அறிவியல் புனை கதை: எந்திரசாதி, சோலார் கோத்திரம்

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஹூர்ரா…! கையிலிருந்த அரசு ஆணையை ஆறாவது முறையாகப் படித்தேன். பட்டியலில் நான்காவது இடத்தில் எனது பெயர் இருந்தது. அன்புடையீர் என்று ஆரம்பித்து, அரசாங்கத்தின் சமூக நலத்துறை வெளியிட்டிருந்த அரசு ஆணையின்படி எனக்கு எந்திர சாதியில் இடம் கிடைத்திருக்கிறது. காதலி பூமிகாவை இனி கைப்பிடிக்க அரசாங்கத் தரப்பில் தடைகளிருக்காது. மகிழ்ச்சியில் நான்கு முறை துள்ளிக் குதித்தேன். உண்மையில் இரண்டுமுறை குதிக்கத்தான் விரும்பினேன். எங்கள் கோள் ஈர்ப்புவிசைப்படி அது இரட்டிப்பாகிவிட்டது. ஐந்து ஆண்டுகளாக இருவரும் காத்திருந்ததற்குப் பலனில்லாமலில்லை. அவளுக்கு இச்சந்தோஷச் செய்தியை உடனே தெரிவித்தாகவேண்டும். கையிலிருந்த கோளிணைப்பு தொலைபேசியில் பலமுறை அவளுடை பிரஜா எண்ணைத் தெரிவித்தும் கொரகொரவென்று சத்தமும் உஸ் உஸ்ஸென்று காற்றும் வந்ததேயன்றி பூமிகாவின் குரல்..ம்.. இல்லை. அவளை உடனே சந்தித்தாகவேண்டும். நான்கு மணி நேரம்!…கடவுளே 240 நிமிடம்!.
* * * *
சாருவாகம்: எங்கள் நாடு, மக்கள் குடியரசு. செவ்வாய் கிரகம் போல ஏதோவொன்று பூமியை லேசாக உராய்ந்ததில் சிந்திய துகள்தான் எங்கள் கோளென்று வானியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்தியாவில் இருக்கிறபோது, வீட்டு மொட்டை மாடியிலிருந்தபடி முதன் முதலில் தொலைநோக்கியில் கோளைக் கண்டுபிடித்தது இப்போதைய தலைவர் ஜூனியர் சாருவாகனரின் பூட்டன். கண்டுபிடித்தவர் நினைவாக கடற்கரைசாலையில் சிலையொன்று உள்ளது. அவரது பெயரையே நாட்டுக்கும் சூட்டியிருந்தார்கள். அன்றிலிருந்து அவர் வாரிசுகளே நாட்டை ஆண்டுவருகின்றனர், இருந்தபோதிலும் எங்கள் நாடு ஜனநாயக நாடென்று நீங்கள் நம்பவேண்டும். தற்போதைய தலைவர் ஜூனியர் சாருவாகனர். நாட்டின் பரப்பளவு 670.5 ச.கி.மீ, (0.5 ச.கி.மீ அதிபர் மாளிகை). நாட்டின் ஈர்ப்புவிசை 5400M/S2 – பூமியைக்காட்டிலும் குறைவென்றாலும் நிலவை விட அதிகம். மக்கட்தொகை என்னையும் பூமிகாவையும் சேர்த்து ஆறு லட்சத்து ஐம்பத்திரண்டு. மொழி: தமிங்கிலீஷ். நாணயம்: சாருவாகம் ரூபாய். தலைநகரம் சாருவாகம். பூமிக்கும் எங்கள் நாட்டிற்கும் இரண்டுவாரத்திற்கொருமுறை நேரடிப் போக்குவரத்து இருக்கிறது. தேசியயமாக்கப்பட்ட சாருவாகம் ஸ்கைஷிப்பில் ஏறினால் நேராக எங்கள் நாட்டுக்கு நீங்கள் வரலாம். அது சாத்தியமில்லையெனில் இரண்டு நாட்களுக்கொரு முறை எங்கள் கோளைக் கடந்து நிலவுக்குப் போகிற ஸ்பேஸ் கிரா·ப்ட்ஸ்லே தூங்கிடாமே, முதல் நிறுத்தத்துலே அதாவது பூமியிலிருந்து 300000 கி.மீட்டரில், ஓட்டுனரிடம் சாருவாகம் ஸ்டாப்பிங்கென்று சொல்லி இறங்கிக்கொள்ளவேண்டும், தூங்கினீர்களென்றால் போச்சு பிறகு நிலவுவரை பயணித்துவிட்டுத் திரும்பவேண்டியிருக்கும்.

தலைவர் ஜூனியர் சாருவாகனர்: நாட்டின் நான்காவது ஆயுட்கால தலைவர். அவருக்கு “கடவுளும், வினையும், உயிருமில்லை”, “நல்ல பெண்களை மணந்து அவளோடு இன்பம் நுகர்வதே விடுதலைக்கான வழி” என்பது எங்கள் தலைவரின் புனிதக் குரல். அவ்வாசகத்தை நாட்டின் இலக்கு வாசமாக அரசாங்கம் அறிவித்து, உள்ளூர் வாகனங்களிலும், கோள்களுக்கிடையேயான பயணக் கப்பல்களிலும் உபயோகித்து வருகிறோம். இந்த உபதேசத்திற்கு மட்டும் நாட்டின் அரசியல் சாசனத்தில் 295 பக்கங்கங்களைத் தலைவர் ஒதுக்கியிருக்கிறார். அதில் 200 பக்கங்கங்கள் அவருடையதென்றும், ஐந்து பக்கங்கள் தலைவரது துணைவியாருடையதென்றும் நாட்டில் வதந்தி நிலவுகிறது.

எங்கள் சமூகம்: ஏழு சாதிகளாகப் பிரிக்கபட்டிருக்கிறது: தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறவை விலங்கு, மனிதர், ஏழாவதாக எந்திரம். சாதிகளென்று குறிப்பிட்டாலும் இப்பிரிவுகள் சமூக படிநிலை அடிப்படை நிலையில் அரசாங்கத்தால் உருவாக்கபட்டவை, அதாவது மக்களின் கல்வி, பணி, பொருளாதாரம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பொறுத்தவை. இக்கோளுக்குக் குடியேறிய புதிதில் எங்கள் மனிதர்களிடத்தில் பேதங்கள் இருந்ததில்லையென்றும், பிற்காலத்தில் குடிவந்த இந்திய இனவரைவியலறிஞர் ஒருவரின் யோசனையின் பேரிலேயே, புகுத்தப்பட்டன என்றும் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டுவரை பூமியில் இந்திய நாட்டிலிருந்த சாதிப்பிரிவுகள்போல இதை நீங்கள் கருதக்கூடாது. இது புரட்சிகரமானது. ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டமைக்க இத்திட்டம் பெரிதும் உதவியிருப்பதாக, துறை சார்ந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒரு சாதியில் பிறந்தவர் பிறசாதிக்கு மாற முடிந்ததா என்று தெரியவில்லை, எங்கள் நாட்டில் அது முடியும். நேற்றுவரை விலங்கு சாதியிலிருப்பவன் தலைவர் கையொப்பமிட்ட அரசாணை கிடைத்த மறுநொடி மனிதசாதிக்கு மாறி இருக்கிறான்.

யோகநாதன்: நண்பர்கள்(பாவிகள்) எனக்குக் யோகம் கூடாதென்று சுருக்கியதில் நாதன் – பூமிகாவிற்கு நாத். பெற்றோர்களுக்கும் அரசாங்கத்திற்கும் யோகநாதன். பிறந்த தேதி 18 -1-2075. உயரம் ஐந்தடி 15 அங்குலம். எடை30 கிலோ (சாருவாக கோள் எடை). கல்வி:வானியல் பௌதிகத்தில் பட்டப்படிப்பில் தோற்று எங்கள் அரசாங்கத்தின் பறக்கும் படையில் A9 -34 பிரிவிலுள்ள ஐந்து ட்ராய்டுகள் நான்கு உயரின உயிர்களில் நானும் ஒருவன், தீக்கதிர் வீசும் கத்தியையும், மீல் ஷாடென் என்கிற பிரத்தியேக துப்பாக்கியையும் உபயோகிக்கத் தெரிந்தவன். நிறம் திராவிட நிறம்.

பூமிகா: எனது ஐந்து வருடக் காதலி. உயரம் ஐந்தடி 10 அங்குலம், எடை 22கிலோ (சாருவாக கோள் எடை). அவளுடைய சொத்து 34-24-35. தலை முடி மட்டுமல்ல, பெரிய விழிகளில் தெரிந்த கண்மணிகளும் நல்ல கறுப்பு. முன்னோர்கள் பூமியைச் சேர்ந்த இலங்கையென்ற தீவிலிருந்து வந்தவர்கள். இருபது வயதில் நகரின் ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றியவள், தற்சமயம் மெய்க்காவல் படையின் பெண்கள் பிரிவில் உதவி தலைவராக இருக்கிறாள். லைட்சாபரை திறமையாகச் சுழற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பெண்களில் அவளும் ஒருத்தி, என்பதால் தலைமை குறுகிய காலத்திலேயே மெய்க்காவல் படையின் பெண்கள் பிரிவில் பொறுப்பான பதவியை பூமிகாவிற்குக் கொடுத்திருந்தது.

நாராயணன் க்ரூப்: என்னுடைய தாத்தா. அவருடைய தாத்தா பெயர் பாலன் க்ரூப். அவர் தனியார் தொலைகாட்சியொன்றில், “மேஷ ராசி நேயர்களே” என்று ஆரம்பித்து ‘நாள் பலன்’ ‘வாரபலன்’ சொல்லிக்கொண்டிருந்தவர்.அவருக்கும் கேரளாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை, தொழில்ரகசியம் என்கிறார்கள். பிறந்தது-இறந்தது எல்லாமே சென்னை, பச்சைத் தமிழர். அவர் வழியில் வந்த எனது தாத்தா இங்கே பதஞ்சலி முனி தயவில் கொஞ்சம் பணம் பார்த்தார். இப்போதையை தலைவர் ஜூனியர் சாருவாகனரின் தந்தைக்கும் குருவாக இருந்து சில ஆசனங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறார். அவர் ஆரோக்கியத்துக்கு தாம்தான் காரணமென்று சொல்லக்கேட்டிருக்கிறேன். அக் காரணம் தாத்தாவிடம் மட்டுமல்ல எனக்கெதிராகவும் எங்கள் தலைவரைத் திருப்பியிருந்ததென்பதை இக்கதையின் முடிவில் புரிந்து கொள்வீர்கள். தாத்தாவின் யோகாசனம் கொடுத்திருந்த ஆரோக்கியம் ஜூனியர் சாருவாகனன் தந்தையை தசரதச் சக்கரவர்த்தியாக மாற்றியிருக்கிறது. கைகேயிகள் எண்ணிக்கை மாத்திரம் நாற்பத்தெட்டு என்கிறார்கள். தாத்தா மீதுள்ள கோபம் இன்னமும் தலைவரிடம் தணியவில்லை. இல்லையெனில் மனிதசாதியிலிருந்து எந்திர சாதிக்கு உயர்த்தியுள்ள இந்த அரசாணை நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருக்கும். நானும் பூமிகாவைக் மணம் செய்துகொண்டிருந்திருப்பேன். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பூமிகாவும் நானும் காதலித்து வந்திருக்கிறோம்.

யோகநாதன் பூமிகா காதலின் முற்பகுதிக் காலம்: எங்கள் அரசாங்க தேசிய வாசகமான, “நல்ல பெண்களை மணந்து அவளோடு இன்பம் நுகர்வதே விடுதலைக்கான வழி” என்பதைப் பின்பற்ற வேண்டிய கடமையிருப்பினும், அது இருபது வயதில் எனக்கு வாய்க்குமென்று நான் நினைக்கவில்லை. பூமிகாவை முதன்முதலாக சந்திக்க நேர்ந்தது ஒர் அதிசய நிகழ்வு. எங்கள் காதல் நாட்டின் தேசிய சேவையால் தீர்மானிக்கப்பட்டிருந்ததென்று சொல்லவேண்டும். கி.பி. 2095 ஜூன் மாதம் நாள் 24, காலை பத்துமணி 20 நிமிடம் 12 நொடிகள் இருபது வயது முடிந்த ஒவ்வொருவரும், மூன்று மாதகாலம் கட்டாயத் தேசிய சேவை செய்யவேண்டுமென்ற சாருவாக நாட்டு விதிப்படி, அன்றைய தினம், எங்கள் கோளிலுள்ள கர்ம மண்டபத்துக்குள் நுழைந்து எதிரீர்ப்பு விசை கோள் எங்கே என்று தேடி எனக்கென்று அரசாங்கம் வழங்கியிருந்த சங்கேத எண்ணை ஒத்தினேன். கதவு திறந்து என்னை உள்வாங்கிக் கொண்டது. மின் முனைப்போடு இணைத்திருந்த விசைபலகையில் நாதன் என்ற பெயரைத் தட்டினேன். திறையில் சாதிப்பிரிவைக் குறிப்பிடும்படி கேட்டுவந்தது. பறவை – மனிதன் என்று தட்டினேன். பிறகு எதற்காக வந்திருக்கிறாய் என்றிருந்த கேள்விக்கு ‘கட்டாய தேசிய சேவை’ என்று தட்டினேன். கணிப்பொறியிலிருந்து வேறு பதில் இல்லை திரை சட்டென்று அணைந்தது. அடுத்த நொடி வண்டொன்று பறப்பதுபோல உர் உர்ரென்று சத்தம், கோளிற்குள் நீலநிறத்தில் புகைவெளிப்பட்டு என்னை மறைத்தது, அந்தரத்தில் மிதக்கிறேன்.

அதிகாலை நேரம். இருள்பிரியாமலிருந்தது. இடிபாடுகளைப் இரண்டாக பிரித்திருந்த சாலை ஒன்றில் தன்னந்தனியனாக யாரையோ எதிர்பார்த்து நிற்கிறேன். தலைக்குள்ளிருந்து எங்கள் தலைவரின் குரல். ‘காத்திரு’, என்று கட்டளை இடுவது காதில் தெளிவாக விழுகிறது. காத்திருக்கிறேன். ·பிளாஷ் லீடர் வாகனத்தில் அவள் வந்திறங்கினாள். இறுக்கமான தோலினாலான எங்கள் தேசிய உடை. பெரிய விழிகளை திறந்தபோது கண்களில் தீ தெரிந்தது. “மிஸ்டர் நாதன்! ” என்றாள். ஆமாம் என்பதுபோல தலையாட்டினேன். “இன்றைக்கு முழுதும் உங்களுக்கு என்னோடு வேலை”,. என்றாள்.

எனது ஜாக்கெட்டில் மனிதலைக்கு மேலே வண்ண நூலால் போட்டிருந்த பறவையைப் பார்த்திருக்கவேண்டும். “நீங்கள் ஆரம்பத்தில் பறவை சாதியா?” என்று கேட்டாள். தலையாட்டினேன், “அதற்கு முன்னால் அறிமுகப்படுத்திக் கொள்வதில் தவறில்லையே, என்றேன். ”மன்னியுங்கள்”, என்றாள். தொடர்ந்து, “எனது பெயர் பூமிகா, பூமிகா நித்தியானந்தம்”, என்றபடி வலது கையை நீட்டினாள். நீட்டிய கையின் மேற்புறத்தில் பொதுச்சேவை என்று ரிப்பன் கட்டப்பட்டிருந்தது. ஆர்வத்துடன் அவளுடையக் கையைப் பற்றி குலுக்கினேன்.

– நமக்கான பணியில் இறங்குவோமா? பத்துமணிக்குக் கண்காணிப்பாளர் வருவார், அதற்கு முன்னால் பத்து விழுக்காடு பணியை முடித்திருக்கவேண்டும், என்றாள்.

அப்போதுதான் எதற்காக அங்கிருக்கிறேன் என்று புரியவந்தது, மனிதரினக் கிடங்கென்று எழுதியிருந்த கட்டிடத்திற்குள் இருவருமாக நுழைந்தோம்.

– முதியோர் காப்பகத்திலிருந்து 150 வயதானவர்களை இங்கே கொண்டுவந்து போட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு உணவு தண்ணீரென்று எதுவும் வழங்கப்படுவதில்லை. சுவாசிக்கவும் வழியில்லை. மாதத்திற்கு ஒரு முறை இக்கிடங்கைத் திறந்து பரிசீலிப்பார்கள். திறந்து பார்க்கிறபோது பலர் இறந்திருப்பார்கள். இன்றைக்கு நீங்களும் நானும் வந்திருக்கிறோம். மனதைத் திடப்படுத்திக்கொண்டு இறந்த உடல்களை மற்றவர்களிடமிருந்து தனியாகப் பிரித்து, அரவை எந்திரத்துக்கு அனுப்பவேண்டும். நமக்கான தீவனத்தில் பத்து விழுக்காடு இங்கிருந்தே வருகிறது. மனிதர் உடலென்றில்லை. விலங்குகளும் பறவைகளுங்கூட இப்படி இறந்த பிறகு அரைக்கப்படுவதுண்டு” நிறுத்தாமல் பேசிக்கொண்டுபோனாள்.

குவியலாகக் கிடந்த மனித உடல்களை நெருங்குவதற்கு முன்னால் இருவரும் தற்காப்பு கவசங்களை அணிந்து கொண்டோம். எலிகளும், பூனைகளும் அங்கே நடமாடின. எலிகள் கடித்திருந்த மனித உறுப்புகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மூன்றுமாதகாலம் தேசிய சேவையென்ற பெயரில் இங்கே எப்படிச் இருக்கப்போகிறேனென யோசிக்கிறேன். குமட்டிக்கொண்டுவந்தது. அதைப் புரிந்துகொண்டவள்போல மாத்திரை ஒன்றைகொடுத்து விழுங்கென்று கட்டளையிட்டாள். நான் வாய் திறக்கும் முன்பாகவே சட்டென்று முகவாயை நிமிர்த்தி, வாயைத் திறந்து மாத்திரையைப்போட்டு, கூடவே தன்ணீர் மாத்திரையையும் விழுங்க வைத்தாள். இரண்டையும் விழுங்கியபடி அவள் கண்களைப்பார்த்தேன். அவளுக்காக மூன்றுமாதமென்ன ஆறுமாதங்கூட அங்கே இருக்கலாம் போலிருந்தது.

அவளைக்கேட்டேன், ” பெண்ணாக இருந்துகொண்டு எப்படி உங்களால்?”

– மிஸ்டர் நாதன் இன்னும் பறவை சாதியிலிருந்து நீங்கள் முற்றாக விடுதலை ஆகவில்லையென நினைக்கிறேன். மனித சாதியிலிருப்பவர்கள், சக மனிதர்களின் உயிர்களைக் குறித்து பொதுவாக கவலைகொள்ள மாட்டார்கள். பிறர் அவலத்தை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்பவர்கள். மனிதரினத்தை இயற்கை அழித்ததைக்காட்டிலும் மனிதர்களே கூடுதலாக அழித்திருப்பார்கள். போர் என்ற பேரில் எத்தனை லட்சம் மக்களென்றாலும் கொல்லலாம், ஒருவரும் கேள்வி கேட்பதில்லை. இவையெல்லாம் மனிதராக இருக்கிறபோதுமட்டுமே சாத்தியம். மனிதராக நடந்துகொள்ள பாருங்கள். இதில் நீங்கள் ஜெயித்தால்தான் எதிர்காலத்தில் எந்திரசாதியாக உயரமுடியும். இங்கே கூட சில நேரங்களில் உயிர்களைக் கொன்று அரவை எந்திரத்தில் தூக்கிப்போடவேண்டியிருக்கும். மனித சாதிக்கு இரக்கமெல்லாம் கூடாதென்பது விதி, சர்வசாதாரணமாக சொற்கள் வந்தன.

அச்சம்பவத்திற்குப் பிறகு, எனக்குப் பறக்கும் படையில் உத்தியோகம் வாய்த்தது. இரண்டு முறை அலுவல் தொடர்பாகப் போன இடத்தில் அவளை சந்திக்க நேர்ந்தது. இரண்டாவது முறை எனது அலுவலகத்திற்குத் திரும்பியதும், பூமிகா நினைப்பு அடிக்கடி வந்தது. ‘நல்ல பெண்களை மணந்து அவளோடு இன்பம் நுகர்வதே விடுதலைக்கான வழி’ என்கிற தலைவர் சாருவாகனர் பொன்மொழியை நிறைவேற்றவேண்டிய கடமை எனக்கிருக்கிறதைபற்றி அவளிடம் பேசினேன்.

– நாதன் நானும் உங்களைக் காதலிக்கிறேன். ஆனா உங்க மனசுலே என்ன இருக்குண்ணு தெரிஞ்சுக்கணும். பழகணும், படுக்கணுங்கிறதா, இல்லை திருமணம், குடும்பங்கிறதா, இந்த இரண்டுலே நீங்க எந்தக் கட்சி.

– நாம கொஞ்சம் புரட்சிகரமான காதலர்களா இருப்போமே.

– அப்போ திருமணம் செஞ்சிக்கலாங்கிறீங்க.

– ஆமாம்.

– அப்படீண்ணா, நீங்க மனிதசாதியிலிருந்து உயரணும். அரசாங்கத்துக்கிட்டே விண்ணப்பித்து எந்திர சாதிக்கு வாங்க, நாம திருமணம் செஞ்சிக்கலாம். என்னுடையது எந்திர சாதியென்றவள், பிறகு உரையாடலைத் துண்டித்துக்கொண்டாள்
* * * * *

யோகநாதன் பூமிகா காதலின் பிற்பகுதிக் காலம்: நான் எந்திர சாதியாக மாறும்வரை அவள் காத்திருப்பேன் என்பதை நம்புவதா கூடாதா என்று ஆரம்பத்தில் குழம்பியிருக்கிறேன். ஆனால் அவளுடைய பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் A56 என்ற ஆண் டிராய்டை சந்தேகிக்கிறேன் என்று தோன்றிய அன்றே, அரசாங்கத்திடம் சொல்லி W120யென்ற பெண் டிராய்டை பாதுகாப்பு அதிகாரியாக நியமனம் செய்தபோது அவளுடைய காதலை நம்பவேண்டியிருந்தது. ஐந்து வருடங்கள் எனக்காகக் காத்திருந்தாள். அரசாங்கத்துக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் எங்கள் தலைமை அதிகாரியும் எந்திர சாதியாகப் படிநிலையில் உயர்வதற்கான தகுதிகள் எனக்கு நிறைய இருப்பதாக, சமூக நலத்துறைக்கு சிபாரிசு குறிப்பு அனுப்பி இருந்தார். அதன்படி இன்றைக்கு என்னை எந்திர சாதியில் அனுமதிக்கும் அரசாணை வந்திருக்கிறது. இச் சந்தோஷச் செய்தியை பூமிகாவிடம் பகிர்ந்துகொள்ள முயற்சித்து இருபது முறை கோளிணைப்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்குப் பலன் கிடைத்தபோது நான்கு முறை துள்ளிக்குதித்தேன்.

– ஒரு குட் நியூஸ் டார்லிங்

– சொல்லுங்க, ரொம்ப சந்தோஷத்துலே இருக்கீங்கண்ணு நினைக்கிறேன், என்ன விஷயம்ணு நான் சொல்லட்டுமா?

– இல்லை. அதை நான்தான் சொல்லணும். காலை பதினோருமணியிலிருந்து நான் எந்திர சாதி. சித்தே முன்னேதான் G.O கையிற் கிடைச்சுது. நாம திருமனத்துக்கான விண்ணப்பத்தை நா¨ளைக்கே தலைமைக்கு அனுப்பிடலாம். விண்ணப்பத்துக்கான செலவும், துறைக்குக் கொடுக்கவேண்டிய இலஞ்சமும் என்னுடைது. திருமணத்தை வேண்டுமானா நாம இரண்டுபேரும் பகிர்ந்துக்கலாம்.

– எனக்கு அதை செலிபிரேட் பண்ணனும்.

– நிச்சயமா. எங்க வச்சிக்கலாம்.

– அவசரப்படாதீங்க. ஆனா அதற்கு முன்ன எனக்கு ஒன்று தெரிஞ்சாகணும். எந்திர சாதி உட்பிரிவுலே கோத்திரமென்று ஒரு காலம் வரும், அதிலென்ன எழுதியிருக்குண்ணு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க.

– எங்க இருக்கு? அப்படி எதுவுமில்லையே.. ஆங்..இருக்கு. நானோ(Nano) சக்திண்ணு போட்டிருக்கு.

– நல்லாப் பாருங்க நானோண்ணா போட்டிருக்கு?

– ஆமாம். ஏன்?

– நான் சோலார் (Solar) கோத்திரம். நம்மிருவருக்கிடையே திருமணத்திற்கு சான்ஸே இல்லை.

———————————–

Series Navigation