மந்தைவெளி மன்னர்கள் – சென்னை 600028

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

சித்ரா ரமேஷ்


கிரிக்கெட் மாட்ச் நடக்கிறது. நாமும் பார்வையாளர்களில் ஒருவராக பார்க்கிறோம். விளையாடுவது நம்ம சீனு, கார்த்திக், தனபால், பழனி, சண்முகம், ரகு, அர்னால்ட்.
பந்தயம் ராயபுரம் ராக்கர்ஸ் அணியினருக்கும், சுண்ணாம்புக் காவா என்று அழைக்கப்படும் விசாலாட்சித் தோட்டம் ஷார்க்ஸ் அணியினருக்கும்.
கௌரி மாமி வீட்டுப் பக்கத்திலிருந்து பௌலிங் செய்கிறார்கள். அவர்கள் ஜெயிப்பது நம்ம சுமார் மூஞ்சி குமாரைப் பாத்து ஐஸ்வர்யா ராய் வந்து ஐ லவ் யூ சொல்வது போல நடக்காத ஒரு விஷயம். ஈசியா ஜெயிக்க வேண்டிய மாட்ச்சை நம்ம இந்திய கிரிக்கெட் அணியினர் போலவே தேவையில்லாமல் இழுக்கடித்து டென்ஷன் பண்ணி ஜெயித்து என்று கிரிக்கெட் பந்தயம் நடக்கும் போதெல்லாம் நக்கல் செய்யும் வர்ணனையாளர். அச்சு அசலாய் நம்ம சென்னைத் தமிழர்கள். மண்வாசனை வீசும் சென்னைத் தமிழ். தமிழ் சினிமாவில் பார்க்க முடியாத சென்னை நகரத்து அடிமட்டத்துத் தமிழ் இளைஞர்கள்! அழுக்கான சின்ன சந்துகள்! அதிலும் அசலான சென்னையைக் காண முடிகிறது.
கிரிக்கெட் மாட்ச்சைத் துவக்கி வைக்கும் அந்த அரசியல்வாதி கூட நம் தமிழினத்தை மேம்படுத்த ஏதாவது மேடையில் ஏறி தத்து பித்தென்று உளறி கைத்தட்டல் வாங்கும் மறத்தமிழர்தான். கிரிக்கெட் முதலில் தோன்றியது தமிழகத்தில் தான். நாம் விளையாடும் கில்லி விளையாட்டைத்தான் இந்த ஆங்கிலேயர்கள் கிரிக்கெட்டாக மாற்றியமைத்துவிட்டார்கள் என்று கதை விட்டு நானும் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன் என்று டாஸ் போட்டுப் பார்த்து விட்டு கொஞ்சம் கூட அசராமல் ·பீல்டிங்கா பௌலிங்கா என்று கேட்டு சுற்றியிருப்பவர்கள் முகத்தில் ஈயாடமல் பார்த்துக் கொள்கிறார்.
இவர்கள் எல்லோரும் நமது தெருவில், பக்கத்துத் தெருவில், பக்கத்து வீட்டில் சந்திக்கும் மனிதர்கள்.கிரிக்கெட் ரத்தத்தில் ஊறி தெருவோரம் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள்.விசாலாட்சித் தோட்டத்தின் ஷார்க்ஸ் அணியினரும், ராயபுரம் ராக்கர்ஸ் அணியினரும் மிர்ச்சிக் கோப்பையின் இறுதிச் சுற்றில் விளையாடி ஷார்க்ஸ் குழுவினர் தோற்கின்றனர். முதல் வருடம் தவற விட்டக் கோப்பையை மறு வருடம் பெற நினைக்கிறார்கள். நட்பு, அவ்வப்போது சின்னச் சின்ன சண்டைகள், எதிரிகளோடு ஆக்ரோஷச் சண்டை, காதல், காமம் எல்லாம் இருந்தாலும் படம் முழுக்க கிரிக்கெட் நம்மை வாய் விட்டுச் சிரிக்க வைக்கிறது. அவர்களோடு தெருவோரம் நின்று விளையாட வைக்கிறது.

ராயபுரத்திலிருந்து குடி மாறி சுண்ணாம்புக்காவாக்கு வீடு பார்த்து வரும் ரகு ராக்கர்ஸ் அணியிலிருந்துப் பிரிந்து ஷார்க்ஸ் அணியில் சேருகிறான். அதில் காதல் மோதல் எல்லாம் இருக்கிறது. நம்ம ·பிரண்ட்டோட தங்கச்சி நமக்கும் தங்கச்சி மாதிரி தானே! உனக்கு ஒரு தங்கச்சி இருந்து அவளை யாராவது லவ் பண்ணினா நீயும் உங்க அண்ணனும் சும்மாயிருப்பீங்களா என்று சீனு கேட்கிறான். நியாயம்தானே என்று உணர்ந்து மீண்டும் நட்புக்கு கை கொடுக்கும் கார்த்திக் தான் கிட்டத்தட்ட கதாநாயகன் என்று வைத்துக் கொண்டாலும் இந்தப் படத்துக்கு கதாநாயகன் கிரிக்கெட் தான். காதலைத் தள்ளவும் முடியாமல் தொடரவும் முடியாமல் இயல்பாக நட்பைத் தொடரும் கார்த்திக்கும் பழனியும் கிரிக்கெட்டில் தான் சுமார். படத்தில் சூப்பர்!

அசப்பில் விஜய்யைப் போலவே இருந்து விஜய்யின் சாயல் நடிப்பில் இல்லாமல் இருக்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார் சொம்பு என்று அழைக்கப்படும் ரகு.(விஜய் எங்கே நடித்திருக்கிறார்??) இளமைத் துள்ளலாட்டம் போடுகிற மாதிரி ‘சரோஜா சாமான் நிக்காலோ!!! மேடை ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு’ பாட்டுகள்! படம் முழுக்க ஆக்ரமிக்கும் இளமையின் அணிவகுப்பு, சிரிப்பு!

கடைசியில் அரையிறுதி சுற்றிலேயே ராக்கர்ஸ் அணி ஷார்க்ஸ் அணியிடம் அடி வாங்கி ஷார்க்ஸ் அணி இறுதிச்சுற்றுக்குப் போகும் போதே எங்கியோ இவர்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது என்று புரிந்து விடுகிறது.

மிர்ச்சிக் கோப்பை கிடைக்காவிட்டால் என்ன? விளையாடுவதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சி! அதில் வெற்றி பெறுவது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்! அந்த இரண்டு மணி நேரம் நாம் எல்லோரும் வாழ்க்கையில் சற்றுப் பின்னோக்கிப் போய் அவர்களோடு சேர்ந்து கலாய்த்து விளையாடுகிறாம்.அது தானே சுகம்! ஹ¥ம்! இனிமேலாவது நம் கிரிக்கெட் வீரர்கள் கூட தோற்றுப் போய் வந்தால் அவர்களை உதைப்பது அவர்கள் வீட்டை உடைப்பது என்றெல்லாம் இல்லாமல் பந்தயத்தில் கலந்து கொள்வது ஒரு வகைச் சந்தோஷம் என்று பங்களாதேஷ் போன்ற சப்பை டீமோடு விளையாடித் தோத்தது தப்பு என்று லாஜிக் பார்க்காமல் இருக்கலாம். இந்த ஷார்க்ஸ் குழு கூட பொடி பசங்களோட விளையாடித் தோற்கிறார்கள். ஆனால் அவர்களோடு நாமும் சிரித்துக் கொண்டே விளையாட்டையும் அந்தத் தோல்வியையும் ரசிக்கிறோம்.

சித்ரா ரமேஷ்
chitra.kjramesh@gmail.com

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்