எப்போதும் கவிதை என்னை எழுதியதேயில்லை கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி” கவிதைகள்

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

க. நாகராசன்


நகர வாழ்க்கை பல வசதிகளைக் கொடுக்கிறது. பணம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளும் புலினின்ப வழிகளும் நவநாகரிக தளுக்குகளும் நகரச்சூழலில் கொட்டிக்கிடக்கின்றன. விளக்கின் பிரகாசத்தில் ஈர்க்கப்படும் விடடில்பூச்சிகளைப்போல நகரத்தின் கவர்ச்சிக்கு இரையாகிறார்கள் மாந்தர்கள். பொருளிட்டும் பேராசையைத் தவிர வேறு எந்த நோக்கமும் வாழ்க்கைக்கு இருக்கமுடியாது என்னும் கோட்பாட்டை அழுத்தமாக நிறுவுகிறது நகரவாழ்க்கை. எந்திரமய வாழ்வு மெல்லமெல்ல இயற்கையையும் இயற்கையை நேசிக்கும் உணர்வுகளையும் நசுக்குகிறது. நல்லியல்புகளை அழிக்கிறது. இந்த அவலத்தின் வேதனையை வலிமையான வரிகளின் வீச்சுகளோடு உள்ளத்தைத்தொடும் வகையில் உணர்த்துகிறது சி.ஆர்.மணியின் மெட்ரோ பட்டாம்பூச்சி தொகுப்பு.

அலுவலக நேரத்தில் அறைஜன்னலில் ஒருநாள் புறா வந்து அமர்கிறது. மறுநாள் காகம். அதற்கடுத்த நாள் குருவி. பரவசம் தரும் இந்த அனுபவத்தை தீட்டித் தருகிறது தொகுப்பின் முதற்கவிதை. ஆனால் மெட்ரோ மனமோ, இந்த ஆனந்தத்தை ஆராதிக்காமல், நல்லவேளை/ (பறவைகள்) உள்ளே வராமலே போனது/ என சாந்தமடைகிறது. இதுதான் நகர வாழ்வின் வெளிப்பாடு. விருந்தினர்களை உளமாற வரவேற்று, உனசரித்து, உணவு படைக்க வலியுறுத்துகிறது நமது பண்பாடு. நகர வாழ்க்கையோ வீட்டுக்கு வருகை தரும் விருந்தினர்களைப் பார்த்த தருணத்திலேயே அதிர்ச்சியடைகிறது. இருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் சென்று தொலைப்பார்களோ என அவதியில் வதைபடுகிறது மனம். அவர்கள் உடனே கிளம்பிவிட்டால் உள்ளம் அத்தனை ஆறுதல் அடைகிறது. என்னவொரு அவலம். பக்கம் 56ல் உள்ள “எதைத்தேடி?” கவிதையிலும் இதைப்போன்ற ஒரு காட்சி. வழி தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து வருகிறது ஒரு வண்ணத்துப்பூச்சி. வீட்டுக்குள் அறைஅறையாக வண்ணத்துப்பூச்சி பயணம் செய்கிறது. வீட்டின் மாந்தர்களோ வேதனையில் ஆழ்ந்து எப்படி பூச்சியைத் துரத்துவது என்பதிலேயே குறியாக உள்ளனர். எதற்காக வண்ணத்துப்பூச்சி உள்ளே வந்திருக்கும் என்கிற வினாவோடு கவிதை முடிகிறது. இயற்கையை ரசிக்க/அனுபவிக்க மறுக்கும் மெட்ரோ வெளிப்பாட்டை இரு கவிதைகளும் சிறப்பாக அவதானிக்கின்றன.

நவீன கவிதைகளைப் பொருத்தவரை தலைப்பு ஒவ்வொரு கவிதைக்கும் அவசியம் என்பது இல்லை. இக்கவிதைத்தொகுப்பின் எல்லாக் கவிதைகளுக்கும் தலைப்புகள் உள்ளன. அவை கவிதைகளுக்கு அலாதி பொருளைத் தருகின்றன. தலைப்போடு படித்தால் மட்டுமே பல கவிதைகள்
முழுமையடைகின்றன. அது ஒரு கனாக்காலம் , ஞாபகமறதிகள். மொழி, மறுபடியும் ஆகலாம் கரப்பான்பூச்சியே போன்ற கவிதைகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மாநகரில் பேசப்படும் மொழியைப்போல கவிதைகளிலும் ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் மற்றும் பிறமொழி கலந்த இயல்பான தமிழ் வெளிப்படுகிறது. டெஸ்க்டாப், பிங்க் ஸ்லிப், எம்ஆர்பி குழந்தைகள், காரணம் கேட்கும் கூகுள் கணவனுக்கு, நாம்கேவாஸ்தே குர்சி போன்ற கவிதைகளை எடுத்தக்காட்டாச் சொல்லலாம். குறியீடுகளின் மூலம் கவிதை என்கிற புதிய வெளிப்பாடடை சிறப்பாகத் தருகின்றன. கொசு மற்றும் என் மூலையில் கறுப்பு கவிதைகள் போன்ற குறியீடுகள் பல பொருட்களில் சிறப்பாக கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன. பாராட்ட வேண்டிய முயற்சிகள்.

உடைந்த பொம்மைகள் தொகுப்பின் முக்கியமான ஓர் கவிதை. மொம்மை விளையாட்டு மற்றும் வாழ்க்கை விளையாட்டு என இரண்டு விளையாட்டுகளில் கவிதை மாறிமாறி பயணிக்கிறது. உடைந்த பொம்மைகளைப் பார்த்து பயத்தில் உறைபவனுக்கு ஆறுதல் சொல்கிறார் அம்மா. கடைசியில் அம்மாவே ஒரு பொம்மை. தந்தையின் குரலோ மியுட் செய்யப்படுகிறது. அப்பாவின் குரல் மியுட் செய்யப்படுவது சிறந்த வார்த்தைப் பிரயோகம். மானுட வாழ்க்கையின் மரப்பாச்சி பொம்மை விளையாட்டை துல்லியமாக உணர்த்துகிறது கவிதை. இழந்துபோன இளமை என்னும் கவிதை. இழந்துபோன இளமை என்னும் கவிதை நம் நினைவுகளை மீட்டெடுக்கும் வீணை இசையாக இழைகிறது. அதன் இறுதிவரிகளில் சொல்லப்படுவதுபோல சில கவிதைகள்/ எப்போதும் முற்றுப் பெறுவதேயில்லை. உறங்கப்போனது சத்திரம் கவிதை சங்ககால அணிலாடு முன்றிலை நினைவுபடுத்துகிறது.

பாட்டி ஓர் அருமையான கவிதை. தாய், தந்தை, காதலன் மற்றும் காதலி கவிதைகளை நிறையப் படித்துள்ளோம். பாட்டிக்கான அஞ்சலி புதிது. தமிழ் இலக்கியம் அதிகம் வெளிப்படுத்தாத ஒன்று. கவிஞரின் அனுபவம், வாசகனின் அனுபவமாக மாற்றமடையும்வண்ணம் மானுட அனுபவங்களால் நிறைந்துள்ளது கவிதை.

அவைகள் கடந்துபோனதா
இல்லை நான்தான்
அவைகளைத் தாண்டி
நகர்ந்து போனேனோ?

என்கிற வரிகளோடு கூடிய இக்கணமே கவிதை இன்னொரு குறிப்பிடத்தக்க ஒன்று. வாழ்க்கையை நாம் வழிநடத்துகிறோமா அல்லது ஆடிக்காற்றில் அடித்துச் செல்லப்படும் துரும்பாக ஆனதோ நம் வாழ்க்கை என்கிற ஆதார சிந்தனையை வெளிப்படுத்துகின்றன இவ்வரிகள் . கவிதை வடிவமும் அனுபவமும் மிகச்சிறப்பாக கைகூடியுள்ள இன்னொரு கவிதை “தொலைந்த வார்த்தை”

காற்றுக்கழிவு- சுவாரஸ்யமான( !) மொழிபெயர்ப்பு (பக்கம் 20). “குர்சி” தோப்பில் முகம்மது மீரான் சாய்வு நாற்காலியை நினைக்கவைக்கிறது. கவிதைகளில் ரயில் அடிக்கடி வருகிறது. (பக்க33,45) நாய்கூட வருகிறது. (61,62) பிங்க் ஸ்லிப்பும் அடிக்கடி இடம்பெறுகிறது (32,44). வேலையைவிட்டுத் துரத்தும் ( ஐடி உலகின்) பிங்க் ஸ்லிப் வருத்தத்தையும் வலியையும் தருகிறது. ஈரப்படுவதே விதியெனத் தெரிந்தும்/ உலர முயற்சியாய் காய/ நினைக்கும்/ கரையோர மணல்கள். கரையோர மணல்கள் சிறப்பான ஓர் உவமை. /படிமம். பிரபஞ்ச பிரும்மாண்டத்தின்முன் மானுட வாழ்வின் சிறுமையை இதைவிட ஒருவர் சிறப்பாக உணர்த்த இயலாது.

கல்யாண்ஜியின் “நிலா பார்த்தல்” கவிதையை நினைவுபடுத்தும் “குரல்” கவிதையை இத்தொகுப்பின் சிறந்த கவிதையாகச் சொல்லலாம். மின்சாரம் போன இரவு, அணைந்துபோன தொலைக்காட்சி, உயிர் இழந்த கணிப்பொறி திரை, மின் விசிறியின் சாவு, ஒளி விளக்கு உமிழும் சத்தம் என சூழ்நிலை துல்லியமாகச் சித்தரிக்கப்படுகிறது. அந்த அமைதியில்/ மனிதர்கள் குரல் தெளிவாகக் கேட்கிறது/ இன்னும் இருட்டுக்குள் அமிழ்ந்தால்/ ஒருவேளை என் குரலும்/ எனக்குக் கேட்குமோ என்னவோ../ என்கிற சிறந்த வரிகள் படைப்பின் ரகசியத்தை அறியும் திறவுகோலாகும் வலிமையோடு திகழ்கின்றன.

மெட்ரோ பட்டாம்பூச்சி என்கிற தலைப்பில் எந்தவொரு கவிதையும் தொகுப்பில் இல்லை. ஆனால் அந்தத் தலைப்பு தொகுப்புக்கு பொருத்தமாக உள்ளது . இயற்கை வாழ்வின் குறியீடு பட்டாம்பூச்சி. மெட்ரோவில் அது தொலைகிறது அல்லது வண்ணத்துப்பூச்சியை நாம் தொலைக்கிறோம். இழக்கக்கூடாதொன்றை இழந்து (இழந்துவிட்டோமே என்கிற உணர்வுகூட இன்றி) போலிகளின் பின்னே பீடுநடை போடுகிறது

நூலின் அட்டைப்படம் தலைப்பின் வெளிப்பாடாக உள்ளது. தொகுப்பில் ஆங்காங்கே தென்படும் கிளையில் அமர்ந்துள்ள ரெட்டைக் குருவிகளின் ஓவியமும் ஒன்பதாம் பக்கத்தில் உள்ள (மெட்ரோ) பட்டாம்பச்சியின் நவீன ஓவியமும் கண்களுக்கு விருந்துபடைக்கின்றன. நேர்த்தியான அச்சு சிலாகிக்க வைத்தது. பக்க எண் குறிப்பிட்டுள்ள நேர்த்தி (எழுத்துரு) அருமை. சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்கின்றனவோ (சுயதேடல், பிங்க் ஸ்லிப், காமம் சார் கவிதைகள்) என சில கவிதைகள் எண்ண வைக்கின்றன. ஏறக்குறைய அச்சுப்பிழையே நூலில் இல்லாதது இன்றைய தமிழ்பதிப்புலகச்சூழலில் மிகுந்த ஆறுதலைத் தருகிறது.

நவீன கவிதை உலகத்துக்கு இன்னும் ஒரு நல்வரவாக இத்தொகுப்பைச் சொல்லலாம். தொலைந்துபோன சுயத்தை மீட்டெடுக்கும் பயணத்தையும் மெட்ரோவின் பகட்டையும் கூரிய வரிகளோடு உணர்த்தும் இத்தொகுப்பு, படிப்பவரிடம் ஆழமான சிந்தனையை விதைக்கும் வல்லமை பொருந்தியதாகத் திகிழ்கிறது என்றால் அது மிகையாகாது. இத்தொகுதியின் இறுதிவரிகள் சொல்வதுபோல, எப்போதுமே கவிதை/ என்னை (வாழ்க்கையை) எழுதியது இல்லை/ முழுமையாகவும் முழுமை இல்லாமலும்கூட.

(மெட்ரோ பட்டாம்பூச்சி. கவிதைத்தொகுதி. கே.ஆர்.மணி. பக்கங்கள் 88. விலை.ரூ45. வெளியீடு. அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம். 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.)

Series Navigation

க.நாகராசன்

க.நாகராசன்