அத்தையம்மா!

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

நவநீ



“வாம்மா! புண்ணியவதி! வா! வரும்போதே தூக்கி முழுங்கிட்டு வந்திருக்கியே வா! வந்து வெளக்கேத்தி வய்யிம்மா வெளக்கேத்தி வைய்யி! தலை தலையாய அடிச்சுக்கிட்டனே கேட்டானா அந்தப் படுபாவி! போச்சே! எல்லாம் போச்சே! கொள்ளி வைக்கிற மயன் போய்ட்டானே! அவனுக்கு நான் கொள்ளிவச்சுட்டுல்ல இப்பக் குத்தவச்சுருக்கேன்! பத்தாததுக்கு இவந்தலையில என்ன எழுதியிருக்கோ?” என்று எல்லோருக்கும் முன்னால் தலைவிரி கோலமாகக் கத்திய மாமியாரைப் பார்க்கும்போது தன் கணவர் குமாரும் தானும், தாலி கட்டிய கையோடு ஆசீர்வாதம் வாங்க வந்த கவிதாவுக்கு மிகவும் வேதனையாகவும், அழுகையாகவும் வந்தது.

கவிதா ஒரே பெண். தாயைச் சின்ன வயதிலேயே பறிகொடுத்தவள் தனது பாட்டியிடமும் தந்தையிடமுமே வளர்ந்தவள். பள்ளியில் படிக்கும்போதே தனது பாட்டியும் இறந்துவிடத் தன் தந்தை மறுமணம் செய்துகொள்ளாமலேயே மிகவும் சிரமப்பட்டு வளர்த்துப் படிக்கவைத்து இன்று ஒரு நல்ல வேலையிலும் இருக்கிறாள். தன் தந்தை தனக்காகப் பட்ட துன்பங்களையெல்லாம் நினைத்துப்பார்த்து தந்தைமேல் உயிரையே வைத்திருக்கும் கவிதா, தான் திருமணம் செய்துகொண்டால் தனது தந்தைக்கு யாருமில்லை என்பதாலேயே திருமணம் செய்துகொள்ள விரும்பாதவளாய் இத்தனை வருடங்கள் கழித்துவிட்டாள். ஆனால் உறவுகளும், சம்பிரதாயங்களும், ஒரு பெண் தனது இஷ்டப்படி வாழ விட்டு விடுமா என்ன? தந்தையின் நெடுநாள் வற்புறுத்தலாலும், அவளின் நெருங்கிய தோழிகளின் அறிவுரையாலும், வேறுவழியின்றி, ஒரு நிபந்தனையின் பேரில் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாள். அந்த நிபந்தனை, தான் திருமணம் செய்துகொண்டாலும் தனது தந்தைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும், பண உதவி உட்பட அவளே கவனித்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் தன் தந்தைக்குத் தன்னை விட்டால் வேறுயாருமில்லை என்பதை மாப்பிள்ளை தன்னைப் பார்க்க வந்திருந்தபோது தெளிவாகக் கூறியிருந்தாள். அதைப்போலவே மாப்பிள்ளையும் நல்ல மனதுடன் ஒத்துக்கொண்டார். தான் நினைத்தபடியே எல்லாம் ஒத்துவந்ததால், கவிதா மிகவும் சந்தோசமாகவே இருந்தாள். மாப்பிள்ளை அடுத்த லீவுக்கு வரும்போது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏனெனில் அவர் மிலிடரியில் இருப்பதால் வருடம் ஒருமுறை வருவதே பெரிய விசயம். இடையில் அடிக்கடி தொலைபேசி மூலமாகப் பேசிக்கொள்வார்கள். அவர்கள் அருகருகே இல்லாவிட்டாலும், நிச்சயிக்கப்பட்டுவிட்டதால் கணவன் மனைவியளவுக்கு தத்தம் உணர்வுகளையும், சந்தோசங்களையும் போன்மூலமாகவே பகிர்ந்துகொண்டு அந்தத் திருமண நாளுக்காக ஆவலோடு காத்திருந்தனர்.

திருமணம் ஒரு வாரம் இருக்கும்போது கணவராகப்போகும் ரமேஷ் வந்து சேர்ந்தான். வந்ததும் வராததுமாய் நேராக வந்து கவிதாவைப் பார்த்துவிட்டு மிகவும் சந்தோசமாகப் பேசிக் கிளம்பும்போது,

“இனி நான் உன்னைப் பார்க்கமாட்டேன்” என்றான்.

“வாட்… என்ன வெளையாடுறீங்களா? ஐ டோன்ட் நோ, டெய்லி இங்க வந்து எங்கிட்ட ஒரு டென் மினிட்ஸ் பேசிட்டுப்போகல….மவனே! அவ்வளவுதான், ஓகே”…நௌ யு கேன் கோ..பை..பை” என்றாள்.

“நோ! நோ! வாட் ஐ மீன்…மேரேஜ் அன்னிக்கித்தான் ஒன்னெ மீட் பண்ணுவேன்னு சொன்னேன்டா, அப்பத்தான் ஒரு த்ரில் இருக்கும், இன்னொன்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் இன்விடேசன் குடுக்கணும், தம்பி குமார் மட்டும் தனியாக் கஷ்டப்படுறான்…ஓகே, சீ யு லேடர், பை ஃபார் நௌ” என்று கூறிக் கிளம்பிவிட்டான்.

சரியாகத் திருமணம் இரண்டு நாள் இருக்கும்போது, திடீரெனத் தொலைபேசி ஒலித்தது. ஹலோ என்றவள் இடிந்துபோய் உட்கார்ந்தாள். விழித்துப்பார்த்தாள், பக்கத்தில் தனது தோழியும், தந்தையும் அழுதுகொண்டு இவளைபே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். தன் கைகளைக் கவிதா தலையின் மீது வைத்து,
“ஒனக்கு நான் இருக்கேன்டா, நீ ஒன்னும் கவலப்படாத தங்கம், ஏதோ நமக்கு டைம் சரியல்ல, நீ மட்டும் மனச விட்டுறாத, தைரியமா இரும்மா, எதுவும் நெனைக்கப்படாது… ம்ம்…” என்ற போது, அப்பாவின் கண்களில் எங்கோ ஒலிந்திருந்த கண்ணீர் கொடகொடவென்று கொட்டியது. “ம்ம்….” என்றுதான் கவிதாவால் சொல்ல முடிந்தது. துக்கத்தை தொண்டை வழியாக விழுங்கியதால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமாகச் சொல்லி, பிறகு ஒரு வழியாக ஒத்துக்கொண்டு, எல்லாம் ஒன்று கூடி வரும் இந்த நேரத்தில், மாப்பிள்ளை, தன் திருமணத்திற்கான அழைப்பிதழ்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பும் நேரத்தில், எமனாக வந்தது அந்த லாரி. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் பாதி வழியிலேயே, “இனி நான் உன்னைப் பார்க்கமாட்டேன்” என்று தான் கவிதாவிடம் சொன்னது நினைவில் வந்ததோடு எல்லாம் முடிந்துபோனது.

மகிழ்ச்சி குதூகளிக்கவேண்டிய வீடு மயான வீடு போல் காட்சியளித்தது. கவிதா வாய்விட்டு அழக்கூட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள். யார் முகத்தையும் பார்க்க முடியவில்லை. இரண்டு முக்கியப் பொருத்தங்கள் இல்லையென்பதாலும், ராசியில்லாதவள் என்பதாலும்தான் இப்படியெல்லாம் ஆனதென்று ஆளாளுக்கு, அங்கங்கு முணுமுணுப்பதுபோல் தோன்றிற்று. தன் தந்தை அதோ ஒரு ஓரத்தில் குனிந்த தலையோடு சேரில் அமர்ந்து எதையோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார். இப்போதுதான் கவிதா, தன் அம்மாவை நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள். வாய்விட்டு அலறி, தன் அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கத்தவேண்டும்போல் இருந்தது. தன் அம்மா இல்லாத வெறுமையை அவள் இன்றளவுக்கு என்றுமே உணர்ந்ததில்லை. அந்த நேரத்தில் யாரோ கதவைத் தட்டியதும் சுதாரித்துத் ‘திக்திக்’ என்ற பயத்தோடு திறந்தாள். அங்கு தான் பயந்தபடியே தன் மாமியார் வந்து நின்றுகொண்டிருந்தார். ஒன்றும் புரியாதவளாய் அவர் முகத்தைப் பார்க்க, நேராக உள்ளே வந்து கதவைத் தாழிட்டுக் கட்டியணைத்துக்கொண்டு சத்தம் வெளியே வராமல் தேம்பித் தேம்பி அழுதார். கவிதாவுக்கு நடப்பது கனவா, நனவா ஒன்றும் புரியாதவளாய் இவளும் கட்டிப்பிடித்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். ஒரு வழியாக உள்ளுக்குள் இருந்த சுமை ஓரளவுக்கு இறக்கி வைத்தது போன்ற ஓர் உணர்வு.

“யாம்மா, நானும் ஒரு பொண்ணுதாம்மா கவிதா! என்னெ மன்னிச்சுரும்மா” என்றதும்,

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க அத்தை, நீங்கதான் என்னெ மன்னிக்கணும், நான் எந்தப் பாவமும் பண்ணலத்த, எனக்கே பயமா இருக்கு, என்னவெல்லாமோ நடக்குது” என்று முடிப்பதற்குள்,

“நான் சொல்றதக் கவனமாக் கேளும்மா! எம் மூத்த மகன் போனத என்னால தாங்க முடியலம்மா. சொமந்து பெத்த வயிறு எரியிதும்மா. இந்த சண்டாளிய அந்தக் கடவுளு கொண்டுபோகமா, எங்கண்ணுக்கு முன்னாடி எம்புள்ளயப் பறிச்சுறிச்சேம்மா! நான் இருந்து என்னத்தம்மா சாதிக்கப்பேறேன்? நீங்க வாழுற வயசும்மா. இந்த ஊரு சனம் ஆளுக்காளு ஒண்ணொன்னெப் பேசுறதப் பாத்து, ஏதோ புத்தி பேதளிச்சுப்போயி, வாய்க்கி வந்தபடியெல்லாம், நீ வந்ததும் வராததுமாப் பேசிப்புட்டேம்மா. அவன் விதி அம்புட்டுத்தேம்மா, நீ என்ன பண்ணுவ அதுக்கு? தாயில்லாப்பிள்ள! கவிதாக்கண்ணு! நீ இந்த வீட்டு மருமக இல்லம்மா, எம்மகம்மா. எனக்கு பொம்பளப்புள்ள இல்லேன்னு, நீயாச்சும் இந்த வீட்டுக்கு வந்து வெளக்கேத்தோணும்னு நெனச்சேம்மா. என்ன ஆனாலுஞ்சரின்னு, நாந்தேம்மா, எஞ்சின்ன மயன்ட்டயும், இந்த ஊரு பெரிய மனுசக்கட்டயுஞ் சொல்லி, அது இந்த வீட்டுக்குன்னே பொறந்த பொண்ணு, ‘டேய் அவ கழுத்துல தாலியக் கட்டிக் கூட்டிகிட்டு வாடா’ன்னு சொல்லி சம்மதிக்க வச்சேன். எம்புள்ளயப் பறிகுடுத்த வகுத்தெரிச்சல்ல கத்திப்புட்டேன். மனசுல ஒன்னத்தையம் வச்சுக்காத கண்ணு” என்று ஒரே மூச்சில் படபடவெனச்சொல்லி

“காப்பி ஏதும் எடுத்துகிட்டு, இந்தா வாரேன்” என்று வெளியே சென்றுவிட்டாள் கவிதாவின் மாமியார்.

தான் படித்த படிப்பு, பக்குவம், நிதானம், அறிவு எல்லாவற்றையும் விட, படிக்காத மாமியாராக இருந்தாலும், எதார்த்தங்களை எதார்த்தமாக்கிக்கொண்டு தன்னையும் பக்குவப்படுத்தப் பழகிக்கொண்ட அந்த வெள்ளையுள்ளம் படைத்த மாமியார் உருவில் தன் தாயே வந்து ஆறுதல் கூறி அணைத்துக்கொண்டது போல் இருந்தது கவிதாவுக்கு. இழப்பு கவிதாவுக்கு மட்டுமில்லை, அந்தத் தாய்க்கும்தான். ஆனாலும் அந்தச் சோகச் சூழ்நிலையிலும் தன் இரண்டாவது மகனை எப்படிப் பேசிச் சம்மதிக்க வைத்து தன்னைத்திருமணம் செய்ய வைத்தார் என்பதை நினைக்கும்போது கவிதாவால் நம்பமுடியவில்லைதான். இந்த எதார்த்தங்களும், விட்டுக்கொடுத்தலும் நகரத்தில் கவிதா இதுவரை கேள்விப்பட்டதில்லை. மாமியார் என்றாலே கொடுமைக்காரிதான், மருமகள்களுக்கு வில்லிதான் என்ற ஒரு தவறான எண்ணத்தை தவிடு பொடியாக்கியது அந்தக்கணத்தில் நடந்த நிகழ்வுகள். தனக்கென்று நிச்சயிக்கப்பட்ட அந்தக் கணவன் இன்னும் மனதுக்குள் இருந்தாலும், தான் ஒரு புதுப்பிறவி எடுத்த உணர்வோடு தன் மாமியாரைத் தாயாகவே நினைத்து தனக்குத் தன் தாயிடம் கிடைக்காத அத்தனை உணர்வுகளையும் பெற்றுவிட்டதாக ஆறுதலடைந்தாள். பிரகாசமான அந்த நம்பிக்கையில், தன் மறைந்த கணவர் ரமேஷை, குமார் உருவில் முதன்முறையாக நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்தாள். தூரத்தில் தன் தந்தை அமர்ந்திருப்பதைப் பார்த்து ‘அப்பா! எனக்கு அம்மா கெடச்சுட்டாங்கப்பா, ஒங்களுக்கு நான் இருக்கேம்ப்பா’ என்று கண்கள் கலங்கியபடி கடவுளை நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.


navneethsmart@yahoo.com

Series Navigation