நான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

வே.சபாநாயகம்


சிஷெல்ஸின் மக்கள் தொடர்பு சாதனங்கள் பத்திரிகைகளும் வானொலி மற்றும்

தொலைக்காட்சியும் ஆகும்.

நாடு முழுதுக்குமான பத்திரிகைகள் மூன்று ஆகும். ‘NATION ‘ என்பது அரசாங்கம் நடத்தும் தினசரிப் பத்திரிகை. ‘REGAR ‘ எதிர்க் கட்சியான ‘தேசீயக்கட்சி ‘யின் பத்திரிகை.

‘PEOPLE ‘ என்பது மக்கள் கட்சியின் பத்திரிகை. எல்லாமே ஆங்கிலம்தான். பக்கங்கள் குறைவுதான். அளவும் சிறியதுதான். ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு பத்திரிகைகள் வெளியாவதில்லை. எதிர்கட்சிப் பத்திரிகைகள் ஆரோக்கியமான முறையிலேயே ஆளும் கட்சியை விமர்சிக்கின்றன.

சிஷெல்ஸ் கலாச்சார மையம் தமிழர்களுக்காக ‘சிஷெல்ஸ் அலை ஓசை ‘ என்றொரு தமிழ் சிற்றிதழை நடத்துகிறது. இது காலாண்டிதழ். சென்ற ஆண்டில் தொடங்கப் பெற்ற இப் பத்திரிகை இதுவரை நான்கு சிறப்பான இதழ்களை வெளியிட்டுள்ளது.படுத்து தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழாஅ வர இருக்கிறது.தமிழ் கலாச்சார மையத்தின் சார்பில் அவ்வப்போது நடத்தப்பெறும் இலக்கிய விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், தமிழர் பற்றிய செய்திகள் முழுதுமாக இடம் பெறுகின்றன. கதை, கவிதை,கட்டுரை, தாயகத்திலிருந்து வரும் தமிழரறிஞர்களின் பேட்டி, குழந்தைகள் வரையும் ஓவியங்கள், நிகழ்ச்சிகளின் வண்ணப் படங்கள் என்று இதழ்தோறும் ‘அலை ஓசை ‘ அங்குள்ள தமிழர்களின் மன ஓசையாக ஆர்ப்பரிக்கிறது. வழுவழுப்பான வெள்ளைத் தாளில் பல வண்ணங்களில் சீரான தரத்தைத் தொடர்ந்து பேணி வருகிறார்கள். இதன் ஆசிரியக் குழு, ஈழத்தில் ஒரு கலாசாலை முதல்வராயிருந்து ஓய்வு பெற்ற தமிழறிஞர் பேராசிரியர் வே.சிவசுப்பிரமணியம் அவர்கள். மற்ற குழு உறுப்பினர்கள் திருமதி.மங்களநாயகி, திருமதி.கிரிஜாபாபு, திருமதி.மேனகா கண்ணன் ஆகியோர். தமிழர்களிின் கலாச்சாரம், படைப்புத்திறன், கலைத்திறனுக்கு ஊக்கம் தருவதாகவும் அவற்றை வெளியிடும் சாதனமாகவும் ‘அலை ஓசை ‘ சிறப்பாகச் செயல் படுகிறது.

ஒலி, ஒளிபரப்பு அரசு அமைப்பான ‘SEYCHELLES BROADCASTINTING CORPORATION ‘ மூலம் செயல்படுகின்றன. தேசீய மொழிகளான, க்ரியோல், ஆங்கிலம், பிரஞ்ச் ஆகிய மூன்றிலும் செய்தி மற்றும் நிகழ்ச்சிகள் ஒலி, ஒளி பரப்பப்படுகின்றன.

உள்ளுர் தொலைக்காட்சி தவிர அனேக வெளிநாட்டு விளையாட்டுச் சேனல்களும் தமிழ் நாட்டு ஜெயா தொலைக்காட்சியும் தெரிகின்றன. தமிழ்நாட்டு அரசியலையும், வெள்ளம் மற்றும் விபரீதங்களையும், அழவைக்கும் மெகா தொடர்களையும் ரசிக்க தமிழர்களுக்கு ஜெயா தொலைக் காட்சியை விட்டால் வேறு வழியில்லை. எவ்வளவோ

முயன்றும் வேறு தமிழ் சானல்களைப் பெற அனுமதி கிடைக்கவில்லையாம். முன்பே சொன்னபடி சிஷெல்ஸ் அரசும், மக்களும் விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டுவதால் அதிகமும் விளையாட்டுச் சேனல்களே உள்ளன. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் பிள்ளைகள் விளையாட்டுச் சேனல்களைப் பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள்.

மிகப்பெரிய நூலகம் ஒன்றும் தலைநகர் விக்டோரியாவில் உள்ளது. மிகப்பெரிய கண்கவர் கட்டடத்தில் அமைந்துள்ள இந் நூலகம் பார்த்தாலே உள்ளே நுழைந்து பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. ஆங்கிலம் மற்றும் பிரஞ்ச் மொழி நூல்களே அதிகம் உள்ளன.

மிகப் பெரிய அரசு ஆவணக் காப்பகமும் தலைநகரில் உள்ளது. இதில் சிஷெல்சின்

வரலாறு தொடக்கமுதல் புள்ளி விவரங்களுடன் சேமிக்கப் பட்டிருக்கிறது.

சிறந்த அருங்காட்சியகமும் இங்கு இருக்கிறது. நூலகம், ஆவணக்காப்பகம், அருங்காட்சியகம் மூன்றுக்கும் போய்ப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. அதனால் விரிவாக அவை பற்றிய சித்திரங்களைத் தர முடியவில்லை.

மிருக காட்சி சாலை என்று தனியாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரசு

பராமரிக்கும் ஒரு பெரிய தாவர இயல் தோட்டத்தைப் (BOTANICAL GARDEN) பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே அந்த நாட்டின் தனித்தன்மை மிக்க தாவரங்கள் அனைத்தும் வளர்க்கப் படுவதுடன் ஏராளமான ஊழியர்களைக் கொண்டு சிறப்பாகப் பராமரிக்கவும் செய்கிறார்கள். அந்த நாட்டில் மட்டுமே விளைகிற திருவோடு காய்க்கும் பனை மரங்களை அங்கே பார்க்கலாம். பலவகைப் பழ மரங்களும் விளக்கப் பலகைகளுடன் காட்சிக்குரியனவாகப் பேணப் படுகின்றன. அங்கு நான் ஒரு விசித்திரமான, நமக்குப் பார்க்கக் கிடைக்காத நட்சத்திரப் பழம் (STAR FRUIT) காய்க்கும் மரத்தைப் பார்த்தேன். சடை சடையாய் அவை எட்டிப் பறிக்கும் உயரத்தில் தொங்குகின்றன. அந்தப் பழத்தை வில்லை வில்லையாக நறுக்கி விருந்துகளிலும் உணவு விடுதிகளிலும் வைக்கிறார்கள்.

ஒவ்வொறு வில்லையும் ஒரு நடத்திரம் போலத் தோற்றமளிக்கிறது. புளிப்புச் சுவையுடன் கூடிய இதனை மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

மிருக காட்சி சாலை இல்லாத குறையை இத் தோட்டதில் உள்ள ஆமைகள் காட்சி சாலை ஓரளவு போக்குகிறது எனலாம். இங்கு உள்ள ஆமைகள் மிகப் பிரம்மாண்ட மானவை, ஒரு ஆள் உட்கார்ந்து கொள்ளக் கூடிய அளவில் அகலமும் வலுவான ஓடுகளும்

கொண்டவை. பெரிய பெரிய கால்களுடன் மிகச் சாதுவாய் சுற்றிவருகின்றன. குழந்தைகள் அச்சமின்றி அவற்றின் மீது அமர்ந்து சவாரி செய்கின்றனர். பெரியவர்கள் அவற்றின்மீது அமர்ந்து படம் எடுத்துக் கொள்கிறார்கள். மனிதர்களைக் கண்டதும் அவை கால்களையும் தலையையும் உள்ள்ிழுத்துக் கேகொள்வதில்லை. பார்வையாளர்கள் நீட்டும் இலை தழைகளை தலையை நீட்டிக் கவ்வித் தின்கின்றன. இவை தரையில் மட்டும் வாழ்கிற TORTOISE இனத்தைச் சேர்ந்தவை. ஒரு வீட்டில் பெண் பிறந்தால் இது போன்ற ஆமை ஒன்றை வளர்த்து அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகும்போது வெட்டி கல்யாண விருந்தில் விசேஷமாய்ப் பர்ிமாறி வந்திருக்கிறார்கள் இங்குள்ள பூர்வ குடிகள். இப்போது இது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகை ஆமைகளை வளர்க்கவும் வேட்டை யாடவும் தடை செய்யப்பட்டு மீறுகிறவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப் படுகிறார்கள். இந்த ஆமைகள் நீண்ட நாட்கள் வாழ்பவை. கின்னஸில் இடம் பெற்றுள்ள 150 வயதுடைய ஒரு மிகப் பெரிய ஆமை ஒரு தீவில் வைத்துப் பாதுகாக்கப் படுகிறது. உலக முழுதிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்க்கத் தவறுவதில்லை.

TURTLE எனப்படும் நீர்வாழ் ஆமைகள் கடலில் அதிகம் தென்படுகின்றன. இவை இந்தியாவில் காணப்படும் ஆமைகள் போல அளவில் சிறியவை.

– தொடரும்.

saba1935@sancharnet.in

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்