அன்பாலான உலகம் (து.ராமமூர்த்தியின் ‘அஞ்ஞானம் ‘ ) எனக்குப்பிடித்த கதைகள் – 58

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

பாவண்ணன்


நண்பர் ஒருவருக்குத் திருமணம் நடந்தது. அவருடைய தாத்தாவே அத்திருமணத்தை முன்னின்று நடத்திவைத்தார். ஒவ்வொரு செயலையும் அவரே பொறுப்புடன் நின்று கவனித்துக்கொண்டார். ஆயிரம் திருமண அழைப்பதிழ்களை அச்சடிக்க வேண்டும் என்றார் தாத்தா. அதுதான் அவர் முதல் கட்டளை. அன்றுமுதல் அவர்கள் முணுமுணுப்பு தொடங்கிவிட்டது. அவ்வளவு எதற்கு ? அவ்வளவு பேர்கள் வருவார்களா ? என்றெல்லாம் பலரும் கேட்ட கேள்விகளை அவர் பொருட்படுத்தவில்லை. அச்சிட்ட அழைப்பிதழ்களை வாங்கிக்கொண்டு நாங்கள் வீட்டுக்குள் சென்ற நாள் நன்றாக எனக்கு நினைவிலிருக்கிறது. முதலில் ஒரு பத்திரிகையைக் கொண்டுபோய் குடும்பத்தின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று படையலிட்டு வரச்சொன்னார். அந்த விஷயத்திலும் அவர்கள் குடும்பத்தினருக்கு அவ்வளவாக ஈடுபாடில்லை. முணுமுணுத்தார்கள். ஆனாலும் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

அழைப்பிதழ்களை யார்யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று தாத்தா ஒரு பட்டியலையே தயாரித்திருந்தார். ஏறத்தாழ ஐந்நுாறு முகவரிகள். அவர்கள் மலைத்துப்போய்விட்டார்கள். அவர்களுடைய தயக்கத்தைப் பார்த்ததும் அவருக்கு என்ன தோன்றியதோ, தாமே கொடுத்துவிடுவதாக அறிவித்துவிட்டார். நண்பரின் தந்தையும் தாயாரும் ஆளுக்கு ஐம்பது அழைப்பிதழ்கள் போதுமென்று ஒதுங்கிக்கொண்டார்கள். நண்பர் கூட தமக்கும் ஐம்பது போதுமென்றார். எஞ்சிய எண்ணுாறுக்கும் மேற்பட்ட அழைப்பிதழ்களோடு சொந்தக் கிராமத்துக்குக் கிளம்பினார் தாத்தா. மற்றவர்கள் தடுத்ததை அவர் பொருட்படுத்தவில்லை. தன் முதல் பேரனுடைய திருமணத்தைக் கிராமத்தில் நடத்துவது போலவே ஊரையும் உலகையும் கூட்டித்தான் நடத்தவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தமது வேர் எப்படிப்பட்டது, தம் சுற்றத்தின் பரப்பளவு எவ்வளவு என்பதை இச்சந்தர்ப்பத்திலாவது மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் விழைவதுபோல இருந்தது.

ஏறத்தாழ பத்து நாட்கள் அலைந்து, முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்துப் பயணப்பட்ட கிராமங்களுக்கெல்லாம் சென்று எல்லா அழைப்பிதழ்களையும் விநியோகித்துவிட்டுத் திரும்பினார். அவர் முகத்தில் ஆனந்தக்களை தாண்டவமாடிக்கொண்டிருந்தது. உறவு வழிமுறை சொல்லி பெயர்சொல்லி ஒவ்வொருவரைப் பற்றியும் வீட்டு உறுப்பினர்களிடம் விஸ்தாரமாக விவரித்தார்.

விருந்துக்கான உணவுகளையும் தாத்தாவே முடிவு கட்டினார். இரண்டாயிரம் பேருக்குச் சாப்பாடு என்றபோது மற்றவர்கள் குழம்பினார்கள். வீணாகிவிடக் கூடாதே என்ற அச்சம்தான் காரணம். ஆனால் தாத்தாவின் வார்த்தைகளை மீற அவர்களால் முடியவில்லை. அதுவும் அவர் சொன்னபடியே நடந்தது. ஒரு ராணுவத் தளபதியைப்போல தாத்தா கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டே இருக்க மற்றவர்கள் சிப்பாய்களைப்போல நிறைவேற்றிக்கொண்டே தொடர்ந்தார்கள்.

திருமணத்தன்று ஆச்சரியம். அவர் அழைப்பிதழ்கள் கொடுத்த உறவினர்களில் தொண்ணுாற்றி ஐந்து சதம் பேர்கள் வந்து நிறைந்து விட்டார்கள். தாத்தாவுக்கு மனம்கொள்ளாத ஆனந்தம். எல்லாரிடமும் பேரனைக் காட்டி அறிமுகப்படுத்தினார். ‘டெலிபோன் டிப்பார்ட்மென்ட்ல இஞ்சினீயரா இருக்கான் ‘ என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருந்தார். ஒவ்வொருவரைப்பற்றியுமான குறிப்புகளை எந்தப் பிசகுமின்றி துல்லியமான ஞாபகத்துடன் சொல்லி அவர்களைப் பேரனுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். மகனையும் மருமகளையும் அழைத்து அறிமுகப்படுத்தவும் தவறவில்லை. வந்தவர்கள் அனைவரையும் தாத்தா செம்மையாகக் கவனித்துக் கொண்டார். அவர்களுடைய தேவைகளைத் தாமே கேட்டறிந்து நிறைவேற்றினார். குவித்த கரங்களை விலக்காமல் எல்லாருக்கும் நன்றி தெரிவித்தபடி இருந்தார். ஊரே ஆச்சரியப்படும்படி அந்தத் திருமணம் நடந்து முடிந்தது. முதலில் இந்த ஏற்பாட்டில் நண்பனுக்கு மனக்குறை இருந்தாலும் வந்து நிறைந்த மனிதர்களைப் பார்த்தும் அவர்கள் முகங்களில் தேங்கியிருந்த அன்புக்களையைப் பார்த்தும் ஆனந்தத்தில் திளைத்துவிட்டான். தாத்தாவின் அன்புக்குரியவர்கள் இவ்வளவு பேர்களா என்று வியப்பில் மூழ்கினான்.

நான்காண்டுகளுக்குப் பிறகு அவன் தம்பியின் திருமணம் நடந்தது. அப்போதும் அவனுக்கு உதவியாக நான்தான் கூடமாட இருந்தேன். ஆனால் தாத்தா மட்டும் இல்லை. மறைந்து ஓராண்டு கடந்துவிட்டிருந்தது. ஏறத்தாழ ஒருமணநேரம் தாமதமாக வரவேற்புக்கு இருநுாறு பேர்கள் அளவில்தான் வந்து சேர்ந்தார்கள். வேகவேகமாக வந்து வேகவேகமாகக் கலைந்துவிட்ட அச்சிறிய கூட்டத்தைப் பார்த்ததும் நண்பரின் தந்தையார் கண்கலங்கினார். ‘தாத்தாவுக்கு ஏகப்பட்ட பேர் தெரிஞ்சவங்களா இருந்தாங்க. எனக்குத் தெரிஞ்சவங்கள பாத்தியா ? அவர் சம்பாதிச்ச அன்புல பத்துல ஒரு பங்கு கூட என்னால சம்பாதிக்க முடியலையே ‘ என்று பிள்ளைகள் முன்னால் புலம்பினார். அக்குறையை அங்கிருந்த எல்லாருமே உணர்ந்தார்கள். அந்த உணர்வுக்கு அவர் வார்த்தை வடிவம் தந்ததுமே எல்லாருமே தாத்தாவின் உறவு வட்டம் பற்றியும் அவர் அன்பு பற்றியும் மனவிரிவு பற்றியும் பேசத்தொடங்கிவிட்டார்கள்.

அந்தக்கால மனிதர்கள் அனைவருமே அன்பு வேண்டும் , மனிதர்கள் வேண்டும், உறவு வேண்டும் என்று வாழ்ந்தார்கள் என்று பொதுமைப்படுத்தி விட முடியாது. சிலர் அப்படி வாழ்ந்தார்கள். சிலர் வேறு விதமான வாழ்க்கையையும் வாழ்ந்தார்கள். விருந்து வருவதைப் பார்த்தாலே தலைவலி என்று ஓடிப்போய் படுக்கையில் படுத்துக்கொண்டவர்கள் அந்தக் காலத்திலும் உண்டு. வந்த விருந்துக்கு ஒன்றுமில்லையே, ஐயோ என்ன செய்வது என்று மனம் பதைபதைக்க, அன்று காலையில் விதைத்த விதைநெல்லை மழையையும் பொருட்படுத்தாமல் வயலுக்கு ஓடிச்சென்று சேகரித்து வந்து அரிசியாக்கி உணவு சமைத்துப் பரிமாறியவர்களும் அந்தக் காலத்தில் வாழ்ந்தார்கள். மனவிரிவுள்ள மனிதர்களைப்பற்றி யோசிக்கும்போதெல்லாம் நண்பருடைய தாத்தாவின் முகம் கண்டிப்பாக ஞாபகத்தில் வந்துபோகும். அப்படி வந்துபோகிற பல முகங்களில் ஒன்று து.ராமமூர்த்தி தம் கதையொன்றில் தீட்டிக்காட்டிய ஒரு பாட்டியின் முகம்.

அக்கதையில் பாட்டியுடன் இடம்பெறும் மற்றொரு பெண் பாத்திரம் அவளுடைய பேத்தி நீலா. அவள் இளம்வயது நங்கை. சமீபத்தில்தான் திருமணமாகியிருப்பவள். பிரசவத்துக்காக வந்திருப்பவள். பாட்டி நோய்வாய்ப்பட்டிருக்கிறாள். தள்ளாத நிலையிலும் பேத்திக்குப் பிரசவம் பார்த்து அனுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறாள். தாய் தந்தையரில்லாத நிலையில் சகோதரனுடைய வீட்டுக்குச் செல்லாமல் பாட்டியின் உதவியையே நாடி வந்திருக்கிறாள் நீலா. எதிர்பாராத சூழலில் பாட்டியின் மரணம் நிகழ்ந்து விடுகிறது. சகோதரன் வந்திருந்து இறுதிக் காரியங்களைச் செய்து முடிக்கிறான். வந்தவர்கள் எல்லாரும் அவரவர்கள் ஊருக்குப் போய்விடுகிறார்கள். செங்கல்பட்டில் தன்னுடன் படித்த நண்பனைப் பார்த்து வருவதற்காகவும் அப்படியே மகாபலிபுரம், வேடந்தாங்கல் பார்த்துவிட்டு வருவதற்காகவும் சென்று விடுகிறான் சகோதரன். தனிமையில் விடப்பட்ட நீலா பாட்டியின் நினைவுகளில் மூழ்கிவிடுவதிலிருந்து தொடங்குகிறது கதை.

முதலில் பாட்டி இல்லாத தனிமை வருத்துகிறது அவளை. சின்னஞ்சிறிய வயதிலிருந்து தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்த்தவளின் மரணத்தை அவளால் நம்பக்கூட முடியவில்லை. கிறுகிறுப்பும் மயக்கமுமாகக் கிடந்த சமயத்தில்கூட பாட்டி தன்னைப்பற்றிக் கவலைப்பட்டதைவிட நீலாவைப்பற்றிக் கவலைப்பட்டதெல்லாம் நினைவுக்கு வந்து விடுகிறது. மயக்கத்தில் ஆழ்ந்திருக்கிற நிலையிலும் பேத்தி வாந்தியெடுக்கும் சத்தத்தைக் காதுகொடுத்துக் கேட்டு பிள்ளைத்தாய்ச்சிப் பெண் வயிற்றைக் காயப்போடக்கூடாது என்று அறிவுறுத்தி ஏதேனும் ஆகாரத்தை உட்கொள்ள வைத்தவள் பாட்டி. அவள் வலியுறுத்தல்கள் நீலாவுக்குச் சலிப்பாகப்படும் தருணத்திலெல்லாம் ‘என்னமோ அம்மா, எனக்கு அஞ்ஞானம் மனசு கேட்டகவில்லை. கிடந்து அடித்துக்கொள்கிறது ‘ என்று முணுமுணுத்துக்கொள்கிறாள். எல்லாரிடமும் ஆசை, அன்பு, பாசம் அவளுக்கு. அதையே அஞ்ஞானம் என்கிற பெயரால் குறிப்பிடுகிறாள் அவள். அந்தப் பாசத்தையும் ஈடுபாட்டையும் யார்மூலமும் பெறமுடியாது என்கிற எண்ணம் நீலாவின் ஏக்கத்தை அதிகரிக்கிறது.

பாட்டி அன்பு காட்டிய சந்தர்ப்பங்களெல்லாம் நீலாவின் மனத்தில் எழுகின்றன. நெருக்காமனவர்கள், நெருக்கமறற்வர்கள் என்கிற எந்தப் பேதமும் பார்க்காமல் அன்பைப் பொழிவதைத் தனது இயல்பாகக் கொண்ட பாட்டியின் மனம் ஆச்சரியத்தைத் தருகிறது. மாவட்டக்குடியிலிருந்து வந்திருந்த கிழவர் ஒருவருக்கு விருந்தளித்து உபசரித்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது.

நண்பனைப் பார்க்கப் போயிருந்த சகோதரன் திரும்பி வந்ததும் ஊருக்கு உடனே புறப்படத் தயாராகிறான். யாரோ வேற்று மனிதனைப்போல அவன் பட்டும்படாமல் கிளம்பிவிட்டதும் பிள்ளைப்பேற்றுக்குத் தன்னிடம் ஒரு பேச்சுக்குக்கூட அழைக்காததும் அவளுக்கு மிகுந்த துக்கத்தைத் தருகின்றன. மனசிலே ஏக்கம் குடிபுகுந்து வாட்டுகிறது. உலகமே அன்பற்றுப் போனதுபோல வாடுகிறாள். அதே நேரத்தில் கிளம்புகிறேன் என்று அவன் சொன்னதும் எந்த உபசரிப்புமற்று விடைகொடுத்த விதத்தில் தாமும் அப்படித்தானே அவனிடம் நடந்துகொண்டோம் என்பது அவளுக்கு நினைவுக்கு வருகிறது. பாட்டி உயிருடனிருந்தால் பத்துநாட்கள் இருந்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று நிச்சயம் கட்டாயப்படுத்தித் தங்க வைத்திருப்பாள் என்று தோன்றுகிறது. பாட்டியால் செய்யக்கூடிய ஒரு காரியத்தைத் தன்னால் செய்ய இயலாமல் போனதற்கும் தன் சகோதரனால் செய்ய இயலாமல் போனதற்குமான காரணங்களைத் தேடி அலசுகிறது அவள் மனம். அஞ்ஞானம் என்று காலமெல்லாம் அவள் நம்பிவந்த ஆசை, பாசம், அன்பு ஆகியவை தன்னிடமோ சகோதரினடமோ தன் தலைமுறையிடமோ இல்லாமல் போனதை ஒரு முக்கிய இழப்பாக உணர்கிறாள் அவள்.

பாட்டியால் முடிந்த ஒரு காரியம் தன்னால் முடியாமல் போய்விட்டது என்கிற பலவீனத்தை உணர்த்துவதாக மட்டும் முற்றுப்பெற்றிருந்தால் இக்கதை சாதாரணமான ஒன்றாகவே மறைந்திருக்கும். மாறாக, அந்த இயலாமையைத் தலைமுறைகளின் இயலாமையாகவும் மானுட குலத்தின் இயலாமையாகவும் விரித்துப் பார்ப்பதற்கான சாத்தியப்பாடுகளைக் கொண்டிருப்பதால் காலத்தைத் தாண்டி நிற்கக்கூடியதாகவும் மறக்கமுடியாததாகவும் விளங்குகிறது.

கதை நெடுகவும் காணப்படும் சிறுசிறு குறிப்புகள் து.ராமமூர்த்தியின் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றன. தாயற்ற குழந்தைக்குப் பரிவுடன் தாயாக நின்று வளர்ப்பதே ஒரு முக்கியக் குறிப்பு. பெற்றெடுத்த தந்தையே மறுமணம் செய்துகொண்டு கவலையற்றிருக்கையில் பாட்டியால் அப்படி இருக்கமுடியாமல் பொறுப்பையேற்றுக்கொள்கிறாள். பருப்பு வேகவைக்கிற பாத்திரமானாலும் காப்பி பில்டரானாலும் அவை வெறும் பாத்திரங்களாகப் பாட்டியின் பார்வையில் படுவதில்லை. அவற்றை வாங்கித்தந்த மனிதர்கள், அவர்களுடைய அன்பு ஆகியவற்றை நினைவூட்டும் சாதனங்களாக விளங்குகின்றன. உலகத்தில் காணப்படும் எல்லாமே யாரோ ஒருவரின் அன்பாகவே காணப்படுகிறது பாட்டிக்கும் பாட்டியின் தலைமுறையிருக்கும். அத்தகு அன்பைத் துறப்பது என்னும் பேச்சுக்கு அவர்களிடம் இல்லை. மாறாக, அந்த அன்பிலேயே மீண்டும் மீண்டும் திளைக்க எண்ணுகிறவர்கள். அத்தகு திளைப்பை இழந்தது தெரியாமலேயே இழந்துபோனது மனிதகுலம்.

‘தண்டாமரையின் உடன்பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம் ‘ என்பது விவேகசிந்தாமணியில் இடம்பெறும் ஒரு வரியாகும். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாட்டியுடன் வளர்ந்த நீலாவுக்கே பாட்டியின் அன்புக்கலை கைவராத போது எந்தத் தொடர்புமின்றி வளர்ந்த சகோதரனுக்கு மட்டும் அந்தக்கலை கைவருவது எப்படிச் சாத்தியமாகும் ?

*

அறுபதுகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் து.ராம்முர்த்தி. தமிழில் வெளிவந்த சிறந்த நாவல்கள் என்று ஐம்பது நாவல்களைப் பட்டியலிடும் எந்த விமர்சகரும் குறிப்பிட்டுச் செல்லும் நாவலான குடிசை இவருடைய படைப்பாகும். ‘அஞ்ஞானம் ‘ என்னும் இக்கதை அவருடைய ‘கதம்பச்சரம் சிரித்தது ‘ என்னும் சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தாரின் வெளியீடாக 1967 ஆம் ஆண்டில் இத்தொகுதி வெளிவந்தது.

Series Navigation