அமர் நாத்: ஜம்மு ஹிந்துக்களின் பிரச்சினை மட்டுமா?

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

மலர்மன்னன்


ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு மாதங்கள் மட்டுமே வந்து வழிபட்டுச் செல்ல முடிகிற அமர் நாத் பனி லிங்க குகைக் கோயிலின் அருகாமையில் யாத்ரிகர்களுக்குத் தாற்காலிகமாகச் சிறிது சீரான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக நாற்பது ஹெக்டேர் நிலத்தை குகைக் கோயில் நிர்வாக அமைப்பிற்கு ஜம்முகாஷ்மீர் மாநில அரசு அளிக்கப் போக, எளிதில் பிரித்துப்போட முடிகிற தாற்காலிக அடிப்படை வசதிகள்தாம் அவை என்று தெரிந்த போதிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முகமதிய அமைப்புகள் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் நிலம் வழங்கும் முடிவை அரசு உடனடியாக மாற்றிக் கொண்டு விட்டது. ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள ஜம்முவில் அது முதல் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து அமர்நாத் குகைக் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் வழங்கும் முடிவை அரசு மாற்றிக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி, கிளர்ச்சி செய்து வருகின்றன. அரசுத் தரப்பில் அடக்குமுறை கடுமையானதன் எதிரொலியாக, கிளர்ச்சியிலும் வன்முறை தலையெடுத்து, நாளுக்கு நாள் உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் அதிகரித்து வருகின்றன.

வனத் துறையின் பொறுப்பில் உள்ள நிலப் பரப்பிலிருந்து நாற்பது ஹெக்டேர் கொடுக்கப்படுகிறது என்று சொன்னால் அதனை அரசு கோயிலுக்கு விற்றுவிடுவதாக அர்த்தம் இல்லை. ஆண்டில் பத்து மாத காலம் மனித நடமாட்டமே இருக்க முடியாத பிரதேசத்தில்,
மரங்கள் அடர்ந்து வளராத பொட்டல் நிலப் பரப்பில் இரண்டு மாதங்களுக்கு மட்டும் பயன்படும் விதமாக ஏராளமான யாத்ரிகர்களுக்குத் தாற்காலிகமான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்காகக் கூட ஒரு ஹிந்து ஆலயத்திற்கு அரசு உதவலாகாது என்கிற பரந்த மனப் பான்மை காஷ்மீரத்து முகமதிய அமைப்புகளுக்கு இருப்பது கண்டு எவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முகமதிய அமைப்புகள், அமர் நாத் கோயில் நிர்வாகத்திற்குத் தாற்காலிக உபயோகத்திற்காக நிலம் அளிக்கப்படுவதை மத அடிப்படையிலேதான் எதிர்க்கின்றன. வெளியிலிருந்து ஹிந்துக்களைக் காஷ்மீரில் குடியமர்த்தும் திட்டம் என்று அதனைக் கண்டிக்கின்றன. ஆண்டில் பத்து மாதங்கள் மட்டுமே மனித நடமாட்டம் இருக்க முடிகிற பிரதேசத்தில் மக்களைக் குடியமர்த்துதல் எப்படி சாத்தியம் என்று அவற்றிடம் கேட்பதற்கு மாறாக, தனது நிலம் வழங்கும் முடிவை மாற்றிக் கொண்டது, மாநில சோனியா காங்கிரஸ் கூட்டணி அரசு.

இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவ அமைப்புகளும் முகமதிய அமைப்புகளும் ஏராளமான நில புலன்களை மடக்கிப் போட்டிருப்பதோடு, நகர்ப்புறங்களின் கேந்திரப் பகுதிகளிலேயே அரசு நிலங்களை மிக மிகக் குறைந்த தொகைக்குக் குத்தகை பெற்றுக் காலங் காலமாக அனுபவித்து வருகின்றன. இதனைக் கேட்க நாதியில்லை. ஊருக்கு ஊர் ஹஜ் யாத்ரிகர்களுக்கான ஓய்வு இல்லங்களைச் சகல வசதிகளுடன் அமைத்துக் கொள்வதற்கு அரசின் உதவியும் பெறப் படுகின்றன. ஆனால் பனிக் காற்று சுழன்றடிக்கும் மலைப் பாங்கான பிரதேசத்தில் தாற்காலிகமான பயன்பாட்டிற்காக நாற்பது ஹெக்டேர் நிலம் ஹிந்து யாத்ரிகர்களுக்கு அளிக்கப் படுவதற்குக் கடும் எதிர்ப்பு, அந்த எதிர்ப்புக்கு அஞ்சிப் பின் வாங்கும் ஒரு மாநில அரசு!

ஹிந்துஸ்தானத்திலேயே இன்று ஹிந்துக்களுக்கு இதுதான் நிலைமை. ஆனால் இது ஏதோ ஜம்முகாஷ்மீர் மாநிலப் பிரச்சினை என்பதுபோல மற்ற பகுதிகளில் மரத்துப் போன இயந்திர இயக்கம். அந்தமானிலிருந்து ஹிமாசல பிரதேசம் வரை, ராஜஸ்தான் தொடங்கி மணிப்பூர் வரை வாழும் ஹிந்துக்களோடு உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் ஹிந்துக்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க வரும்போது அவர்களுக்கு ஓரளவு இட வசதி செய்து கொடுப்பதற்கான முயற்சிக்குத்தான் ஹிந்துஸ்தானத்திலேயே இப்படியொரு தடங்கல். ஆனால் இது பற்றி ஹிந்து சமூகத்திடையே பெரும் எதிர்வினை ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஹிந்து அமைப்புகளும் பாரதிய ஜனதாவும் தெரிவித்த ஒருநாள் கடையடைப்பு என்கிற எதிர்ப்பு ஒன்றைத் தவிர.

ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கில் அமர்நாத் யாத்திரைக்கு வரும் ஹிந்துக்கள் மூலம் நல்ல வருமானம் பெற்று வரும் முகமதிய வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட்டுவிடும் என்பதாலும் யாத்ரிகர்களுக்குத் தாற்காலிக வசதிகள் ஏற்பாடுகள் செய்வதற்கு எதிர்ப்பு இருக்கிறது. இதை வெளிப்படையாகவே சொல்லுகிற அளவுக்கு காஷ்மீரில் முகமதிய அமைப்புகளுக்குத் துணிவு இருக்கிறது. ஜம்முவில் ஹிந்துக்கள் மத வாத அடிப்படையில் கிளர்ச்சிசெய்வதாக விமர்சித்து, எதிர்க் கிளர்ச்சி செய்யவும் அவற்றுக்கு உரிமை இருக்கிறது. ஹிந்துக்களுக்குத் தான் பத்து நாட்களுக்குமேல் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு ஊரடங்குச் சட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது. எனினும் துணிவு மிக்க ஜம்மு ஹிந்துக்கள் ஊரடங்குச் சட்டத்தை லட்சியம் செய்யாமல் வெளியே வந்து உரிமைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அமர் நாத் பனி லிங்க வழிபாடு குறிப்பிட்டுச் சொல்ல முடியாத காலத்திலிருந்தே ஹிந்துக்களால் மேற்கொள்ளப் பட்டு வருவது. இது ஏதோ நூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் யாரோ ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன், அதிலும் குறிப்பாக முகமதியனாக மத மதமாற்றம் செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குஜார் ஜாதிச் சிறுவன் தற்செயலாக அமர் நாத் பனிலிங்க குகையைக் கண்டு பிடித்துச் சொல்ல, அது முதல் அங்கு மக்கள் வழிபட வரத் தொடங்கியதாகப் புனைந்துரைக்கப்படுகிறது. உண்மை என்னவென்றால், முகமதிய அடக்குமுறையால் வழிபாடு வலிந்து நிறுத்தப்பட்ட பல புனிதத் தலங்களுள் அதுவும் ஒன்று என்பதும், பிந்தைய காலங்களில் மீட்டெடுக்கப்பட்டவற்றுள் அது ஒன்று என்பதுமே யாகும். விரிந்து பரந்த ஹிந்துஸ்தானத்திலிருந்து மட்டுமின்றி உலகம் முழுச்வதும் உள்ள ஹிந்துக்கள் புனிதத் தலமாகக் கருதி வழிபட வருகின்ற இடம் அமர் நாத் குகை.

புராணத்திற்குள் செல்ல எனக்கு விருப்பமில்லை. இயற்கை அமைப்பினக் கண்டு இயல்பாகவே ஆன்மிக உணர்வு கிளர்ந்தெழும் மன நிலையினைத் தொன்மைக் கால முதலே அடைந்து வந்திருப்பவன் ஹிந்து. அவனது புராணங்கள் அதைத்தான் பல உருவகங்களில் விவரிக்கின்றன. கவியுள்ளத்திற்குத்தான் இது புரியும். இவ்வாறான தூண்டுதல்களால்தான் ஹிந்துஸ்தானம் ஓர் ஆன்மிக பூமியாக அடையாளம் காணப்பட்டது. மொத்த மனித சமுதாயத்திற்கும் முழுமையான, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மேற்கின் உலகாயதமும் கிழக்கின் ஆன்மிகமும் ஒத்திசைந்து, ஒருங்கிணைந்து இயங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டபோது, கிழக்கு என்பது ஹிந்துஸ்தானத்தையே குறித்தது; கிழக்கில் சீனம் உள்ளிட்ட எத்தனையோ தேசங்கள் உண்டென்றாலும்.

ஆதியிலேயே பஞ்ச பூதங்களையும் அவற்றின் விளைவுகளையும் ஹிந்து வணங்கக் கற்றுக் கொண்டான். மரம் செடி கொடிகளையும் மலைகளையும் கடல்களையும் ஆறுகளையும் வணங்கினான். அது அச்சத்தினால் அல்ல, மௌட்டீகத்தினாலும் அல்லவே அல்ல. அவ்வாறு வணங்கும் மன நிலையைப் பெறுவதற்கே ஒரு பக்குவம் வரப்பெற வேண்டும். “அவனருளால் அவன் தாள் வணங்கி’ என்பதுபோல. அவனது அருளைப் பெறுகின்ற பக்குவம் வந்தாலன்றி அவனை வணங்கும் பக்குவம் வரப் போவதில்லை. அவனது அருளைப் பெறும் பக்குவம் வருவதற்காக நமக்குக் கற்பிக்கப்பட்டிருப்பதுதான் இயற்கையை வணங்குதல், வழிபடுதல். சூரியனிலும் சந்திரனிலும், நட்சத்திரக் கூட்டங்களிலும் அவை வெறும் ஜடங்கள் எனக் கருதாமல் அவற்றின் தெய்வாம்சத்தைக் காணத் தொடங்கினால் இறையுணர்வு இயல்பாகவே சுரக்கும். கடல் மட்டத்திலிருந்து பதினான்காயிரம் அடிக்குமேல் குளிர் விறைக்கும் இருண்ட குகையினுள் மேற்கூரையிலிருந்து ஒழுகியோ, தரையிலிருந்து பீறிட்டுக் கிளம்பியோ வரும் நீர் உறைந்து செங்குத்தாய் நிற்குமானால் அதனை லிங்கமாகப் பார். அந்த லிங்கத்தில் அருவுருவ சிவனைப் பார். அப்போது உனக்குத் தெரியாமலேயே உனக்குள் உருவாகத் தொடங்கும், அவன் அருளைப் பெறும் பக்குவம். உன்னதங்கள் எல்லாவற்றிலும் இறையுணர்வு பெறும் வழியைப் பார். அவை எங்கும் நிறைந்திருந்தாலும் சில இடங்களில் தீர்க்கமாய் அவை நம்மை ஈர்த்துக் கொள்கின்றன. அமர்நாத் பனிலிங்கம் அவற்றுள் முக்கியமானது. முற்றிலும் மனித அத்துமீறலின் விளைவாக புவியின் வெப்ப நிலை அதிகரித்து வருவதாலும், சுற்றுப்புறச் சூழலின் இயற்கை அமைப்பு பாதிக்கப்படுவதாலும் அமர் நாத் பனி லிங்கம் சீர் குலையத் தொடங்குமேயானால், என்ன ஆயிற்று அதன் தெய்வீக சக்தி என்று எள்ளி நகையாடுகிற பகுத்தறிவு எனக்கு இல்லை, அப்படியொரு பகுத்தறிவு எனக்குத் தேவையும் இல்லை. மாறாக, கல்லாக இறுகிப்போன மனிதமனம் இறையுணர்வு பெற்று இளக வாய்ப்பளித்த இன்னொரு தெய்வாம்சம் மனிதனின் அறியாமையால் விடைபெற்றுக் கொண்டதாய் துயரம் கொள்வேன்.

ஆண்டு தோறும் ஜூலை, ஆகஸ்டு மாதங்கள்தான் அமர்நாத் பனிலிங்க வழிபாட்டிற்கான தருணம். ஆண்டுக்கு ஆண்டு அதனை தரிசிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழிபாட்டுக்கென வரும் ஹிந்துக்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகளும் அவர்களின் உள்ளூர் கூட்டாளிகளும் திடீரெனத் தொடுக்கும் துப்பாக்கித் தாக்குதல்களுக்கும், குண்டு வீச்சுகளுக்கும் அஞ்சாமல் அவர்களின் யாத்திரை சளைக்காமல் தொடர்கிறது. வெறும் நடைப் பயணமாகவே வரும் அவர்கள் தங்குவதற்குச் சரியான இட வசதி இல்லை. கான்வாஸ் துணிகளால் அமைக்கப்படும் முகாம்களில்தான் அவர்கள் தங்க வேண்டும். தரை வெறும் மண்தரைதான். உண்பது இன்றியமையாததாக இருப்பதால் கழிவுகளை வெளியேற்றுவதும் அவசியமாகித் தொலைக்கிறதே! லட்சக் கணக்கில் வந்து குவியும் ஆண், பெண் யாத்ரிகர்களுக்கு எவ்வளவுதான் வசதிகள் செய்துகொடுத்தாலும் அவை போதுமானவையாக இருப்பதில்லை. அளிக்கப்படும் வசதிகள் முழுமையாகவும் இல்லை. மழை, பனிப்பொழிவு என்றெல்லாம் பருவ நிலை மோசமாகும் நாட்களில் முகாம்களில் வசித்தல் பெரும் அவஸ்தையாகிப் போகும்.

ஆண்டு தோறும் குறிப்பிட்ட இரு மாத காலத்தில் லட்சக் கணக்கில் வரும் யாத்திரிகர்களுக்காகத் தாற்காலிகமாகச் சிறிது வசதி கூடிய, எளிதில் பிரித்துப் போட்டு விடக் கூடிய தங்கும் இடங்கள் அமைத்துக் கொடுக்க இடம் அளிக்குமாறு அமர்நாத் பனி லிங்க குகைக்கோயில் நிர்வாக அமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே ஜம்முகாஷ்மீர் மாநில அரசு தனது வனத் துறையின் பொறுப்பில் உள்ள நிலத்தில் நாற்பது ஏகரா ஒதுக்குவதாக உத்ரவிட்டது. பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கு முகமதிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு அஞ்சி அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. ஓர் அரசு அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டுமேயன்றி மிரட்டல்களுக்கு அல்ல. எனவே தனது உத்தரவுக்குத் தாமதமின்றி புத்துயிரூட்ட வேண்டும் என்று ஜம்முகாஷ்மீர் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் உலகம் முழுவதிலிருந்தும் கட்டளை பறக்க வேண்டும். ஜம்மு ஹிந்து அமைப்புகளுக்குத் தங்கள் ஆதரவு உண்டு எனவும் அதில் தெளிவு படுத்தப் பட வேண்டும். ஹிந்துஸ்தானத்திலிருந்து அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், கலைஞர்கள் என யார் வந்தாலும் அவர்களிடம் ஒரு சிறு கடிதமாக இந்த உணர்வை ஹிந்துக்கள் வெளியிட வேண்டும். ஹிந்துஸ்தானத்தில் உள்ள எல்லா மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் எங்களின் கருத்தைச் சொல்லுங்கள் என்று வலியுறுத்த வேன்டும். இது பற்றி றுங்கள் நிலை என்ன என்று கேட்டு, மழுப்பாமல் பதில் சொல்லுமாறும் கூற வேண்டும்.செய்யுமா சர்வ தேச ஹிந்து சமுதாயம்?

இது ஹிந்து ஆலயம் ஒன்று சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதை ஹிந்துக்களின் பிரச்சினையாகத்தான் காண வேண்டும். இதில் உள்ள நியாயத்தை ஒப்புக் கொண்டு மற்ற சமயத்தினரும் ஆதரவுக் குரல் கொடுக்க முன்வந்தால் நன்றி, மகிழ்ச்சி.


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்