாகிறது என்பது அறிவியல் அறிஞர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்து வந்தது. பாஸ்டர் இத்துறையில் ஆழ்ந்த ஆய்வு மேற்கொண்டு நொதிப்புத்தன்மைக்கான நுண்ணுயிர்க் கொள்கையை (germ theory) வெளியிட்டார். பொருள்களில் நொதிப்புத் தன்மையினால் விளையும் எல்லா மாற்றங்களுக்கும் பல்வகையான நுண்ணுயிர்களே காரணம், அவற்றை நுண்ணோக்கிகள் வாயிலாக மட்டுமே காண இயலும் மேலும் அந்நுண்ணுயிரிகளை வெப்பத்தினால் கட்டுப்படுத்த இயலும் என்பனவே அவர் கண்டுபிடித்த நுண்ணுயிர்க் கொள்கையின் கூறுகளாகும். இக்கொள்கையின் அடிப்படையிலேயே பாஸ்டராக்கம் (Pasteurisation) என்ற முறை உருவாயிற்று; பாலைக் கெட்டுப்போகாமல் பதப்படுத்துவதற்கு இன்றும் இம்முறையே பின்பற்றப்பட்டு வருவதை நாம் அறிவோம். மேற்கூறிய இம்முறையைக் கண்டுபிடித்ததன் வாயிலாக லூயி பாஸ்டர் 1864ஆம் ஆண்டு பிரெஞ்சு அறிவியல் கழகத்தின் உறுப்பினராகும் பெருமை பெற்றார்.

அடுத்து பட்டுப் புழுக்களைத் தாக்கிய ஒரு வகை நோயினால் பிரான்சு நாட்டில் பட்டுத் தொழிலே நிலை குலைந்து போயிருந்தது. இந்நோய்க்குக் காரணமான நுண்ணுயிரிகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் பாஸ்டர் ஈடுபட்டார். நோயுற்ற பட்டுப்புழுக்களைச் சாதாரண புழுக்களிலிருந்து தனியே பிரித்துவைக்குமாறு பாஸ்டர் வழங்கிய அறிவுரையைகண்டு பிறர் நகைத்தனர். அதைப்பற்றிக் கவலைப்படாத லூயி பாஸ்டர், தன்னைப்பாதித்துவந்த பக்கவாத நோய்க்கிடையிலும் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு, பட்டுப்புழுக்களைத் தாக்கிய நோய்க்கான காரணத்தினை அறிந்தார். இதனால் பிரான்சு நாட்டில் மட்டுமல்ல ஐரோப்பாவிலேயே பட்டுத்தொழில் அழியாமல் காப்பாற்றப்பட்டது. இத்தாலி நாட்டு அரசு தமது நாட்டில் பட்டு உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு, பாஸ்டர் பெயரைச் சூட்டி நன்றி தெரிவித்துக் கொண்டது.

நுண்ணுயிர்கள் மனித உடலில் மாற்றங்கள்/தீமைகள் பலவற்றை ஏற்படுத்தக்கூடியவை என்னும் உண்மையைத் தமது ஆய்வின் வழியே லூயி பாஸ்டர் அறிவித்தார். மருத்துவரின் கைகள், உடைகள், அறுவை சிகிச்சைக் கருவிகள் ஆகியவை நுண்ணுயிரழிவாக்கம் (sterilization) செய்யப்பெறாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், நோயாளியின் உடலினுள் ஏராளமான நுண்ணுயிர்கள் ரத்தத்தில் கலந்து நிலைமை மோசமாகுமே தவிர, நோயிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்காது என்ற உண்மையை பாஸ்டர் உலகுக்கு வெளிப்படுத்தினார். எனவே அறுவை சிகிச்சைக் கருவிகளை, புரை எதிர்ப்புக் கரைசல் (anti-septic solution) அல்லது கொதி நீரில் மூழ்கி எடுத்துப் பின்னர் பயன் படுத்தவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பாஸ்டரின் இந்த நுண்ணுயிரழிவாக்க முறையால் பல நோயாளிகள் சாவிலிருந்து தப்பினர்.

பாஸ்டராக்கம், நுண்ணுயிரழிவாக்கம் ஆகிய இரண்டும் லூயி பாஸ்டரின் குறிப்பிடத்தக்க பெரும் கண்டுபிடிப்புகள் என்பது உண்மையே. ஆனால், கால்நடைகளுக்குப் பரவும் அடைப்பான் (Anthrax) நோய் பற்றிய அவரது ஆய்வும், அந்நோய் பரவாமல் தடுக்க அவர் கண்ட வழிமுறையும் அவருக்கு உலகப்புகழை ஈட்டித்தந்தன என்றால் மிகையேதுமில்லை. அடைப்பான் நோயைப் பரப்பும் நுண்ணுயிரிகளைப் பிரித்தெடுத்து, அவற்றைச் செயலிழக்கவைத்து, மீண்டும் அவற்றைக் கால்நடைகளின் ரத்தத்தில் ஊசி வழியே செலுத்தியதில் நோய் பரவாமல் தடுக்கப்பெற்றதோடு கால்நடைகளும் காப்பாற்றப்பட்டன. அதாவது, ஆபத்தான நுண்ணுயிரிகளின் மூலம் பரவும் நோயைத்தடுக்க வேண்டுமெனில், அந்நுண்ணுயிரிகளை உருவாக்கி, அவற்றை அழிப்பதன் வாயிலாக செயலிழக்க வைத்து, மீண்டும் அவற்றை ரத்தத்தில் செலுத்தவேண்டும் என்ற வழிமுறைகளை பாஸ்டர் வெளிப்படுத்தினார். இதனை மெய்ப்பிக்க 1881 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் நோயுற்ற கால்நடைகளுள் சிலவற்றிற்கு மேற்கூறிய சிகிச்சை முறை அளிக்கப்பட்டு, வேறு சிலவற்றிற்கு எவ்விதச் சிகிச்சையும் அளிக்கப்படாமல் விடப்பட்டது. சிகிச்சை பெற்ற கால்நடைகள் பிழைத்தன; மற்றவை இறந்தன. இந்த சிகிச்சை முறையே பின்னாளில் தடுப்பூசிமுறை (vaccination) என வழங்கப்பட்டது.

லூயி பாஸ்டரின் மற்றுமொரு மாபெரும் கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது நாய்க்கடிக்கான (rabies) சிகிச்சை முறையாகும். அவர் காலத்தில் நாய்க்கடி என்பது சிகிச்சையளிக்க இயலாத நோய் என்றும், நாய்க்கடி பட்ட மனிதரோ, விலங்கோ பரிதாபச் சாவிலிருந்து தப்ப இயலாது என்றும் நம்பப்பட்டது. மேலும் நாய் கடித்த உடல் பகுதியை நெருப்பில் காய்ச்சிய இரும்பினால் சூடுபோட்டு, கடிபட்ட இடத்திலிருந்து சதையை அறுத்தெறிவதுதான் அந்நாளைய சிகிச்சை முறையாக இருந்து வந்தது. இத்தகைய மூடத்தனமான, முரட்டுச் சிகிச்சை முறையை ஒழிக்க வேண்டுமென்று பாஸ்டர் முடிவெடுத்தார். நாய்க்கடிக்கும் அதனால் விளையும் நீரச்சத்திற்கும் (hydrophobia) தகுந்த சிகிச்சை அளிப்பதற்கான ஆய்வில் அவர் ஈடுபட்டார். இதற்காகப் பலவகையான ஆண்/பெண் நாய்களைத் தமது ஆய்வில் ஈடுபடுத்தினார். பெரும் ஆபத்தை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நாய்களின் உமிழ்நீரில் இருப்பதைக் கண்டறிந்தார். நாய்க்கடி பட்டவரின் மூளை அல்லது முதுகெலும்புத் தண்டில் மேற்கூறிய நுண்ணுயிரிகள் தங்கிச் செயலூக்கம் பெற்று ஆபத்து விளைவதாக அவரது ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. லூயி பாஸ்டர் நாய்களின் உமிழ் நீரைத் தானே உறிஞ்சி, மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் நீரச்சநோய் தாக்கப்பெற்ற ஜோசஃப் மிஸ்டர் என்ற ஒன்பது வயதுச் சிறுவனின் உடல் ரத்தத்தில் தடுப்பூசி மூலம் செலுத்திச் சிகிச்சை அளித்தார். பதினான்கு நாட்கள் அளிக்கப்பெற்ற இச்சிகிச்சை வியப்பூட்டும் முறையில் வெற்றி அளித்து அச்சிறுவன் குணமடைந்தான். இச்சிகிச்சை முறையால் நாய்க்கடிபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் பிழைத்தனர்.

இவ்வாறு பல்வேறு சிகிச்சை முறைகளின் கண்டுபிடிப்புகளுக்குக் காரணமான லூயி பாஸ்டர் திசு அழுகல் (gangrene), குருதி நச்சு (blood-poisoning), பிறந்த குழந்தைக்கு வரும் காய்ச்சல் ஆகிய பல நோய்களைப்பற்றியும் ஆய்வு நடத்தினார். “உயிரற்ற உடலுறுப்புகளிலிருந்து உயிருள்ளவை அதாவது நுண்ணுயிரிகள் தோன்றுகின்றன; அத்தகைய சில நுண்ணுயிரிகள் மனிதர்க்கும், பிற விலங்குகட்கும் பெரும் ஆபத்தை விளைவிப்பவை” – இவையெல்லாம் பாஸ்டரின் ஆய்வு முடிவுகளாகும்.

லூயி பாஸ்டர் சிறந்த வேதியியல் அறிஞராக மட்டுமல்லாது, மிகப்பெரும் மனிதாபிமானியாகவும் விளங்கியவ்ர்; மனித/விலங்கு இனங்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய ‘வருமுன் காக்கும் சிகிச்சை’ முறையைக் கண்டுபிடித்தவர். பாஸ்டர் வேதியியல் உலகுக்குச் செய்த மாபெரும் சேவையைப் பாராட்டி ருஷ்யப் பேரரசர் ஒருவர் அவருக்கு வைரப் பதக்கம் அளித்துப் பாராட்டியதோடு, அறிவியல் ஆய்வு மையம் ஒன்றைத் துவக்கப் பொருளுதவியும் அளித்தார். இத்தகு சிறப்புகளுக்கு உரிய லூயி பாஸ்டர் என்ற மாபெரும் அறிவியல் மேதை 1895 ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

***

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித்துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

Dr R Vijayaraghavan

BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education (NCERT)

Mysore 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர