அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

ஸ்ரீனி


எங்க ஊர் ஒலி பெருக்கி ரொம்பப் புகழ் பெற்றது.

கல்யாணம்,கருமாதி,சடங்கு(பூப் பெய்தல்),மாரியம்மன் பொங்கல்,சித்திரைத் திருவிழா, இப்படி வருடத்தின் அனைத்து தினங்களிலும் ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று விடாமல் வரும்.எல்லாவற்றிலும் முதலில் வருவது ஒலி பெருக்கி.அதுவும் குழாய் டைப்!என்னதான் சிலோன் ரேடியோ பாட்டு படித்தாலும்,நம்ப குளாய்க்கு முன்னெ சிலோன் எங்கனேப்பு கேக்கும்!

கொடுக்கின்ற சவுண்டில் ஏரியா மொத்தமாக காதில் டமாரம் தட்ட வேண்டும்.இந்த சவுண்ட் சாம்ராஜ்ஜியத்தில்தான் நாங்கள் படிக்கவும் வேண்டும்.பாட்டு கேட்டுக் கொண்டே படிப்பதுதான்.யாரும் பாட்டு சத்தம் படிப்பை கெடுக்கிறது என்று புகார் செய்ய மாட்டார்கள்.மாறாக பாட்டு சத்தமாக கேட்கா விட்டால்தான் லந்து விடுவார்கள்.என்னத்தைப் பாட்டு போடுதீக..நம்ம வீட்ல கேக்கலப்பு!சாதி மத,வயது பேதமில்லாமல் எல்லோரும் ரசித்து அநுபவித்து அதனை வாழும் சமூகத்தின் ஒரு அங்கமாக கருதியதால் “குழாய்ப் பாட்டினால்” பிரச்சனையே வந்தது கிடையாது. மேலும் இன்று இருப்பது போல அநாவசிய கருத்து கூக்குரல்கள் அன்று (நல்ல வேளை!) கிடையாது.

உறங்காத ஊராச்சே காலை மூணு நாலு மணிக்கெல்லாம் களை கட்டி விடும்.அப்பொதெல்லாம் காசெட்,எம்பி3,சிடி எல்லாம் கிடையாது.பழைய ரிகார்ட் வகையறாக்கள்தான்.தோசைத் தட்டு என்போம்!முதல் பாட்டு ஒரு சட்டம்
போல சீர்காழியின் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’.இது மாறவே மாறாது.பிறகு டி.எம்.எஸ் முருகனிடம் ரொம்பவே உள்ளம் உருகுவார்.பெங்களுர் ரமணியம்மாளும் குன்றத்து குமரனை கூப்பிடுவார்!அப்புறம் வருவார் பாருங்க,கோடையிடிக் குரலழகி (!) எல்.ஆர்.ஈஸ்வரி!அவர் மாரியம்மா என்று அழைப்பதே சொக்க வைக்கும்.அவரது
குரலும்,பாடும் பாணியும் இது வரையில் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை.

பக்தி தோசை முடிந்து பின்னர்,படப் பாட்டு வந்து விடும்!
கல்யாணம் என்றால் முதல் பாட்டு கண்டிப்பாக ‘வாரோயோ என் தோழி’ தான்!வேறு கல்யாணப் பாட்டுக்கள் தமிழில் வரவில்லையோ?எனக்கும் கல்யாணம் என்றால் வாராயோ தோழி தான் மனதில் ஒலிக்கிறாள்,அது போடப்படாத இன்றும்!பிறகு அடுத்த தோசை ‘பாலும் பழமும் கைகளில் ஏந்தி’.இங்கே தோசையை திருப்பினால் வருவது, போனால் போகட்டும் போடா…!!கல்யாண வீட்டில் போனால் போகட்டும் போடா…!யார் பார்த்தார்கள் இதையெல்லாம்.பாட்டு நல்லா ஜவுண்டா படிக்குதில்லே!

எங்களுக்கு அந்த தோசை போடுபவர் தான் ஹீரோ.
அவர் சகல கலா வித்தகர்!அவரே குழாய் கட்டுவார்.அவர்தான் சவுண்ட் எஞ்சினீயரும்.
அண்ணே நம்ப மூணாம் தெரு அம்மாகண்ணு வீட்டுலே பாட்டு கேக்கலையாம்ணே.
அப்படியா,பிடி..சாப்பிடு என்று சப்த ஜாலம் காட்டி அம்மாகண்ணுவை ஏன் அந்தத் தெருவையே அலற விட்டு விடுவார்!
ஏன்ப்பு எம்சியாரு பாட்டு போடுங்க.
ஏன் ஜிவாஜி பாட்டு படிச்சா உனக்கு கேக்காதோ.
இது போன்ற நேயர் விருப்பத்தையும்அவர்தான் கவனிப்பார்.இது சமயத்தில் அடிதடியில் முடியும் அபாயமும் உண்டு.குளா கட்டாத நாட்களில் அவர் சைக்கிள் ரிப்பேரர்!

அவ்வப்போது அவர் எங்களுக்கு தோசைக் கவர் பார்க்க தருவார்!தோசைக் கவரில் ஜிவாஜி,எம்சிஆரு,ஜர்ஜாதேவி,நாகேசு என்று கலர் போட்டோ படம் பார்த்து ஜன்ம சாபல்யம் அடைவோம்!

பாலும்பழமும் கைகளில் ஏந்தி….இந்தப் பாட்டு முழுவதும் இந்த ஒரு வரியிலேயே பாடலாம்.
உங்க வாத்யார் பாட்டு உண்டா இது மாதிரி?பெருசா பேசராங்கே!
அடடா இது இசைத் தமிழுக்கே வந்த சோதனையடா என்று இரவு முழுவதும் யோசித்து அடுத்த நாள் பெரிய அடியாக அடித்தேன்,சரணம்,பல்லவி எல்லாம் பாடி!என்ன பாட்டு?!
நான் யார்…நான் யார்…!!

சவாலுக்கே சவால் விட்டு சபாஷி வாங்கும் அளவிற்கு என்னுடைய இசைத்தமிழ் வளர்ந்தது என்றால் அது நம்ப ஊர் ஒலி பெருக்கியின் கர சேவை தான்!இன்று வரை அந்தப் பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் ஞாபகத்தில் உண்டு என்றால் அதுவும் ஒலிபெருக்கியின் மகிமையே.காலை முதல் இரவு வரை,எல்லா நாளும் கேட்டுக் கேட்டு வந்த புலமை!

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி