அக்கினிப் பிரவேசம் !

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

சீதாலட்சுமி


நெஞ்சிலே சுனாமியாய்ப் புரண்டு கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இவ்வரைவு.
என் கேள்விக்குரிய களம் இராமாயணம்.
என் கேள்வியின் நாயகன் காவியத் தலைவன் இராமன்.
பலம். பலஹீனம் இவைகளின் கலவையாக ஓர் நாயகன் வரின், கேள்விக்கணைகளின் தாக்குதல் ஏற்படுதல் இயல்பு. இப்படித்தான் வாழவேண்டு மென்பதற்கு இலக்கணமாய் விளங்கும் இராமன், விளையாட்டுப் பிள்ளையாய், குறும்புக்காரனாய்ச் செய்யும் செயல்களை நாம் பெரிது படுத்தாமல் சமாதானம் கூறிக்கொள்ளலாம். அமிலமாய் கடுஞ்சொற்களைக் கொட்டி, பெண்ணைக் காயப்படுத்துவதை, களங்கப்படுத்துவதைக் காணப் பொறுக்கவில்லை. நாமும் மனிதர்கள். மனித நேயம் வதைக்கப்படும் பொழுது மெளனமாக இருக்க முடியவில்லை. புதிதாக என்ன புலம்பல் என்று சிலர் முணங்குவது கேட்கின்றது. ஆராய்ச்சியாளர்கள் இக்காட்சிகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் முழுமையாக இல்லை. இராமாயணத்தில் அன்று முதல் இன்று வரை வாலி வதைக்கும், சீதையின் அக்கினிப்பிரவேசத்திற்கும் தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. இராமாயணம் எல்லோராலும் மதிக்கப்படும் ஓர் இதிகாசம். சோதனைகள்வரினும் நேர்மையில் நிமிர்ந்து நிற்கும் ஓர் மனிதனின் காவியன் என்று கூறப்படுகின்றது. அந்த மனிதன் அசாதாரணமாகக் கீழிறங்குவது, பாத்திரப்படைப்புடன் பொருந்தவில்லை. அதற்குரிய காரண காரியங்களை அலசிப் பார்ப்பதில் தவறில்லை. இயல்பாக அக்காட்சி சேர்க்கப்பட்டதா அல்லது இடைச்செருகலா என்று ஆராய்வது அர்த்தமுள்ளது. பெரிய ஆராய்ச்சியாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். இதுவரை என் கேள்விக்கு விடை காணாத ஒன்றினையே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இராமாயணத்தை இலக்கியமாகக் கருதியே என் கருத்துக்களை தெரிவிக்கின்றேன். பரிவும். பக்தியும் ஒதுக்கி வைத்து, நடுநிலையின் நின்று பார்க்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

Fig. 1
Seetha’s Agni Piravesam

இராமன், இராவணன் போர் முடிந்துவிட்டது. சீதைக்குச் செய்தி சொல்லி அனுப்பவேண்டும். மாயச்சூழ்நிலைகளுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சீதா, செய்தியை நம்பவேண்டும். ஏற்கெனவே தூது சென்றவன் அனுமன். சொல்லின் செல்வன் அவன். அனுமனைக் கூப்பிட்டு நடந்தவைகளைச் சொல்லிவிட்டு வரும்படி கூறுகின்றான். செவ்வனே சிந்திக்கும் நிலையில் அப்பொழுது இராமன் இருந்தான்.
சீதையைச் சிறை எடுத்தவன் இலங்கை மன்ன்ன். சிறை பிடிக்கப்பட்டவளை அந்நாட்டு மன்னனே மீண்டும் உரியவனிடம் சேர்ப்பதே சிறப்பு. தற்போது நாட்டுமன்னனாக இருப்பது விபீஷணன், இராமன் எப்படியெல்லாம் சிந்திக்கின்றான. விபீஷணனை அழைத்து, “வீடணா, சென்றுதா, நம் தோகையை சீரோடும்” என்கின்றான். அப்பப்பா, மனைவிமேல் எவ்வளவு அக்கறை; அசோகவன வாழ்க்கையில் நைந்து போயிருக்கும் சீதையைக் காண அவன் மனம் துணியவில்லை. அதனால் தன் அன்புக்குரியவளைச் சீராகக் கூட்டிவரும்படி சொல்லுகின்றான். எப்பேர்ப்பட்ட கணவன். சீதையைத் தவிர வேறு யாரையும் சிந்தையால் தொடாதவன் இராமன். கம்பனாயிற்றே… நாயகனின் உயர்வைக் காட்டும்விதம் மிக மிகச் சிறப்பானது. இராவணன் எத்தனையோ உருமாறி சீதையைக் கவரமுயற்சிக்கின்றான். இராமன் வடிவில் சென்றபொழுது “இவள் மாற்றான் மனைவி அணுகுவது தவறு” என்று உணர்ந்ததாக இராவணனையே சொல்லவைத்தானே கவிஞன்.. கோசலை மைந்தன் குணம் மாறிப் பேசப் போகின்றான். அதனால் குறை கூறுவார்களே என்ற தவிப்பிலே தாயைப் போல அந்த நீலவண்ணச் செம்மலை உயரத்தில் காட்டுகின்றானோ… இராமனின் தெளிவு எப்பொழுது கலக்கமுற்றது…? ஏன்…?
அசோகவனத்திற்குச் சென்ற விபீஷணன் இராமனின் செய்தியைச் சீதையிடம் கூறியபொழுது தான் இருக்கும் நிலையிலேயே வருவது சாலச்சிறந்தது என்கின்றாள். உற்றவனைப் பற்றியும், உலகைப்பற்றியும் தெரிந்த பெண்ணாகப் பேசுகின்றான். அதனால்தான் முதலில் அனுமன் தூது வந்த பொழுதே, தன்னை இராவணன் நிலத்துடன் பெயர்த்து அவளை எடுத்து வந்ததாகக் கூறினாள். வால்மீகியினின்றும் கம்பன் மாற்றி அமைத்த காட்சி இது. கணவனின் குறிப்பு என்று விபீஷணன் கூறவும் சீதையால் மறுக்க முடியவில்லை. தன்னைச் சீராக்கிக் கொண்டு புறப்படுகின்றாள். இனி தொடரும் காட்சிகளைக் கவிஞனின் ஓவியத்தில் விளக்கமாகப் பார்க்கலாம்.
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆயக் கைச்சிலை நின்றானைக் கண்ணுற்றாள். உடனே அப்பெண்ணரசியின் ஏக்கம் நீங்குகின்றது. “இனி இறப்பினும் நன்று” என நினைக்கின்றாள். அசோக வனத்தில் சீதை இருந்த நிலை உருக்கமானது.
“விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துவங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்,
அழுதல், அன்றிமற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்”

எப்பேர்ப்பட்டத் தணலில் சுருண்டு கிடந்த பூங்கொடி, தன் கைபிடித்த காவலனைக் காணவும் “கண்டதே போதும்” என எண்ணுவது அந்தச் சோர்ந்து போன மனத்தின் இயல்பாகத்தானே இருக்க முடியும்…? இது பெண்மனம்.
இராமனின் நிலை என்ன…?
”கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை
பொற்பினுக்கு அழகினை ” அத்தலைவனும் நோக்கினான்.
அன்று மிதிலையில் அவள் நோக்க, அண்ணலும் நோக்கப் பார்வைகளின் சங்கமத்தில் இதயங்களின் பரிமாற்றம் நிகழ்ந்தது. இன்று பார்வைகள் மோத தீப்பொறி பிறந்தது. துடிப்புடன், தூய்மையுடன் ஏற்பட்ட சந்திப்பில் குழப்பம் எப்பொழுது நிகழ்ந்தது…? அவனைக் கொதிக்க வைத்தது எது…? நெருப்பு மொழிகள் உதிர்க்க ஆரம்பித்தானே, ஏன்…?
“அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?” என்று குற்றம் சாடுகின்றான். அரக்கன் மாநகரில் அவள் சிறை வைக்கப்பட்டிருந்தாள். இதில் அவள் குற்றம் என்ன…? ஒழுக்கம் எங்கே பாழ்பட்டது…? இராவணன் மேல் பட்ட காற்று அவள் மேல் பட்ட்தால் அவள் கற்பு போய்விட்ட்தா..? இராவணன் பார்வை பட்டதால் அவள் புனிதத் தன்மை போய்விட்டதா…? அம்ம்மா, எப்பேர்ப்பட்ட பழி. சீதை செத்திருக்கலாம். உலகம் என்ன கூறியிருக்கும், “என்ன நடந்ததோ, கற்பிழந்திருக்கலாம். அதனால் அவள் செத்திருக்கலாம்” என்று பழி சுமத்தாதா…? இறுதி மூச்சுவரை கற்பினைக் காட்டவல்லவோ உயிர் வைத்திருந்தாள்..? சீதையை மீட்க அவன் வரவில்லையாம். தன்னைப் பிறர் குறைகூறக் கூடாதென்பதற்காகவே அரக்கர் படை அழிக்க வந்ததாகக் கூறுகின்றான். தொடர்ந்து பேசுகின்றான்.
“மருந்தினும் இனிய மண்ணுயிரின் வான் தசை
அருந்தினையே, நறவு அமை உண்டியே;
இருந்தினையே, இனி எமக்கு ஏற்பன
விருந்து உளவோ? உரை”
அப்பப்பா, எப்பேர்ப்பட்ட கொடிய வார்த்தைகள். சீரோடு கூட்டிவரச் சொன்ன சிந்தை எங்கே போயிற்று…? அவள் உயிருடன் இருந்ததே தவறாகப் படுகின்றது. கணவனைப் பிரிந்து, கருத்திலே கணவனையும், கண்களில் கண்ணாளரையும் சுமந்து அரக்கியர் மத்தியில் வாழ்ந்த அந்தக் கற்புக்கனலை, இராவணனின் மாயச்சுழல்களில் சுருண்டு விடாமல் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த உத்தமியைப் பார்த்து, “இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?” என்று நச்சுப் பாணத்தால் அம்மலர்க்கொடியை அடித்து வீழ்த்திவிட்டான்.
இவ்விடத்தில் இன்னொரு நிகழ்வினை நினைவு கொளல அவசியமாகின்றது.
மிதிலைக்கு நுழையும் முன்னர் அகலிகைப் படலம் வருகின்றது. கெளதமனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள் மீது ஆசை பிறந்துவிட்டது. பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த்தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள்நுழைந்து அகலிகையைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் தன் கணவன் அல்லன் என்பதை விரைவில் உணர்ந்தபொழுதும் அவனை ஒதுக்கவில்லை.
“புக்கவ ளோடும் காமப் புதுமணத் தேறல்
ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்
தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்”
அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான்.
“நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக”
“மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து”
அன்று நடந்தது என்ன. இன்று நடப்பது என்ன…? மனத்தாலும் காயத்தாலும் பழுதுபட்டவள் அகலிகை. அவளைப் பிழை இலாதவள் என்று கூறும் இராமன் இன்று சீதையிடம் என்ன பிழை கண்டு சேற்றை அந்த மாசிலா மாணிக்கத்தின் மீது வீசுகின்றான். இராமன் கோபத்தில் வாய்தவறிப் பேசிவிட்டதாக ஒரு சிலர் கூறுவர். ஒரு வார்த்தையல்ல, காட்டாற்று வெள்ளமென வார்த்தைகளல்லவா பேசினான்…? கவிச்சக்கரவர்த்தி கம்பன் சொல்லில் மட்டுமல்ல எழுத்திலும் விளையாடும் வித்தகன், வல்லினத்தில் தாடகை வருகை, மெல்லினத்தில் ஆற்றின் ஓட்டம் காட்டுபவன். பின்னால் இராமன் செய்யப் போகும் தவறை பெரிது படுத்தாமல் இருக்க அவன் பெண்ணிட்த்தில் கருணை உள்ளவன் என்பதைக் காட்ட இக்காட்சி ஒட்டிக்கொட்தோ…? அதிலும் சரியாக மிதிலைக்காட்சிக்கு முன் இதை அமைத்திருப்பது கவிஞனின் சாமர்த்தியம்.
“கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன்”
இராமனுக்குப் புகழாரம் சூட்டப்படுகின்றது. அந்த மைவண்ணன் மனநிலை பாதிக்கப்பட்டு இன்று அவன் கொட்டும் நெருப்பு மழையைப் பார்ப்போம்.
“கலத்தினின் பிறந்த மா மணியின் காந்தறு
நலத்தின் நிற் பிறந்தன நடந்த; நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள்கில் நீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ.”
சீதை எல்லோரும்போல் கர்ப்பத்தில் உதித்துப் பிறக்காதவள். மண்ணில் கிடைக்கப் பெற்றவள். அவள் ஒரு புழு. அவன் உயர்க்குலமாம். அவள் தாழ்ந்த பிறப்பாம். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். அப்பொழுது தெரியாத வேற்றுமை இப்பொழுது தெரிகின்றது.
பெண்மையும், ப்ருமையும், பிறப்பும், கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்,
பெண்மை இல் மன்னவன் புகழின், மாய்த்தலால்.
மகாபாரதத்தில் வரும் நாகாஸ்திரம் இதைவிடக்கொடியதாக இருந்திருக்க முடியாது, தவமாய் வாழ்ந்த பெண்ணரசியைத் தன் சொல்லம்புகளால் துளைத்துவிட்டான். மீண்டும் தொடர்ந்து பேசிகின்றான்.
”அடைப்பர் ஐம்புலன்களை; இடை ஒரு பழிவரின் அது துடைப்பர், தம் உயிரோடும் குலத்தின் தோகை மார்” உயர்குடியில் பிறந்தோர் பழிவரின் உயிர் துறப்பராம். உயர்குடியில் பிறந்த பெண்கள்தான் ஒழுக்கமுடையவர்களா…? ஐம்புலன்கள் அடக்கி வாழ்வது அவர்கள் மட்டுமா…? பழிவரின் உயிர்மாய்ப்பது அவர்கள் மட்டுந்தானா…? ஒரு மன்ன்னாகப் போகின்றவன் வாயில் இத்தகைய வார்த்தைகள் வரலாமா..? இராமன் திருமாலின் அவதாரம். மனித அவதாரம் என்று கூறுவர்ல் மனிதனுக்குரிய ஆசாபாசங்களைப் பல சந்தர்ப்பங்களில் பார்க்கலாம். மனித பலஹீனத்தின் உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டான்.
ஆசையின் பல குழந்தகளில் கோபமும் பொறாமையும் அடங்கும். இங்கும் ஒரு காட்சியை ஒப்பிட்டுக் காட்டவிரும்புகின்றேன். நாயகர்களை ஒப்பிடவில்லை என்று முதலிலேயே கூறிவிடுகின்றேன். உணர்வுகளின் போக்கைத்தான் விளக்குகின்றேன்.
சிலப்பதிகாரத்தில் இந்திர விழாக்காட்சி.
மாதவி மேடைக்கு வரவும் வந்தவர்களின் பார்வைகள் அவள் மேனியழகில் படர்கின்றது. கோவலன் கொதித்துப் போகின்றான். அவள் ஒரு ஆடல் கணிகை. மன்னனின் சட்டப்படி அவள் பொது மக்களின்முன் ஆடியாக வேண்டும். ஆட ஆரம்பித்தவுடன் அந்தக் கலையுடன் ஒன்றிப்போகின்றாள். அதுவும் கலைஞனின் இயல்பு. அவள் தனக்கு மட்டும் சொந்தமானவள், அவள் அழகு, ஆடல், பாடல் எல்லாம் அவன் மட்டும் ரசிக்க வேண்ட்ம். ஆடி முடித்து வருகின்றாள், கோவலனும் அவள் மனம் மகிழவே அவளிடமிருந்து யாழ் வாங்கிக் கானல்வரி பாடுகின்றான். குழம்பிய மனம். பொறாமையில் கொதித்துப் போயிருக்கும் இதயம். அங்கிருந்து இனிய நாதமாக ஆரம்பித்து, குழப்பங்களைக் கொட்டி, இறுதியில் அன்னத்தை நோக்கி,
”:ஊர்திரை நீர்வேலி உழக்கித்திரிவாள்பின் சேரல் நடை ஒவ்வாய்” என்று மாதவியின் பிறப்பைச் சுட்டிக்காட்டி முடிக்கின்றான். கற்புக்கரசி மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் பன்னிரண்டு ஆண்டுகள் உடன் வாழ்ந்திருக்கின்ரான். மணிமேகலை என்ற பெண் மகவைப் பெற்று பெரு விழாவும் நடத்தியுள்ளான். அப்பொழுது காணாத குலக்குணத்தை இப்பொழுது என்ன புதிதாகக் கண்டுவிட்டான் மனிதன் கோபவயப்படும்பொழுது தன் சுய அறிவை இழந்து விடுகின்றான்.
இன்றும் நம்மிடையே காணும் காட்சி… கணவனுக்குக் கோபம் வந்தவுடன் “உன் குடும்ப லட்சணம் தெரியாதா…? உன் ஊர் புத்தி தெரியாதா…?” என்று மனைவியைக் கடிந்து கொள்வது தொடர்து வரும் கதை.
அன்பு மனிதனைச் செம்மைப்படுத்தும். ஆனால் ஆசை மிஞ்சும்பொழுது மனிதனை விலங்காக்கிவிடும். ஆசையின் பிள்ளைகள்தான் கோபமும், பொறாமை, வெறுப்பு எல்லாம்.
சீதையைக் காணும் முன் அன்பின் பிடியில் இராமன் இருந்தான். அக்கறையுடன் அவளைச் சீரோடு கூட்டி வரச் சொலின்றான். அழகு மயிலாய் வந்தபொழுதோ ஆத்திரப் பேய் பிடித்துக்கொண்டது. “இந்த அழகை இராவணனும் ரசித்துவிட்டான். எத்தனை மாதங்கள் சிறை வைத்திருந்தான்… ஓடி ஓடிப் பார்த்திருக்கின்றான். நெஞ்சிலே அவளைச் சுமந்திருந்தானே… மேனியழகில மயங்கி எவ்வாறெல்லாம் கற்பனை செய்திருப்பான்….” இராமனின் மனம் குரங்காய்க் குதிக்க ஆரம்பித்துவிட்டது. குரங்கினமே அவனைத் தொழுது நிற்க, அவன் தன மனத்தை அடக்கத் தவறிவிட்டான்.
இராமனின் மனநிலையை மண்டோதரி வாயிலாகக் கம்பன் வெளிப்படுத்துகின்றான்.
மாண்டுவிட்ட மணாளனைக் காண இராவணன் மனைவி மண்டோதரி போர்க்களம் வருகின்றாள். விழுந்து கிடக்கும் கணவனைக் கண்டு கதறுகின்றாள். இராவணன் உடபில் எப்பகுதியிலும் சீதையின் நினைவு இருக்கக்கூடாதென்று உடலையே சல்லடையாக்கி இருந்தான் இராமன்.
”கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்குமோ எனக்கருதி, உடல் புகுந்து, தடவினவோ ஒருவன் வாளி”
மண்டோதரியின் வார்த்தைகளில் இராமனின் மனத்தைப் படம் பிடித்துக்காட்டிவிட்டான் கவிஞ. சாதாரண மனித நிலையிலும் தாழ்ந்துவிட்டான் இராமன். சீதை சிறை பிடிக்கப்ப்பட்ட மூல காரணம் யார்…? சூர்ப்பனகை வருகின்றாள். சீதை இருப்பதால் இன்னொரு பெண்ணைச் சேர்க்கமுடியாதது போன்ற ஓர் உரையாடல் நிகழ்த்தியது யார்…? சீதை இல்லாவிட்டால் இராமன் கிடைப்பான் என்று வந்தவள் நினைக்க சீதை காரணமில்லை. கோபக்கார லட்சுமணனிடம் அனுப்பியது யார்…? மூக்கரிபட்டு, முலையிழந்து ஓர் சகோதரி முன் வந்தால் அண்ணனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்…? அவனுக்குப் பழி வாங்கும் உணர்ச்சி ஏற்பட முதல் காரணம் யார்…? எதையும் சிந்திக்கும் நிலையில் இராமன் இல்லை. விசாரணை இல்லை. பார்த்த்தும் பழி சுமத்திவிட்டான். கட்டிய கணவனே மனைவியை மான பங்கப்படுத்தும் கொடுமை நிகழ்ந்துவிட்டது. நெருப்புக் குழியில் இறங்குகின்றாள். கொதித்துப் போயிருந்த அவள் இதயச் சூடீனில் அக்கினிக்கடவுள் தாங்க முடியாமல் அந்தக் கற்புக் கனலைத் தாங்கிவந்து இராமன் முன் சேர்க்கின்றான். அப்பொழுதும் இராமன் வாத்தைகளைக் கொட்டுகின்றான். சுற்றி நிற்கும் தேவர்கள், முனிவர்கள் சீதைக்காகப் பரிந்து பேசும் சூழ்நிலை பாராட்ட்த்தக்கதல்ல.
இந்த அரங்க நிகழ்வுகளுக்குச் சிலர் கூறும் சமாதாங்களைப் பார்க்கலாம்.
இராமனின் பதட்ட்த்திற்குக் காரணம் ஊர்ப் பழி. வனவாசம் முடியவும் மன்ன்னாகப் போகின்றவன். தன் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாத பதவி. ஊர் கூடியிருக்கின்றது. பலர் முன்னிலையில் பிரச்சினை பேசவேண்டி வந்துவிட்டது. வந்திருப்பவள் ஓர் பெண். அதிலும் சிறை பிடிக்கப்பட்டு பல மாதங்கள் துன்பத்தில் உழன்றவள். மென்மையான அணுகுமுறை வேண்டும். இராமன் மன்னன் மட்டுமல்ல. அவள் கணவன். இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கக் கடமைப் பட்டவன். இத்தனை பொறுப்புகள் அவன் மீது இருக்க அவன் இதனை எப்படிக் கையாண்டிருக்க வேண்டும்…? கணவன் மனைவி உறவில் நம்பிக்க்கைதான் அச்சாணி.
சீதை வந்தவுடன், “பெண்ணே, நான் உன் கணவன். உன் கற்பில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் சிறிது காலம் மாற்றான் வீட்டில் சிறை இருந்துவிட்டாஉ. உன்னை என் மனைவி என்று ஏற்றால், நீ அரசு பீடத்தில் அமரவேண்டியவளும் ஆகின்றாய். அதற்கு உன்னைத் தகுதியானவள் என்று நீ ந்ரூபிக்கவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றாய். நீ குற்றமற்றவள் என்று நிரூபித்தால் மட்டுமே உன்னை நான் ஏற்க இயலும் ” என்று இராமன் பேசியிருக்க வேண்டும்.
மனம், காயம் இரண்டிலும் மாசடைந்த அகலிகையை அவள் கணவன் ஏற்றுக்கொள்ள, “நெஞ்சினால் பிழைபில்லாளை நீ அழைத்திடுக ” என்று வேண்டிக்கொள்கின்றான். அகலிகையை மாசு அறு கற்பின் மிக்க அணங்கினாள் என்கின்றான். ஒரு சமயம் இராமன், சீதையை இழந்தாலும். இலக்குவனை இழந்தாலும், ஏன் தன் உயிரை இழந்தாலும் சத்தியம் தவற மாட்டேன் என்று கூறியவன். அன்று அகலிகையைக் கற்பு மிக்கவள் என்று சொன்னதும், இன்று கற்புக்கனலை எல்லாம் இழந்தவள் என்று கூறுவதும் இராமனைப் பொய்யனாக்காதா…? உலகப் பழிக்குப் பயந்தவ, தன் மனைவிமேல் அவனே சேற்றை அள்ளி வீசலாமா..? சிறை பிடிக்கப்பட்ட்து ஊர்ப்பழிக்கு வித்தானால் அவன் பேச்சும், அதற்குத் தண்ணீரும் உரமும் போல் ஆகாதா…? “நெருப்பில்லாமல் புகையுமா” என்று முணுமுணுக்கும் மனத்திற்குத் துணை போனதால்தான் மீண்டும் புரளி ஏற்பட்டு, கர்ப்பிணிப் பெண் காட்டிற்குப் போக நேர்ந்தது. மகாபாரதத்தில் திரெளபதியைத் துச்சாதன்ன் சபைக்கு இழுத்து வருகின்றான்/ இங்கே சிங்காரித்து மரியாதையுடன் அழைத்து வரப்ப்படுகின்றாள்/ பலி மேடைக்குச் செல்லும்முன்னர் ஆட்டினைச் சிங்காரித்து அழைத்து வருவதைப் போல் அழைத்து வந்து ஓர் அபலைப் பெண் அவமானப்படுத்தப்பட்டாள். மானமிழந்தவள் என்ற குற்றச்சாட்டிற்காக திரெளபதி சபைக்கு வரவில்லை. அவள்மேல் கணவன் குற்றம் சுமத்தவில்லை. அங்கு குற்றவாளி தர்மர். அதாவது அவள் கணவன், இங்கு நிலையே வேறு. தேவரும் முனிவரும் மற்ற பெரியவர்களும் ஊர்ப் பொது மக்களும் கூடியிருக்கும் சபையில் திருமணம் நிகழலாம். ஆனால் கணவனே, “நீ எல்லாம் இழந்துவிட்டாய். எனக்களித்த மிச்சம் ஒன்றும் இல்லை. நீ செத்திருக்கவேண்டும். நீ மண்ணில் நெளியும் புழு. நாங்கள் உயர் குலம். பெண்ணின் பெருமை, கற்பின் திண்மை, ஒழுக்கம், சீர்மை எல்லாம் உன் ஒருத்தியால் பாதிக்கப்பட்டுவிட்டது .” என்று ஊர்ச் சபையில் கூறும் கொடுமை வேறு எங்கு நிகழ்ந்திருக்க முடியும்…? மகாபாரதத்தில் கண்ணன் துயில் கொடுத்து மானம் காத்தான். மனைவி மீது அங்கு களங்கம் சுமத்தப்படவில்லை. இங்கு கணவனே மானபங்கப்படுத்திவிட்டான்.
இன்னொருசாரார் கூறும் சமாதானம்… கானகத்தில் சீதை இலக்குவனைச் சொல்லால் சுட்டாள். சொல்லின் வலிமையை சீதை உணரவேண்டுமென்றுதான் இராமன் அவ்வளவு கடுமையாகப் பேசினான் என்பது. சீதை-இலக்குவன் உரையாடல் இருவர் மத்தியில் நடந்தது. இதற்குப் படிப்பினையாக இதனைக் கூறுவது சரியல்ல. இது நடுத்தெரு நிகழ்ச்சி. பல மனங்களில் விஷ வித்து விதைக்கப்பட்ட களமாகிவிட்டது. தீர ஆராயாமல் தீர்ப்பு வழங்கியதற்குத் தன் உயிரை நீக்கிக்கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் ஓர் அவதாரப் புருஷன் அல்ல. மிகச் சாதாரணமான மன்னன். இங்கு உதாரண புருஷன் முறையாக விசாரிக்காமல் தீர்ப்பு கூறிவிட்டான்.
ஆக, இராமன் தன் மன்னன் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்படுதுடன், பல ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியைப் புரிந்து கொள்ளாமல் காப்பாற்ற வேண்டியவனே பெண்மைக்குப் பாதகம் செய்த கணவனும் ஆகிவிட்டான்.
இன்னொருவர் என்னிடம் நேரில் கூறியது, “தசரதன் உயிர்விடும்பொழுது கைகேயி, பரதன் உறவுகளை உதறிவிட்டதாகக் கூறி மறைந்தார். இராமன் ஆளும் இராச்சியத்தில் யாரும் மனக்குறையுடன் இருக்கக்கூடாது என்று இராமன் நினைத்தான். தயரதன் மீண்டும் மண்ணுலகம் வந்து நடந்துவிட்ட தவறுகளை மன்னிப்பதுடன், வெறுப்பு மாறி மீண்டும் அவர்களைக் குடும்பத்தில் சேர்க்கவேண்டும் என்ற விருப்பத்தாலும் தொடர்ந்து சீதையக் காயப்படுத்தினான்” என்று கூறுவது பொருந்தவில்லை. மனப்புண்ணுடன் சீதை வாழ்ந்த்தால்தான் பூமி வரண்ட்து. ஆனால் அப்பழியும் சீதைமேல் விழுது கானகத்திற்குக் கர்ப்பிணிப் பெண்ணாக நுழைய நேரிட்டது. எல்லோருக்கும் முன்னும் வசைச் சொற்களை ஒரு கணவன் உதிர்த்தது அவளைச் சிதற அடித்துவிட்டது. மனிதத்தன்மையற்ற செயலை மறக்க முடியாது.
அக்கினிப்பிரவேச அரங்கினுள் நுழைந்து வந்திருக்கின்றோம்.
இராமன் இப்படி பேசியிருக்க முடியுமா.. என்ற கேள்வியுடன் நம் சிந்தனையைத் தொடர்வோம். சில குறும்புத்தனம் செய்திருக்கின்றான். சின்னத் தவறுகளும் செய்திருக்கின்றான். துன்பம் நேர்ந்தபொழுது துவண்டு போயிருக்கின்றான். அவன் பதினான்கு ஆண்டுகள் கானகத்திற்குப் போகவேண்டும் என்று அறிந்தபொழுதும் அவன் முகம் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரைபோல் மலர்ந்தே இருந்தது. வாலியை வதைக்கு முன்னர் அவன் தயன்ங்கினான். விழுந்து கிடந்த வாலி சொல்லம்புகளால் இராமனைத் தாக்கியபொழுது பொறுமையாகப் பதிலிறுத்தான். உயிர்போகும் முன்னரே தந்தைக்கு நிம்மதி தர் அங்கதனை கெளரவமாக ஏற்றுக்கொண்ட கருணை மனம் படைத்தவன் இராமன். சரணம் என்று வந்தவர்களை அணைத்துக் கொள்ளும் பண்பாளன். ஓடக்காரன் குகனோ, வானர சுக்கிரீவனோ, எதிரி முகாமிலிருந்து வந்த விபீடனோ, எல்லோரையும் தன் சகோதர்ர்களாக ஏற்றுக்கொண்ட பாசமனம் படைத்தவன், தந்தை சொல் மிக்க மந்திரம் வேறு கிடையாது. தாடகை ஓர் அரக்கியென்ராலும் ஓர் பெண் என்பதால் கொல்லத்தயங்கிய மென்மை இதயம் கொண்டவன். பக்தனை அணைத்து ஆசியளிப்பதாக இறைவனைக் காட்டுவதைப் பார்த்திருக்கின்றோம். இராமனோ அனுமனின் பிடிகளுக்குள் இன்பம் கண்டவன். அனுமனிடம் எப்பொழுது கடனாளியாக இருக்க விருப்பம் தெரிவித்தவன். நன்றியுணர்விற்கு அவன் கொடுத்த மரியாதை. அவன் செய்த சிறு பிழை சூர்ப்பனகையை இலக்குவனிடம் அனுப்பியது. அரக்கியின் தொடர்ந்த பயமுறுத்தலில் அஞ்சிப்போன சீதையைப் பார்க்கவும் அவசரப்பட்டுவிட்டான். ஆசையில் ஏற்பட்ட சறுக்கல். போர்க்களத்தில் கூட எல்லாம் இழந்து நின்ற இராவணனைப் பார்த்து “இன்று போய் நாளை வா” என்று கூறிய பெருந்தகையாளன். கதையின் ஆரம்பித்திலிருந்து எங்கும் அவன் கொதித்து எழுந்து நாம் பார்க்கவில்லை. கடுஞ்சொல் பேச்சும் கேட்கவில்லை. அமைதியானப் பாத்திரப் படைப்பாய்க் கதை முழுவதும் இயங்கிவந்த இராமன், இந்த அக்கினிப்பிரவேசக் காட்சியில் பொருந்தவில்லை. குறைகளை மொத்தக் குத்தகை எடுத்த ஓர் ஆத்திரக்காரனை, அன்பே வடிவான சீதாராமனுடன் ஒன்று சேர்த்துப் பார்க்க இயலாது. இலக்கியம் படைப்பவர்களுக்கு இந்த முரண்பாடு நன்கு புரியும். தவறு நிகழ்ந்திருக்கின்றது. அதனையும் முடிந்தமட்டில் பார்க்கலாம்.
இராம கதை, நிகழ்ந்த ஒன்றா அல்லது கற்பனையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். ஆனால் இராமன் வாழ்ந்த காலமும் வால்மீகி வாழ்ந்த காலமும் வேறாக இருக்கலாம். மூலக்கதை முன் வைத்தவர் வால்மீகி. மகாபாரதப்போர் நடந்த காலத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு எழுதியதைப் பார்க்கின்றபொழுது ஏறத்தாழ கி.மு.3139 என்று குறித்துள்ளார்கள். இதற்கும் முன் வேதம் தோன்றிய காலம், அதற்கும் முன் இராமாயணம் நிகழ்ந்திருக்க வேண்டும். 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சமுதாய அமைப்பு, அவர்களிடையே இருந்த கலாச்சாரங்களை இராமாயண நிகழ்வுகளுடன் முடிந்த அளவு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மனிதன் விலங்கினைப்போல் வாழ்ந்து பின்னர் படிப்படியாய் நாகரீகம் அடைந்து, கூட்டு வாழ்க்கை சமுதாயமாக மாறி, தனக்கென ஓர் நிறுவனம் அமைத்துக் கொண்டான். அதுவே குடும்பம் என்று ஆயிற்று. தன் உழைப்பின் பலனைத் தன்னுஐய வாரிசுகளுக்குச் சேரவேண்டுமென்ற கருத்தில், பொது நிலையிலிருந்த பெண்ணை உற்பத்திக் காரணியாய் மாற்றி, குடும்பத்தில் தலைவனுக்குத் தலைவியாகும் தனி நிலை பெற்றாள். குடும்பத்தலைவிக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தன் கணவனின் குறைகளைக் கடவுளிடம் கூறினால்கூட அவள் கற்புக்குக் குறைவு. சங்க இலக்கியத்தில் ஓர் பெண் எந்த அளவு பேசலாம் என்று பல பாடல்களில் குறிப்பு வருகின்றது. அதே போன்று உயர்குலப் பெண்டிற்குக் கற்பு இன்றியமையாதது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குடிப்பிறப்பில் பிரிவினைகளும் காணப்படுகின்றன.
இராமனின் கதை நிகழ்வுக்குப் பின்னர் மகாபாரதக் கதை தொடர்கின்றது. அப்பொழுது இருந்த சமுதாய அமைப்பை அக்கதை கொண்டே பார்க்கலாம். மன்னர் திருதராட்டிரரும், பாண்டுவும் வியாசருக்குப் பிறந்தவர்கள். பாண்டவர்களும் பாண்டுவிற்குப் பிறந்தவர்களல்ல. திரெளபதிக்குக் கணவர்கள் ஐவர். அக்காலத்தில் இவைகள் உயர்குடியில் நடந்தவைகள். அப்பொழுது ஊர் அவர்களைப் பழிக்கவில்லை. அன்றைய சமுதாய அமைப்பினை வைத்துக் கருத்துக் கூறவேண்டும். இராமாயணம் இதற்கு முன் நிகழ்ந்திருக்கின்றது. மாற்றான் சிறையில் இருந்த்தால் மாசுபட்டவளாக ஊர் பழி சுமத்தி இருக்காது. துச்சாதனன் திரெளபதியைத் தொட்டு, பிடித்து இழுத்து வந்தான். அதனால் அவள் கற்பு போய்விட்டதாகக் குறை கூறவில்லை. அதனால்தான் வால்மீகியும் சீதையைத் தொட்டுத்தூக்கிச் சென்றதாக எழுதியுள்ளார். “கற்பு” எனும் கட்டுப்பாடு மகாபாரதக் காலத்திற்குப்பின் வந்திருக்கவேண்டும். எனவே அக்கினிப் பிரவேச அரங்கத்தில் பிற்காலச் சேர்க்கைகள் இருப்பது புலனாகின்றது. வால்மீகி இராமாயணத்தில்
“இனி உன்னைச் சேர்த்துக்கொள்ளமுடியாது. உன் விருப்பம்போல் யாருடனும் இருக்கலாம்” என்று இராமன் இறுதியாக சீதையிடம் கூறுகின்றான். காலத்தை ஒட்டிய பேச்சு.
சீதை இராமனைப்போல் அமைதியான பெண்ணல்ல. நினைத்ததைப் பேசிவிடுவாள், இராமன் காட்டிற்குப் புறப்படும் தருணத்தில் தானும் உடன் வருவதாகப் பிடிவாதம் பிடிக்கின்றாள். இராமன் தயங்கியபொழுது “நீங்கள் ஆண்வேடம் தரித்த பெண்ணென்று அறியாமல் என் தந்தை உங்களுக்கு என்னை மணமுடித்து வைத்துவிட்டார் ” என்று கூறுகின்றாள். இலக்குமனிடம் வரம்பு மீறிக் கடுமையாகப் பேசுகின்றாள். அக்கினி பிரவேசக் காட்சியில் இராமனுக்கு விடைகள் அளித்தபின் முடிவில் “பெண் மனத்தை இவ்வுலகில் எந்த ஆண்மகனுக்கும் புரிந்து கொள்ளத் தெரியாது ” என்று பலருக்கு முன்னிலையில் தன் அபிப்பிராயத்தைச் சொல்லுகின்றாள். பெண்ணுக்குப் பேச்சு சுதந்திரம் இல்லாக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் இத்தகைய உரையாடல்கள் இருந்திருக்க முடியாது.
வானத்திலிருந்து மழைத்துளிகள் மண்ணை நோக்கி வரும்பொழுதே காற்றில் உள்ள தூசுகளுடன் கலந்து, மண்ணிலே ஆறாய் ஓடும்பொழுது பாதையில் இருப்பவைகளையும் அள்ளி அணைத்துக் கொண்டு ஓடுகின்றது. கதை நிகழ்ந்த காலத்திலிருந்து செவிவழிப் பயணமாகப் புறப்பட்டு கவிஞனிடம் வந்து சேரவும், கதையில் மனம் பறிகொடுத்தவன், அதனை அலங்கரித்துக் காவியமாக உருவாக்கிவிடுகின்றான். கதை என்றால் உச்சக்கட்டம் வேண்டாமா…? அக்கினிப்பிரவேசம் மேடை நாடகமாக பரபரப்புடன் உருவாக்கப்படிருக்கலாம். சீதாயணம் என்ற பெயர் வைக்க வால்மீகி விரும்பியதாக ஒரு செவிவழிச் செய்தியுண்டு. சீதையின் மேலுள்ள பரிவிலே காட்சியை மிகைப்படுத்தியிருக்கலாம். எழுத்தாளன் எழுதிக்கொண்டிருக்கும்பொழுது முற்றிலும் தன்னை அவன் இழந்துவிடக்கூடாது. இராவணன் பாத்திரத்தன்மையை மறக்கும் அளவு அவர் போயிருப்பாரா…? எனவே பல இடங்கள் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி. வால்மீகி தன் காலச் சூழலுக்குள் பழங்காலக் கதையை அமைத்துவிட்டாரா..? தன்னையும் ஒரு பாத்திரமாகக் கதையில் அமைத்துக் கொள்வது படைப்பாளிக்குள்ள சலுகை. உத்திரகாண்டங்கூட ஒட்டப்பட்ட பகுதியாக இருக்கலாம்.
தந்தை-பிள்ளை உறவிற்கு இராமாயணம் என்றாலும், இல்வாழ்க்கையில் ஏகபத்தினிவிரதன் என்பதற்கு இராமன் ஒருவன் தான் இன்றும் எடுத்துக்காட்டாகப் பேசப்பட்டுவருகின்றது. அன்றும் இன்றும் ஆணாதிக்க உலகில் அவர்களுக்கு நிறைய சலுகைகள் வைத்துக்கொண்டு உலா வரும்பொழுது, எடுத்துக்காட்டாய் விளங்கும் இராமனை இந்த அக்கினிப் பிரவேசக் காட்சியில் அமிழ்த்திவிடக்கூடாது. ஆழ்ந்து சிந்திக்கும் தலைமுறை உருவாகிவிட்டது. இதுபோன்ற இதிகாசத்தில் கேள்விக்குரிய காட்சிகளுக்குச் சரியான விளக்கங்களை ஆராய்ந்து தரவேண்டியது சான்றோர்களின் கடமையாகும். இன்றும் நம்மிடையே சிறந்த ஆராய்ச்சியாளர்கள் இருக்கின்றனர். இதிகாச இராமன் தன் மனைவியை இப்படி பொது இடத்தில் கேவலப்படுத்தியிருக்கமாட்டான். இது என் உணர்வு சொல்லுகின்றது. உண்மையை உணர்த்த சான்றுகள் வேண்டும். கண்ணில் துரும்பு இருந்தால் உறுத்திக்கொண்டிருக்கும். கண்ணில் துரும்புடன் இருப்பது பொறுக்க முடியவில்லை. அறிஞர்கள் முயன்றால் துரும்பை எடுத்துவிடமுடியும். என் பணிவான வேண்டுகோளைச் சான்றோர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

++++++++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian”

Series Navigation