ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

ஆசாரகீனன்


சென்ற வாரம் ஃபூகோவின் (Foucault) முறைகளின் வழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நூலைப் பற்றிய ஒரு கட்டுரையைத் தமிழாக்கம் செய்திருந்தேன். அத்துடன் ஃபூகோ பற்றி சில விளக்கங்களை எழுதுவது அவசியம் என்று தோன்றியது. இது மிக எளிமையான ஒரு குறிப்பு. ஃபூகோவை ஆழமாக உழுது அறிபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமது அறிவை நம்முடன் பகிர்ந்து கொள்ள முன் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இது எழுதப்படுகிறது. சில நேரம் சிறு மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதில்லையா ?

ஃபூகோவையே நேராகப் படிப்பதுதான் சாலச் சிறந்தது. ஆனால், அப்படிப் படித்தவர்கள் பல பேர் புத்தி தடுமாறி உலகெங்கும் உலவுகிறார்கள் என்று பல்கலைக்கழகம் சார்ந்த நண்பர்கள் கேலி செய்வதுண்டு. சற்று கடினம்தான். அதிலும் அவர் ஃபிரெஞ்சு மொழியில் எழுதியதை ஆங்கிலத்தில் கரடு முரடாக மொழி பெயர்த்துத் தள்ளி இருக்கிறார்கள். மூலமே கரடு. மொழியாக்கம் இன்னமும் பிரச்சினையைக் கூட்டுகிறது. இது தவிர ஃபூகோ, நமக்கு இதுகாறும் புரிந்த உலகின் பெரும் பகுதியை, அதாவது கருத்துலகின் பெரும் பகுதியைப் பயனற்ற அதிகார விளையாட்டு என்று ஒதுக்கி விடுகிறார். பதிலுக்கு என்ன அமைப்பது அல்லது நாம் எங்கே போவது என்று நமக்குக் கேள்வி எழுந்தால் அதற்கு அவரிடம் இருந்து உருப்படியாக பதில் எதுவும் கிட்டுவதாகத் தெரியவில்லை. அவர் எழுதிய எல்லாவற்றையும் நான் படிக்கவில்லை என்பதை முதலிலேயே சொல்ல வேண்டி இருக்கிறது. அவருடைய முக்கியப் புத்தகங்கள் எனக் கருதப்பட்டவை பற்றிய பட்டியல் சென்ற வாரம் தரப்பட்டிருந்தது. அவர் அப்படியொன்றும் ஏராளமாக எழுதித் தள்ளவில்லை. எனக்கு ஃப்ரெஞ்சு தெரியாததால், மொழி பெயர்க்கப்படாத நூல்களில் என்ன எழுதியிருக்கிறார் என்பது சுத்தமாகத் தெரியாது. ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் அவர் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை கருத்துலகில் பயணம் போகிறார்.

முன்னுக்குப் பின் முரண் என்பதை விட, வெளியிலிருந்து உள் வரை பயணித்திருக்கிறார் எனலாம். அதே நேரம் உள்ளிருந்தும் வெளியைப் பார்க்கிறார். உதாரணமாக ஒரு வரி: ‘ஆன்மா என்பது உடலின் சிறை ‘ ( ‘கட்டுப்படுத்து, தண்டனை கொடு ‘ என்ற நூலில்). ஆனால் மொத்த எழுத்தில் ஆன்மாவைப் பற்றி அதிகம் பேசியதில்லை. உடலைப் பற்றித்தான் பெருமளவும் பேசியிருக்கிறார். இதன் காரணமாகவோ என்னவோ மார்க்சியருக்குப் ஃபூகோவோடு ஒட்டுறவு பின்னர் உண்டாகியிருக்கிறது. அதே போல சுயத்தைப் பற்றிப் பேசி, மற்றவரை எப்படிக் கையாள்கிறோம் என்பதை ஆராய்கிறார். அதாவது, மற்றவரை எப்படிக் கையாள்கிறோம் என்பது சுயத்தை எப்படிக் கைப்பற்றுவோம் என்பதை உணர்த்துகிறது என்று கருதுகிறாரா ? இது எனக்கு இன்னமும் தெளிவாகவில்லை.

இது பற்றியும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. ஃபூகோ தன் வாழ்வில் பல கோணல்களை, திருகலான அனுபவங்களைச் சந்தித்தார். அதனால் அவர் மனநோயாளிகள், பிணிவசப்பட்டோர், சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர், பாலுறவுகளில் வழக்கங்களிலிருந்து மிகவும் விலகியவர் ஆகியோரைத் தம் ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டது இதனால்தான் என்பது ஒரு வாசிப்பு. இது பெரும்பாலும் வழக்கமான இயந்திரத்தனமான மார்க்சிய வாசிப்பு. மார்க்சியத்தின் மையமே இயந்திரமும், இயந்திரத்தனமும் தானே ? இன்னொன்று அவர் தனது சொந்த அனுபவங்களைப் பற்றி அதிகம் பேசியதில்லை, மகிழ்ச்சியோ, துன்பமோ அவற்றை மிகவும் அந்தரங்கமாகத்தான் வைத்திருந்தார். முறைகளைத் தாண்டிய தன் பாலுறவு அனுபவங்களை மறைத்ததில்லை என்றாலும் அவற்றைத் தன் கருத்துலகில் மையமாகவோ, கருது பொருளாகவோ பயன்படுத்தவில்லை என்று சுட்டுபவர்கள், அவருடைய தனிமனித உலகு அவரது பகிரங்க உலகோடு அதிகம் இடையாடவில்லை என்கிறார்கள். அதாவது அவருடைய கருத்துலகை அவரது தனி மனித அனுபவங்களால் எடை போடுவது அவசியம் இல்லை என்பது கருத்து.

இதுவும் மார்க்சியருக்கு ஓரளவு பிரச்சினை ஆகும். பிறரது தனி மனித வாழ்வு, அடையாளங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து தாக்கும் மார்க்சியர்கள், அவர்களது தனி மனித வாழ்வை யாருக்கும் காட்டுவதும் இல்லை, அதன் வழியே அவரது கருத்தாக்கங்களை அணுக நமக்கு வாய்ப்பளிப்பதும் இல்லை. ஒரு காரணம் அவர்களின் ‘எதிர்ப்பாளர்கள் ‘ அமைப்பு அவர்களை வேட்டையாடாமல் இருக்க ‘மறைந்து ‘ வாழ்பவர் என்றெல்லாம் சொல்லி விட முடியும். இது குறித்து தமிழில் அதிகம் விவாதங்களோ அல்லது கருத்து வெளிப்பாடுகளோ இல்லை என்பது ஒரு சுவாரசியமான விஷயம்தான். உதாரணமாக ஜெயலலிதா நேற்று என்ன புடவை உடுத்தினார் அல்லது யார் அவர் காலில் விழுந்தார் என்பதெல்லாம் விலாவாரியாகப் பத்திரிகைகளில் படிக்க முடிகிறது. ஆனால் நல்லக்கண்ணு என்ன் மாதிரி டா குடிப்பார், தோளில் துண்டு போடுவாரா, காலில் பாட்டா செருப்பு போடுகிறாரா அல்லது திண்டிவனம் தொகுதியில் ஒரு செருப்புத் தொழிலாளர் அன்பளிப்பாகக் கொடுத்த காலணியைத் தான் அணிகிறாரா என்றெல்லாம் தமிழ் பத்திரிகைகள் பேசுவதில்லை. மு.க.வுடைய மஞ்சள் துண்டைப் பற்றி மாத்திரம் பத்து பக்கம் எழுதுகிறார்கள். பத்திரிகை நிருபர்கள் கவனிப்பார்களா ? மார்க்சிஸ்டு தலைவர்களின் தலை வகிடு வலப்புறமா அல்லது இடப்புறமா என்று ஏன் எழுத மாட்டேனென்கிறீர்கள் ? கட்சி பொலிட் பீரோவிலிருந்து முன்மொழியப் பட்ட வகிடு இடவகிடா, வலவகிடா அல்லது நடுவகிடா ? பெரிதாகத் துப்பறிந்து செய்தியைச் சுடச் சுடத் தருகிறோம் என்றெல்லாம் மார் தட்டுபவர்களுக்கு இந்தச் சின்ன விவகாரம் கூடச் செய்யத் தெரியவில்லை. உடல் அரசியல் என்று திண்ணையில் கட்டுரை எழுதும் நமக்கு இதெல்லாம் எவ்வளவு முக்கியமான தகவல்கள் ?

இனி ஃபூகோ பற்றியும் அவரது கருத்துலகிலிருந்து சில இழைகளை நம்முலகிற்கு எடுத்து வந்தால் என்ன ஆகும் என்றும் பார்ப்போம்.

மிஷெல் ஃபூகோ பற்றிப் பல துறை ஆய்வாளர்களும் பலவகைக் கருத்துகளைச் சொல்லுவார்கள். இது தவிர அவரவர் அரசியல் சமூகப் பார்வைகளைப் பொறுத்து அவரைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவோரும், மாறாகக் குப்பையில் போடத் தயாராக இருப்பவரும் உண்டு. ஃபூகோ தீவிர எதிர்வினைகளைக் கிளப்புகிறார் என்பது தெளிவு. இதற்குக் காரணம் ஓரளவு எதிர்வினையாளரின் கருத்துச் சார்புகள் என்றாலும், ஃபூகோவும் ஒன்றும் வெகுளி அல்ல. உண்மை, அறிவுத் துலக்கம் (enlightenment), ஆக்கமான அரசியல் செயல்பாடு ஆகியவற்றை அறவே பயனற்றவை அல்லது வெறும் கற்பிதங்கள் என்று ஒதுக்கித்தான் தனது ‘பால் தன்மையின் வரலாறு ‘ என்னும் புத்தகத்தை அமைக்கிறார். இதனால் அவர் அரசியல் இயக்கம் என்பதையே ஒதுக்குகிறார் என நாம் நினைக்க வேண்டாம். உலகளாவிய அல்லது நாடு தழுவிய புரட்சி அல்லது பேரியக்கங்கள் என்னும் போக்கைப் பயனற்றது என்று ஒதுக்குகிறார்.

இப்படித் தொடங்குபவர்களின் நோக்கங்களை அவர் குறை சொல்லவோ அல்லது இழித்துப் பேசவோ முயல்வதில்லை. ஆனால் என்ன சமத்துவம் பேசினாலும், மக்களமய அரசியலை முன்வைத்தாலும் முதல் கட்டமாக இவர்கள் செய்வது தம்மை ஒரு நிறுவனமாக அல்லது அமைப்பாக்கிக் கொள்வதுதான். அமைப்புகள் அதிகாரப் பரவல் இல்லாதவை அல்லது சமமற்ற அதிகாரப் பரவல் உள்ளவை. அடுக்குகள் இல்லாத அமைப்புகள் இல்லை, அதிகாரத்தைச் சிறுபான்மையினரின் கையில் குவிக்காத அமைப்புகள் இல்லை. ஆகவே, தமது இயக்கக் கோட்பாடுகளையே முதலில் தோற்கடிக்கிறார்கள் என்று ஃபூகோ சொல்வதாக நான் புரிந்து கொள்கிறேன். சமீபத்தில் நீங்கள் நிறைய இடங்களில் பார்த்திருக்கலாம் ஒரு வித கோஷத்தை – Think globally, act locally என எழுதப்பட்ட ஒட்டிகளை (stickers) நிறைய இடங்களில் காண முடிந்தது. இந்தியாவின் பெரு நகரங்களிலும் பார்க்க முடிந்தது. இந்த கோஷம் ஒன்றும் திடாரென்று எழவில்லை. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக பெண்ணியம், போஸ்ட்-மாடர்னிசம் என்கிற நவீனக் கடப்புவாதம், அமைப்பியல் கடப்புவாதம் ஆகியன தத்துவம், உளவியல், அரசியலியல், மானுடவியல், மேலும் குறிப்பாக வரலாற்றியல்/வரலாறு ஆகிய துறைகளில் எழுப்பிய பெரும் தூசிப் புயல் சிறிது அடங்கிய பின் (ஃபூகோ ஒரு காரணம்) செயலூக்கம் உள்ள ‘முற்போக்கு ‘வாதிகளுக்கு ஒன்று புரிந்தது. தம்மைச் சுற்றியிருக்கும் பகுதியில் எதிர்ப்பை விதைக்காமல் பேருலகில் எதிர்ப்பு ஜெயிக்காது என்பதுதான் அது. அதன் காரணமாகத்தான் ‘உலகளாவிச் சிந்திப்போம், உள்ளூரில் நடவடிக்கை எடுப்போம் ‘ என்ற கோஷம் தோன்றக் காரணம். உள்ளூர் என்று சொல்வது கூட பொதுவானது. அவர் இறந்தபின் பிரசுரிக்கப்பட்ட நூல்களில் ஃபூகோ தெரிவிப்பது – உலகோடு மறுபடி நாம் கை கோர்க்க வேண்டும், அறவுணர்வை மறு வாசிப்பு செய்வதோடு, மறு வரையறுப்பும் செய்ய வேண்டும். இது சுயத்தை ஒழுங்குபடுத்துவதிலிருந்துதான் துவங்க முடியும் என்று.

இவரது கருத்துகள் எழுபதுகளில் ஃபிரான்சில் மேலெழத் தொடங்கிய போது, முதலில் இடதுசாரியினர் இவரை விஷம் போலக் கருதினார்கள். இதற்குக் காரணம் என்னவென்று மிகவும் தீவிரமாகத் தேடலாம்தான். பல நூறு பக்கங்களை உழுதபின்தான் புரியும் எனக் கருத இடம் இருக்கிறது. ஆனால் ஜான் ப்ரோடெவியுடைய (John Protevi) கருத்து ஒன்றைப் பார்த்தால் நமக்கு இது சட்டெனப் புரியும். அவர் சொல்கிறார் – ‘ஃபூகோவுடைய படைப்புகள் இரண்டு விதமான அமைப்புகளைப் பற்றிப் பேசுகின்றன. அறிவுத் திரட்டு/அதிகாரம் அல்லது அறம் என்பன அவை. இவை இரண்டுமே, தற்காலத்தில் நாம் கடந்த காலத்தை அறிவற்றது அல்லது மூடத்தனமானது என்று கருதுவதை மறுக்கின்றன. மேலும், கடந்த காலம் என்பதும் அறிவு பூர்வமானதாகத்தான் இருந்தது என்று வாதிடுகின்றன என்பதை ஃபூகோ தெளிவாக்குகிறார். ‘ – இது எப்படி மார்க்சியருக்குப் பிடிக்கும் ? இது எப்படி திராவிட இயக்கத்துக்குப் பிடிக்கும் ? ஆனால், அவர்களுக்கு இப்போது ஃபூகோவை ஏன் பிடிக்கிறது ? அது பற்றி யாராவது ஆய்ந்து ஒரு கட்டுரை எழுதி நமக்குத் தெரிவித்தால் நமக்கு ஏதாவது புரியும்.

பின்னர், வலதுசாரிக்கு இவர் விஷமானார் என்பது வேறு ஒரு சுவாரசியமான கதை. வரலாறு ஒரு நீண்ட தொடர்ச்சி என்பதை நம்பும் வலதுசாரியினருக்கு, வரலாறு என்னும் கற்பிதம் நிறைய அறுந்த இழைகளைக் கொண்டது. எந்த ஓர் உருப்படியான தர்க்கமும் இல்லாமலேயே பல முறை புது முடிச்சுகள் போடப்பட்டு அறுந்த இழைகள் இணைக்கப்பட்டுப் புது வரலாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்று ஃபூகோ வாதிடுகிறார். இது வலதுக்குப் பிடிக்க வாய்ப்பில்லை. இந்துத்துவா கூட்டம் இது குறித்து என்ன கூச்சல் போடும் என்பது எனக்குத் தெரியவில்லை. வேதகாலத்தை மறு நிர்மாணம் செய்ய முயல்பவர்களுக்கு இந்த வாதம் உதவக் கூட உதவுமோ ? ஏற்கனவே நகரங்களில் பஸ், கார், லாரி, ரயில், கரியடுப்புகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் என்று ஏகப் புகையும் கரித்தூளும் நம் நுரையீரலை நிரப்பி ஆஸ்த்மா நம்மோடு கூடவே உறைகிறது. வேத யாகப் புகை வேறு சேர வேண்டுமா ? ஆனால், ஒரு கருத்தாக்கம் அல்லது பழக்கம் அல்லது நடத்தை ஆகியன எங்கு துவங்கின என்பதை அறிவதால் இன்று அவை எப்படிப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை விளக்க முடியாது என்கிறார். இது வலதுக்குப் பிடிக்காது, இடதுக்குப் பிடிக்கும். ஆனால் இன்று என்ன இருக்கிறது என்பதை வைத்து துவக்கப் புள்ளியில் ஒரு கருத்தாக்கம், இத்தியாதிகள் எப்படி இருந்தன என்பதையும் நிறுவ முடியாது என்கிறார். (நன்றி: ஜான் ப்ரோடெவி) அது இடதுக்குப் பிடிக்காது, வலதுக்குப் பிடிக்கும். மொத்தத்தில் இவர் பாம்பும் இல்லை, பழுதையும் இல்லை.

சமகாலத்தில் மேலெழுந்த கடந்த நவீனத்துவம் (அல்லது) நவீனக் கடப்புவாதம், எண்பதுகளில் மேலை நாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களைத் தன் பெரும் பாசறைகளாக மாற்றிக் கொண்ட பின், ஃபூகோவைத் தூக்கிக் கொண்டு கூத்தாடினார்கள். ஏனெனில் பழைய வர்க்கப் போராட்டக் கதையாடல் உளுத்துப் போய் விட்டது, அது நடுத்தள அறிவு ஜீவிகள், அதிகாரத்தை ஆளும் கூட்டத்திடம் இருந்து கைப்பற்றி உழைப்பாளர்களின் பெயரால் தாம் ஆள்வதற்குச் செய்த தந்திரம் என்பது பல நாட்டு உழைப்பாளருக்கும் தெரிந்து, அவர்கள் முந்தைய தந்திரக்காரர்கள் – அதுதான் பாதிரிமார்/முல்லாமார், வலதுசாரி இன/மொழி/தேசிய அரசியல் மாய்மாலக்காரர்களின் பின்னே போய்விட்டார்கள். அவர்களை அணுகக் கூட அந்த பாசிசக் கூட்டங்களின் கூடாரத்தில் நுழைய வேண்டும் என்றும், அதனால் அந்த அடையாள அரசியலை உள் வாங்கிய புதுக் கதை சொன்னால்தான் மக்கள் செவி கொடுப்பார்கள் என்பது வறட்டு மார்க்சியருக்குக் கூடத் (ஸ்டாலினியவாதிகளுக்கும், மாவோயிசவாதிகளுக்கும் தான்) தெரிந்து போயிற்று.

இதற்கு, அதாவது கள நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாறுதல்களுக்குத் தம்மை வளைக்க வேண்டிய அவசர அவசியம். ஆனால் வளையாத அறிவொளி யுகத்து அசட்டுத்தனங்கள் – உலகத்துக்கே பொருந்தும் அறநெறி, உலகனைத்தையும் ஆளும் ஒரே அரசியல், உலக மக்களுக்கெல்லாம் பொருந்தும் ஒரே வகைப் பொருளாதாரம், சமமான மறு விநியோகம் என்ற பெரும் கதையாடல்கள் நொறுங்கியது எவ்வாறு, அதை ஒட்டுப் போட்டு ஒப்பேற்றலாமா, அல்லது மொத்தமாக வேறேதும் உருவாக்க வேண்டுமா என்று இடதுசாரிகளும், குறிப்பாக மார்க்சியரும் உருக் குலைந்து நிற்கையில், வழக்கம்போல வலதுடைய கூட்டங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி பல கோடி மக்களுக்கு ஓரளவு கிட்டி இருந்த பொருளாதார நிழல் குடைகளைப் பிடுங்கி எறிந்து உலகப் பொருளாதாரத்தை அனேகமாக சந்தைப் பொருளாதாரமாக மாற்றி விடப் பெருமுயற்சி செய்தனர்.

இதில் முரண் நகை என்னவென்றால் முல்லாக்கள் உலகெங்கும் இந்த சந்தைப் பொருளாதாரத்தை எதிர்க்கின்றனர் – வியாபாரிகளின் மதம், யதார்த்தமான மதம் என்றெல்லாம் பெயர் பெற்ற ஒரு மதம் சந்தைப் பண்பாடு உலகை ஆள்வதை எதிர்க்கிறது. அது சிறு வியாபாரிகளின் மதம் போலும். வால்-மார்ட் சிறு வியாபாரிகளை, ஏன் உள்ளூரில் உள்ள பெரும் வியாபாரிகளையும் கூட அழிக்கிறது. போதாக்குறைக்கு அமேசான் புள்ளி காம், ஈ-பே புள்ளி காம் போன்றன வியாபாரியின் முகத்தையோ, கடையையோ பார்க்காமல் பன்னாடுகளில் இருந்து பொருட்களை வாங்க உதவுகின்றன. சொல்லாமல் விட முடியவில்லை, ஈ- பே அந்த விதத்தில் ஒரு பேயாக உலகச் சிறு வியாபாரிகளுக்குத் தெரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஈ-பே இல் சிறு வியாபாரிகள் ஓரளவு கொழிக்கிறார்கள், அமேசான் கூட சிறு வியாபாரிகளுக்கு உலகச் சந்தையைத் திறந்து விட்டிருக்கிறது என்று மாற்றுக் கதையாடல் உலவுகிறது. இதை ஏன் சிறு வியாபாரிகளின் அல்லது உள்நாட்டு வியாபாரிகளின் மதத்திற்குப் பிடிக்கவில்லை என்று சுலபத்தில் சொல்ல முடியாது. என் ஊகம், பெண்களை இந்தத் திறந்த வணிகம் பயன்படுத்தும் விதமும், இதன் மையக் கட்டுப்பாடு ஐரோப்பியர்/அமெரிக்கர் கையில் இருப்பதும்தான் இதை எதிர்க்கக் காரணம் என்பது. இந்தியர்கள் இதைக் கட்டுப்படுத்தினாலோ, சீனர்கள் கட்டுப்படுத்தினாலோ எதிர்ப்பு இருக்குமா ? நிச்சயம் இருக்கும். அது வேறு கதை. பிறகுதான்….

வழக்கம் போல, உலகம் மதிமயங்கி இருக்கையில் புதுத் தந்திரங்களை அல்லது மந்திரங்களை உருப்படியாக்கிக் கொடுக்கும் ஃபிரெஞ்சு மக்கள்/அறிவு ஜீவிகள் கொண்டு வந்தது போஸ்ட்-மாடர்னிசம் அல்லது நவீனக் கடப்புவாதம். அதிகார பூர்வமாக இந்தக் கூட்டத்தில் ஃபூகோ சேர்க்கப்பட முடியுமா என்பது தெளிவாக இல்லை. ஆனால், நிறைய விமர்சகர்கள் நவீனக் கடப்பு மீது விமர்சனம் எழுதும்போது முதலில் விழுந்து கும்பிடுவது ஃபூகோவைத்தான். மனிதன் நந்தி போலத்தான். ஃபூகோ கொடுத்தது புது மந்திரக் கோல், மக்களை வசியம் செய்ய. ஆனால் மந்திரம் என்னவோ பழையதுதான், அதாவது வெறும் தந்திரம்தான். இனம், மொழி, மதம், தேசியம் இதெல்லாம் வெறும் கருத்தாக்கங்கள்தானே, பொருட்களைத் தமது ஆட்சியில் வைக்க ஆளும் கூட்டங்கள் செய்த சதிதானே என்றெல்லாம் கேள்வி கேட்க யாரும் இல்லையே. அதனால் சத்தம் போடாமல் தம் பொருள் முதல் வாத பஜனைகளை மூட்டை கட்டி வைத்து விட்டார்கள்.

இவரது ஒரு மையக் கருத்து: அதிகாரத் தேட்டை எங்கும் உள்ளது, அடக்கி ஆளும் ஆசை பல விதங்களில் பல தளங்களில் இயங்குகிறது, அரசில் மட்டுமல்ல, பொருள் உற்பத்தியில் மட்டுமல்ல, முதலின் (Capital) இயக்கத்தில் மட்டும் அல்ல, சமூகக் குழுக்கள், குடும்பம், மேலும் சுயம் என்று வெற்றிடம் இல்லாது எங்கும் பரவி இருக்கிறது. அதனால், பெரும் விடுதலை இயக்கங்கள் எல்லாம் விடுதலை தர இயலாதவை. அதை விட எல்லா இடங்களிலும் அதிகாரக் குவியலை முடிகிற விதத்தில் எல்லாம் எதிர்ப்பது, தொடர்ந்து இடைவிடாமல் கண்ணயராமல் எதிர்ப்பது மேலான பலனைத் தரும் என்ற வாக்கில் போகிறது.

உழைப்பாளர் அரசைக் கைப்பற்றித் தம் வாழ்வையும் அனைத்து உழைக்கும் மக்கள் வாழ்வையும் மேம்படுத்திய பின்னர் அரசுக்கான தேவை இராது என்பது ஒரு பழம் கதையாடல். அது ஃபூகோவின் புதுக் கலக்கலில் உபயோகம் அற்ற கதையாடல் என்று ஆகிப் போனது. ஏனெனில் எல்லா விதமான அமைப்புகளுமே ஆட்சி மனப் பான்மை கொண்டவைதான் என்று ஃபூகோ கருதுகிறார். மனப்பான்மை என்று பேசினாலே மார்க்சியருக்கு உடலெல்லாம் பற்றி எரியும் இல்லையா ? தூலமான யதார்த்தம், அமைப்பு, இயந்திரம், பருப் பொருள் என்றெல்லாம் கதை சொன்னவர்களுக்கு, தம் கதைதான் சரியான உண்மையான கதை என்று அடித்துப் பேசியவர்களுக்கு, இதுவரை ஓரம் கட்டப்பட்ட இன்னொரு யதார்த்தம், அதாவது மனிதரின் மனப்பாங்கு போன்றவை எல்லாம் திடாரென்று மறுபடி கதை மாந்தராக நுழைந்து காப்பியத் தலைமையை அல்லது மையப் பாத்திரங்களை வேறு கேட்டால் எப்படிப் பொறுக்க முடியும் ? உளவியலையே உற்பத்தி உறவுகளின் விளை பொருளாக மாற்றியவர்களுக்கு, உற்பத்தியும், உற்பத்தி உறவும், உற்பத்தியில் ஈடுபட்ட மனிதரின் வாழ்வுமே விளை பொருட்களாக மாறிப் போனதும் யதார்த்தம் தலைகீழாகிப் போயிற்று என்று தோன்றி இருக்கும்.

மார்க்ஸ் தத்துவங்களைத்தான் தலைகீழாகப் புரட்ட முயன்றார், யதார்த்தம் இருக்கிற மாதிரி தத்துவம் இருக்க வேண்டும் என்று கருதியதால் அப்படிச் செய்ய முயன்றதாகத் தெரிகிறது. ஆனால் அவர் காலத்து யதார்த்தமே அவருக்குச் சரிவரத் தெரியவில்லை என்பது இந்தியா, சீனா ஆகிய நாடுகள் பற்றிய அவரது மோசமான, அரை வேக்காட்டுத்தனமான கருத்துகளைப் பார்த்தாலே தெரியும். அது போகட்டும். இரண்டு விதமாகவும் பேசுவதில் மார்க்சியர் இன்று திறமிக்கவராக இருப்பதற்குக் காரணம் – மூலவரே அப்படித்தான் என்பதே. யதார்த்தம் மாதிரி தத்துவம் இருக்க வேண்டும், ஆனால் எது யதார்த்தம் என்பதை அவர்தான் வரையறுப்பார். அதாவது அவருக்கு எதெல்லாம் யதார்த்தமாகத் தெரிகிறதோ அதெல்லாம் யதார்த்தம், மற்றதெல்லாம் யதார்த்தப் பிறழ்வு, அல்லது யதார்த்த மறுப்பு. அதற்குப் பெயரும் உண்டு, விமர்சனத்தின் மூலம் யதார்த்தத்தை அணுகுவது என்பது. ஓர் அடிப்படைப் பிரச்சினை இதில் உண்டு. யதார்த்தத்தை எப்படிக் கைப்பற்றுவது என்பது. பதிக்கும் மனிதரின் மதிப்பீடுகள், அனுபவங்கள், வரலாறு போன்றவை இல்லாத ‘முழுச் சுத்தப் பதிவேடு ‘ என ஒன்று இல்லை என்பதால் எல்லாத் தகவலுமே மாசுபட்டதுதான் அல்லது கலப்படமானதுதான். ஆக விமர்சனப் பதிவாளர் ஏற்கனவே மாசுபட்ட பதிவைத் தனது தேர்வு மூலம் இன்னமும் கூடுதலாகத் திரிக்கிறார். அவர் எவ்வளவு தத்துவ ஞானியாக இருக்கிறாரோ அவ்வளவுக்கு மாசு கூடுதல் இல்லையா ? அவர் காலம் மட்டும் அல்ல, கற்காலத்திலிருந்தே மனிதருக்கும் புற யதார்த்தத்துக்கும் உள்ள உறவை அவரும் அவரது சிஷ்ய கோடிகளும் பார்த்த விதமே பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதைதான். அதாவது அவர்களது உள்கிடக்கையை, பெரு விருப்பை யதார்த்தமாகப் பார்த்த கூட்டம் அது.

(தொடரும்)

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்