அருள்வாக்கு

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

பெருந்தேவி


இலக்கின்றி உலாவச் சென்ற
ஒரு நான்காம்தரக் காதலனின்
காதோரம்
கிளி கொஞ்சிச் சென்றது.
காலநேரம் பாராத வனிதைகள்
உலாவிக்கொண்டிருந்த
நாட்களின் அவனது
ஒளி நிறைந்த அறையின்
விஸ்தாரமான கண்ணாடியின்
கடுஞ்சொற்களை
புரியும்படி
மீண்டும் கூறியிருக்கலாம் கிளி.
அல்லது
காய்ச்சலடித்த
பின்னொரு நாள்
தூசிபோர்த்துக் கிடந்த
ஆடியின் பரப்பில்
அவன் விரல்
சோம்பேறி ஓட்டம் ஓட
சட்டென்று
மின்னத் தெரிந்ததில்
அவன் பேரழகனே
என்றும்
தெரிவித்திருக்கலாம்.
இல்லாவிட்டாலும்தானென்ன?
கிளி அவனைக்
கொஞ்சித் தான் சென்றது.
பின்னர் அவன்
முதல்தரக் காதலன் ஆனதையும்
நானறிவேன்.


sperundevi@yahoo.com

Series Navigation

பெருந்தேவி

பெருந்தேவி