அன்புள்ள அம்மாவுக்கு

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

புஷ்பா கிறிஸ்ரி


என் இனிய அம்மாவுக்கு
வணக்கங்கள்.
நான் உன்னை அம்மா என்று
அழைப்பதில் உனக்கு மகிழ்ச்சி தானே!
எனக்கில்லை, காரணம் நான்
உன் மகனில்லைத்தானே!

அம்மா என்னை மன்னித்து விடு
நான் உன் மகனில்லை
காரணம் நான் உன் மகனாக
உன் வயிற்றில் வந்து பிறக்கவில்லை

அம்மா என்னை நீயும் அப்பாவும்
ஆசையாய்த்தான் கருத்தரித்தீர்கள்
என்றாலும் நானாகவே உங்களை
கருப்பையை விட்டு விலகி வெளியேறிவிட்டேன்

அம்மா நான் உன்னை விட்டு
சும்மா நானும் வெளி வரவில்லை
நீவாழும் உலகம் பயங்கரமானது
நான் வாழ அது இடம் தராது

நான் உன் கருவறையின் கறுப்பறைக்குள்
நீயோ தினம் தொலைக்காட்சிச் செய்திகளுடன்
அவஸ்தைப் படும் உலகக் கொடுமைகள் கண்டு
நானும் என் நெஞ்சினை வலப்பக்கம் கேட்டேன்

வலப் பக்கம் இதயம் வந்தால்,
வால்வுகள் இயங்காதென்ற
மருத்துவர்கள் சொன்னதனால்
குருத்திலேயே நான் இறந்து விட்டேன்

கொலைகளும், சண்டைகளும்
கொடுமைகளும், கோசங்களும்
என்னை உன் வயிற்றினுள்ளேயே
வன்மையாய் வதைத்தனவே

கிட்டாத மனித உரிமைகட்காய்
எட்டாத கனிகளாய் போராட்டங்கள்
வெட்டி என்னை அவர் வீழ்த்த முன்
எட்டி நானும் வந்து விட்டேன் வெளியே

இதயமற்ற இந்த மனிதர்கள் செயல்கள் எல்லாம்
இடப்பக்க இதயம் கொண்டவர் தான்
வலப் பக்க இதயம் கேட்டேன்,
வாஞ்சையாய் நானும் அவரைத் திருத்திடவே

முடியாது போனதம்மா என் எண்ணங்கள்
மருத்துவம் வென்றதம்மா, வேதனைதான்
இனியொரு பிறவியில் நான் வந்தாலும்
வல்ல இதயத்துடன் தான் வந்து பிறப்பேன்

கருக் கலைந்ததென்று நீ அழவேண்டாம்
உருக் குலைந்த இவ் உலகும் வேண்டாம்
சருகாகப் பிறந்தாலும் விறகாகப் பிறந்தாலும்
நெருப்பாகிச் சுட்டெரிக்கும் சமூகத்தில் நான்வேண்டாம்

அம்மா என்னை மன்னித்து விடு
அம்மா என்று உன்னை நான் அழைக்கவில்லை
அம்மா என்ற உறவு உனக்கு வேண்டுமென்றால்
சும்மா ஒரு குழந்தையை நீ தத்தெடுத்துவிடு
**
pushpa_christy@yahoo.com

Series Navigation