அறிவியல் புனைகதை:- நீர் மேல் எழுத்து

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

ரெ.கார்த்திகேசுகார்த்தியாயினி தனது சுகமான இருக்கை/படுக்கையில் கொஞ்சம் புரண்டபோது ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்’ என்ற கருத்து அவர் பிரக்ஞையுள் குதித்தது. அதோடு தூக்கமும் கலைந்தது. என்ன இது? சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்?’ இப்படித் தன் கவனம் கலைந்த வேளைகளில் சில கருத்துக்கள் திடீரென்று முண்டிக்கொண்டு வந்து பிரக்ஞை வெளியைப் பற்றிக் கொள்வது அவருக்கு எரிச்சலாகக் கூட இருந்தது. இதனால்தான் தூக்கம் கெடுகிறது. தூக்கம் கெடுவதால் உடல் நலம் கெடுகிறது. இப்படி மூளை ஓய்ந்திருக்கும்போது பிரக்ஞைக்குள் வந்து குதிக்கும் கருத்துக்கள் பற்றி இன்னும் கொஞ்சம் தீவிரமாக ஆராயவேண்டும் என்று முடிவெடுத்தார்.
எப்படியும் தூக்கம் போய்விட்டது. கண்களை முற்றாக விழித்துக் கொண்டு விமானத்தின் கூரையைப் பார்த்தார். பட்டுத்துணி போன்ற செயற்கை சீலிங்கில் மென்மையான செயற்கை நட்சத்திரங்கள் சிமிட்டிச் சிமிட்டி மறைந்தன. கொஞ்ச நேரத்தில் கண்களைப் புண்படுத்தாத ஒரு குட்டி நிலவு வரும். எல்லாம் கணினியில் பிறப்பவை. தூங்குபவர்களைத் தொந்திரவு படுத்தாத மென்மையான ஒளி. ஆனால் தூங்காமல் தன்னைப் போல கூரையைப் பார்ப்பவர்களுக்கு இரவின் மோனத்தையும் மர்மத்தையும் மனதுக்குள் எழுப்பும். அவ்வப்போது ஒரு வால்நட்சத்திரத்தைக் கூட இந்தக் கணினி உற்பத்தி செய்யும் அறிவுள்ள கணினி. அறிவுள்ள கணினி? அந்த முரணை எண்ணிப் புன்னகை செய்து கொண்டார்.
இவ்வளவு அமைதியாக ஒரு விமானம் பறக்கும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூடக் கார்த்தியாயினியால் கற்பனை பண்ணியிருக்க முடியாது. ரஷ்யாவின் துப்பலோவ் நிறுவனமும் அமெரிக்காவின் போயெங் நிறுவனமும் கூட்டாகச் சேர்ந்து போயெங்-துப்பலோவ் என ஒரு விமான உற்பத்தி நிறுவனம் உருவாக முடியும் என்பதே 21ஆம் நூற்றாண்டின் முன் பகுதியில் நடந்திருக்க முடியாத காரியம். அப்போது நிலவிய முதலாளித்துவப் போட்டிகள் அப்படிப்பட்டவை. ரஷ்யா சோசியலிசத்தைக் கைவிட்டு முலாளித்துவத்தைத் தழுவ ஆரம்பித்திருந்தாலும் பழைய பகைமைகள், சந்தேகங்கள் மறைந்திருக்கவில்லை.
ஆனால் 21ஆம் நூற்றாண்டின் மத்தியில், இந்த 2050இல், உலகத்தின் நிலை வேறு. உலகம் ஒன்றாகி விட்டது. The End of History எழுதியவன் வாயில் சர்க்கரை போடவேண்டும். மார்க்சை விட அவன்தான் உண்மையான தீர்க்கதரிசி.
ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்கள் பகைமையை முற்றாகத் துறந்து அறிவியல் கண்டுபிடிப்புக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டபோதுதான் குளிர் ஃபுயூஷனில் சிறிய அணு உலை தயாரித்து அதை விமானங்களைச் செலுத்தவும் பயன்படுத்த முடியும் என்பது தெரிந்தது. மிகச் சிக்கனம். பெட்ரோல் எரிபொருள் இல்லாத பசுமைத் தொழில் நுணுக்கம். ஒலிக் கட்டுப்பாடு தொழில் நுணுக்கமும் வளர்ந்ததால் ஜெட்டின் ஒலி முற்றாக இல்லை. விரைவு. சுமுகமான பறத்தல். ஓடுபாட்டையின் தேவை இல்லாமல் எழும். இறங்கும்.
அறிவியல் எல்லாவற்றையும் வென்றுவிட்டதாகக் கூடத் தோன்றியது. ஆனால் இந்த இயற்கையுடனான போரின் வெற்றிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாகத் தோற்கும் பெரும் யுத்தம் ஒன்று விரைவில் இருக்கிறது.
அதன் தொடர்பான ஒரு மாநாட்டில் கட்டுரை படைக்கத்தான் இந்தப் பயணம். மாஸ்கோ ஸ்டேட் மானுடவியல் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது.
உலகம் அழியும் என்ற அழிக்க முடியாத அறிவியல் உண்மையைப் பற்றிய ஒரு மாநாட்டை ஒரு மானுடவியல் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பிரிவு நடத்துவது இந்தத் தருணத்தில் மிகப் பொருத்தம் என கார்த்தியாயினி நினைத்துக் கொண்டார். ஏனென்றால் உலக அழிவை எல்லா அறிவியல், தொழில்நுணுக்கப் பல்கலைகளும் விவாதித்து முடித்துவிட்டன. வானவியல், இயற்பியல், வேதியல், அணுசக்தியியல், பொறியியல் எனப் பல துறைகளும் இந்த நிகழ்வை அலசி விட்டன. பூமிக் கோளை நோக்கி வருகின்ற பிரம்மாண்டமான எறிகல்லைச் சென்று உடைக்கும் விண்ணேவு கணைகளை குறைந்தது ஐந்து பல்கலைக் கழகங்கள் அனைத்துலக ஒத்துழைப்பில் செய்து வருகின்றன. அந்த எறிகல்லை எந்தச் சக்தியும் தகர்க்க முடியாது. ஆனால் திசை மாற்ற முடியும் என்ற ஆரய்ச்சியும் இன்னொரு ஐந்து பிரோஜெக்டுகளாக நடந்து வருகின்றன. நோவாவின் படகு போல வேற்றுக் கோளில் குடியேறும் ஒரு ப்ரொஜெக்ட் ரகசியமாக உருப்பெறுகிறது. எல்லாவற்றுக்கும் இருக்கும் காலம் இன்னொரு 75 வருடங்கள்.
தனக்கொன்றும் பாதகம் இல்லை என்ற ஒரு வக்கிரமான உணர்வு கார்த்தியாயினிக்கு வந்தது. தனக்கு அதற்குள் வயது 125 ஆகியிருக்கும். செயற்கை உறுப்புக்களை வாங்கிப் பொருத்திக் கொள்ளும் ஆசையைத் தவிர்த்துவிட்டால் 100 வயதில் நிம்மதியாகச் செத்து விடலாம். இந்த 50 வயதுக்குள் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டு இரண்டு கணவர்களையும் பிரிந்துவிட்டாலும் குழந்தை குட்டி என்று ஒன்றும் இல்லை. தன் பெற்றோருக்கு அவர் ஒரே பிள்ளை என்பதால் தன் சந்ததி என்றோ தன் சகோதரர்கள் சந்ததி என்றோ கவலைப்பட ஒன்றும் இல்லை. 80 வயதில் அவர் அம்மா மட்டும் கார்த்தியாயினியுடன் இருக்கிறார். அவரும் அதற்குள் மண்டையைப் போட்டுவிடுவார்.
அவர்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக டொபர்மேன் வகை நாய் ஜோடியை வளர்த்து வந்தார்கள். அவற்றின் சந்ததி இடைவிடாமல் வந்து கொண்டே இருந்தது. அடிக்கடி புதிய பெண் நாய் வாங்கி சினை தரிக்கவிடுவார்கள். ஆனால் பத்தாண்டுகளுக்கு முன் அந்த எட்டாம் தலைமுறை டோபர்மேன் சினையுறவில்லை. அதற்கு முந்திய ஏழாம் தலைமுறையே சினையுறவில்லை. செயற்கைக் கருத்தரிப்பு முறையில் கருவுற வைத்தார்கள். 5 குட்டிகளில் நான்கு இறந்துபோக ஒரு பெண் குட்டி பரம்பரை வாரிசாக மிஞ்சியது. ஆனால் அதன் தாய் அதன் மீது பெரும் பகைமை பாராட்டியது.
இந்தப் புதிய பெண் குட்டி எந்த ஆண் நாயையும் தன்னிடம் அண்ட விடவில்லை. செயற்கைக் கருத்தரிப்பு முறைகளும் பலிக்கவில்லை. மூன்றாண்டுகளுக்கு முன் அது செத்துவிட்டபோது இனி நாய் வேண்டாம் என கார்த்தியாயினி முடிவு செய்தார். தனக்கே பரம்பரை இல்லாதபோது தன் நாய்க்குப் பரம்பரை இல்லை என வருத்தப்படும் நிலையில் அவர் இல்லை.
உலகம் அடுத்த 75 ஆண்டுகளில் அழிந்து விடும் என்னும் தவிர்க்க முடியாத உண்மை உலகத்தின் ஒட்டு மொத்தமான சிந்தனையை உலுக்கிப் போட்டிருந்தது. இயற்பியலும் வானவியலும் ஒரு யூகமாகச் சொல்லிவந்தவை இன்று உண்மையாயின. பூமிக்கோளைக் குறிவைத்து வரும் ஒரு எறிகோள் நிதர்சனமாகிவிட்டது. ஆகவே எல்லா ஆய்வுக்கூடங்களிலும் இது பற்றிய ஆய்வுக்கே பணம் குவிந்தது.
கார்த்தியாயினி பேராசிரியராகப் பணியாற்றும் மலேசிய அறிவியல் பல்கலையின் தத்துவத் துறையிலும் ஆய்வுகளின் திசைகள் மாறியிருந்தன. மானுடம் பற்றியும் சமயம், ஆன்மீகம், தத்துவம் பற்றியும் எல்லையில்லாக் கேள்விகள் எழுந்தன. உலகத்தை இறைவன் அழித்து மீண்டும் ஆக்குவான் என்ற சமய வாதம் அதிகம் பேசப்பட்டது. மாயாவாதம் வலுவடைந்திருந்தது. இந்த விண் எறிகோள், உலக அழிவு எல்லாம் மாயை என்பது பற்றிய ஓர் அனைத்துலக ஆய்வில் அவரது சகபேராசிரியர் ஒருவர் கூட முக்கிய பங்கு வகிக்கிறார். கார்த்தியாயினிக்கும் அந்த ஆய்வில் ஒரு பங்கு உண்டு. ஆனால் நம்பிக்கை இல்லை.
கார்த்தியாயினியின் ஆய்வு, மூளையில் பிரக்ஞை எவ்வாறு நிகழ்கிறது என்பது பற்றியது. பிரக்ஞை மூளைக்கு உள்ளேயே உருவாகிறதா அல்லது மூளைக்கு வெளியே இருந்து மூளைக்குள் திணிக்கப்படுகிறதா என்பது பற்றியது. மூளை இயக்கத்துக்கான கட்டளைகள் எங்கிருந்து வருகின்றன? மனித ஜீன்களுக்குள்ளேயே அது இருக்கிறது என்ற இப்போதைய உண்மை பெரும் சந்தேகத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஏதோ ஓர் வெளி மூலத்திலிருந்துதான் அது வருகிறது என்பதற்கான ஆதாரங்களை ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் மூலமாக அவர் சேகரித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய எடுகோள் (hypothesis) மெதுவாக வலுவடைந்துகொண்டு வந்தது.
இந்த நிலையில்தான் மாஸ்கோ ஸ்டேட் மானுடவியல் பல்கலை “கடவுள் என்னும் மாயை” என்னும் கருப்பொருளில் அனைத்துலக மாநாட்டை அறிவித்து இதற்கு அறிவியல், மானுடவியல் துறைகள் சார்ந்த ஆய்வறிஞர்கள் கட்டுரை படைக்கலாம் என்று அழைத்திருந்தது.
கடவுள் என்னும் ஒருவர் அல்லது ஒன்று இல்லை என்ற கருத்தை எல்லா ஆய்வுத் துறைகளும் தைரியமாக வெளியிட ஆரம்பித்துள்ள கால கட்டம் இது. சில சமயம் சார்ந்த துறைகளும் இதைப் பகிரங்கமாக அறிவிக்கத் தொடங்கியுள்ளன. முக்கியமாகப் பௌத்தம் இதனை முன் வைத்தது. புத்தர் இதனை முன்பே அறிந்திருந்தார் என அது சாதித்தது. மாறாக மத்திய கிழக்குச் சமயங்கள் உலக அழிவு என்பது கடவுளின் திட்டத்துக்கு உட்பட்டதே எனச் சாதித்தன. இந்து சமயத்தின் தலைமைப் பீடமான ஹவாயியில் உள்ள கௌவை ஆதீனம் “கடவுள்” என்னும் வார்த்தைக்கு நாம் கற்பித்துக் கொள்ளும் அர்த்தத்தைப் பொறுத்து உண்மையும் இன்மையும் அமையும் என நடுநிலை வகித்தது.
கார்த்தியாயினியின் கட்டுரை கௌவை ஆதினத்தின் கொள்கை அடிப்படியில்தான் அமைந்தது. மனிதம் என்பது அதன் மூளையைக் கொண்டும் அந்த மூளையின் செயல்பாடுகளைக் கொண்டும் நிர்ணயிக்கப்படுவது; பானால் அந்த மூளையின் செயல்பாடுகள் அதன் புறத்தே இருந்து வருகின்ற சில கட்டளைகளைப் பெறுவதை பரிசோதனைகள் மூலம் காட்டி, இதன் மூலம் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி இருப்பதை அது நிறுவுகிறது. ஆனால் அந்த சக்திக்குப் என்ன பெயர் சூட்டுவது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.
அது பற்றிய கட்டுரைதான் மாஸ்கோவில் அரங்கேறப்போகிறது. கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரலாம். வரட்டும். கடவுள் நம்பிக்கையாளர்கள் இதையே கடவுளின் உண்மைக்கு ஆதாரமாகக் கொள்ளலாம். கொள்ளட்டும். நான் ஆய்வு உண்மைகளின் அடிப்படையில் கூறுகிறேன். எனக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. இரண்டு திசைகளிலும் நான் எதையும் சாதிக்க விரும்பவில்லை.
விமானத்தின் விளக்குகள் மெதுவாக உயிர் பெற்றன. மாஸ்கோவின் புதிய கோர்பஷெவ் விமான நிலையத்தில் தரையிறங்கும் ஆயத்தங்கள் அறிவிக்கப்பட்டன. கார்த்தியாயினி தனது கம்பளியை மடித்து வைத்தார். ஒப்பனைப் பெட்டியைத் திறந்து நரைகள் நிறைந்த தலைமுடியை ஒழுங்கு படுத்தினார்.

*** **** ***
ரஷ்யாவின் முன்னாள் அதிபர் கோர்பஷேவை புதிய பொருளாதாரத் தந்தையாகக் கொண்டாடி, அவர் பெயரைப் பெற்றுள்ள கோர்பஷெவ் விமான நிலையம் அதி நவீனமாக இருந்தது. ஆள்கடத்திகள் (walkalator) விமானத்தின் வெளியேறும் ஷூட்டிலிருந்தே தொடங்கின. கார்த்தியாயினியின் பெயர் வரவேற்புத் திரையில் தோன்றியது. “பேராசிரியர் கே.துரைசாமிக்கு நல்வரவு. நேராக வரவேற்பு அறை நான்குக்குச் செல்லவும்”. கார்த்தியாயினியின் குடும்பப் பெயர்தான் துரைசாமி.
வரவேற்பு அறை நான்கு ஹோட்டல் அறை போல வசதியாக இருந்தது. அங்கு காத்திருந்த வரவேற்பாளர் “டோப்ரொயீ உத்ரு” (“காலை வணக்கம்”) என வரவேற்றார். “மேடம், நாம் மெட்ரோ ரயிலில் இங்கிருந்தே பல்கலைக் கழக வளாகம் போகலாம். இதற்கிடையே நீங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள தனி ஓய்வறை இருக்கிறது. நாம் இங்கேயே காலைப் பசியாறல் செய்துவிடலாம். நமது மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜப்பான் ஹொக்கைடோ பல்கலைக்கழகப் பேராசிரியர் தனாகா ஷிகெரு இன்னொரு ஐந்து நிமிடங்களில் இங்கு வந்து சேருவார். அவரையும் கூட்டிக்கொண்டு போகலாம்” என்றார்.
ஓய்வறை சொகுசாக இருந்தது. வாஷ் பேசின் தங்கத்தில் செய்தது போல இருந்தது. அனைத்திலும் சென்சர்கள் இருந்தன. கழுவுவதற்குத் தண்ணீர் தேவையில்லை. ஒருவித ஜெட் காற்றே இருந்தது. முகத்தில் தடவினால் குளிர்ச்சியாக இருந்தது. அழுக்கையும் சோர்வையும் ஒத்தி எடுத்தது.
அறையின் திரைச் சீலைகள் பழைய ரஷ்யப் பேரரசின் அரண்மனைகளின் வெல்வெட் திரைகளை நினைவு படுத்தின. ரஷ்யா மீண்டும் பணம் கொழிக்கும் தேசமாகி விட்டது. அமரிக்காவின் செல்வாக்கு மங்கி இன்று சீனாவுக்கு அடுத்து ரஷ்யாவே பொருளாதாரத்தில் செழித்திருக்கிறது.
கார்த்தியாயினி சுத்தம் செய்து கொண்டு சாப்பிட வந்தபோது ஜப்பானியப் பேராசிரியர் அங்கே இருந்தார். உடல்வளைத்து “ஒஹாயோ கொசைமசு, ப்ரொபசோர் தொரைசாமி” என்று வணக்கம் செலுத்தினார். கார்த்தியாயினி “வணக்கம், ஷிகெரு சான்” என்றார். மலேசியாவில் பலதலைமுறைகளாக வாழ்ந்த குடும்பமாயினும் கார்த்தியாயினி தன் தமிழ்க் கலாசாரத்தைத் தக்க வைத்திருந்தார்.
மேற்கத்திய பாணியில் ஜூஸ், டோஸ்ட், கொழுப்புக் குறைந்த வெண்ணெய், பழங்கள் என எளிமையான காலைப் பசியாறல். சாப்பிட்டவாறே முகமன் பரிமாறிக் கொண்டார்கள். தங்கள் ஆய்வுத் துறைகள் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பேராசிரியர் ஷிகெரு, தனது கட்டுரை ஒரு ரஷ்ய உயிரியல் மற்றும் கணிதப் பேராசிரியரோடு சேர்ந்து எழுதப்பட்டது என்றார். ரஷ்யப் பேராசிரியர் 95 வயதுக்காரர் என்றும், சக்கர நாற்காலியில் கட்டுப்பட்டவர் என்றும் மாநாட்டின் நிகழ்வுகளில் வீட்டிலிருந்தவாறு முப்பரிமாண இணையத் தளத்தில் கலந்துகொள்வார் என்றும் கூறினார்.
*** *** ****
மெட்ரோ அலுங்காமல் சென்றது. 20 நிமிடப் பிரயாணம் என்றார்கள். வசதியான பெட்டியில் தனக்கு முன் அமர்ந்திருந்த ஷிகெருவை இன்னும் அறிந்து கொள்ள முயன்றார் கார்த்தியாயினி. “உங்கள் ஆராய்ச்சியின் பின்னணி என்ன, ஷிகெரு சான்?” என்று கேட்டார்.
“ஓ, நீங்கள் மாசாரு இமொட்டோவின் ஆய்வுகள் பற்றி அறிவீர்களா?” என்று கேட்டார்.
“ஓ யெஸ்! தண்ணீர் துகள்கள் மனிதரின் சொற்களினால் பாதிக்கப்படுகின்றன என்பதுதானே. தெரியும். ஒரு 40 ஆண்டுகளுக்கு முன் பிரபலமாக இருந்தது. ஆனால் அது ஒரு வர்த்தக மோசடி எனப் பின்னர் பேசப்பட்டதல்லவா?”
“ஆம். சில பேராசைக்கார வர்த்தகர்கள் அந்த ஆய்வைக் கவர்ந்து கொண்டு தண்ணீரோடு மனிதன் பேச முடியும் என்றும் தண்ணீருக்கு நோய்களை ஆற்றும் சக்தி இருக்கிறதென்றும் பொய் சொல்லி அந்த ஆய்வின் புனிதத்தைப் பாழாக்கினார்கள். அதன் பிறகு இமொட்டோ சான் மீடியாவுடன் பேசுவதில்லை. நான் அவரிடம் மாணவனாக இருந்து ஆய்வு செய்தேன். பல புதிய விஷயங்களை இருவரும் கண்டுபிடித்தோம்!”
“அவை என்ன?” என்பது போல் மேசையில் முழங்கையூன்றித் தாடையில் வைத்துக் கொண்டு முகத்தை முன்னிறுத்திப் பார்த்தார் கார்த்தியாயினி. ஷிகெரு மர்மமாகப் புன்னகைத்தார். “மாநாட்டில் கேட்டுக்கொள்ளுங்கள்!” என்றார்.

*** *** ***
முதல் நாள் மாநாடு பெரும் சமயச் சண்டையில் முடிந்தது. கடவுளை நம்பும் சமயத்தவர்களுக்கு முதல் அமர்வு ஒதுக்கப்பட்டது. பெரும்பாலோனோர் தங்கள் சமயக் கருத்துக்களை நிதானமாகவே முன் வைத்தார்கள். ஆனால் பேச்சாளார்களில் ஒருவர் “மனிதர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனையாகவே இந்த உலகத்தைக் கடவுள் அழிக்கவிருக்கிறார்” என்று சொன்னவுடன் பார்வையாளர் கூட்டத்திலிருந்து எழுந்த ஒருவர், “அப்படியானால் மிருகங்கள் என்ன பாவம் செய்தன?” என்று கத்தினார். “மிருகங்கள் கடவுளுக்கு ஒரு பொருட்டே அல்ல! அவை மனிதனுக்காகப் படைக்கப்பட்ட துணைக் கருவிகள். மனிதனின் பாவம் மட்டுமே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என்றவுடன் இன்னொருவர் எழுந்து “கொரில்லாக்களுக்கும் மனிதனுக்கும் இடையில் டிஎன்ஏயில் 97 சதவிகிதம் ஒற்றுமை இருப்பது பேச்சாளருக்கு விளங்குமா?” என்று கேட்டார். உடனே ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள்.
அடுத்த அமர்வு கடவுள் மறுப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அவர்கள் கடவுள் என்று ஒருவர் இல்லை என்றார்கள். இருந்திருந்தால் ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் கண்டுபிடித்துச் சொல்லியிருப்பார் என்றார்கள். நடப்பதெல்லாம் உலகத் தோற்றத்தின் பெருவெடிப்பு நேரத்தில் தீர்மானிக்கப்பட்டவை. அந்த விதிகளின்படிதான் நடக்கிறது என்றார்கள். கூட்டத்திலிருந்து எழுந்த ஒருவர் “உங்கள் ஹாக்கிங்ஸ் நிபுணருக்கு கடவுள் அளித்த தண்டனைதான் அவர் உயிரோடு பிணமாகிப் போயிருப்பது” என்றார். குபீரென்று பலர் எழுந்து கத்தினார்கள். அவர் இறந்து இருபதாண்டுகளுக்குப் பிறகு அந்த அற்புதமான அறிவுள்ள மனிதரை இப்படித் தூற்றுவது, கடவுளைத் தூற்றுவதை விடக் கேவலம் என்றார்கள். அமளி அடங்க 30 நிமிடம் ஆனது.
பிற்பகலிலும் மாலையிலும் இயற்பியலாளர்களும் வானவியலாளர்களும் பூமிக்கோளை நோக்கி வரும் எறிகல் பற்றிய அளவைகள் பற்றிப் பேசினார்கள். எல்லாம் டெக்னிக்கல் விஷயங்கள். அதிகம் யாரும் கேள்வி கேட்கவில்லை. அவர்களும் கவனமாகக் கடவுளைப் பற்றி ஒரு பிரச்சினையையும் எழுப்பவில்லை.
மறுநாள் காலையில் கார்த்தியாயினிக்கும் ஷிகேருவுக்கும் ஒரே அமர்வில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. தலைவராக இங்கிலாந்தைச் சேர்ந்த தத்துவ வல்லுநர் வில்லியம் பிளேக்ஹவுஸ் இருந்தார். அவரைக் கார்த்தியாயினிக்கு அறிமுகம் உண்டு. ஷிகேருவின் சக கட்டுரையாளர் பேராசிரியர் ஜி. கோப்பொசொவ் தோன்றிப் பேசுவதற்காக பின்னணியில் முப்பரிமாணத் திரை இருந்தது. ஷிகேரு சான் மேடையின் ஓரத்தில் ஒரு சிறிய கண்ணாடி நீர்த் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார்.
கார்த்தியாயினி முதலில் பேசினார். கட்டுரையை அனைவரும் மிகக் கவனத்துடன் கேட்பது போலத்தான் தோன்றியது. “ ‘பிரக்ஞை’ என்பது என்ன என்று முழுமையாக வரைமுறை செய்யப்படாததாகத்தான் இருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் அது இருக்கிறது. சில அபூர்வமான வேளைகளில் சில கட்டளைகள் வெளியிலிருந்து இந்தப் பிரக்ஞைக்குள் நுழைகின்றன. நிச்சயமாக இவை மூளையோ நரம்பு மண்டலமோ உற்பத்தி செய்யும் கட்டளைகள் அல்ல. சில வேளைகளில் இந்தக் கட்டளைகளைப் பெறும் மூளை இந்தக் கட்டளைகளை ஏற்காமல் எதிர்த்தும் போராடுகிறது. நம்பாமல் நிராகரிக்கவும் செய்கிறது. சில வேளைகளில் அது நியாயம் அல்ல என்று தெரிந்தாலும் அதனை ஏற்றுச் செய்கிறது. இப்படி ஒரு வெளி ஆற்றல் இருப்பது அநேகமாக உறுதியாகிவிட்டது. ஆனால் அதன் மூலம் என்ன என்று தெரியவில்லை” என்று கூறிவிட்டு சில கேஸ் ஸ்டடீஸையும் சில புள்ளிவிவரங்களையும் முப்பரிமாணத் திரையில் காட்டினார்.
கேள்வி நேரத்தின் போது, “இதில் என்ன சந்தேகம்? அந்த மூலம் என்பது கடவுள்தான். அதை ஏன் நீங்கள் சொல்ல மறுக்கிறீர்கள்?” என்று ஒருத்தர் கோபமாகக் கேட்டார்.
“சொல்ல வேண்டும் என்றுதான் நானும் முயல்கிறேன். ஆனால் இப்படி வரும் கட்டளைகள் பலரைக் குற்றச் செயல்கள் செய்யவும் தூண்டுகின்றன என்று காணும்போது கடவுள் மேல் அதைச் சுமத்த முடியவில்லை” என்றார் கார்த்தியாயினி.
“அதுதான் சைத்தான்!” என்று ஒரு முகம் காட்டாத குரல் கூவியது.
“இருக்கலாம். அப்படியானால் ஒன்றுக்கு மேற்பட்ட மூலங்கள் இருக்க வேண்டும். “Multple personality”யில் இப்படியும் இருக்கிறது. அப்படி உங்கள் கோணத்தில் பிரித்துப் பார்க்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களும் ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தான்களும் இருக்கக் கூடும். இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்றார். சிறிய சிரிப்பலை தோன்றி ஓய்ந்தது.
ஷிகேரு சானின் நேரம் வந்தபோது அவர் முதலில் பேராசிரியர் ஜி. கோப்பொசொவை உயிரியலிலும் கணிதத்திலும் மேதை என அறிமுகப் படுத்தினார். தம் வீட்டில் சக்கர நாற்காலிக்குள் போர்வைக்குள் அடங்கிப் போயிருந்த சுருங்கிப்போன உருவம் திரையில் “டோப்ரொயீ உத்ரு” என பலவீனமான குரலில் வணக்கம் தெரிவித்தது.
ஷிகெரு தமது குரு இமொட்டோ சானைப் பற்றியும் அவருடைய நீர்த் துகள் ஆய்வு பற்றியும் முதலில் பேசினார். அண்மையில் தாங்கள் செய்த கூட்டு ஆய்வில் தாங்கள் நினைத்ததை விட அற்புதமான செய்திகள் நீர்த் துகள்களில் உள்ளன என்பது தெரிய வந்ததாகக் கூறினார். அப்படி நிகழும் அற்புதங்களில் ஒன்று பேராசிரியர் கார்த்தியாயினி சொன்னதற்கு ஒப்ப இருக்கிறது என்று சொன்ன போது கார்த்தியாயினியின் விழிகள் பெரிதாகின.
“என்னவென்றால் நீர்த் துகள்கள் நாம் நினைப்பதற்கேற்ப வெவ்வேறு வடிவங்கள் கொள்கின்றன என மாசாரு இமொட்டோ ஏற்கனவே நிருபித்துள்ளார். இப்போது நீர்த் துகள்கள் மக்களுடன் பேசுகின்றன என்றும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். அதிலும் சென்ற சில ஆண்டுகளாக ஒரே செய்தியை அவை எல்லாருக்கும் சொல்லி வருகின்றன. அந்தச் செய்தி ஒரு வெளி மூலத்திலிருந்து வருகிறது.”
கூட்டம் சலசலத்தது.
ஷிகேரு சான் உதவியாளரிடம் சொல்லி நீர்த் தொட்டியை மேஜை மேல் வைக்கச் சொன்னார். வைத்த பின் கூட்டத்தினரைப் பார்த்து “இது பலமுறை சுத்திகரிக்கப்பட்ட நீர் மாசு இல்லாத நீர். இதன் அருகே வந்து அது சொல்லுகின்ற செய்தியைத் தெரிந்து கொள்ளலாம். முதலில் அவைத் தலைவர் வில்லியம் பிளேக்ஹவுஸ் இந்த நீர்த் தொட்டியின் அருகில் வந்து நின்று அது சொல்லும் செய்தியைப் படித்து அரங்கத்திற்குச் சொல்லக் கேட்டுக் கொள்கிறேன்.
பிளேக்ஹவுஸ் என்ன நிகழப் போகிறது என்று தெரியாமல் ஒரு தயக்கத்துடன் தொட்டிக்கு முன்னால் வந்தார். “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “ஒன்றும் செய்ய வேண்டாம். தண்ணீரை அதன் கண்ணாடித் தொட்டிக்குள் உற்றுப்பாருங்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ கூறுங்கள்” என்றார் ஷிகேரு.
பார்வையாளர்கள் குழப்பத்தோடு மேடையைப் பார்த்திருக்க, பிளேக்ஹவுஸ் புன்னகைத்தவாறு தொட்டியை உற்றுப் பார்த்தார். அவர் முகம் இறுக்கமானது. “ஓ மை கோட்!” என்றார். பின்னர் அரங்கத்தைப் பார்த்து “It is for your own good” என்னும் சொற்கள் தோன்றுகின்றன” என்றார்.
கூட்டம் சலசலத்தது. “பேராசிரியரே! நீங்கள் படித்த சொற்கள் என்ன மொழியில் இருந்தன?” என்று ஷிகேரு கேட்டார். “ஆங்கிலத்தில்தான்!” என்று உறுதியாகக் கூறினார் பிளேக்ஹவுஸ்.
“சரி. இப்போது பேராசிரியர் துரைசாமியை அழைக்கிறேன். அவரும் வந்து பார்க்கலாம்” என்றார் ஷிகேரு. ஒரு மாயாஜாலக்காரரால் மேடைக்கு அழைக்கப்பட்ட சிறுமி போல படபடப்புடன் எழுந்து நீர்த் தொட்டிக்கு அருகில் வந்தார் கார்த்தியாயினி. உற்றுப் பார்த்தார். ஆம். “It is for your own good” என்ற சொற்கள் தெரிந்தன. எழுத்துக்கள் நீரில் மிதந்து கொண்டிருப்பது போலக் கூடத் தோன்றியது.
ஒரு தந்திரம் என்றுதான் தோன்றியது. ஆனால் உண்மையில் கடவுளின் செய்தி என்றால் ஏன் ஆங்கிலத்தில் மட்டும் தோன்ற வேண்டும்? தமிழில்? இந்த எண்ணம் வந்தவுடன் அந்த எழுத்துக்கள் மெதுவாக மாறுவது போலத் தோன்றியது. ஆம். மாறின. “எல்லாம் உங்கள் நன்மைக்காகவே!” என்று தமிழில் தோன்றியது.
கார்த்தியாயினியின் ஆச்சரியம் அவரின் நம்பிக்கையின் எல்லைகளைத் தொட்டிருந்தது. அப்போ மலாய் மொழியிலும் தோன்றுமா என்று எண்ணினார். எழுத்துக்கள் மாறின. “Hanya untuk kebaikan kamu” எனத் தோன்றின.
“என்ன கண்டீர்கள் கார்த்தியாயினி?” என்று கேட்டார் ஷிகெரு.
“ஆச்சரியம்! ஆச்சரியம் ஷிகேரு சான்! ஆங்கிலத்தில் மட்டுமல்ல, என் தாய் மொழியிலும் எங்கள் தேசிய மொழியிலும் அதே செய்திதான் தோன்றுகிறது.
ஷிகேரு அவர்களை அமரச் சொல்லிவிட்டு கூட்டத்தில் இருந்த வெவ்வேறு மொழி பேசும் பத்துப் பேரை அழைத்துப் பார்க்கச் சொன்னார். அனைவருமே அந்தச் செய்தி தாங்கள் என்ணும் மொழியில் தோன்றுவதை உறுதிப்படுத்தினார்கள். மேலும் முண்டியடித்துக்கொண்டு வர முயன்றவர்களை ஷிகேரு கையமர்த்தி உட்காரச் சொன்னார். “இந்த அரங்கம் முடிவுற்றதும் இந்தத் தொட்டி வெளியில் வைக்கப்படும்; நீங்கள் அனைவரும் பார்க்கலாம்” என்றார்.
அமளி அடங்கியவுடன் அவைத் தலைவர் பிளேக்ஹவுஸ் ஷிகேருவைக் கேட்டார். “ஷிகேரு சான், ஏதோ குறியீட்டுச் செய்தி போல் ஒரு பகுதியை மட்டும் காட்டி அதை விளக்காமல் விடுகிறீர்களே! இந்தச் செய்தியின் பொருள் என்ன? இது ஒரு “கோட் (code)” என எடுத்துக்கொள்ளலாமா? அப்படியானால் முழுப் பொருள் என்ன?”
“அதை நான் விளக்குவதைவிட பேராசிரியர் ஜி. கோப்பொசொவ் சொன்னால் இன்னும் அதிகாரபூர்வமானதாக இருக்கும்” என்றார்.
கோப்பொசொவ் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசினார். சத்தம் அமுங்கிக் கேட்டது. ஒரு ஒலித் தொழில் நுணுக்கர் ஒலிவாங்கியைச் சரி செய்தார். அப்புறமும் ணவர் குரல் பலவீனமாகத்தான் இருந்தது. மிகக் கூர்ந்துதான் கேட்க வேண்டியிருந்தது. அதன் விளைவாக சபை மயான அமைதி பூண்டிருந்தது. அனைவரின் கண்களும் திரையைக் கவ்வியிருந்தன.
“சென்ற கால் நூற்றாண்டுக் காலமாக எனது இந்த ஆய்வு தொடர்கிறது. நேஷனல் ஜியாக்ரபிக் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படம் தயாரிக்க என் உதவியை அவர்கள் நாடிய போது என் ஆர்வம் இந்தத் திக்கில் தூண்டப்பட்டது. அது இப்போது அதிகம் பேசப்படும் விஷயம்தான். உலகத்தில் பிராணிகள் தொகை குறைந்து வருவது; அழிந்து வருவது. போர்னியோ காடுகளில் ஓராங் ஊத்தான் இனம் அழிந்துவிட்டது. ஆர்க்டிக் பெங்குயின்கள் அழிந்து போயின. பல பிராணி இனங்கள் இன்று மிருகக் காட்சி சாலைகளில் மட்டுமே காணக்கிடைக்கின்றன. உதாரணம் பிரபோசிஸ் குரங்கு.” திரையில் கால் நுற்றாண்டுப் புள்ளிவிவர வரைபடங்கள் கன்ணைப் பறிக்கும் வண்ணங்களில் தோன்றின.
கூட்டம் கொஞ்சமாக அமைதி குலைந்தது போல் தோன்றியது. தண்ணீர்த் துகளில் கடவுள் எழுதும் செய்தியை விளக்க வேண்டியவர் ஏன் எல்லோருக்கும் தெரிந்த பிராணிகளின் அழிவுக் கணக்கைப் பேசுகிறார்?
ஆனால் கிழட்டுப் பேராசிரியர் விடவில்லை. “ஆப்பிரிக்காவில் உள்ள மிருக இனங்களில் 85 விழுக்காடு கடந்த கால் நூற்றாண்டில் அழிந்திருக்கிறது. அரபு நாடுகளில் ஒட்டகங்களின் கருத்தரிப்பு விகிதம் 50 விழுக்காடு குறைந்து விட்டது.”
எல்லாம் கார்த்தியாயினிக்குத் தெரிந்த தகவல்கள். தன் டோபர்மேன் நாயும் நினைவுக்கு வந்தது. நீர்த் துகள் மர்மம் அறியும் நேரம் தள்ளிப் போவது அவருக்கும் எரிச்சலாக இருந்தது. பக்கத்தில் இருந்த பிளேக்ஹவுசை நிமிண்டினார். “தெரிந்த தகவல்தானே வில்லியம்! புதியதைச் சொல்லச் சொல்லுங்கள்” என்றார்.
பிளேக்ஹவுசும் பொறுமை இழந்திருந்ததால் ஒலிவாங்கியை எடுத்து அவரிடம் பேசினார். “பேராசிரியர் அவர்களே! இடையூறுக்கு மன்னிக்கவேண்டும். நீங்கள் சொல்லும் தகவல்கள் ஏற்கனவே நிறையப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கம் உங்களிடமிருந்து பெறக் கூடிய புதிய தகவல்களைச் சொல்லுங்கள். குறிப்பாக இந்த நீர்த் துகள் செய்திபற்றி!”
அரங்கம் கைதட்டியது. கோப்பொசொவ் தலையாட்டினார். “ஆமாம், ஆமாம். உங்களையெல்லாம் மாணவர்கள் என்று நினைத்துவிட்டேன். மன்னியுங்கள். இதோ இது முக்கியமான வரைபடம்.” வரைபடம் வண்ணத்தில் தோன்றியது. “மனித உற்பத்திச் செழுமை பற்றியது. கடந்த கால் நூற்றாண்டில் இதன் கடுமை கூடியுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் பிறப்பு விகிதம், உலக முழுமையிலும் இன்னும் குறையும். பூஜ்யத்துக்கு வரும்.”
இந்தச் செய்தி புதிதாக இருந்தது. பூஜ்யம் என்றால் ஒருவர் மடிய ஒருவர் பிறக்க பூமியின் மக்கள் தொகை முன்பின் நகராமல் நிற்கும்.
“இந்த உற்பத்திக் குறைவு இயற்கையாக நிகழ்கிறது. இதற்கு வெளிக் காரணங்கள் என்று ஒன்றும் இல்லை. இதையெல்லாம் வைத்து நான் ஒரு கணித மோடல் செய்திருக்கிறேன். இதோ பாருங்கள்!” கணினிப் பொத்தானைத் தட்ட இன்னொரு அழகிய வண்ண வரைபடம் வந்தது.
“இது சொல்லும் செய்தி, 2105 இல் உலகில் மொத்தப் பிராணியினங்களில் 90 சதவிகிதம் அழிந்துவிடும். புதிய பிறப்புக்கள் இருக்கா. 2110இல் மனிதர்கள் மொத்தமாக அழிந்துவிடுவார்கள்.”
அரங்கம் அதிர்ச்சியில் உறைந்திருந்தது. பேராசிரியரும் மௌனமாக தலை சாய்ந்து இருந்தார். கொஞ்சம் தூங்கிவிட்டார் போலத் தோன்றியது. அவருடைய வரைபடம் மட்டும் மரண ஓலையாக முப்பரிமாணத் திரையில் அசையாமல் நின்றது.
இரண்டு முழு நிமிடங்கள் கழிந்தன. அரங்கம் இருப்புக் கொள்ளாமல் சலசலக்க ஆரம்பித்தது. பிளேக்ஹவுஸ் தொண்டையைக் கனைத்தார். “பேராசிரியர்! இன்னும் ஏதாவது தொடரப் போகிறீர்களா?” என்று கேட்டார்.
கோப்பொசொவ் தூக்கத்திலிருந்து விழித்தவர் போல் காமராவை – அரங்கத்தை -முறைத்தார். “சொல்வதற்கில்லை. முடிந்தது. இந்தக் கடைசி வரை படத்திற்குக் ‘கடவுளின் கருணை’ எனத் தலைப்பிட்டிருக்கிறேன். அவ்வளவுதான்!”
அரங்கம் ‘ஓ’வென்று அயர்ந்திருந்தது. ஆனால் கார்த்தியாயினியை அந்தக் கடைசிச் சொற்றொடரின் முரண் தொந்திரவு படுத்தியது.
“பேராசிரியர் கோப்பொசொவ்! இது இந்த எறிகோள் இழைக்கும் கொடுமையை விடப் பெருங் கொடுமையாக இருக்கிறது. இது கடவுள் செயல் என்றால் இப்படி ஒரு கொடுமையான முடிவை ‘கடவுளின் கருணை’ என எப்படி உங்களால் சொல்ல முடிகிறது?”
“சகோதரி! முதலில் நானும் அதைக் கொடுமை என்றுதான் நினைத்தேன். ஆனால் ஜப்பானிலிருந்து இமொட்டோவும் ஷிகேருவும் கொண்டு வந்த செய்திதான் இந்தக் கருணையை எனக்குக் காட்டியது. எறிகல்லால் தாக்கப்பட்டு தீய்ந்து துடித்து அழிவதைக் காட்டிலும் அந்தத் துயர் வருமுன் பிறப்பையே வேரறுத்துவிடுவது கருணையல்லவா? அதன்பின் ஒரு எறிகோள் வந்து தாக்க ஒரு சூனிய உலகம்தான் காத்திருக்கும். அது இருந்தால் என்ன அழிந்தால் என்ன?”
ஷிகேரு எழுந்தார். “அதுதான் நீர்த் துகளின் செய்தி. ‘எல்லாம் உங்கள் நன்மைக்குத்தான்’’’.
“சொல்வது யார்?” என்று கேட்டார் கார்த்தியாயினி.
“கடவுளாகவும் இருக்கலாம்” என்றார் ஷிகெரு சான்.

(முடிந்தது)

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு