கொஞ்சமாய்ப் பேசுவோம், ஆன்மிகம்

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

மலர் மன்னன்



நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய சமாசாரம். ஆனால் நேற்றுப் போலத்தான் இருக்கிறது.

ஓர் அதிகாலையில் பிரும்ம முஹூர்த்தம் என்று சொல்வார்களே அம்மாதிரியான ஒரு வேளையில் பொட்டில் தெறித்த மாதிரி எனக்கு இறையுணர்வு வரப் பெற்றது.

பொழுது விடிவதற்கு முன்னதான இரவில் வெகு நேரம் விவிலியத்தில் புதிய ஏற்பாட்டைப் படித்துக் கொண்டிருந்தேன். ஏசு நாதரின் மலைப் பிரசங்கம், அதன் பிறகு அவரது மறைவுக்குப் பின்னர் அவரை ஏற்றுக் கொண்டவர்களை அழித்தொழிக்க விரட்டிச் சென்ற ஸாலிடம், “” ஸாலே, ஏன் என்னைத் திரஸ்கரிக்கிறாய்?”‘ என்று அசரீரியாய் ஒரு குரல் கேட்ட மாத்திரத்தில் அவன் மனந்திரும்பித் தலைகீழாய் மாறிப் போனதையும் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த நிமிஷம் வரை ஒரு நாஸ்திகனாக, வாக்கிய அமைப்புகளின் அழகிலும் அவற்றில் தொனித்த ஆவேசத்திலும் மனம் லயித்துப் போய்த்தான் அவற்றை வாசித்துக் கொண்டிருந்தேன். பழைய ஏற்பாட்டிலுங்கூட பிரித்த புத்தகத்தை மூடிவைக்க மனம் வராதபடிக்குப் பல அருமையான வாக்கிய அமைப்புகளில் மனதைப் பறிகொடுத்திருக்கிறேன்.

விவிலியத்தைத் தொடுவதற்கு முன்பே தேவாரம், திருவாசகம், திருமந்திரம், ஆழ்வார் பாசுரங்கள், கீதை, உபநிடதங்கள், வேதங்கள் ஆகிய பலவற்றையும் திரும்பத் திரும்பப் படித்து அவற்றில் தோய்ந்திருக்கிறேன். ஆனால் அவற்றில் தென்படும் அழகியல், மொழி ஆளுமை, ஆழமான தத்துவ விசாரம் ஆகியவற்றுக்காக மீண்டும் மீண்டும் அவற்றைப் படிக்க வேண்டும் என்பதாக ஒரு தூண்டுதல் ஏற்படுமேயன்றி, உள்ளே கவிந்திருந்த நாஸ்திகம் அகல அவை உதவவில்லை. அவற்றின் மேன்மை புரிந்தது, அவை என் மண்ணின் கொடை என்கிற பெருமை இருந்தது, அவற்றை ஆக்கியோரின் மீது உரிமையுடன் கூடிய மரியாதை பிறந்தது எனினும் உள்ளே இறை வெளிச்சம் தோன்ற அவை துணை செய்வதாக இல்லை. ஏனெனில் இறையுணர்வு கிட்டாதா என்கிற ஏக்கத்துடன் அவற்றை நான் அணுகவில்லை. அவற்றுள் பொதிந்திருந்த ஆன்மிக தீட்சண்யத்தின் வீரியத்தை ஏற்றுத் தாங்கிக் கொள்ளத் தக்கதாக எனது பாத்திரம் இல்லை.

பாத்திரம் அறிந்துதான் பிச்சையிடப் படும். உருக்கிய தங்கம் எனது பாத்திரத்தில் வார்க்கப்படுமானால் அதை வாங்கிக் கொள்கிற உறுதியோ தகுதியோ எனது தகரப் பாத்திரத்திற்கு இல்லை. ஆறிய பழங் கஞ்சியை ஏற்கிற அளவுக்குத்தான் எனது பாத்திரத்திற்கு வலு என்பது இப்போது புரிகிறது. ஆனாலும் என்ன, வாய்க்கிற நிலைமைக்கு ஏற்ப ஆறிப்போன கஞ்சியும் மன நிறைவும் மகிழ்வும் தருவதுதான். சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, பொன்னிலும் பார்க்கப் பழங் கஞ்சி மேலாக அமைவதும் உண்டுதான்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் பக்குவத்திற் ஏற்ப, முற்றிலும் எதிர்பாராத ஒரு தருணத்தில் முற்றிலும் எதிர்பாராத ஒரு திசையிலிருந்து, மழையிருட்டில் நடக்கையில் சடுதியில் நினைத்துப் பாராத வான முகட்டிலிருந்து மின்னலடிக்கிற மாதிரி இறையுணர்வு வாய்க்கிறது. சிலருக்கு அவ்வாறான தருணம் நிகழாமலேயே ஓர் ஆயுள் முடிந்து போகிறது. இது ஒரு சோகம். ஆனால் அது சம்பந்தப்பட்டவரின் பிரக்ஞையில் உறைக்காமலேயே போய் விடுகிற சோகம். இதை நினைக்கையில் இந்த சோகத்தின் கனம் கூடிப் போகிறது.

நல்ல வேளையாய் எனக்கு இறையுணர்வு விரைவாகவே பொறியில் தட்டியது. அது எந்தத் திசையிலிருந்து வந்தால் என்ன? அதன் மூல காரணம் எதுவாக இருந்தால் என்ன?

எனக்கு வாய்த்த இறையுணர்வு அதிகாலையில் நிகழ்ந்ததாகச் சொன்னேன் அல்லவா, அன்று இரவு பன்னிரண்டு தாண்டி, ஒரு மணி வரைக்கும் விவிலியத்தைப் படித்துக் கொண்டிருந்த பிறகுதான் கண்ணயர்ந்தேன். சில மணி நேரமே ஆகியிருக்கும். “ஏன் என்னை திரஸ்கரிக்கிறாய்? அதனால் என்ன லாபம்?’ என்கிற குரல் எனக்குள்ளேயிருந்தே திடீரெனக் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தேன். அந்தக் கணமே இறைச் சக்தி என ஒன்று இருப்பதாய் உணர்வு வரப் பெற்றேன். அன்று நிகழ்ந்த அக்கணத்தை இப்போது நினைத்துக் கொண்டாலும் உடம்பெல்லாம் படபடக்கிறது. செயலற்று உடல் மரத்துப் போகிறது. மிகவும் சிரமப்பட்டு, வலுக் கட்டாயமாகத்தான் உடம்பைச் சுய நிலைக்கு இழுத்துப் பிடித்துக் கொண்டு வரவேண்டியதாகிறது.

எனது நாஸ்திக நிலைப்பாடு மறைவதற்கு விவிலிய வாசிப்பு காரணமாக இருந்தது என்பதை முன்பே ஒருமுறை பதிவு செய்திருக்கிறேன். நான் எழுதுவதையெல்லாம் விடாமல் படித்து நினைவிலும் வைத்துக் கொண்டிருக்கிற பலர், அது எப்படி சாத்தியம் என்று மிகவும் ஆச்சரியத்துடன் கேட்பதுண்டு. இதற்கு என்ன பதில் சொல்வது? எப்படிப் புரிய வைப்பது? கசாப்புக் காரனிடம் உபதேசம் கிடைக்குமாறு வாய்த்த கதையும் நம்மிடமே உண்டுதானே.

வெளிச்சம் எந்த வழியாக வந்தால் என்ன? வந்தாயிற்று, அதுதான் முக்கியம். அதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். அந்த வெளிச்சத்தில் எது ராஜ பாட்டை என்பது தெளிவாகவே புலனாகியது. திரும்பவும் திருமந்திரமும் தேவார திருவாசகங்களும், திவ்யப் பிரபந்தமும், வேத வேதாந்தங்களும் வாசிக்கையில் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயம் அர்த்தமாகியது. கீதை என்ன சொல்கிறது என்பது வரிக்கு வரி புரிந்தது. ஆசானையும் பிதாமகரையும் விருப்பு வெறுப்பின்றிக் கொல்ல அர்ஜுனனுக்கு சாத்தியமானது போலவே ஆன்மிகத்துடன் லவ்கீகத்தைக் கலந்து குழப்பிக் கொள்ளாமல் இன்னதை இன்ன சமயம் செய்தாக வேண்டும் என்கிற கடமையுணர்வுடன் எதையும் அணுக முடிகிறது. எதுவும் முரணாகத் தோன்றுவதில்லை. ஈசருக்குக் கொடுக்க வேண்டியதை ஈசருக்கும் சீசருக்குக் கொடுக்க வேண்டியதை சீசருக்கும் கொடு என்று ஏசு சொன்னது வெறும் சாதுரியம் அல்ல, அதன் பொருள் இன்னது எனப் புலப் படுகிறது. ஆண்டவரே பேசுங்கள், அடியவன் கேட்கின்றேன் என்று சாமுவேல் சொன்ன மாதிரியே நானும் சொல்லி வெகு நேரம் கேட்டுக் கொண்டிருக்க முடிகிறது. உடனேயே “சரி, சாமி, ஒரு பாழாய்ப் போன வேலை மிச்சமிருக்கிறது, நான் போகட்டா’ என்று உத்தரவு வாங்கிக் கொண்டு செய்ய வேண்டிய வேலையைக் கவனிக்க முடிகிறது.

வாசகர்களிடமிருந்து வருகின்ற மின்னஞ்சலகள் பல்வேறு விதமான கேள்விகளைச் சுமந்துகொண்டு வருகின்றன. இப்பொழுது எழுத நேர்ந்துள்ள இக்கட்டுரைகூட, நான் ஆன்மிகம் பற்றியும் எழுத வேண்டும் எனச் சிலர் விரும்பியதன் விளைவுதான். எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஆன்மிகம் பற்றி எழுத வேண்டும் என்கிற எதிர்பார்ப்பின் விளைவு இது. ஆகையால் சுய தம்பட்ட ஓசை எதுவும் இதில் கேட்டுவிடக் கூடாதே என்கிற முன்னெச்சரிக்கையுடனும் எழுத வேண்டியிருக்கிறது.

மனிதனை மனிதன் வணங்கலாமா என்று கேட்டு ஒரு வாசகர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். மனிதனை என்ன, கழுதையைக் கூட வணங்கலாம். சுய ஆதாயம் எதையும் எதிர்பாராத பட்சத்தில், முகஸ்துதியாக மகிழ்விக்க வேண்டும் என்கிற நோக்கமின்றி, எவரும் எவரையும் வணங்கலாம். அப்படி வணங்குகையில் வணங்கப் படுகிறவர் உண்மையிலேயே வணங்கத் தக்கவராக இருக்கும் பட்சத்தில் அவ்வாறு வணங்கப் படுகையில் தாமும் கை கூப்பி, இங்கு செய்யப்படுகிற வணக்கம் தனக்கல்ல, தனக்குள்ளே குகையில் ஒளிரும் இறைச் சக்திக்கு உரித்தானதாகும் என மானசீகமாகச் சொல்லிக் கொள்ளத் தவறமாட்டார். அப்படி எண்ணுகிற பக்குவம் இல்லாதவராக இருப்பினும் அவரை வணங்குவதில் தப்பில்லை. எனெனில் வணங்குபவரின் பணிவே காலப் போக்கில் வணங்கப்படுபவரைப் பக்குவப்படுத்திவிடும். ஒருவரைப் பக்குவப்படுத்துவது பெரும் தொண்டே அல்லவா?

வணக்கம் அகந்தையை அழிக்கும். பணிவைத் தரும். பணியுமாம் பெருமை. பணிவு இழிவல்ல. பெருமைக்குரியதுதான். உண்மையில் நீ ஒருவனை வணங்குகிறபோது, வணங்கப்படுகிறவனைப் பார்க்கிலும் வணங்கத் தக்கவனாக ஆகிவிடுகிறாய்.

வணக்கம் பலவீனத்தின் அறிகுறி அல்ல. அடிமைப் புத்திக்கு அடையாளம் அல்ல. குருட்சேத்திரத்தில் அர்ஜுனன் எதிர் நின்றவர்களின் பாத கமலங்களின் முன் அம்பெய்து முதல் வணக்கம் செய்தபின்னரே அவர்களை அம்பெய்து கொன்றான். உன்னை வணங்குகிறேன், உலகாயத அவசியங்களுக்காக உன் வெளித் தோற்றத்தைத் தாக்குகிறேன். அது உனக்குச் செய்யபப்டும் அவமரியாதை அல்ல. இத்தாக்குதலில் தகுதியுள்ளவன் வெல்லட்டும். சத்தியம் வெல்ல சக்தியின் துணை அவசியம் என்பதை அறிந்துள்ளேன். அதன் பிரயோகத்தைப் பொருத்தே முடிவு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதையும் அறிந்துள்ளேன் என்கிற பிரக்ஞையுடன் விரோதியையும் வணங்கலாம். பகைவனுக்கருள்வாய், நன்னெஞ்சே. புரிந்து கொள்வது சிரமம். புரிந்துவிட்டால் பிறகு சொர்க்க சுகம்.

மரம், செடி, கொடி, விலங்குகள் அனைத்தையும் வணங்க நம் முன்னோரால் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அது அச்சத்தின் காரணமாக அல்ல. மடமையின் காரணமாகவும் அல்ல என்பதை மெய்யாகவே, மெய்யாகவே அறிந்துள்ளேன். அது ஒரு நன்றி பாராட்டல்.
மனிதனே அனைத்திலும் மேம்பட்டவன் என்கிற அகந்தையை வளர விடாமல், இவ்வுலகம் நம் அனைவருக்கும் சொந்தம், நாம் அனைவரும் பங்காளிகள், இங்கு ஒருவருக்கொருவர் இசைந்து ஒருவர் இருத்தலை மற்றவர் அங்கீகரித்து வாழ்தலே தொடர்ச்சிக்கு வழி என்று சொல்லாமல் சொல்லும் சமிக்ஞை அந்த வணக்கம்.

எனக்கும் கடவுளுக்கும் நடுவே ஒரு இடைத் தரகர் தேவையா என்றும் கேட்கப்படுகிறது. என்ன விசித்திரம், சாதாரண சைக்கிள் ஒட்டக் கற்றுக்கொள்வதற்குக் கூட ஒருவர் தேவைப் படுகிறார், முதுகில் ஓங்கிக் குத்தி உடம்பை நேராக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும் என்று அறிவுறுத்த. வாகனம் வசப்படுகிற வரை பின்னால் பிடித்துக் கொண்டே ஒருவர் ஓடி வரவேண்டியிருக்கிறது. ஆனால் இறையை உணர எவர் தயவும் தேவையில்லை! அதனைப் பெறுவது அவ்வளவு சுலபம் போலும். அது தெருவில் கிடக்கும். யார் வேண்டுமானாலும் பொறுக்கி எடுத்துக் கொள்ளலாம். அப்படித்தானா?

எங்கு பார்த்தாலும் போலி குருமார்கள்தானே தென்படுகிறார்கள் அவர்களிடம் ஏமாந்து போவதுதானே வழக்கமாக இருக்கிறது என்று புகார் தெரிவிக்கப்படுகிறது.

எனக்கு ஒரு மாமா இருந்தார். சாந்த சொரூபி. உள்ளே பக்குவப்பட்டுக் கனிந்தவர்.

“”ஐயா, திருப்பதிக்குப் போகிறோம், பிச்சையெடுத்துக் காணிக்கை திரட்டிக் கொண்டு செல்வதாக வேண்டுதல்” என்று கேட்டுக் கொண்டு வீட்டு வாசலில் யாராவது வந்து நின்றால் சட்டைப் பையில் இருப்பதையெல்லாம் துழாவியெடுத்துக் கொடுத்துவிடுவார்.
அதைப் பார்க்கும் அம்மா ஓடி வருவாள். “”அடடே, அதெல்லாம் வெறும் பித்தலாட்டம். பணம் சம்பாதிக்க ஒரு சுலபமான வழி. அதை நம்பிக் கையிலிருக்கிற காசையெல்லாமா கொடுப்பார்கள்? வேண்டுமானால் ஒன்று ரெண்டு கொடுத்தால் போதுமாயிருக்காதா?” என்று கண்டிப்பாள்.

“”என்னை பொருத்தவரை அவர் திருப்பதிக்குப் போகிறார். வெங்கடாசலபதிக்குக் காணிக்கை செலுத்துகிறார். எனக்கு அது போதும். நிஜமாகவா வெறும் பித்தலாட்டமா என்பது அவர்பாடு. அதைபற்றிய கவலை எனக்கு இல்லை. அது அவருடைய பாடு” என்று மாமா சிறிதும் சலனமின்றி பதில் சொல்வார்.

அதுதான் சூட்சுமம். தருமனுக்கு அனைவரும் நல்லவர்களாகவேயும் துரியனுக்கு எல்லாரும் கெட்டவர்களாகவேயும் தென்பட்ட சூட்சுமம்.

மக்கள் தங்களுக்குப் பொருத்தமான அரசைப் பெறுகிறார்கள் என்று சொல்வதுண்டு. குருவைப் பெறும் விஷயத்திலும் இதுதான். உலகாயத ஆதாயம் கருதித் தேடிப் போகிறவர்களுக்கு உலகாயத ஆதாயம் தேடுகிற குருதான் கிடைப்பார். குருவை நொந்து கொள்வது என்ன நியாயம்?

எங்கேயும் போலி சாமியார்களாகவே இருக்கிறார்களே, யாரிடம் போவது என்று எதற்காக அலைக் கழிய வேண்டும்? அல்ப காரணங்களுக்காக சாமியார்களைத் தேடினால் அல்ப சாமியார்கள்தான் அகப்படுவார்கள்.

ரமண மஹரிஷியின் தொடக்க காலத்தில் ஓர் இரவு அவரது ஆசிரமத்தில் கொள்ளைக் காரர்கள் புகுந்து அங்கிருந்த அனைவரையும் அடித்து உதைத்துக் கொள்ளையிட முற்பட்டார்கள். நம் ரமணருக்கும் தடியால் இரண்டு அடி கிடைத்தது. ஐயோ அப்பா என்று அவரும்தான் முனகி, அடிபட்ட இடத்தைத் தடவிவிட்டுக்கொண்டார். அப்படித் தடவிக்கொண்டே, “பாவம், இந்த ஆண்டிகளின் குடிலில் உங்களுக்கு என்ன கிடைக்கும்? சமையல் அறையில் சாப்பாடு மிச்சமிருக்கும்; சாப்பிட்டுவிட்டுப் போங்கள்’ என்று அவர்களை உபசரித்தார்.

வந்தவர்கள் இறையுணர்வு தேடி வந்திருந்தால் ரமணரிடம் அது கிடைத்திருக்கும். ஆனால் அவர்கள் வந்தது வேறு காரணத்திற்காக. அது அவரிடம் கிடைக்கக்கூடியது அல்ல. ஏனென்றால் ரமணர் அசலான சாமியார். அவர் மீது கூட ஒரு குற்றச் சாட்டு உண்டு. சொந்த பந்தங்களுக்கே ஆசிரமச் சொத்தை விட்டுப்போன துறவி என்பதாக.

வந்தவனைப் போ என்றும் போகிறவனை இரு என்றும் சொல்லாத அளவுக்குப் பற்றுகள் அற்றுப்போனவர் அவர். தனது என்று எதன் மீதாவது அவருக்குப் பிரக்ஞை இருந்தால் அல்லவா இன்னாருக்கு இன்னது என்று விட்டுச் செல்வதற்கு? கடைசிவரை விருபாட்சி மலைக் குகையிலேயே கிடந்திருந்தால் கூட அவருக்கு எவ்வித வித்தியாசமும் தெரிந்திருக்கப் போவதில்லைதான். கட்டிடம், வளாகம், என்று பெருக அவரா முயற்சி எடுத்தார்? எல்லாம் தானாக அமைந்தன. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த அவர் அதையும் வேடிக்கைதான் பார்த்தார்.

இறையுணர்வு கிட்டவேண்டும் என்று போனவர்களுக்கு ராம கிருஷ்ண பரமஹம்சர் கிடைத்தார். பரம ஹம்ச யோகானந்தர் கிடைத்தார். சேஷாத்ரி சுவாமிகள் கிடைத்தார். ரமணர் கிடைத்தார். அரவிந்தரும் அன்னையும் கிடைத்தனர். கடவுளின் குழந்தை என்றும் பிச்சைக்காரன் என்றும் தன்னை வர்ணித்துக் கொண்ட யோகி ராம்சூரத் குமார் கிடைத்தார். இதில் ஒரு விசேஷம், இறையுணர்வுக்காகப் போனவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே உலகாயத ஆதாயங்களும் வாய்த்தன. அப்படித்தான் எல்லாம் தானகவே வாய்க்கும். அதுதான் “கேட்காதே, கிடைக்கும்: தேடாதே, அடையப் பெறுவாய்’ என்கிற சூட்சுமம்!

உலகாயத ஆதாயங்களுக்காகச் சாமியார்களைத் தேடிப் போகிறவர்களுக்கோ எல்லாம் திருடனுக்குத் தேள் கொட்டுகிற சங்கதியாய் முடியும். எல்லாம் அவரவர் எண்ணத்திற்குத் தக்கபடி. இதில் மற்றவர்களை என்ன குறை சொல்வது?

இதே கண்ணோட்டச்த்தில்தான் ஹிந்து சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் பார்க்க்கிறேன். அதன் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களுக்காக ஆவலாதி சொல்வதில்லை. இம்மாதிரியான பிரச்சினைகள் எழுவதற்கு இடம் கொடுக்கிற மாதிரி நிலைமைகளை ஏன் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்று சிந்திப்பதிலும் தக்க பரிகாரம் தேடுவதிலும்தான் கவனம் செல்ல வேண்டுமேயன்றி, மூக்கால் அழுதுகொண்டிருப்பதல்ல என்று கருதுகிறேன்.

மதத்தின் அடிப்படையில் முஸ்லிம் லீக் தேசப் பிரிவினையை முன்வைத்தபோது தன்னை அனைவருக்கும் பொதுவான அமைப்பாகக் காட்டிக் கொண்ட காங்கிரசுக்கும் அதன் தலைவர்களுக்கும் அவர்களின் வழிகாட்டியான காந்திக்கும் அதுபற்றி வாதாட அருகதை இல்லை. ஏனெனில் முஸ்லிம் லீக் முகமதியர் சார்பில் பிரிவினையை வற்புறுத்துகிறபோது ஹிந்துக்கள் சார்பில் பேச ஹிந்துக்களின் அமைப்பான ஹிந்து மஹா சபை, ஆரிய சமாஜம், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் முதலியவற்றுக்குத்தான் இடம் அளிக்க வேண்டும் என்கிற நியாயமான கோரிக்கையை ஹிந்துக்கள் விடாப்பிடியாக வலியுறுத்தியிருந்தால் இன்று ஹிந்துஸ்தானத்தில் ஹிந்து சமூகத்தின் நிலைமை நாதிகெட்டுக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லிம் லீக் பாகிஸ்தான் பிரிவினையை வலியுறுத்திப் பிரசாரம் செய்தபோது அதன் வேகத்திற்கு ஈடாக அன்றைக்கு இருந்த ஹிந்து அமைப்புகள் யாவும் ஒன்று திரண்டு, சமயத் தலைவர்களையும் அதில் தலையிடச் செய்து வாழ்வா சாவா என்று முழு மூச்சுடன் எதிர் பிரசாரம் செய்ய முற்பட்டிருந்தால் ஹிந்து சமூக நலன் பற்றிக் கவலைப் படாமல் வெறும் பூகோள அடிப்பதையில் பிரச்சினையை அணுகிய காங்கிரசைப் பேச்சு வார்த்தையிலிருந்தே ஓரங்கட்டியிருக்கலாம். மத அடிப்படையில் முஸ்லிம் லீக் பிரச்சினையை முன் வைக்கும்போது அதே மத அடிப்படையில்தானே எதிர்த் தரப்பும் பிரச்சினையை அணுகியிருக்க வேண்டும்? அவ்வளவில் ஹிந்து அமைப்புகள்தானே பேச்சு வார்த்தைக்குப் போயிருக்க வேண்டும்? இந்தக் கோணத்தில் ப்ரீவி கவுன்சிலுக்குக் கூடப் போயிருக்கலாமே, எனக்குத் தெரிந்தவரை அப்படி எவரும் போனதாகத் தெரியவில்லையே!

பிரிவினை தவிர வேறு வழியில்லை என்று தெரியும் பட்சத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு மத அடிப்படையில் மக்கள் பரிவர்த்தனையையும் புத்திசாலித்தனமாகச் செய்திருந்தால் இரு தரப்பிலும் அனாவசியமான உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் தவிர்த்திருக்க முடியுமே! ஹிந்து அமைப்புகள் ஹிந்து சமூகத்தின் சார்பில் பல வாக்குறுதிகளை அளித்து முஸ்லிம் லீக் தனது பிரிவினைக் கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளச் செய்வது
கூடச் சாத்தியமாகியிருக்கலாம். ஏனெனில், எப்போதும் பெரும்பான்மையினராகவே இருக்கும் சாத்தியம் பெற்ற ஹிந்துக்களின் கீழ் முன்னர் அவர்களை அடக்கி ஆண்டவர்களாகிய எங்களால் வாழ இயலாது என வாதாடித் தனி நாடுபெற்ற பிறகும் ஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம் லீக் தொடர்ந்து இயங்க வில்லையா?

ஒரு கூட்டத்தில் பேசுமாறு அழைத்தவர்கள் கூட்டத்தினருக்கு சம்பிரதாயமாக என்னை அறிமுகம் செய்விக்கையில் அவ்வாறு அறிமுகம் செய்தவர், “” இட்டலி சுடுவது எப்படி என்று பேசச் சொன்னால்கூட அதிலும் எப்படியாவது தனது ஹிந்துத்துவக் கோட்பாட்டைப் புகுத்தி விடுகிறவர் இவர்” என்று சொன்னார். அது மாதிரியே கொஞ்சமாய் ஆன்மிகம் பேசலாம் என்று வந்துவிட்டு இங்கு வந்து முடிக்கிறேன். யோசிக்கையில் இதுவும் சரிதான் என்று கேத்கிறது, உள்ளேயிருந்து ஒரு குரல்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்