ஜெயமோகன்
மெளனச்சாமியார் மடத்தின் ஓய்வறையில்தான் டாக்டர் வினோத் பட்டாச்சாரியாவை சந்தித்தேன்.அவர் என் நேர் எதிர் அறை. கதவைத் திறந்தால் அவரது கதவு . ஒருமுறை திறந்தபோது இருவரும் முகத்தோடுமுகம் சந்தித்து திகைத்து நின்றோம். ‘ஹாய் ‘ என்றார். அது உயர்குடிகள் ‘யாரடா நீ புழுவே ? ‘ என்று கேட்கும் முறை என நான் அறிவேன். நான் தொழில்முறைப் பத்திரிகையாளன்.
‘என் பெயர் கணேஷ் குமார். பத்திரிகையாளன். ‘ என்றேன்.
‘நான் பத்திரிகைகளை வெறுக்கிறேன் ‘ என்று கதவை மூடப்போனார்.
‘இங்கே பாருங்கள், புரஃபசர்… ‘என்று நான் தொடங்கினேன்.
‘நான் புரஃபசர் இல்லை ‘ என்று சாத்திவிட்டார்.
பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் தங்களை தேவர்குலமாக எண்ணிக் கொண்டிருப்பதை நான் பலமுறைக் கண்டதுண்டு. சிவனாகவும் விஷ்ணுவாகவும் தங்களை எண்ணிக்கொண்டிருக்கும் சினிமாக்காரர்களை கண்ட எனக்கு அது பெரிதாகப்படவில்லை.
ஆனால் அவரே இரவு என் கதவைத் தட்டினார் ‘ ஹாய் ‘என்றார் . இம்முறை பதற்றமாக.
‘ஹலோ ‘
‘உள்ளே வரலாமா ? ‘
‘கண்டிப்பாக. வாருங்கள்.. ‘
வந்ததும் சோபாவில் அமர்ந்து முகத்தை வழித்துவிட்டுக் கொண்டார். தலைமயிரை நீவினார்.
‘நீங்கள் புரஃபசர்…. ? ‘ என்றேன்
‘நான் புரஃபசர் இல்லை. என் பெயர் டாக்டர் வினோத் பட்டாச்சாரியா… ‘
‘ஆமாம். உங்கள் பேட்டியை ஹிந்துவில் படித்திருக்கிறேன்…. பொறியியலில்… ‘
‘ஹிந்து என்னைப்பற்றி ஏதும் வெளியிட்டதில்லை ‘ என்றார் அவர் ‘ மேலும் என் துறை நரம்பியல். ‘
‘மன்னிக்கவும். எனக்கு கொஞ்சம் ஞாபகமறதி… ‘
‘பரவாயில்லை. உன்னிடம் மது ஏதாவது இருக்குமா ? ‘
‘ஆசிரம வளாகத்தில் அனுமதி இல்லை. நான் ரகசியமாக ஒரு புட்டி ரம் வைத்திருக்கிறேன். உங்களுக்கு ரம் பிடிக்குமா ? ‘
‘பிடிக்காது. ஆனால் இப்போது எனக்கு ஏதாவது மது வேண்டும்…கொண்டா ‘
‘நானே ஒரு துணைக்காக காத்துக் கொண்டிருந்தேன். கதவை சாத்தலாமல்லவா ? நல்லவேளை உங்கள் அறை நேர் எதிரே இருக்கிறது. தள்ளாடி எங்காவது விழாமல் நேராக போய் படுத்துவிடலாம் ‘ நான் புட்டியை எடுத்து வைத்தேன். புட்டி இப்போது மிக ஆபத்தான பொருள். பிரதமர் ராம்சிங் அறிவியல் சாதங்களின் உதவியுடன் அவசரநிலை பிறப்பித்து ஆட்சி செய்யும் நாட்டில் சுவர்களுக்குக் கூட வேவு பார்க்கும் கண்கள் முளைத்துவிட்டன என்ற வழக்கமான பாட்டு எங்கும் ஒலித்தது. முதலில் சிலநாள் எல்லாம் சரியாகத்தான் இருந்தது . ரயில்கள் சரியான நேரத்துக்கு ஓடின. வேலைநிஉத்தங்கள் மறியல்கள் கூக்குரல்கள் ஏதுமில்லை. பத்திரிக்கைகள் முழுக்க வளர்ச்சித்திட்டங்கள். நாடு நாலுகால்பாய்ச்சலில் எதிர்காலம் நோக்கி செல்வதாகச் சொல்லப்பட்டதை பெரும்பாலானவர்கள் நம்பினர். ஆனால் மெல்ல மெல்ல ஒரு அமைதியின்மை தட்டுபட ஆரம்பித்தது. தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமலானார்கள். பத்திரிகைகள் அரசாங்கத் துண்டுபிரசுரங்கள் போல ஆயின. எங்கள் பத்திரிகையே அரசியலையும் சினிமாவையும் துறந்து ஆன்மீகத்தை நோக்கித் திரும்பியது. மெளனச்சாமியாரை நான் பேட்டி எடுக்க முனைந்ததே இதன் மூலம்தான்.
நான் குளிர்சாதனப்பெட்டியை திறந்து தண்ணீரை எடுப்பதற்குள் டாக்டர் புட்டியைத் திறந்து அண்ணாந்து வாயில் கொட்டிக் கொண்டார்.
‘அய்யோ! ‘ என்று பதறினேன்.
டாக்டர் ஆவிமிகுந்த ஏப்பம் விட்டு உடலை ஈரநாய் போல உலுக்கிக் கொண்டார்.
‘இருங்கள் இருங்கள், ஊறுகாய் தருகிறேன்… ‘ என்று எடுத்து வைத்தேன்.
நக்கியபடி முகம் சுளித்து ‘காரம் ‘ என்றார்.
‘என்ன டாக்டர் இது ? இதெல்லாம் கொஞ்சம் அதிகம். ரம் அப்படியே சாராயம் .. ‘
டாக்டர் என்னை பொருட்படுத்தாமல் சோபாவில் மல்லாந்து படுத்தார். மெல்ல உடல் வேர்த்து, தளர்ந்து ,படிந்தார்.
‘ ‘ராம்சிங் பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றமுறை சரியாந்துதான் என்று நினைக்கிறீர்களா ? ‘ ‘ என்றேன்
‘ ‘எனக்கு அரசியல் ஆர்வமில்லை ‘ ‘ என்றார் சாக்டர்
‘ ‘ஆமாமாம்.ஆர்வமில்லாமிலிருப்பது பாதுகாப்பும் கூட ‘ ‘என்றேன். ‘டாக்டர் நீங்கள் மனநோய் ஆய்வுதானே செய்கிறீர்கள் ? ‘
‘மனநோயாளிகளையெல்லாம் மடையன்கள்தான் ஆய்வுசெய்வார்கள் ‘என்றார் டாக்டர் . ‘நான் மூளை ஆராய்ச்சியாளன் ‘
‘நான் அறிந்ததெல்லாம் பொரித்த ஆட்டுமூளை ‘
சிரிக்காமல் ஏப்பம் விட்டார். இன்னொரு ஏப்பம் சோடாவாயு மாதிரி குபுக்கென வந்தது. அவர் குதிரை மீது ஆரோகணித்துவிட்டது தெரிந்தது.
இது என்னவகையான குடிமுறை என எனக்குப் புரியவில்லை. சியர்ஸ் இல்லை , பேச்சு இல்லை. குறைந்தபட்சம் நாலுவாய் உளறல்கூட இல்லை.
‘நான் உடனே சாமியாரைச் சந்திக்கவேண்டும்… ‘ என்றார் வாயில் வழிந்த நீரை துடைத்தபடி.
‘அது எளிய விஷயமல்ல. ஒரு நாளைக்கு முந்நூறு பேர்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். ‘
‘எனக்கு அதைப்பற்றி தெரியாது . எத்தனை மடையர்கள் வேண்டுமானாலும் அவரை சந்திக்கட்டும். நாளை நான் சந்திக்கவேண்டும் …. ‘
மனிதர்கள் என்ற சொல்லைத்தான் மடையர்கள் என்று அவர் குறிப்பிடுகிறார் என அப்போதுதான் புரிந்தது . ‘ ‘ இங்கே என் நண்பருக்கு தெரிந்த சாமியார் ஒருவர் இருக்கிறார். அவர் வழியாக முயற்சி செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்… ‘என்றேன். ‘எங்கள் ஞாயிறுமலரில் இந்த மெளனச்சாமியாரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதப்போகிறோம்… ‘
‘இவரை நான் சந்திக்கவேண்டும். மிக மிக முக்கியமான பிரச்சினை ‘ டாக்டர் சட்டென்று அதிக உயிர் பெற்றார். ‘அவசரம். மிக மிக அவசரம்! ‘
‘ஏன் ? ‘
‘நான் மிகப்பெரிய ஒரு சிக்கலில் இருக்கிறேன் ‘
‘என்ன சிக்கல் ? ‘
டாக்டர் எழுந்து அமர்ந்து ‘அறிவுத்திறன் என்றால் என்ன ? ‘ என்றார்.
‘இதென்ன கேள்வி ? ‘ என்றேன். உண்மையில் அந்தரங்கமாக நான் பத்திரிகையாளர்களுக்குமட்டுமே உள்ள ஒரு குணாதிசயம் அது என்று எண்ணிவந்தேன்.
‘சொல்லு. அப்போதுதான் நான் விளக்க முடியும்.. ‘
‘தகவல்களை நினைவில் அடுக்கும் திறன், அவற்றை தொகுத்தும் பகுத்தும் அறியும் திறன், முடிவுகளை உருவாக்கும் திறன், அந்த தளத்திலிருந்து மேலும் முன்னகரும் கற்பனைத்திறன் ஆகியவற்றின் ஒட்டுமொத்தம் ‘ என்றேன்
டாக்டர் பிரமித்துவிட்டார் . ‘பத்திரிகையாளர்கள் புத்தகமெல்லாம் படிப்பார்கள் என்று நான் எண்ணியதே இல்லை ‘ என்றார்.
‘நாங்கள் செய்திக் காகிதத்தைத்தானே தினமும் சாப்பிடுகிறோம் ‘ என்றேன்
டாக்டர் கவனமில்லாமல் ‘நல்ல விஷயம் ‘ என்றார். ‘அறிவுத்திறன் என்பது மூளையின் இயக்கத்திறன்தான். நீ சொன்ன நான்கும்தான் மூளையின் வேலைகளில் முக்கியமானவை . மூளை என்பது ஒரு நரம்பு முடிச்சு. நரம்புகள் மூலம் அங்கே தகவல்கள் சென்று சேர்கின்றன. அவை அங்கே உடல்மின்சாரத்தாலும் ரசாயனமாற்றமாகவும் பதிவு செய்யப்படுகின்றன. நியூரான்கள் என்பவை மூளையின் அடிப்படை தகவல்பதிவு அலகுகள். உடல்மின்சாரம் அத்தகவல்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி சிந்தனையை நிகழ்த்துகிறது.உண்மையில் நம் மூளையின் மிகச்சிறியபகுதியைக்கூட நாம் பயன்படுத்தவில்லை என்பது உனக்குத்தெரியுமா ? ‘
‘ஆம். ரிச்சர்ட் ரீஸ்டாக் என்பவரின் நூலில் படித்தேன். ‘மூளைக்கு தனிமனம் உண்டு ‘ என்ற நூல். மாமேதைகூட மூளையின் சாத்தியங்களில் கால்பகுதியைத்தான் பயன்படுத்துகிறார் என்று… ‘
‘அவர் வெகுஜன எழுத்தாளர்… ‘
நான் சீண்டப்பட்டேன் . ‘ ஆலிவர் சாக்ஸ் புத்தகம் ஒன்றையும் படித்திருக்கிரேன். நான்கு நரம்பு நோயாளிகளின் பிரச்சினைஅறிக்கைகள்.. ‘
‘அவர் ஆராய்ச்சியாளர்தான். ..நீ பெயர்களை அடுக்கவேண்டாம். ‘என்றார் டாக்டர் ஏப்பமாக ‘ மூளை ஓர் அபாரமான இயந்திரம். முதனிலை கணிப்பொறிகள்கூட அதன் முன் தூசு. ஒரு முகத்தை நீ அடையாளம் காணும்போது உன்மூளையின் எத்தனை லட்சம் பதிவுகள் ஒரு கணத்தில் பரிசீலிக்கப்படுகின்றன என்று தெரியுமா ?நம் மூளை ராஷ்ட்ரபதி பவன் மாதிரி. நாம் அதன் வராந்தாக்களில் வாழ்கிறோம். சிலர் மட்டும் ஒரு அறையை கூடுதலாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ‘
‘ஐன்ஸ்டான்கூடவா ? ‘
‘அவர் பிரபஞ்சவியல் மேதை. ஆனால் உயிரியல் அறியாதவர். அவரால் தஸ்தயேவ்ஸ்கி போல ஒரு நாவலை எழுதிவிடமுடியாது ‘
‘ஆம். அது மனித சாத்தியமே இல்லை ‘ என்றேன்
‘சாத்தியம்தான் ‘ என்றார் டாக்டர் ‘முப்பது வருடங்களாக நான் மூளையின் திறனை அதிகரிக்கும் மருந்துக்கள் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறேன் ‘
‘அப்படி அதிகரிக்க முடியுமா என்ன ? ‘
‘கண்டிப்பாக. இப்போதே பல்வேறு மூளைத்தூண்டிகள் [ Cognitive Enhancers ]கிடைக்கின்றன. ஹைடர்ஜைன், பிராஸ்டைம், அனிராசெட்டேம், மினாப்ரிய்ன்*1 எல்லாம் அதிக நினைவாற்றலுக்காகவும் அதிக நேரம் கவனம் நிற்பதற்காகவும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இவை எப்படி இயங்குகின்றன ? உடலோ மூளையோ அபாயகட்டங்களில் திடாரென அதிக உக்கிரத்துடன் செயல்பட்டாகவேண்டிய தேவை உள்ளது . அப்போது அத்திறனை உருவாக்கும் உயிர் ரசாயனங்கள் நம் உடலில் ஊறுகின்றன. அப்போது தேவையான பகுதிகள் அல்லாமல் பிற பகுதிகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அதிகரத்தமும் மின்னூட்டமும் செலுத்தப்படுகிறது…. ‘
‘ஆம் ‘
‘அதைத்தான் என்மருந்து முழுமையாக செய்கிறது. அந்த ரசாயநங்களை செயற்கையாக செலுத்துகிறேன். 1980ல் ரிச்சர்ட் வுர்ட்மான்*2 என்பவர் டைரோசினை[tyrosine ] ஏதாவது தூண்டியுடன் சேர்த்து மூளைக்கு செலுத்தினால் மூளையில் மின்னூட்டத்தை நிகழ்த்தும் டோபாமின், நோர்பைன்ப்ரைன், எபின்ப்ரைன்*3 போன்ற பொருள்கள் அதிக அளவில் உருவாகின்றன என்று கண்டுபிடித்தார். என் ஆய்வு பலமடங்கு செறிவுபடுத்தபட்ட டைரோசினும் ஒரு சீன மூலிகையும் சேர்ந்தது… மன்னித்துக்கொள் . இதைவிட நான் உனக்கு விளக்க முடியாது… ‘
‘ மா ஹ்வாங்*4 தானே அந்த மூலிகை ? ‘
‘நீ அபாயகரமான பத்திரிகையாளன். ஆனால் மூளைக்குள் ஓர் ஐஸோடோப்பும் வைக்கவேண்டும். உபரி மின்சாரத்துக்காக ‘
‘பரவாயில்லை, உங்கள் மருந்தை பரிசோதனை செய்தீர்களா ? ‘
‘என் மருந்து மூளையின் மின்னூட்டத்தை பல மடங்கு தீவிரப்படுத்துகிறது. புலன்களின் பதிவுகள் இருபது மடங்கு அதிகரிக்கும். பதிவுகளுக்கு இடையேயான தொடர்புகள் இருபதின் மடங்குகளில் அதிகரித்தபடி செல்லும். மூளையின் எல்லா சாத்தியங்களும் பயன்படுத்தப்படும். அந்தமூளை தூங்கவேண்டியதில்லை. அதற்கு மறதியும் இருக்காது ‘
‘அதற்கு ஆழ்மனம், நனவிலி [ unconscious] உண்டா ? ‘
‘மறதி இல்லையேல் எப்படி நனவிலி உருவாகும் ? மறந்த விஷயங்களின் பெருந்தொகுப்புதானே அது ? ‘ டாக்டர் தன் சுருதிக்கு வந்துவிட்டிருந்தார். ‘இதோபார் . நீ பஸ்ஸில் எண்பது கிலோமீட்டர் வேகத்தில் போகிறாய். சாலையோரம் ஒரு பிணம் கிடப்பதை ஒரு கணம் மட்டும் பார்க்கிறாய் .முப்பது வருடம் கழிந்து ஒரு கனவில் அக்காட்சி வருகிறது. அந்தபிணத்தின் ஒவ்வொரு தகவலும் , அதனருகே கிடந்த ரூபாய் நோட்டில் இருந்த படம் கூட, தெரிகிறது . எப்படி ? மூளையில அவை உள்ளன. அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு உன் அன்றாட வாழ்க்கையை நீ நடத்தமுடியாது .ஆகவே உன் மனம் அவற்றை அடியில் தள்ளுகிறது. ஆழ்மனம் உருவாகிறது. ஆனால் என் மருந்து மூளையின் சிந்தனைத்திறனை இருபதின் மடங்குகளில் பல்லாயிரம் தடவை அதிகரிப்பதனால் மேல்மனமே நனவிலி போல உக்கிரமான விரிவுடன் இருக்கும். அதாவ்து அந்தமனிதன் எப்போதுமே நனவிலிமனம் கொண்டிருப்பான்.உக்கிரமான கனவிலோ உச்சகட்ட தியான நிலையிலோ இருப்பதைப்போல! ‘
எனக்கு பீதி ஏற்பட்டது. ‘டாக்டர் நீங்கள் இந்தமருந்தை இன்னும் யாரிடமும் சோதனை செய்து பார்க்கவில்லை அல்லவா ? ‘
‘செய்தேனே ‘ என்று என்னை அதிரவைத்தார்.
‘யாருக்கு ? ‘ எனக்கு குடல் குலுங்கியது ‘உங்களுக்கேயா ? ‘
‘எனக்குச் செய்தால் அதன் விளைவுகளை நான் எப்படி பரிசோதிப்பது ? என் கூர்க்கா ஜங்பகதூருக்கு ‘
‘டாக்டர் இது ஐசக் அசிமோவின் ‘ஃப்ளவர்ஸ் ஃபார் அல்ஜீர்னான் ‘ கதை போல இருக்கிறது ‘
‘யார் அந்த முட்டாள் ? ‘
‘ஒன்றுமில்லை. ஜங் பகதூர் என்ன ஆனார் ? கல்கத்தா நூலகத்தை முழுக்க விழுங்கிவிட்டாரா ? ‘
‘இல்லை.அவனை நான் ஒரு காட்டுக்குள் கொண்டு போய் தங்கவைத்தேன். இயற்கையின் நடுவே. எல்லா அறிவையும் அவனே நேரடியாக அறியமுடியும்.. ‘ என்றார் டாக்டர் ‘அவன் அறிவுத்திறனை என்னால் ஒரு கட்டத்துக்குமேல் சோதனைசெய்யவே முடியவில்லை. மொழித்திறன் உச்சத்துக்கு போனபோது அவனால் பறவைகளுடன் பேசமுடிந்தது. ஆயிரம் பூச்சிகளின் சேர்ந்த ஒலியை பிரித்துக்கேட்டு தனித்தனியாக புரிந்துகொள்ள முடிந்தது… ‘ டாக்டர். ‘ விஸ்கி மீதி இருக்கிறதா ‘ என்றார்
‘விஸ்கி இல்லை . நீங்கள் சாப்பிட்டது ரம். ஆனால் அது மிச்சம் இல்லை ‘என்றேன்
‘அவன் காட்டின் பல்லாயிரம்கோடி தகவல்களை ஒரே சமயம் உள்வாங்கி காட்டின் அளவுக்கே முழுமையுடன் அவற்றை தன்னுள் நிரப்புவதைக் கண்டேன்.நான் கேட்ட கேள்விகளுக்கான அவனது பதில்களில் இன்னும் ஆயிரம் வருடம் நம் அறிவுத்துறைகள் யோசிக்கவேண்டிய விஷயங்கள் இருந்தன ‘
விபரீதம் நோக்கி கதை போவதை உள்ளுணர்வு சொன்னது . இன்னொரு பிராங்கன்ஸ்டான். அறிவியல் திறந்துவிட்ட புதுப் பூதம்.
‘அவனை ஒரு முழு மனிதனாக ஆக்க நான் முயன்றேன்.அவனது மூளையின் எல்லா பகுதிகளும் முழுமையாக செயல்படச் செய்தேன். உனக்குத்தெரியும் இது ஒரு மாபெரும் மானுடக்கனவு. மனிதனுக்கு இயற்கை போட்ட எல்லா எல்லைகளையும் தாண்டும் ஒரு அதிமானுடனுக்காக எப்போதுமே மானுட இனம் கனவு கண்டு வருகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி அந்த திசை நோக்கி அவனை இட்டுச்செல்கிறது என்று சொல்கிறார்கள். சாக்ரட்டாஸ் முதல் நீட்சே வரை , வியாசன் முதல் அரவிந்தர் வரை அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள்… ‘
‘டாக்டர் இயற்கைக்கு இப்படி சவால்விடலாமா ? ‘
‘மனிதனின் பரிணாமமே இயற்கைக்கு விடப்பட்ட நிரந்தரச் சவால்தானே ? ‘ என்றார் டாக்டர் ‘ ஆதிமனிதன் எப்போது முதுகை நிமிர்த்தி எழுந்து நின்றானோ அப்போதே இயற்கையை எதிர்த்து போராட ஆரம்பித்துவிடான். மனிதக் கலாச்சாரம் என்பதே இயற்கையை எதிர்ப்பதுதான். அதிமனிதன் இயற்கையை முழுமையாக வென்றவன் . ‘
‘ஜங் பகதூர் இப்போது எங்கே ? ‘
டாக்டர் வெகுநேரம் பேசாமலிருந்தார். பிறகு ‘அவன் தப்பித்துப்போய்விட்டான் ‘ என்றார்.
‘பிராங்கன்ஸ்டான் ! ‘என்றேன்
‘அவன்தான் இந்த மெளனச்சாமியார் ‘ என்றார் டாக்டர்.
நான் பல கணங்கள் மனமில்லாமல் அமர்ந்திருந்தேன்
‘நேற்றுத்தான் இவரைப்பற்றிய ஒருகட்டுரையைப் படித்தேன். படத்தையும் பார்த்தேன் ‘ என்றார் டாக்டர்
‘இவரது மூளை இயங்குவதாகவே தெரியவில்லையே. இவர் ஒரு மந்தபுத்தி ஆசாமி என்கிறார்கள். சிலர் இவரை அவதாரபுருஷர் என்று சொல்லி பணம் பண்ணுகிறார்கள். எங்கள் இதழின் கட்டுரையே இந்தக் கோணத்தில்தான் ‘
‘மூளை தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டிருக்கலாம். மூளையின் ஏதாவது ஒரு பகுதி முழுமையடையாமல் இருக்கும்வரைத்தானே அது செயல்படவேண்டும் ? சிந்தனை என்பதே அலைகள்தானே ? முழுக்க நிரம்பிய பாத்திரத்துக்குள் ஏது அலைகள் ? ‘
‘முழுமனிதன்! ‘ என்றேன் . ‘அதாவது அவனுக்கு மனித இயல்பே இல்லை ‘
‘ஆம் ‘ என்றார் டாக்டர்.
அதிமனிதன் அதிகாரமே உருவானவன் என்றார் நீட்சே, ஞானமே உருவானவன் என்றார் அரவிந்தர். இதோ அவன் வெண்டைக்காய் போல இருக்கிறான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மறுநாள் அனுமதி கிடைத்துவிட்டது. தெரிந்த ஆள் உதவினார். பெரிய கூடத்தில் காத்திருந்தவர்களை இருபதிருபது பேராக உள்ளே அனுப்பினார்கள். உள்ளே என்பது உண்மையில் வெளியே. அங்கே ஒரு பெரிய தோட்டம். அல்லது குட்டிக் காடு . பாறைமீது ஒரு மனிதர் கோவணம் மட்டும் அணிந்து பேசாமல் அமர்ந்திருந்தார். முகத்தில் புன்னகைக்கான சதையமைப்பு இல்லை.ஆனால் புன்னகைப்பதுபோலிருந்தது.பக்கத்தில் சில மயில்கள் மேய்ந்தன.
அவர் அருகே போனதுமே என் சந்தேகங்கள் இல்லாமலாயின. நான் ஒன்றுமே யோசிக்கவில்லை என்பதை மறுவாசல் வழியாக வெளிவந்ததும் அறிந்தேன். மிக நெகிழ்ந்திருந்தேன். கண்ணீர் வருமளவுக்கு. என்ன நடந்தது ?
ரமண மகரிஷியை சந்தித்தது பற்றி பால் பிரண்டன் எழுதியது நினைவுக்கு வந்தது. ஒரு மனிதன் சும்மா உடகார்ந்திருக்கிறான். அவனை பார்த்தவர்கள் பரவசம் அடைகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள், ஆழமான மனநகர்வு கொள்கிறார்கள். ஏன் என அவர்களுக்கு தெரிவதுமில்லை.
‘நீங்கள் என்ன நினைத்தீர்கள் ?என்றேன் டாக்டரிடம்
‘ஓம்! அது பூரணம். இதுவும் பூரணம் . பூரணத்திலுருந்து பூரணம் பிறக்கிறது. பூரணத்திலிருந்து பூரணம் பிறந்த பின்பும் பூரணமே எஞ்சி நிற்கிறது!- என்ற ரிக்வேத வரி ‘ என்றார் டாக்டர் ‘நீ ? ‘
‘ஒருமெல்லிய அதிர்ச்சி. பிறகு ஒரு பரவசம் ‘
‘ஏன் தெரியுமா ? ‘
‘ஏன் ? ‘
‘அவர்மீது அணில்கள் ஏறிச்சென்றன , அதனால்தான் ‘
‘ஆம்! ‘ என்றேன் வியப்புடன்.
‘அவர் அங்கே இருப்பதை எந்தப் பறவையும் பொருட்படுத்தவில்லை. ஒரு மனிதர் மரம்போல, பாறைபோல, அந்த சூழலின் ஒரு பகுதியாக இருந்தார் . மனம் என்ற அலை இல்லாத மனிதன். உன்னை பரவசப்படுத்தியது அதுதான். இயற்கைக்காட்சி ஒன்றைக் கண்டு நீ அடையும் பரவசம் போன்றதே அதுவும்.இயற்கையைப் பார்க்கும்போது அதை நீ பிரித்தறியவில்லைதான். ஆனால் ஓயாத அலைகளினாலான உன் மனம் அதை அறிந்துவிட்டது. கடல் தன் கரையை கண்டுகொள்வதுபோல ‘ டாக்டர் சொன்னார் ‘ உனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் வருகிறேன் ‘
‘ஏதோ பிரச்சினை என்றீர்கள் ? ‘ என்றுகேட்டேன்.
‘ஆமாம் .அதன் விடைகிடைத்து விட்டது ‘
‘என்ன விடை ? ‘
‘இயற்கை ஒரு மாபெரும் சமன்பாடு. எல்லா முரண்பாடுகளையும் எல்லா மீறல்களையும் அது இடைவிடாது சமன் செய்தபடியே இருக்கிறது. அதைமீறி எந்த சக்தியும் இருக்க முடியாது. இயற்கை அதை அழித்துவிடும். இந்த மனிதரின் முன் என் மனம் பணிந்தது. இவர் ஓர் விதிவிலக்குத்தான். ஆனால் நாம் அனைவருக்குள்ளும் நம்மை இந்த நிலை நோக்கி இழுக்கும் சக்தியாக இயற்கை இருக்கிறது .இவர்முன் நிற்கும்போது அதை நான் அடையாளம் கண்டேன். ஆம், இயற்கை அவனை ஒரு போதும் விடாது ‘
‘யாரை ? ‘
‘ராம் சிங்கை. அவர் இவரது தம்பி. இவருக்குப் பிறகு அவனை பரிசோதனைக்கு ஆளாக்கினேன். இவரைப்போலன்றி அவனில் ஒரு மையத்தை மட்டும் உக்கிரப்படுத்தினேன் ‘
‘டாக்டர்! ‘என்றேன் ‘ எந்த மையம் ? ‘ ‘
‘மூளையின் முகப்பு. தொகுத்துக் கொள்ளும் பகுதி , அதாவது அதிகாரம். தன் முனைப்பு. அதன் விளைவான குரூரம்… ‘ என்றார் டாக்டர்.
****
குறிப்புகள்
====
1. Hydergine, Piracetam ,Aniracetam, .Minaprine.
2. Richard Wurtman .
3. Dopamine, Norepinephrine,Epinephrine
4. Ma-huang .
- மாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு
- வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா
- கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘
- நீங்க வெட்கப் படுவீங்களா ?
- புத்தர்களும் சித்தர்களும்
- சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை
- ஆதலினால் கவிதை செய்வீர். . .
- பேட்டி
- மக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை
- பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
- ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…
- மெய்மையின் மயக்கம்-29
- மரபுகளை மதிக்கும் விருது
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை
- புத்தர்களும் சித்தர்களும்
- இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II
- பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1
- பாரதியும் கடலும்
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!
- ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்
- சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு
- சான் ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நாடகவிழா – டிசம்பர் 11 , 2004
- அடியும் அணைப்பும்
- மோகனம் 1 மோகனம் 2
- நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49
- பகையே ஆயினும்….
- பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘
- இப்படித்தான்….
- காதல் கடிதம்
- பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘
- ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)
- புனிதமானது
- பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- கவிக்கட்டு 39-கனவுதானடி
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்
- அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்
- அம்மா
- பெயரில் என்ன இருக்கிறது ?
- படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)
- காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்
- சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005
- சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)
- உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்
- சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!
- நீங்களுமா கலைஞரே ?
- ‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று!,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று !!
- மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்
- கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?