திரைவெளி – சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

சத்தியானந்தன்


திரைப்படம் பார்த்து விட்டு அந்தக் கதையை ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்டு வியப்பது வகுப்பு வித்தியாசமற்று எல்லா இடங்களிலும் காணப்படுவது. அதை ஒரு வரிக் கதையாகச் சொல்லாமல் எந்த இடத்தில் பாட்டு வந்தது, சண்டை வந்தது இடைவேளை வந்தது என சஸ்பென்ஸ் குறையாமல் சொல்பவரையும் அவரது முகபாவங்களையும் கவனிக்க ரசனை மிகுந்ததாக இருக்கும். 1992லிருந்து 2006 வரை பதினைந்து வருடங்களாக பல்வேறு சிறு பத்திரிக்கைகளில் சுப்ரபாரதிமணியன் எழுதிய நாற்பது கட்டுரைகள், ஏறத்தாழ 108 படங்கள் பற்ரி 176 பக்கங்களில் வெளிவந்துள்ளன. விரிந்த பயணம், ஆழ்ந்த கவனம், ரசனையும், கடுமையான உழைப்பும் வாசகனுக்குக் கண்கூடாகின்றன.
கட்டுரைகளின் தொனி எத்தகையது. அசோகமித்திரன் கட்டுரைகள் தனது கோணத்திலிருந்து உரையாடுவது போல ஒரு நிகழ்ச்சி பற்றிய கருத்தை அல்லது விவரத்தை முன் வைப்பது போல கட்டமைக்கப்பட்டிருக்கும். வாசகனுக்குச் சென்றடைய வேண்டிய பல்வேறு விடயங்களை , பல்வேறு பரிமாணத்தில் நெய்து அளித்திருப்பார். அதை உன்னிப்பாக வாசிக்கும் போதே உள்வாங்க இயலும். இந்நூலின் கட்டுரைகளின் பெரும்பகுதி நேரடியாக விடயத்திற்குச் சென்று திரை விமர்சனம் செய்து, அந்த மொழிப் படங்கள் பற்றிய மேலும் சில விபரங்களைச் சொல்லி அமைபவை. அவ்வாறெனில் சுப்ரபாரதிமணியனின் அசல் தொனி இதுதானா என்றால் இல்லை என்று இருபதாவது கட்டுரை ” ஒரு பயணம் இரு படங்கள் ‘ என்னும் கட்டுரை விடையளிக்கும். பிரான்சிலிருந்து ஜெர்மனி செல்லும் பயணத்தில் அவர் காணும் இரு படங்கள் பற்றியும் அந்தப் பயணம் தொடர்பாக அவர் தரும் விவரங்கள் அய்ரோப்பாவின் நிலை அங்கு வாழும் இந்தியர் பற்றிய அய்ரோப்பியர் கண்ணோட்டம் , தமிழரின் இருப்பு, இலங்கைத் தமிழரின் நிலை என பல கோணங்களில் நம் அறிவை வளப்படுத்துகிறது. மிகவும் சகஜமான தொனியில் நீளமே தெரியாத வண்ணம் விரியும் கட்டுரை.
எனவே இக்கட்டுரைகள் பெரிதும் சிறு பத்திரிக்கைகளில் வெளியானதால் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு சுருக்கமாக ஆனால் முக்கியமான எந்த விவரமும் விட்டுப் போகாத கவனத்துடன் எழுதியிருக்கிறார். .
லெபனான் நாட்டில் குண்டு வீச்சு நடக்கும் போது நிலவ�றையில் தொடுகையும், நெருக்கமுமாய் ஒருத்தி மீது காதல் கொள்கிறான் ஒருவன் வெளியே வந்த பின் அவளைத் தேடுகிறான். பெயர் மட்டுமே தெரியும்.
புத்தபிட்சுகள் கிரிக்கெட் வெறியில் என்ன ஆனார்கள்.
ஒரு சர்வாதிகாரி தன் மீது நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் எச்சில் துப்ப ஏன் சம்மதிக்கிறான்
எழுத்தாளர் ப�ரின் இளம் வாசகி, பள்ளி மாணவியின் கசப்பான திருமண அனுபவம் எதை வெளிப்படுத்துகிறது.
மால்கம் என்னும் அரசியல் கலைஞனின் போராட்டங்கள் என்ன
இந்திய சூழலில் அடூர் கோபால கிருஸ்ணன், டி வி சந்திரன், நரசிங்கராவ், கிரிஸ் கர்நாட், மீரா நாயர், அபர்ணா சென், சத்தியஜித்ரே ஆகியோரின் சாதனை என்ன.
இந்த நூலின் பணி இந்த ஆளுமைகள் முன் வைக்கும் மாற்று திரைபடம் பற்றிய அறிமுகமேனும் வாசகனுக்கு ஏற்படுத்துவது
திரைப்படம் மிக முக்கியமான ஊடகம் ஆகி இருப்பது என்னும் சாதகமான சூழலை குறும்பட , கலைப்பட., இணைப்பட கலைஞர்கள் பயன்படுத்த நடத்தும் போராட்டங்கள் மிகவும் கொடுமையானது. தொலைக்காட்சி தாயாரிப்பாளர் நாகாவுடன் பேசிக் கொண்டிருந்த போது எனெப்டிசியே பரிட்சார்த்தமான படங்களுக்கு நிதி தர தயங்குகிறது என்று குறிப்பிட்டார்.
சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தமது வீடு, சந்தியா ராகம் ஆகிய படங்களின் நெகட்டிவ்கள் அழிந்து விட்டன எனக் கண்­ருடன் பாலு மகேந்திரா கூரினார். நல்ல திரைப்படத்தை கலை ஆர்வமும் பண்பாட்டு விழுமியங்களும் உள்ளோர் ஆதரிக்க வேண்டும் என்னும் கோரிக்கை கட்டுரைகளின் ஊடாக நம் மனதுள் பதிகிறது.
வெறும் விமர்சனம் மட்டுமின்றி உள்நோக்கம் உள்ள படங்களையும் இனங்காட்டுகிறார். சிருங்காரம் என்னும் தமிழ்ப் படத்தில் தேவதாசி முறையைக் கையாண்டுள்ள விதம் உள்நோக்கத்துடன் தென்படுகிறது. சாம்பலின் நிழல்கள் என்னும் படம் இலங்கைப் போராளிகளின் நிலையை எதிர்மறையாய் மட்டுமே அணுகுகிறது. எனவே தனது நிலைப்பாட்டை அல்லது விழுமியங்களை கூர்மையாகவே அலசியிருக்கிறார் சுப்ரபாரதிமனீயன்.
இதைத் தவிர இயக்குனர் பெர்க்மெனின் கடிதம் மற்றும் அப்பாஸ் கியராஸ்டமி (ஈரான்) போன்றோரின் குறும் பேட்டிகள் மிகவும் சிந்தனையைத் தூண்டுபவை..
தமிழில் கொண்டாடப்படும் இயக்குனர்களுக்குக்கூட திரைப்படம் ஒரு விசுவல் மீடியம் என்னும் அறிவோ அதன் சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்தும் கலையோ அன்னியமானது. அவர்கள் பயன்படுத்தும் நடிக நடிகையர் நிறைய சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக உயர்ந்ந்தால் போதும் நாலு பேர் காலில் விழத்தயார்.
பெரிதும் சமகால இந்தி உலக திரைப்படம் பற்றிப் பேசும் கட்டுரைகளில் நமக்கு எத்தனை திரைப்படங்கள் பற்றி, இயக்குனர்கள் பற்றி அறிமுகமும் அவர்கள் கலையின் பல்வேறு பரிமாணாங்கள் பற்றிய விபரமும் காணக் கிடைகிறது என்பது பற்றிய யோசிப்பை இக்கட்டுரைகள் கிளப்புகின்றன. நல்ல திரைப்பட ரசிகர்களின் நூலகத்தில் இந்த புத்தகம் இடம் பெறும் தகுதி கொண்ட முக்கியத்துவம் கொண்டதாகும். ( திரைவெளி ரூ80/ சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்
அமிருதா பதிப்பகம் வெளியீடு, சென்னை )

எழுதியவர்: சத்தியானந்தன், சென்னை
அனுப்பியவர்:ramtongauler@gmail.com
================================================================

“editor@thinnai.com” wrote:

Series Navigation

சத்தியானந்தன்

சத்தியானந்தன்