அம்பேத்கரின் மதம் குறித்த சிந்தனைகள்

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

கற்பக விநாயகம்


‘ஹரிஜனங்கள் என்ற காரணத்திற்காக ஹரிஜனங்கள் மீது கொடுமைகள் இழைக்கப்படுகிறபொழுது அவர்கள் ஹிந்து சமயத்திற்குள்ளேயிருந்துதான் போராட வேண்டும் ‘ என்று அம்பேத்கர் சொன்னதாக, அம்பேத்கரைத் திரிக்கும் வேலையை அன்றே மலர் மன்னன் துக்ளக் பத்திரிக்கைக் கட்டுரையில் செய்திருக்கிறார். அம்பேத்கர் எப்போது இப்படிப் பேசினார் என்பதை நினைவுபடுத்தினால் நல்லது.

அம்பேத்கர் கூறுகிறார் ‘உஙகளைப் பொறுத்த வரையில் இவ்வுலகில் நல்லதோர் வாழ்க்கையைப் பெறுவதற்காகவும் உங்களுடைய சமய உணர்வுகளை நிறைவு செய்வதற்காகவும் மதமாற்றம் உங்களுக்கு வேண்டியதாய் இருக்கிறது. உங்கள் வாழ்க்கை நலன்களைப் பெறுவதற்காக நீங்கள் மதம் மாறுவதை முட்டாள் தனமாகப் பழித்துக் கூறுகிறவர்களின் கருத்துக்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் ‘

‘இறந்த பின் கிடைக்கப் போவதாகக் கூறுகின்ற – மேலுலக வாழ்க்கையைப் பற்றிப் பேசுகின்ற மதத்தால் நமக்கு என்ன பயன் ?

ஒரு பணக்காரர் வேண்டுமானால் அவருடைய ஓய்வு நேரத்தில் மேலுலகச் சிந்தனையில் தோய்ந்து மகிழ முடியும். இவ்வுலகில் மேல்தட்டில் இருப்பவர்களும், செல்வ வளம் பெற்றவர்களும் செத்தபின் கிடைக்கப் போகும் வானுலக வாழ்வை நினைத்துக் காலம் கழிக்க முடியும். ஆனால் உங்களுடைய மானத்தை, செல்வத்தை, உணவை, வாழிடத்தை உங்களிடமிருந்து பறித்த இந்து மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும் ? ‘

‘நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மதம் மனிதனுக்காகவே; மனிதன் மதத்திற்காக இருப்பவன் அல்ல. உங்கள் செயல்திறனைப் பெருக்கி அதை ஒன்று திரட்டி இவ்வுலகில் நீங்கள் வெற்றியடைய வேண்டுமானால் நீங்கள் மதத்தை மாற்றிக் கொள்ளுங்கள் ‘.

இத்தனை தெளிவாக நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி அண்ணல் அம்பேத்கர் சொல்லி இருக்க, இம்மாதிரியாக திரிப்பு வேலை செய்வதெல்லாம் எடுபடாது என்பதை நினைவில் கொள்வது நல்லது.

அதே கட்டுரையில் புத்தமதம் ஹிந்து சமயத்தில் இருந்து கிளைத்தது எனச்சொல்கிறார்.

பிராமணீயத்திலிருந்து வேறுபட்ட மதங்களான புத்த ஜைன மதங்கள் சிராமணீயம் என்று அழைக்கப்பட்டன. பிராமணர் X சிராமணர் முறையே பாம்பு X கீரி ஆவர் என்று பதஞ்சலி முனிவரே குறிப்பிட்டு உள்ளார். சிராமண மதங்கள் நிறுவனங்களாய் வளர்ந்தவை. அவை பிராமணீயத்தை எதிர்த்து நின்றவை ஆகும். எவ்வாறு பெளத்தம் இந்து மதத்தில் இருந்து கிளைத்தது என்பதை விளக்க முடியுமா ?

****

காசுக்காக மதம் மாறுகிறான், பால் பவுடருக்காக மதம் மாறுகிறான் என்றெல்லாம் இம்மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல் குறித்து:

‘சத்யமேவ ஜெயதே ‘ எனும் உயர்ந்த ஆன்மீகத் தத்துவம் அச்சடிக்கப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு மதத்தை மாற்றிக் கொள்வதை நாம் ஏன் ‘ஆன்மீகச் செயலாக ‘க் கருதக் கூடாது ?

நேர்மையாக உழைத்து வாழும் தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் ஆன்மீகக் கடைத்தேற்றம் கிடைக்கும் என்று நம்பி அவர்கள் இஸ்லாமுக்கோ கிறித்துவத்துக்கோ மாறவில்லை. இவ்வுலக வாழ்வில் தங்களைச் சமமான மனிதனாகப் பாவிக்கும் மதத்திற்கு அவர்கள் மாற விரும்புகிறார்கள்.

****

பிரிட்டிஷ்காரன் காலம் வரை ‘இந்துக்கள் அல்லாதோர் ‘ என்று ஆதிக்க சாதி இந்துக்களாலேயே கருதப்பட்டு வந்த தலித் மக்கள் ‘சுதந்திர ‘ இந்திய அரசின் சட்டத்தின் மூலம் 1947ல் ‘இந்துக்கள் ‘ ஆக்கப்பட்டனரே. அந்த வகையில் கோடிக்கணக்கான மக்களை அவர்களுக்கே தெரியாமல் ஒரே நாளில் மதம் மாற்றிய மிகப்பெரிய நடவடிக்கை (மோசடி எனலாமா ?) உலகத்திலேயே இதுதான்.

****

தீண்டாமைக் கொடுமை என்பது இந்து மதத்தில் இல்லை என்பது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் செயல். இந்துக்களின் ஆன்மீக வழிகாட்டியாய் வணங்கப்பட்ட மறைந்த காஞ்சி சங்கராச்சாரியாரே ‘ எல்லோருடனும் தொட்டுப் பழகக்கூடாது. சாப்பிடக் கூடாது. திருமணம் செய்யக்கூடாது. தன் சாதியில்தான் திருமணம் செய்ய வேண்டும் எனும் சொரணை இருக்கணும். பறையனைக் கோவிலுக்குள் விடக் கூடாது. தீண்டாமை ஷேமகரமானது ‘ என்றெல்லாம் ‘தெய்வத்தின் குரலாய் ‘ ஒலித்திருக்கின்றார்.

ஆனால் அம்பேத்கரோ ‘சாதியைக் காப்பாற்றுவதில் பெரும்பங்கு வகிப்பது அக மண முறையே. (தத்தம் சாதிக்குள் திருமணம் செய்து வருவதே சாதியின் இருப்பிற்குக் காரணம்). சாதியைக் காக்கும் இம்மணமுறையை மீற வேண்டும் ‘ என்றிருக்கிறார். நாங்கள் யார் சொல்வதைக் கேட்பது ?

****

தீண்டாமைக் கொடுமை ஒழிந்து விட்டால் மதம் மாறுவது பெருமளவில் ஒழிந்துவிடும். இக்கொடுமையை வலியுறுத்தும் மனுஸ்மிருதி முதலான சாஸ்திரங்கள், புராணங்களை அம்பேத்கர், பெரியார் வழியில் ஒழித்து விட்டால்,மதம் மாறுவதை நிறுத்தி விடலாம்.

(ராமாயணத்தில் சூத்திரனான சம்புகன் யாகம் செய்ததற்காக -அவனுக்கு மனுதர்மப்படி அவ்வுரிமை இல்லை-அவன் தலையை வெட்டிக் கொன்றவன் ராமன் என்ற கதையின் மூலம் வர்ணாசிரமம் நிலை நிறுத்தப்படுவதைக் கவனிக்க.)

‘இந்துக்களிடையே பேதமில்லை. எல்லோரும் சாதியை மறுத்துத் திருமணம் செய்யுங்கள் ‘ எனும் பிரச்சாரத்தைச் செய்யத் தொடங்கலாம்.

இதற்கெல்லாம் உடன்பட மாட்டார்கள். இம்மாதிரியான நபர்களிடம் தலித்கள் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்று

அண்ணல் அம்பேத்கர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் ‘இவர்கள் நாவிலே ராமனையும் கைகளிலே கூர் வாளையும் வைத்திருப்பார்கள். யோகிகளைப் போன்று பேசுவார்கள். ஆனால் கொலைகாரர்களாக நடந்து கொள்வார்கள். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பார்கள். ஆனால் விலங்கினிலும் கேவலமாய் மனிதனை நடத்துவார்கள். இவர்களுடன் சேராதீர்கள். இவர்கள் மிகக் கொடிய வஞ்சனையாளர்கள். எறும்புக்கு சர்க்கரை உணவிடுவார்கள். ஆனால் இங்குள்ள மனிதர்கள் குடிப்பதற்கு – நீரெடுக்கத் தடை விதிப்பார்கள். இவர்களுடன் தொடர்பு கொள்ளாதீர்கள் ‘ என்று.

****

சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் ‘தகுதி உள்ள பார்ப்பனர் அல்லாதோரும் அர்ச்சகர் ஆகலாம் ‘ என்று குறிப்பிட்டிருந்தது. உடனே, இந்து தர்மத்தைப் பரப்பி வருகின்ற ‘விஜய பாரதம் ‘ பத்திரிக்கை எழுதிய தலையங்கம் ‘எதுவும் அதன் அதன் இடத்தில் இருக்க வேண்டும். பணிப் பகிர்வின் அடிப்படையும் இதுதான் ‘ என்று சொன்னது.

2002ல் சங்கராச்சாரியார் ஜெயா அரசின் ‘மத மாற்றத் தடைச் சட்டத்தை ‘ ஆதரித்து மெரீனாவில் ஒரு கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தின் முடிவில் ஒரு நிருபர் கேட்டார் ‘ஒரு தலித்திற்கு வேதம் சொல்லிக் கொடுப்பீர்களா ? ‘.

நம் ஆன்மீகத் தலைவரின் பதில் ‘யாருக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்! ‘.

19ம் நூற்றாண்டில் பெருமளவில் திருவாங்கூரில் சூத்திர, பஞ்சமர் மத்தியில் மதம் மாற்றம் நடந்தபொழுதில் நம்பூதிரிகளோ, நாயர்களோ கவலையே பட்டதில்லை. அவ்வாறு மதம் மாறிய பின்னரும் பறையன், புலையன், சாணான் ஆகியோர் பழையபடி அடிமைகளாகவே நடந்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. சீர்திருத்தவாதியான அய்யன்காளி, இம்மத மாற்றத்தைத் தடுக்க புலையருக்கு நல்ல பள்ளிக்கூடங்களைக் கட்டிக் கைதூக்கிட திருவாங்கூர் ராஜா உதவிட வேண்டுமென்று கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் அந்த இந்து ராஜாவால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.

****

வெளி நாட்டு டாலரினை வாங்கிக் கொண்டு மதம் மாறுகிறார்களாம் தலித்கள். டாலருக்காக மயிலாப்பூர், மாம்பலம் வாசிகள் தேசியத்தையே மாற்றிக்கொள்கிறார்களே. இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சென்று அத்தேசங்களின் பிரஜை ஆனவர்களின் புள்ளி விவரக்கணக்கைப் பார்த்தால் தெரியும். 90 சதமானத்திற்கும் மேலே அவ்வாறு தேசத்தை மாற்றிக்கொள்பவர்கள் வைதீகர்களாகவே இருக்கின்றனரே!. ஆனால் ஏனைய இந்துக்கள் அல்லாதோரிடமும், முஸ்லிம், கிறிஸ்தவர்களிடமும் இவ்விதப்போக்கு மிக மிகக் குறைவே.

அண்ணா மேம்பாலத்துக்குக் கீழே அதிகாலைப் பனியில் நிற்கும் அவர்களிடம் சென்று நம் பாரத தேசத்தின் மேன்மைகளைப் பற்றிப் பேசி, ஆட்கொள்ளலாமே ?

ஆனால் மதம் மாறிக்கொள்ளும் தலித்கள் இந்த தேசத்திலேதான் இருக்கிறார்கள். எங்கும் ஓடிப் போய் விடவில்லை.

****

தொலைபேசி, மின்சாரம், துறைமுகம், எண்ணெய் வயல், சுரங்கங்கள், தாமிரபரணி ஆறு எனப் ‘பாரத மாதா ‘வையே வந்த விலைக்குக் காட்டிக் கொடுத்தவர்கள் ஆறாண்டு காலம் ஆட்சி செய்த ‘இந்து ‘க் காவலர்கள்தான். மதம் மாறிய கிறிஸ்தவர்கள் அல்லர்.

இவற்றை விற்பதற்கென்றே தனி ஒரு அமைச்சரை (அருண் ஷோரி) வைத்திருந்தார்கள். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அதைத் திசை திருப்ப, ‘எல்லைக்கோட்டைப் பார் ‘ என்று ராணுவத்தை அங்கு கொண்டு போய் நிறுத்தி தேசிய வெறியைக் கிளறி மக்கள் பட்டினியை மறக்கடிக்க செய்தார்கள்.

‘கட்டுமான சீரமைப்பு ‘ என்ற உலக வங்கியின் உத்தரவை ஏற்று பேருந்து, பொதுத்துறை நிறுவனங்கள், நெல் கொள்முதல், குடி நீர் வினியோகம் என எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிப் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பட்டினிச் சாவுக்குத் துரத்தியவர்கள்தாம் இக்காவலர்கள்.தெலங்கானாவில் 1500 ரூபாய்க்கு பெற்ற பிள்ளையை விற்ற கொடுமை நடந்தது.

அரசு மருத்துவ மனைகளில் ஏழைகளுக்கு இலவசமாய் அளிக்கப்பட்டு வந்த வெறி நாய்க்கடி ஊசி மருந்தை இந்தியாவில் இருந்த கிங் இன்ஸ்டிடியூட் ல் தயாரிப்பதை நிறுத்தி அம்மருந்தை வெளிச்சந்தையில் வாங்கும்படி நிர்ப்பந்தித்தார்கள்.

காங்கிரசை விட நாலுகால் பாய்ச்சலில் இவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்தார்கள். பொக்ரானில் அணு குண்டு வெடித்து சோதனை செய்து விட்டு வீராப்புக் காட்டினார்கள் ஒரு நாள். மறு நாளோ அமெரிக்கா கூப்பிட்ட இடங்களுக்கெல்லாம் சென்று காலில் விழுந்து விழுந்து நமது தேச மானத்தை விற்றார்கள். இவர்களின் சகாவாய் இருந்த பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் அண்டர்வேர் வரை உறிந்து சோதனை இடப்பட்டார் அமெரிக்காவிலே. ‘பாரத மாதா கீ ஜே ‘ சொல்பவர் எவரும் அப்போது இந்து தேசத்தின் கவுரவம் பற்றி மூச்சுக் காட்டவில்லை.

இந்தியாவில் அன்னிய நாட்டு தேயிலையின் நுழைவால், நீலகிரி விவசாயிகள் வயிற்றில் அடிக்கப்பட்டார்கள். மான்சாண்டோ எனும் மிலேச்ச கம்பெனியின் நுழைவால், விவசாயி ஓட்டாண்டி ஆனான்.இந்த இந்து தர்மவான்களின் காலத்தில்தான் உணவுக்கழகக் கிட்டங்கிகளில் கோதுமை நிரம்பி வழிந்து, எலிகளும், புழுக்களும் அவற்றைப் பதம் பார்த்தபோது, மாங்கொட்டை தின்று ஒரிஸ்ஸாவில் மக்கள் வயிற்றுக்கு வழியின்றி இறந்தார்கள்.

இப்படிப் பட்டினிச் சாவுக்குத் தள்ளப்பட்ட ஏழைகளும், தலித்களும் கிறித்தவ ரொட்டிக்கு கை ஏந்தக் கூடாது. அப்படித்தானே! நல்லா இருக்கு மனிதாபிமானம்!!

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்