அந்த கொடிய பகலின் வேதனை

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

ஹெச்.ஜி.ரசூல்


உன் விசாரிப்புகள் ஒவ்வொன்றும்
அர்த்தமுள்ளவையாக இருக்க வேண்டுமென்ற
வேரில் பழுத்த விருப்பத்தை
நேற்று முதல் மறைத்துவிட்டேன்
நெஞ்சம் அகலவிரித்து
நேருக்கு நேர் நின்று
மெளனத்தால் பேசிப் பேசி
என் காலத்தை அபகரித்துவிட்டது
அந்த கொடிய பகலின் வேதனை.
கொட்டிகுவித்துவைத்த பிரியங்களை
காற்றின் விரித்த கைகளில் தந்து
கிழித்தெறிந்தாய் வன்மத்தோடு.
மழைசிந்திய பூக்களை தொடுத்து
சூடவந்த தேவதைகளின் வருகை
தீராப் பகையின் வெறியோடு
தோல்வியில் முடிவுற்றது.
பாவனையோடு கூடிய
உன் ஒப்பனைகளை கண்டு ரசித்து
என்னை பறி கொடுத்த சேதி
இப்போது மலம் தின்று கிடக்கிறது.
முகம் மறந்துபோன நாளொன்றில்
திரும்பவும் உன் வருகை
நிகழ்ந்தது போலிருந்தது.
திசையற்ற பெருவெளியின் பறவை
கூடடைந்த சந்தோசம்
கூட்டில்தான் குஞ்சுகள் இல்லை.
அருகருகே இருந்தும் வெகுதொலைவில்
வாழ்வின் அற்புத தருணங்களை
தொலைத்துவிட்ட கவலையோடு
அலைக்கழிக்கப்பட்ட
என்பயணம் தொடர்கிறது
ஒரு கை வெட்டுப்பட்ட வெற்றுடலாய்


Series Navigation