சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ பற்றி – படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல…
ஆதவன் தீட்சண்யா
படைப்பில் பிரச்சாரம் முதன்மையுறுமாயின் கலைநோக்கம் சிதைந்துவிடும். நாலெழுத்து படித்து பொதுவெளியில் புழங்க வரும் தலித்பெண்ணை இகழவேண்டும் என்ற சுந்தரராமசாமியின் பிரச்சாரத்தினால் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘- ஒரு கதையாக உருவாகாமல் மூளிப்பட்டுள்ளது. அது வரலாற்றையும் சொல்லவில்லை, புனைவாகவும் இல்லை. கதையின் சாரமான செய்தியிலும் புதுமையொன்றுமில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று ஏற்கனவே சங்கராச்சாரி அருளியதன் மறுவுருவாக்கமே.
தாயம்மாளின் கதையைச் சொல்பவன் தங்கக்கண். தங்கக்கண் கதையைச் சொல்கிறான் செல்லதுரை. தங்கக்கண்ணின் முன்னோர் வாழ்ந்த மாடக்குழியும் தாயம்மாளின் மாங்குளமும் ( மாங்குழி என்கிறார் முதலில்) தான் கதை நடக்கும் ஊர்கள். கதை 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்குகிறது. அன்று தங்கக்கண்ணின் முன்னோர்களான ஆண்களின் உடை கெளபீனம். ‘பொட்டையா, போடாதே மேல்சீலை ‘. மேல்சீலை உடுத்த அனுமதியற்ற சாதிகளின் படிநிலையில் மேலே நாடார்களும் கீழே தலித்களும் இருந்தனர். எனவே மேல்சீலை உடுத்த அனுமதியற்ற தாழ்ந்த சாதிப்பெண் என்று தாயம்மாளை அறிமுகப்படுத்தும் தங்கக்கண் நாடார் என்றும் தாயம்மாள் தலித் என்றும் தெளிவாகிறது.
19ம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே நாடார் பெண்களும் (26.07.1859 ), தாழ்த்தப்பட்ட பெண்களும் (01.07.1865) தோள்சீலை அணிந்து கொள்ளும் உரிமையை அடைந்துவிட்டனர். ஆனால் 20 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாதிரியார் வரும்போது தாயம்மாளின் உறவுப்பெண்கள் மார்பை மறைத்துக்கொள்ள அவஸ்தையுறுகிறார்கள் என்கிறது கதை. அய்யா வைகுண்டரும் அய்யங்காளியும் வரலாற்றைத் திருத்தும் சுந்தரராமசாமியை மன்னிப்பார்களாக.
தாழ்ந்த சாதியென்று தெரிந்தும் தாயம்மாளின் கல்வியறிவை மதித்து தங்கள் ஊரின் பள்ளிக்கு அவளை தலைமையாசிரியையாக நியமித்து அப்போதே முன்னூறு ரூபாய் ஊதியம் வழங்குகின்றனராம் மாடக்குழி மகான்கள். சுதந்திரத்திற்கு பின் வந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறும் இங்கிலிசில் பேசி பிரச்சாரம் செய்யுமாறும் கட்சிகள் அவளை மொய்க்கின்றனவாம். (இன்றுவரை பாப்பாப்பட்டியிலும் கீரிப்பட்டியிலும் வேட்புமனு கூட தாக்கல் செய்யமுடியவில்லை.) இந்தளவுக்கு அவளைக் கொண்டாடி ஊரார் தரும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவில்லை தாயம்மாள். அடித்தள மக்களின் மேலெழும்பும் முயற்சிகளை ‘நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் ‘ என்று இளக்காரம் பேசி மறுக்கும் ஆதிக்கசாதியின் மனோபாவம் தான் கதையின் அடியோட்டம்.
அவளளவு படித்த ஆம்பளையே இல்லை அவளது சாதியில். கல்யாணமில்லை. அதற்காக காமத்தை அடக்கிக் கொள்ளமுடியுமா ? தன்னிடம் டியூசன் படிக்கும் நாலாங்கிளாஸ் பையனை சூறையாடுகிறாளாம். மரணப்படுக்கையிலிருக்கும் போதும் ஒழுக்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ளவர்கள் வாழும் ஊர், இந்த ஒழுக்கக்கேட்டை தாங்கிக்கொள்ளுமா ? பிரம்பாலடித்து உதட்டைக் கிழிக்கிறது. ஆளாளுக்கு அடித்து துவைக்கின்றனர். பெருகி வழியும் அவளது ரத்தம் தொட்டு அவள்மீது கதை எழுதுகிறார் சுந்தரராமசாமி.
முதல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமளவுக்கு வயதேறிய தாயம்மாள் அதன்பின் ஊரை விட்டோடி ஐம்பத்துமூன்று வருடங்கள் கழித்து ஊர்திரும்பிச் சாகிறாள். காலக்கணக்கின் துல்லியம் கிட்டத்தட்ட 2005 என்று சமகாலத்தை எட்டுகிறது. ஆனால், தாயம்மாள் செத்து 16 நாள் கடந்த பின் அவளது கதையைச் சொல்லும் சூறாவளி தினசரியின் பிரதம நிருபர் தங்கக்கண்ணுக்கு தற்போதைய மாதச்சம்பளம் நாற்பதுரூபாயாம். கள்ளக்கணக்கெழுதி நாளொன்றுக்கு ஒருரூபாயை இசுக்கிவிடப் பார்க்கும் அவன் 1942 இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திரப்போராட்டத் தியாகி என்கிறார் கதாசூடாமணி சுந்தரராமசாமி. தான் எழுதுவதில் குற்றம்காண யாரிருக்கிறார்கள் என்று காலம் இடம் வரலாற்றுத் தரவுகளை குளறுபடியாக பொறுப்பின்றி கையாள்வது மமதையின் உச்சம்.
– 2 –
‘பலான ‘ விசயத்தில் ஆள் கொஞ்சம் வீக் தெரியுமோ என்ற தகவலை, உண்மையா என்று சோதிக்காமலே ஒரு குற்றச்சாட்டாக பதிவுசெய்துகொள்வது பொதுஉளவியல். பிற மதத்தாரால்தான் நம்நாட்டுப் பெண்களின் கலாச்சாரம் பாழ்பட்டது என்று இந்துத்வவாதிகள் சொல்வதையே – பாதிரியார் பேச்சைக் கேட்டு படிக்கப்போய்த்தான் அவளுக்கு இவ்வளவு கேடுகளும் வந்துசேர்ந்தது என்று சுந்தரராமசாமியும் சொல்வதாய் கருதவும் இக்கதை இடமளிக்கிறது.
அத்துமீறலை படைப்புச் சுதந்திரமெனக்கூறி தப்பித்துக்கொள்ள யாருக்கும் உரிமையில்லை.
– visaiaadhavan@yahoo.co.in
(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)
- ஊரு வச்ச பேரு
- அம்மம்மா
- கோடை
- குழந்தை
- அயான் ஹிர்ஸி அலி – கருத்துகளுக்கு தரும் விலை
- இந்தியாவில்,மொழிகள்,அதிகாரம்,மற்றும் திராவிடத் தத்துவம்
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 1
- ‘தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்! ‘ – ஈ.வே.ரா.வின் முழக்கம்
- சில ‘சொந்தக் குழந்தை ‘களின் பார்வையில் ‘தமிழர் தந்தையார் ‘
- கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 2
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி பாகம்:3)
- ஒரு மஞ்சள் மயக்கம்
- தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் (2)
- நிதர்சனம்
- பெரியபுராணம் – 39 — 23. உருத்திர பசுபதி நாயனார் புராணம்
- கலர்ப் பாம்பு கரை ஒதுங்கி
- நண்பர் பரிமளத்திற்கு எனது பதில்
- குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998
- சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ – கதை பற்றிய என் எண்ணங்கள்
- கவிதையென்பது
- சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ பற்றி – படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல…
- கனடாவில் புதுப்பிக்கப்படும் பழைய கனநீர் அணுமின் நிலையங்கள்
- கார்டோசாட் -1 : தொலையுணர்வு செயற்கைக்கோள்
- கீதாஞ்சலி (21) நிரந்தரமாய்க் கண்மூடும் நேரம்! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மரம்
- என் மழை தட்டுகையில்
- பண்பு கெட்டுப் போர் புாிதல்..
- புகாரியுடன் ஒரு சந்திப்பு