அருண் கொலட்கரின் ‘ஜெஜூரி ‘ கவிதைகள்

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

(மொழியாக்கம்) இரா.முருகன்


பஸ்

ஜெஜூரிக்கு மலையேறிப்
போகிற வழிமுழுக்க
மாநிலப் போக்குவரத்து பஸ்ஸில்
ஜன்னலெல்லாம் பொத்தான் இட்டு
இறுக்க மூடிய தார்ச்சீலைத் திரைகள்.

குளிர்ந்த காற்றில் திரை
உங்கள் முழங்கையில்
படபடத்தபடி வருகிறது.

கடந்து போகிற சாலையைப் பார்க்கிறீர்கள்.
வெளியே விடிந்து கொண்டிருக்கிறதா என்று
பஸ் உள்ளே இருந்து வெளியே கசியும்
சிறிது வெளிச்சத்தில் தேடுகிறீர்கள்.

ஒரு வயசனின் மூக்குக் கண்ணாடியில்
பிளவுபட்டுப் பிரதிபலிக்கும்
உங்கள் முகம் தவிரப்
பார்க்க எதுவும் இல்லை.

அவன் புருவ நடுவே
நாமத்துக்கு அப்பால்
ஏதோ இலக்கு நோக்கி
நீங்கள் முன்னே நகர்ந்தபடி
இருக்கிறீர்கள்.

வெளியே ஓசைப்படாமல்
விடிகிறது.
பஸ் ஜன்னல் தார்ச்சீலையில்
துவாரம் வழியே சூரிய கிரணம்
வயசனின் கண்ணாடியைத்
துளைக்கிறது.

அறுத்துப் போட்ட
சூரிய கிரணம் ஒன்று
பஸ் ஓட்டுனர் நெற்றியில்
மெல்ல அமர்கிறது.
வண்டி ஒரு திருப்பத்தில்.

குலுங்கிச் சவாரி செய்து முடித்து
பஸ்ஸை விட்டு வெளிவந்து
பிளவு பட்ட முகத்தோடு நீங்கள்
வயசனின் தலைக்குள்
இறங்கவில்லை.

****

தாழ்ந்த கூரையோடு ஒரு கோவில்
—-

சாமிகளை இருட்டில் வைத்திருக்கிறது
உயரம் குறைந்த கோவில்.
பூசாரியிடம் ஒரு தீப்பெட்டியை நீட்டுகிறீர்கள்.
ஒருத்தர் ஒருத்தராகச் சாமிகள்
வெளிச்சத்துக்கு வருகிறார்கள்.

வேடிக்கை பார்க்கும் சுவாரசியத்தோடு
பஞ்சலோக விக்ரகம்.
புன்சிரிக்கும் கருங்கல் சிலை.
ஆச்சரியமே அடையாத சாமிகள்.

நெருப்புக் குச்சி எரியும் சில வினாடி
அசைவு தொடங்கி இறக்கிறது.
தொலைந்த நாட்டிய முத்திரைகள்
ஒவ்வொன்றாக எழும்பி
மறுபடித் தொலைகின்றன.

அது என்ன சாமி ?
நீங்கள் கேட்கிறீர்கள்.

எட்டுக் கையம்மா.
பூசாரி சொல்கிறார்.
அணையப் போகிற நெருப்புக்குச்சி
நம்பாமல் இருமுகிறது.

உங்களுக்கு எண்ணத் தெரியுமே.
பதினெட்டுக் கையில்லே இருக்கு ?
நீங்கள் ஆட்சேபம் தெரிவிக்கிறீர்கள்.

ஆமா. ஆனாலும் அது
எட்டுக்கையம்மாதான்.
பூசாரி சொல்கிறார்.

வெளியே வருகிறீர்கள். வெய்யில்.
ஒரு சார்மினார் பற்ற வைக்கிறீர்கள்.
இருபது அடி ஆமை சிற்பத்தின் முதுகில்
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

****8

கிழவி
—-

அய்யா, உங்களை
லாடக் கோவிலுக்குக்
கூட்டிப் போறேன்.

உங்கள் கையைப்
பிடித்து இழுத்தபடி
கூடவே வருகிறாள்
கிழவி.

அவளுக்கு ஐம்பது காசு வேணும்.

நீங்கள் லாடக் கோவிலை
ஏற்கனவே பார்த்தாச்சு.
தள்ளாடித் தள்ளாடி
உங்கள் கையை
இறுகப் பற்றிக் கொண்டு
கூடவே அவள்.
கிழவிகளைத்தான் தெரியுமே,
அட்டை மாதிரி ஒட்டிக் கொள்வார்கள்.

நீங்கள் திரும்பி நின்று அவளைத்
தீர்மானத்தோடு பார்க்கிறீர்கள்.
இந்தக் கூத்தை முடிவுக்குக்
கொண்டு வரவேண்டியதுதான்.

அப்போ அவள் சொல்றாள்,
இந்த உருப்படாத மலையிலே
என்னை மாதிரி
வயசான ஒரு பொம்பளை
வேறே என்னதான்
செய்ய முடியும் ?

குண்டு துளைத்தது போல
குழிந்த அவள் கண் வழியே
வானத்தைப் பார்க்கிறீர்கள்.

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அவள் கண்களைச் சுற்றி எழுந்த விரிசல்கள்
அவளைக் கடந்து பரவுகின்றன.

குன்றுகளில் விரிசல்
கோவில்களில் விரிசல்.
கண்ணாடித் தட்டு நொறுங்கியதுபோல்
வானம் சுற்றிலும் உதிர்ந்து விழ,
சலனமே இல்லாமல்
கிழவி நிற்கிறாள்.

அவள் கையில்
சில்லறை போல்
நீங்கள்
சுருங்கித்தான் போகிறீர்கள்.

****
சுரண்டல்
—-

சாமி எது
கல் எது ?
பிரிக்கும் கோடு இருந்தால்
ஜெஜூரியில் அது மெலிசு.
அடுத்ததற்கு அடுத்த கல் எல்லாம்
இங்கே சாமி, இல்லே சாமிக்கு மச்சான்.

சாமி தவிர இங்கே
சாகுபடி கிடையாது.
ஆண்டு முழுக்க
நாள் முழுக்க
தரிசிலிருந்தும்
கருங்கல் பாறையிலிருந்தும்
சாமிதான் அறுவடையாகிறார் இங்கே.

படுக்கையறை அளவு பெரிய
அந்தக் கல்பாளம்
சாமி சாபத்தாலே கல்லாக மாறின
அவர் பெண்டாட்டி.
கல்பாளம் நடுவிலே பிளவு
சாமி ஒரு தடவை
அவளைக் கோபத்திலே
பட்டாக் கத்தி எடுத்து வெட்டிய தடம்.

ஏதாவது கல்லை லேசாச் சுரண்டுங்க.
ஒரு கதை வரும்.

****

கோவில் எலி
—-

திரிசூலத்தின் நீண்ட நடுத்தண்டில்
சுற்றிய வாலைத் தளர்த்தியபடி
கருப்பு ரத்தக் கட்டிபோல
இறங்கி வருகிறது கோவில் எலி.

வீரச்சாமியின் தடந்தோளில்
அமர்ந்தபடிக்கு அவசரமாகப் பார்க்க
விக்கிரகத்தின் புனிதத் தசை
அதிர்ந்து அசைகிறது.

சாமியின் கனல் விழிகளை,
முகத்தில் குங்குமக் கவசத்தை
ஒரு நோட்டம் விட்டுத் திரும்ப,
காணோம் அதை.

கருங்கல் மேற்கூரையில் பதித்த சங்கிலியில்
வளைந்து சறுக்கி இறங்கும் எலி
கண் சிமிட்டுகிறது.
தீப ஒளி நக்கும்
உலோக இணப்புகளோடு
பிரகாசிக்கும் விழிகள்.

தாழ இறங்கி
பெரிய காண்டாமணியின்
விளிம்புக்கு அப்பால்
கம்பீரமாகப் பார்க்க,
மண்டியிட்ட படிக்கு
சிவலிங்கத்தின் தலையில்
பஞ்சாமிருதம் பூசும்
கல்யாணப் பெண்ணின்
கைநிறைத்த கண்ணாடி வளையலில்
கசியும் பச்சை வெளிச்சம்.

பூசாரியின் நரைத்த
ஒருவாரமாக மழிக்காத தாடிக்குள்
கீற்றாகப் புன்னகையையும்
பார்க்கிற கோவில் எலி
கர்ப்பக் கிரகத்தில்
கோவில் முரசுக்குப் பின்
மறைந்ததுதான் தாமதம்,
கோவில் மணி
முழங்க ஆரம்பிக்கிறது.

****

பூசாரி மகன்
—-

இதோ இருக்குதே
இந்த அஞ்சு மலையும்
சாமி சண்டை போட்டுச்
சாகடிச்ச அஞ்சு ராட்சசன்.

பூசாரி மகன் சொல்கிறான்.
சின்னப் பையன்.
உங்களோடு வழிகாட்டியாக வருகிறான்.
பள்ளிக் கூடம் விடுமுறை அவனுக்கு.

நம்பறியாடா தம்பி
அந்தக் கதையை எல்லாம் ?

நீங்கள் கேட்கிறீர்கள்.
பதில் வரவில்லை.
தலையைக் குலுக்கியபடி
சங்கடத்தோடு கண் தாழ்த்தி
அப்புறம் தூரத்தில் எங்கேயோ
அவன் பார்வை நீள்கிறது.

வெய்யிலில் காயப்போட்ட
தரிசு நடுவே
வாடிய புல் திட்டில்
கண்சிமிட்டும் நேரம்
ஓர் அசைவு.

அங்கே பாருங்க.
பட்டாம்பூச்சி.
அதோ அங்கே.

****

பட்டாம்பூச்சி
—-

அதுக்குப் பின்னால்
கதையேதும் இல்லை.
வினாடி போலப்
பிளவு பட்டிருக்கிறது அது.
தானே ஒரு நிலையாகத்
திறந்து மூடுகிறது.

அதுக்கு வருங்காலம் இல்லை.
இறந்த எந்தக் காலத்தோடும்
அது குத்திவைக்கப் படவில்லை.
நிகழ்காலத்தின் சிலேடை அது.

அது ஒரு குட்டி வண்ணத்துப் பூச்சி.
மஞ்சள் நிறம்.
கேடுகெட்ட இந்த மலை எல்லாம்
அதன் இறகுக்குக் கீழே.

ஒரு துளி மஞ்சள்.
மூடும் முன் திறக்கிறது
திறக்கும் முன் மூ

எங்கே அது ?

அருண் கொலட்கர் – ஜெஜூரி தொகுப்பு – மொழியாக்கம் இரா.முருகன் – அக்டோபர் ’04

Series Navigation