நாளைய முகம் இன்றைய கவிதை

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

புதியமாதவி, மும்பை



சிங்கப்பூரில் வசித்து வரும் கவிஞர் மாதங்கியின் கவிதைகள் “நாளை பிறந்து இன்று வந்தவள்” என்ற் தலைப்பில்
வெளிவந்துள்ளன. பொதுவாகவே தமிழ்நாட்டின் சிற்றூரிலிருந்து சென்னை மாகரத்திற்குப் புலம்பெயர்ந்தவர்கள் கூட
கிராமத்து நினைவுகளைக் கொண்டாடுவதும் கண் முன்னே பரந்து விரிந்து கிடக்கும் வங்கக்கடலைக் கண்டும்
காணாமல் “ஒரு விதமான ஏக்கநோய்” பீடித்து அந்த ஏக்கமே கவிதையாக கவிதையின் கருப்பொருளாக
தெவிட்ட தெவிட்ட எழுதிக்குவிப்பதும் சில சமயங்களில் ஒருவிதமான நிகழ்காலத்திலிருந்து தப்பித்தல்
(எஸ்கேப்பிசம்) வியாதியோ என்று எண்ணத் தோன்றும். அப்போதெல்லாம் நிகழ்காலத்தை அதன் பாதிப்பை
அது தன்னில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களை ஏன் எவரும் முன்னுரிமைக் கொடுத்து எழுதுவதில்லை என்ற
வினா எழும்.
ஆனால் கவிஞர் மாதங்கியின் கவிதைகள் அவ்வகையில் நம் ஏக்கம் தீர்ப்பவை என்றுதான் சொல்ல வேண்டும்.
சிங்கை வாழ்க்கையை, அதன் புறவெளி தளத்தை தன் கவிதைகளின் பின்னணியாக்கி புலம் பெயர் கவிதை
உலகில் ஒரு புதிய தடத்தை அடையாளம் காட்டி இருக்கிறார்.

தேக்கா வெட்ட வெளியில் என்ற கவிதையில்

“கடல்தாண்டி வந்த உடலைச்
சுமந்தபடி
தேங்கி நிற்கும்
குடும்பத்த்தில் குரல்களைக்
கேட்டவாறு
அமரும்
புல்வெளியில்
நண்பர்களுடன்.

ஓவர்ஸ்டே, வர்க் பர்மிட்,
ஏஸ். பாஸ், சுயபாகம்,
முகவர் வாங்கிய முன்பணம்,
ஏமாந்து போன நண்பன்,
நெருங்கிய உறவின் மரணம்
அக்காவின் திருமணம்,
மனைவியின் பிரசவம்,
குழந்தை இப்போது பேசுகிறதாம்,
எல்லாச் சொற்களும்
புல்வெளிதாண்டி
சாலைகளிலும்
நடக்கும்

மிகவும் அற்புதமாக ஒரு புலம்பெயர் வாழ்வை அந்த வாழ்வின் பின்னணியுடன் மனித மனசின் ஏக்கத்தைப்
படம் பிடித்துக் காட்டியிருப்பார். தீபராயா-2006 கவிதையும் இவ்வரிசையில் சிங்கையின் வாழ்வியலை
விவரிக்கிறது.

அறிவியல் புதினங்கள் போல அறிவியல் கவிதைகள். அறிவியல் கருத்துகளை கவிதையாக்குவது என்பது
புதுக்கவிதைக்கு புதுவரவுதான். மாதங்கியின் அறிவியல் கருத்துகளை கருப்பொருளாகக் கொண்ட கவிதைகள்
இத்தொகுப்பை புதுக்கவிதை வரவில் பேசப்படும் கவிதைகளாக அடையாளம் காட்டும் எனலாம்.
குறிப்பாக நறுமண மெழுகுவர்த்திகள் என்ற கவிதையைச் சொல்லலாம்.

விளம்பரமோ விற்பவரோ
கூற மறந்த குறிப்பு
அடைக்கப்பட்ட அறையின் பிராணவாயுவை
தீ தின்றுவிடும்
சன்னல்களை அடைத்துவிட்டுக்
குளிரூட்டியை இயக்கி
நறுமண மெழுகுவர்த்திகளை ஏற்றாதீர்கள்
இன்னொரு நாள் இந்த அனுபவத்தைப் பெற
நீங்கள் உயிரோடு இருக்க வேண்டும்.

போனால் போகிறது’ கவிதை குடும்பத்தின் ஒரு நிகழ்வு பின்னணியில் குடும்பம் என்ற நிறுவனதின் இரு வேறு பெண்களின்
முகத்தைக் காட்டி ஆர்ப்பாட்டமில்லாமல் வரதட்சனை, பெண்விடுதலை, மாமியார்-மருமகள் உறவு என்று
பல தளத்திற்கு கவிதையை நகர்த்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது.

‘அண்ணி உங்க
தங்க அட்டிகையை
வரவழியிலே தொலைச்சிட்டேன்

கண்ணைக் கசக்கிய நாத்தியிடம்
போனால் போகிறது
நீ பத்திரமாக வந்தாயே என்றேன்.

புழக்கடையில்
துணிதுவைக்கையில்
சமையலறையில்
மாமியாரின் குரல்
அவர் மகனிடம்

ஒரு ஆர்ப்பாட்டம் கூச்சல்]
எதுவுமில்லை
பித்தளைக்கு மெருகு
போட்டு அவங்க வீட்டில்
கொடுத்துட்டாங்களோ

தலைமேல்
பறந்த குருவிகளை
அண்ணாந்து பார்த்தேன்
இன்னும் இருக்கிறது ஆகாயம்.

நீ பெரியவனானால்? , வேறுபாடு, திகட்டவில்லை, இசையும் நடிப்பும், சிரங்கூன் சாலை வீரமாகாளியம்மன் கோயில்
கவிதைகளில் குழந்தைகளின் உலகம் , உணர்வுகளும் கவிதைகளின் கருப்பொருளாகி இருக்கின்றன.

முழுக்க முழுக்க தன் வாழ்விடத்தின் பின்னணியில் குடும்பம், பண்டிகை, குழந்தைகள், சமூக சட்ட திட்டங்கள், நுகர்கலாச்சாரத்தின்
தாக்கமும் வாழ்க்கையும், இவற்றுடன் கலந்த நவீன அறிவியல் உலகத்தின் யதார்த்த அதிநவீன கற்பனைகளைக் கலந்து
மாதங்கியின் இன்று பிறந்த கவிதைகள் நாளைய புதிய ஒரு அத்தியாயத்திற்கு முன்னுரை எழுதுகின்றன.

மாதங்கியின் கவிதைகளில் எக்கருப்பொருளும் துருத்திக்கொண்டு தெரிவதில்லை. இசங்களை அவர் பொருட்படுத்தி
இருப்பதாகவும் தெரியவில்லை. இவை மாதங்கியின் பலமும் பலகீனமும் என்று சொல்லலாம்.
புலம் பெயர்ந்து வாழும் படைப்பாளர்களில் மாதங்கி தன் கவிதைகளில் படைத்திருக்கும் சோதனை முயற்சிகள்
பாராட்டுதலுக்குரியவை. வாழ்த்துகள்.

மாதங்கியின் நட்சத்திரக்கவிதை
——————————-

எங்களே நாங்களே தின்ற பொழுதில்
—————————————

எங்கள் உடலில் இருந்த நீரை
நாங்கல் உறிஞ்சித் துப்பினோம்
கொஞ்சம் கொஞ்சமாக.

தாகத்திற்கு அமிலங்களைக்
குடிக்கப் பழகினோம்
எங்கள் அந்தஸ்து உயர்ந்துவிட்டது

எங்கள் உயிர்ச்சத்துகளை
அதிகவிலைக்கு
விற்கத்துவங்கினோம்
நல்ல வரவேற்பிருக்கிறது

சுண்ணாம்பு எலும்புகளை
கான்கீரீட்டுகளாக
மாற்றினோம்
எங்களுக்குப்
பாதுகாப்பாய் இருக்கிறது.

செரிக்கும்
என்று நம்பி
காந்த அட்டைகளை
விழுங்கிகிறொம்
எங்கள் தீராப்பசியை
அது தீர்க்கிறது.

நாய்க்கடி மருந்துகள்
உயிர்க்கொல்லி நோய்கள்
இவற்றிற்கு எங்களிடம்
நல்ல மார்க்கெட் இருக்கிறது
நாங்களே நுகர்பொருளானோம்
எங்கள் வியாபாரம் சிறப்பாய்
நடைபெறுகிறது

எங்கள் பிள்ளைகள் கைகளில்
சுமோ வீரர்களை
அளித்திருக்கிறோம்
அவர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்

பொழுது போகவில்லை என்றால்
எங்களை நாங்களே
தின்று கொள்வோம்
அது எங்களுக்கு
உவப்பாக இருக்கிறது.

—-

நூல்: நாளை பிறந்து இன்று வந்தவள்,
45 கவிதைகள்,
பக் 79, விலை ரூ.50/
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை