அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

அறிவன்எழுத்தாளர் சுஜாதாவின் மறைவின் போது நான் அமரர் சுஜாதா என ஒரு பதிவு போட்டிருந்தேன்.

பலரும் சுஜாதாவை நினைவு கூர்ந்து பதிவு போட்டிருந்தார்கள்.நான் அறிந்த வரை அவரின் சிறந்த விதயங்களாக நான் உணர்ந்தவற்றைப் பகிர்ந்திருந்தேன்.
அதற்கு எதிர்வினையாக நண்பர் சரவணன் பெ.நா.அப்புஸ்வாமி பற்றி குறிப்பிட்டு என்னை மறுதளித்திருந்தார்.

பொதுவாக மேலும் அறிதலுக்காக நான் அறிவுறுத்தப்பட்டால் அதை மகிழ்வுடனே எதிர்கொள்வேன்;அறிதலுக்கான வாய்ப்பாக அதைக் கருதுவேன்.

எனவே அது பற்றிய ஒரு சிந்தனை அடிமனதில் ஓடிக்கொண்டே இருந்தது.இந்த சூழலில் அப்புஸ்வாமி பற்றி மேலதிகத் தகவல்கள் படிக்கக் கிடைத்தன.

அப்புஸ்வாமி தகுதியால் ஒரு வழக்கறிஞர்;தமது 26’ம் வயதில் தன் உறவினர்,ஒரு பத்திரிக்கையாளர் அவரது பத்திரிகைக்கு ஒரு கட்டுரை எழுதப் பணித்த போது, ‘நான் தமிழை பள்ளியில் முறையாகப் படிக்கவில்லை;என் மனைவிக்கு ஒரு காதல் கடிதம் கூட எழுதியதில்லை,நான் எப்படித் தமிழில் எழுதுவேன்’ என மலைத்த அவர்,எழுதிக் குவித்தவை என்னென்ன தெரியுமா?

சுமார் 5000 ம் மேலான கட்டுரைகள்,
100 க்கும் மேலான புத்தகங்கள்
10000 வரிகளுக்கும் மேலான மொழிபெயர்ப்புகள்-இந்த மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குமான இருவழி மொழிபெயர்ப்புகள்.

26 வயது முதல் தமது 95 வயது வரை சுமார் 50 ஆண்டுக்கு மேல் எழுதியவர்;இறந்த அன்று கூட ஹிந்து பத்திரிகைக்கு ஒரு கட்டுரை(Bharat’s Vision of the Motherland)எழுதி தன் கையால் அஞ்சலில் அனுப்பிவிட்டு இறந்து போன அற்புத மனிதர்;அந்த கட்டுரை மறுநாள் ஹிந்து பதிப்பில் வெளிவந்திருக்கிறது !

இப்படிப்பட்ட மனிதரைப் பற்றி இன்று எத்தனை பேருக்குத் தெரியும் என எண்ணினால் வியப்பே ஏற்படும்.ஓரளவு பரந்த வாசிப்பு வழக்கம் நமக்கு இருக்கிறது என எண்ணிக் கொண்டிருந்த எனக்கு இதனால் வெட்கமேற்பட்டது உண்மை.

1891 ல் பெருங்குளம் நாராயணய்யருக்கும் அம்மாகுட்டி அம்மாவிற்கும் பிறந்த அப்புஸ்வாமி,சென்னை மாநிலக் கல்லூரியின் சட்டத் தேர்ச்சி மாணவர்.சென்னை உயர்நீதி மன்றத்தின் மேல்முறையீட்டு வழக்கறிஞராக-Appellate Side Advocate – சுமார் 50 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.

1900 ங்களில் அறிஞர் சிலர்,மேல்நாடுகளில் முகிழ்ந்து வரும் நவீன அறிவியல் சிந்தனைகள் தமிழரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்றெண்ணி சென்னையில் தமிழர் கல்விச் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.இந்த அமைப்பின் சார்பாக தமிழ் நேசன் என்ற பத்திரிகையும் தொடங்கப் பட்டிருக்கிறது.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியரான அ.மாதவையர்,அப்புஸ்வாமியின் சித்தப்பா!
அவர்தான் மேற்சொன்னவாறு அப்புஸ்வாமியை கட்டுரை எழுதச் சொன்னது…

அப்போது மேற்சொன்னவாறு பதிலளித்த அப்புஸ்வாமியிடம்,அவர் ‘உங்கள் வீட்டில் தமிழ்ப் புத்தகங்களும் பத்திரிகைகளும் நிறைய உண்டு.தமிழில் புலமை வாய்ந்த பலர் உனக்கு நண்பர்கள்,எனவே டபாய்க்காமல் எழுது,தேவையெனில் நான் சுருக்கிக் கொள்வேன் என தைரியம் அளிக்க ‘பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா?’ என்ற அந்தக் கட்டுரையுடன் எழுதத் தொடங்கினார் அப்புஸ்வாமி.

இவரின் கல்லூரிக்கால நண்பர்களின்-பிற்காலத் தமிழர்களின்-பட்டியல் நம்மைப் பொறாமைப்படவைக்கும் ஒன்று.கா.சுப்பிரமணியபிள்ளை,பி.க்ஷீ.ஆச்சார்யா,வையாபுரிப்பிள்ளை,க.அ.நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் உடன் படித்தவர்கள் என அவரே நினைவு கூர்கிறார்.
உ.வே.சா வுடனும் கல்லூரிக்காலத்திலேயே இவருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது.

இந்தக் கட்டுரை அச்சில் வந்தபின் அந்த மகிழ்வான அனுபவத்தை பிரபஞ்சத்தில் மனிதன் என்ற ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார்.

கிட்டத்திட்ட 5000 கட்டுரைகளுக்கும் மேல் அவரால் எழுத முடிந்த காரணம் அவரது நீண்ட நெடிய ஆயுள்,சுமாராக 26 வயதிலிந்து தமது 95 வயது(1986) வரை எழுத முடிந்த அவரது அயராத இயக்கத் தன்மை வியக்க வைக்கும் ஒன்று.

அவரின் அற்புத உலகம்,மின்சாரத்தின் கதை போன்ற நூல்களும்,சென்னை கிருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஜே.பி.மாணிக்கத்துடன் இணைந்து எழுதிய வானொலியும் ஒலிபரப்பும்,எக்ஸ்-ரே,அணுவின் கதை போன்ற நூல்களும் பல்கலைக் கழகங்களால் பாராட்டப் பட்ட சிறப்பைக் கொண்டவை.

இது மட்டுமின்றி,சிறுவர்களுக்கான புத்தகங்களில் மிகப் பரந்து இயங்கி இருக்கிறார் அப்புஸ்வாமி.பள்ளிச் சிறுவர்களுக்கான அவரது நூல்கள் சித்திர விஞ்ஞானம்,சித்திர வாசகம்,சித்திர கதைப்பாட்டு போன்ற புத்தகங்கள் அற்புதமானவை.தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் குழந்தை எழுத்தாளர் சங்கம் இரண்டாலும் பாராட்டுக் கேடயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் இவர் ஒருவரே என்று ஒரு குறிப்பு சொல்கிறது.

இவ்வளவு எழுதிக் குவித்த அப்புஸ்வாமி அதற்குரிய நியாயமான அங்கீகரிப்புகள் பெற்றாரா என்பது விவாதத்துக்குரிய ஒன்று.இதில் விநோதமான ஒரு விதயம் இதையும் அவர் உணர்ந்தே இருந்தார் என்பதும் இதில் பெரிய வருத்தங்கள் ஏதுமின்றி தன் கடன் எழுதிக் குவிப்பதே என்பது போல எழுதிக் கொண்டேயிருந்தார் என்பதும்தான்.

இன்னொரு சுட்டப் பட வேண்டிய விதயம் அவருடைய,அறிவியலுக்கான கலைச்சொல்லாக்க முயற்சியும்,பரவலாக தமிழில் கலைச்சொற்களை உபயோகித்ததும்.பின்வரும் ஒரு சிறிய பட்டியலைப் பாருங்கள்.

Atomic Fission – அணுப்பிளவு
Satellite – துணைக்கோள்
Electron – நுண்ணணு,மின்னணு
Invention – புத்தமைப்பு
Element – மூலகம்
Foundry – வார்ப்படச்சாலை(பொன்னியின் செல்வனில் கல்கியின் “நாணய வார்ப்படச்சாலை” நினைவுக்கு வருகிறதா?

Microscope – நுண்ணோக்கி
Radiation – கதிரியக்கம்
Elements – தனிமங்கள்
Rocket – உந்து கருவி
Organic Chemistry – அங்கக ரசாயணம்
Accelerator – துரிதகாரி
Pancreas – கணையம்

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது…..இதில் சில அவரே புனைந்ததும்,சில அவரால் மாறாது கையாளப் பட்டவையும்.
கக்குவான் இருமல் என்ற காரணியுடன் கூடிய பெயரை அந்த நோய்க்குச் சூட்டியவர் அவரே.
மொழியை அறிவை வளர்க்க உதவும் ஒரு காரணியாகப் பார்க்க வேண்டுமேயல்லாது,அன்னைத் தமிழ்,கன்னித் தமிழ் என்றெல்லாம் பட்டமளித்து,மொழியை வளரவிடாத போக்கைச் சாடியவர்.
“மக்கள் அறிவியலைக் கற்று,அறிவியல் மனநிலையைப் பெற்று வாழ்வார்களேயானால் அவர்கள் இயல்பாகவே பகுத்தறியும் தன்மை பெறுவார்கள்,எனவே அறிவியல் சாதாரண மக்களிடம் எளிதாகச் சென்றடையும் வழி தமிழில் அறிவியல் அறிவு பரவும் வண்ணம் நிறைய எழுதப்பட வேண்டும்”என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு அதற்காகவே அறிவியல் கட்டுரைகள் நிறைய எழுதிக் குவித்தவர்.

1965 லேயே ரேடார் பற்றி
“ரேடார் அறிவிக்கும் நட்சத்திரங்கள்” என்ற கட்டுரையில் “ரேடார் கருவிகள் மின்காந்த அலைகளை வானில் வீசுகின்றன,அவை பிறபொருள்களில் மோதித் திரும்பி வருவதைத் திருத்தமாக ஏற்கின்றன,எனவே அவை வானில் பறக்கும் விமானங்களையும்,நீரினுள் இருக்கும் கப்பல்களையும் கண்ணுக்கு எட்டாத் தொலைவிலும்,இரவிலும் கூட கண்டுபிடிக்க துணை செய்கின்றன”
என எளிமையாக எழுதிய அதே நேரத்தில்,
“அறிவியலில் பொய்க்கும் ஏமாற்றத்திற்கும் சிறிதும் இடம் இல்லை;அறிவியலாளனுக்குப் புல்லும்,புழுவும்,மனிதனும் உயர்வு தாழ்வு இல்லாதவை;இதுவே விஞ்ஞான மனநிலை எனப்படுவது;விஞ்ஞானத்தால் கிடைக்கும் கருவிகளை விட இந்த விஞ்ஞான மனநிலையை அடைவதே பெரியது,மகத்தானது”
என அடர்ந்தும் எழுதியவர்.

அறிவியல் மட்டுமல்லாது மொழிபெயர்ப்பில் இலக்கியம் பற்றியும் எழுதி இருக்கிறார்;
நாடாகொன்றோ; காடாகொன்றோ;
அவலா கொன்றோ; மிசையாகொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை;வாழிய நிலனே ! (புறம்-187,ஔவையார்)
என்ற பாடலின்

“O Land!
You may be a flourishing kingdom
Or a wild jungle:
You may be a hollow depression,
Or a high table-land:
These matter not
Where ever the men are good
There you are good:
So, long may you live
O Land”
என்ற அழகான மொழிபெயர்ப்பு,அந்த அறிவியல் எழுத்தாளனுக்குள்ளிருந்த கவிஞனுக்கும்,ரசிகனுக்கும் சான்று.

அவரது மயிலை சித்திரக்குளக்கரை வீட்டில் அவருடன் அளவளாவ வரும் நண்பர்கள் பட்டியலைப் பாருங்கள்
டி.கே.சி
ராஜாஜி
கல்கி
பி.க்ஷீ
எஸ்.வையாபுரிப்பிள்ளை
டி.எல்.வெங்கட்ராமய்யர்
வாசன்
ஏ.என்.சிவராமன்
கி.வா.ஜ
ரா.பி.சேதுப்பிள்ளை…
எனப் பட்டியல் நீளுகிறது.
அவருடைய “தமிழ்த்” தளத்திறகுச் இதுவே சான்று.

அறிவியல் தமிழை சாதாரண மக்களிடம் எடுத்துச் சென்றதில் சுஜாதாவுக்கும் முன்னோடியாகச் செயல்பட்டிருக்கும் ஒருவரைப் பற்றி,அறியக் கூடும் வாய்ப்பாக,எனக்குள் தேடலை விதைத்த அந்த நண்பருக்கு என் நன்றிகள் !!!!!!

சில சுவையான பிற்சேர்க்கைகள்:

1.சென்னையிலேயே பிறந்து வளர்ந்த அப்புஸ்வாமி 80 வயதுக்கும் மேல் குடும்ப சூழல் காரணமாக நெல்லைக்குச் சென்று தங்க நேர்ந்திருக்கிறது.அதை இயல்பாக எடுத்துக்கொண்டு வாழ்வையும்,எழுத்துப் பணியையும் தொடர்ந்திருக்கிறார்.

2.1960′ களில் தனது ஒரே மகன் மருத்துவ தொழிலை முன்னிட்டு இங்கிலாந்து செல்ல முடிவெடுத்த போது,வருந்தாமல் “உன் எதிர்காலம் உன் முடிவால் நன்றாக இருக்கும் என நம்பினால் தாராளமாய் போய் வா” என்று வாழ்த்தி அனுப்பியவர் ! அந்த மகன் அவருக்கு முன்னாலேயே,இவரது 80’ஆவது வயதில் மறைந்த போது கலங்காமல் வாழ்ந்தவர்.

3.கலைமகள் பத்திரிகை தன் நண்பரால் தொடங்கப் பட்டபோது அதன் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்;அதிலேயே பல கட்டுரைகளும் எழுதினார்.

4.1986 ‘ல் தன்னுடைய நெருங்கிய நண்பரும்,பிரபல வழக்கறிஞருமான கே.வி.கிருஷ்ணசாமியின் நூற்றாண்டு விழாவுக்கு கலந்து கொள்ள சென்னை சென்றவர்,விழா ஒத்தி வைக்கப் பட்டதால் நெல்லை திரும்ப இரு வாரங்கள் ஆகும் சூழல் வந்த போது,அந்த இரு வாரங்களை வீணாக்காமல் பயனுள்ள வகையில் கழிக்க, நெல்லைக்குத் தகவல் அனுப்பி ஆங்கில மகாகவி டென்னிசனின் Complete works of Tennyson புத்தகத்தை படிக்க வரவழைத்திருக்கிறார்.

ஆனால்,வாழ்வின் விநோதம்,புத்தகம் வந்த இரு நாட்களில் மறைந்து விட்டார் !

அறிவன்,

சிங்கப்பூர்.

www.sangappalagai.blogspot.com

en.madal@yahoo.com

Series Navigation

அறிவன்

அறிவன்