சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் : சுமதி ரூபனின் திரைப்படம் பற்றி

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

காஞ்சனா மணியம்


3வது திரைப்பட விழாவில்(கனடா) திரையிடப்பட்ட சுமதி ரூபனின் (கதை வசனம்

இயக்கம் ( ?)(ரூபன்)) சப்பாத்து குறும் படத்தின் கதை மறைந்த அமரர் குமார்

மூர்த்தியினது கதையாகும்.

தயவு செய்து இனிமேலாவது இவ்வாறன களவுகள் இடம்பெறர்மல் தவிர்க்க குமார்

மூர்த்தியின் கதையை இத்துடன் அனுப்புகின்றேன். இக் கதை கணையாழி கனடா

சிறப்பிதழில் இடம்பெற்றது.

குமார் மூர்த்தியின் வார்த்தைகளில்

;. மிகவும் கவனம் எடுத்திருந்தேன். அதைவிட நடக்காது என்றும் நம்பினேன்.

எல்லாமே பொய்யாகி அது நடந்தேவிட்டது. மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

அவரது சப்பாத்து கோயிலுக்குள் களவு போய்விட்டது.

ஆவரது கதை விழாவில் களவு போய்விட்டது

3வது திரைப்பட விழா பற்றிய சிறு குறிப்பு

விழாவின் படங்கள் என் கணிப்பில் (தகுதிபெற்றது)

1. பயணம்

2. அடிமை;

3. கனவு

4. மனுஷி

5. It’s all about

6. காசு மரம்

7. உஷ்

8. Untitled

09. இது விளம்பரம் அல்ல

10. ஈசல்

11. Dream Inside

12. துரோகம்

13. கோப்பை

காஞ்சனா

சப்பாத்து

– குமார் மூர்த்தி –

என் துரதிர்ஷ்டத்தை மறுபடியும் நிரூபிக்கும் சம்பவமாகிவிட்டிருந்தது அது.

பலமுறை யோசித்திருந்தேன். மிகவும் கவனம் எடுத்திருந்தேன். அதைவிட நடக்காது

என்றும் நம்பினேன். எல்லாமே பொய்யாகி அது நடந்தேவிட்டது. மனதுக்கு மிகவும்

சங்கடமாக இருந்தது.

இந்தச் சப்பாத்தை வாங்குவதற்கு நான் பலவழிகளில் கரிசனம்

எடுத்திருந்தேன். உண்மையில் இது ஒரு சிறிய விடயம் என்று மற்றவர்கள்

ஒதுக்கிவிட்டாலும் எனக்கு இது ஒரு பெரிய விடயமாகவே எப்போதும் இருந்து

கொண்டிருக்கும்.

சப்பாத்தோ, செருப்போ மனதுக்குப் பிடித்த மாதிரி பொருந்தி வருவது எனக்கு

மிகவும் அபூர்வம். அப்படிப் பொருந்தி வந்தாலும் என்னை அது சீக்கிரமே

கழட்டிவிட்டுவிடும். இருந்தும் நீண்ட நாட்களாகவே எனக்குப் பிடித்தமான சப்பாத்து

வாங்கியாக வேண்டும் என்ற தீவிர முனைப்போடு இருந்தேன். அதற்காக நான்

சந்தாப்பம் வாய்க்கும்போதெல்லாம் மற்றவர்கள் போட்டிருக்கும் சப்பாத்துக்களை

உன்னிப்பாகக் கவனித்துக் கொள்வேன். அதுவும் இந்த எலிவேற்றரில் போகும்

போதும் வரும்போதும் குனிந்தபடியே நின்று அடுத்தவர்களின் சப்பாத்துக்களைப்

பார்ப்பதில் எனக்கு அலாதிப் பிரியம்.

பெயர் பெற்ற கடைகளில் சப்பாத்து வாங்கலாம். பணம்கூட அவ்வளவு பிரச்சினை

இல்லை. ஆனால் அது என்னோடு கொஞ்ச காலத்துக்காவது குடித்தனம் நடத்துமா

என்பதுதான் என்னைப் போட்டு வாட்டும் பிரச்சினையாக இருக்கும்.

எப்படியோ பல மாலைகளை விழுங்கி முழுசாக ஒருநாள் விடுமுறையோட ஒரு சப்பாத்தை

வாங்கிவிட்டிருந்தேன். விலை சற்று அதிகமென்ற கவலை இருந்தாலும் சப்பாத்து

மிகவும் அழகாகவே இருந்தது. காலுக்கு கச்சிதமாகப் பொருந்தி, நடைக்கு

கம்பீரத்தைக் கொடுத்தது. இந்த ~சமர்| முடிய இன்னும் இரண்டு மாதங்கள் பாக்கி

இருந்தது. அதற்குப்பின் பத்திரப்படுத்தி வைத்திருந்து அடுத்த சமருக்கும் போடலாம்

கவனமாக பாவித்தால், அதற்கடுத்த சமருக்கும் போடலாம். திட்டங்கள் மனதில்

விரிந்து கொண்டது.

கனடாவில் சப்பாத்து கட்டாயம் தேவையான பொருள். வின்ரருக்கு ஒன்று சமருக்கு

ஒன்று என மாறி மாறிப் பாவிக்க வேண்டும். என்னுடைய வின்ரர் சப்பாத்தைப்

பற்றி நான் அதிகம் கவலைப்பட்டது கிடையாது. கனடா வந்து இறங்கியவுடன் முதல்

முதலில் வாங்கியது அது. மொன்றியலில் வந்து இறங்கிய அன்று விசேடமாக இருபது

சென்ரிமீற்ர் சினோ கொட்டியிருந்தது. அரைiவாசி உலகம் சுற்றி அகதியாக வந்து

சேர்ந்திருந்த படியால் என் சப்பாத்தின் ஆவியும் பிரிந்து விட்டிருந்தது.

‘புறப்படு கடைக்குப் போய் வின்ரர் சப்பாத்து வாங்கவேண்டும் ‘ என்று

அவசரப்படுத்தினான் நண்பன். இரண்டு சினோக் காலங்களை கனடாவில் கழித்த

அனுபவம் அவனுக்கு இருந்தது. கடைக்குள் நுழைந்ததும் சொல்லி வைத்தாற்போல் ஒரு

சோடியை து}க்கி முன்னால் வைத்தான். இதைப் போட்டுப் பார் என்று. பார்க்க

முரட்டுத் தனமாக கணுக்காலுக்கு மேல் அரையடி உயரத்தில் இருந்தது. கையில்

து}க்கியபோது மிகவும் பாரமாக இருந்தது. நான் சற்றுத் தயங்கினபோதும் நண்பன்

விடவில்லை. அவனுக்கு அது மிகவும் பிடித்து விட்டிருக்க வேண்டும். இதுதான்

வின்ரருக்கு உகந்த சப்பாத்து என அடித்துக் கூறினான். எந்த சினோவுக்குள்ளும்

நடக்கலாம். வழுக்காது. குளிர் வரவே வராது என்று அடித்துக் கூறினான்.

அப்போதும் வெளியில் கடுமையான சினோ கொட்டிக் கொண்டிருந்தது. ரூமில்

இருந்து கடைக்கு வந்த கால் விறைப்பு இன்னும் எடுபடாமல் இருந்தது. நல்ல சப்பாத்து

இல்லாமல் சினோவுக்குள் போய் கால் விறைப்பு இன்னும் எடுபடாமல் இருந்தது. நல்ல

சப்பாத்து இல்லாமல் சினோவுக்குள் போய் கால் விறைத்து மரத்து விட்டால் கால்

கழட்ட வேண்டிவரும். ‘உங்க கனபேருக்கு கழட்டியாச்சு ‘ என்றான். திக்கென்றது

எனக்கு. ஏனடா கனடாவிற்கு வந்தோம் என்ற எண்ணமும் வந்தது. மிதி வெடிப்பயமும்

இல்லாமல் உயிரைப் பாதுகாக்க கனடாவுக்கு வந்து கடைசியில் காலைப பறிகொடுத்து

விடுவோமா என்று பயம் பிடித்துக் கொண்டது. கால்களை ஒரு தரம் தொட்டுப்

பார்த்துக் கொண்டேன்.

‘புதுச் சப்பாத்தையே போட்டுக்கொண்டு போய்விடுவோம் அல்லது மறுபடியும் கால்

விறைத்து விடும் என்றேன். ஒரு அநாயகச் சிரிப்புடன் ‘சரி ‘ என்றான் நண்பன்.

போட்டு, நார்ப்பெட்டி கட்டுவது போல் இறுக்கிக் கட்டிவிட்டு நிமிர்ந்து

நின்றபோது கம்பீரமாகத்தான் இருந்தது. ஆனால் நடக்கும்போதுதான் சிக்கல்

எழுந்தது. நான் ஒரு இடத்தில் கால் வைக்க வேண்டும் என்று நினைத்து வைத்தால் அது

இன்னொரு இடத்தில் விழுந்தது. எப்படியோ சமாளித்து கம்பிகளைப் பிடித்து

படியிறங்கி நடைபாதையில் நடக்கத் தொடங்கினோம்.

எதிரே இரண்டு வெள்ளைக் காரக் குமரிகள் லேசாக நிமிர்ந்த கொஞ்சம்

வாஞ்சையுடன் பார்த்து விட்டேன் போல் அவ்வளவுதான் ~தொபுக்கடார்| என்று

நெடுஞ்சாண் கிடையாக நான். என்னைக் கடந்து போகும்போது அவர்களின் சிரிப்பு

பலமாக கேட்டது. நண்பன் கை தந்தான். எழுந்ததும் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

‘சப்பாத்து போட்டு சரியாக நடக்க தெரியாதவங்களெல்லாம் என்னத்துக்கு கனடாவுக்கு

வந்தவங்கள் ‘ என்பது மாதி இருந்தது. எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. ~என்ன

இழவடா இது. பேசாமல் ஊரிலேயே இருந்திருக்கலாம்| என்றது மனது. ஒட்டியிருந்த

சினோவை எல்லாம் வழித்தெறிந்தேன்;. ‘சினோ என்றால் கொஞ்சம் அகட்டி நடக்க

வேணும். அப்பதான் வழுக்காது ‘ என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான் நண்பன்.

அவன் சொன்னபடியே அகட்டி நடந்தேன் வழுக்காமல் இருந்தது. ஆனால் எதிரே வந்த

கிழவர் என்னையும் நடையையும் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் போனார்.

சந்தேகப்பட்டு நானே குனிந்து பாhத்தேன். ஓதம் இறங்கின சேதுமாமா நடந்தமாதிரி

இருந்தது. அப்படியே நின்று விட்டேன். பாவம் சேது மாமா, நடக்கவே மிகவும்

சிரமப்படுவார்.

‘இந்த சண்டைக்குள் அவர் என்ன பாடுபடுகிறாரோ ‘ மனம் இரக்கப்பட்டது.

அப்போது நான் எட்டாம் வகுப்பு, வீரகத்தி வாத்தியார் கரும்பலகையில் கணக்கு

எழுதிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் பக்கத்தில் இருந்து விசுவநாதனிடம் ‘ஓதம்

என்றால் என்னடா ‘ என்று கேட்டேன். அதற்குள் வாத்தியார் திரும்பிப்

பார்த்துவிட்டார்.

‘எழும்புங் கோடா ரெண்டு பேரும் ‘

‘என்னடா கதைச்சனீங்கள் ‘

‘ஓதம் எண்டா என்னெண்டு கேட்டவன் சேர் ‘

வகுப்பு கொல்லென்று சிரித்தது. எப்படி என்று தெரியவில்லை. சடார் என்று

என்பிடரி எழுப்பிய சத்தம் வகுப்பை அமைதியாக்கியது. பின்னேரம் வீட்டுக்கு

வரும்போது சோனேஸ் கிட்ட வந்து ‘ஓதம் எண்டா எண்னடா ? ‘ என்று கேட்டான்.

அவனுடைய மூக்குத்தான் கைவழக்கத்திற்கு சரியாக இருந்தது. போல பொலவென்று

மூக்கில் இரத்தம் அவனுக்கு. பெரிய பிரச்சினையாகி வீட்டில் மறுபடியும் அடி.

ழூழூழூ

ரூமுக்கு வந்து சப்பாத்தைக் கழட்டிய பின்னும் கால்பயம் போகவில்லை. அதுபோக

நீண்ட நாட்கள் எடுத்தது. சப்பாத்து மட்டுமல்ல செருப்பும் எனக்குப் பிரச்சினையான

ஒன்றுதான். பதினொராவது வயதில் ‘துலைச்சால் தோலை உரிச்சுப் போடுவன் ‘ என்ற

கண்டிசனோடு நாலாவது சோடி செருப்பு வாங்கித்தரப்பட்டது. காலைக் கடிச்சு, நொண்டி

எல்லாம் ஒரு படிமானத்துககு வந்த போது பிள்ளையார் கோயில் கொடியேற்றமும்

வந்தது. செருப்போடு போய் வெறுங்காலோடு வீடு திரும்பியது நந்திக்குத் தெரியும்.

என் பதின்மூன்றாவது வயதில் அது ஒரு வெள்ளிக்கிழமை பள்ளிக்கூட கோயிலுக்குள்

வரிசையில் உட்காhந்து, ‘மாயப்பிறப்பறுக்கும் மன்னடி போற்றி ‘ என தோளில் ஒரு

கை. திரும்பிப் பார்த்தேன். வகுப்பு மாஸ்டர் எழும்பி வரச்சொல்லி சைகை

காட்டினார். எங்க பிழைவிட்டனான், எந்தக் கன்னத்தில் அப்பார் என்ற

ஆராய்ச்சிகளோடு வெளியில் வந்தால், மாமா! ‘அம்மாவுக்கு சுகமில்லையாம்

பார்த்துவிட்டு வரலாம் வா ‘ போய்ச் சேரும் போது அம்மா இறந்து விட்டிருந்தா.

அப்போதுதான் அம்மா வாங்கித் தந்த செருப்பு கோவில் ஆலமரத்தடியில் என்ற

ஞாபகம் வந்தது. அந்த செருப்பை பற்றி கவலைதான் எனக்கு அதிகமாக இருந்தது.

கோயில் வாசலில கால் வைத்ததும் எனக்குப் பகீர் என்றது. கூட்டம் அதிகமாகி

நெரிசல் பட்டுக் கொண்டிருந்தது. திரும்பிப் போய்விடலாம் என்றுதான்

முடிவெடுத்தேன். ஆனால் அம்மாவின் நினைவுநாள் என்று இவ்வளவு து}ரம் வந்து ஒரு

அர்ச்சனை செய்யாமல்ப் போவதா ? மனம் அங்கலாய்த்தது. ஒருவாறு உள்ளே

நுழைந்தேன். அது ஒரு நீள வாக்கிலான பக்ரறியை (தொழிற்சாலையாக இருந்த

இடம்)எடுத்து. கோவிலாக்கியிருந்தார்கள். து}ணிலும் இருப்பார், துரும்பிலும்

இருப்பார். பக்ரறியில் இருக்கமாட்டாரா என்ன ? முதலில் உள் நுழைந்ததும்

எதிர்ப்படுவது சிறிய வரவேற்பறை. அதன் வலது மூலையில் பக்தர்களி;ன் உபாதைகளை

ஏற்றுக்கொள்ளும் சலமலக்கூடம். இடது மூலையில் ஒரு சிறிய தடுப்புக்குப் பின்

காலணிகள், கோட்டுகள் வைக்கும் இடம். காலணிகள் எருவறட்டி குவிப்பது போல

குவிபட்டுக் கிடந்தன. கோட்டுகள் கொழுவும் இடம் நிரம்பி கீழே வழிந்து

கிடந்தது. வலது பக்கத்திலேயே அர்ச்சனை சீட்டுவிற்கும் கவுண்டர். சீட்டு வாங்க

சனம் நெரிசல்பட்டுக் கொண்டிருந்தது.

கோட்டைக் கழட்டி கீழே கிடந்த கோட்டுகளின் மேல சாவகாசமாக எறிந்தேன்.

அது மிகவும் பழையது. சிறுசிறு கிழிசல்களும் உண்டு. இந்த வருடத்துடன் கழிக்க

வேண்டியது. ஆனால் சப்பாத்து வாங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதைவிட அது எனக்கு

மிகவும் பிடித்தும்விட்டிருந்தது. கொஞ்ச நேரம் கையில் வைத்துப் பார்த்துக்

கொண்டிருந்தேன். மற்றவர்கள் என்னைத் தப்பாக நினைத்துவிடப் போகிறார்கள்

என்ற பயத்தில் சுவர்கரையில் உள்ள மற்றைய சப்பாத்துக்களை ஓரமாக ஒதுக்கி

இதைச் சோடியாக வைத்தேன். நான் பார்த்த வரையில் இது மட்டும்தான் சோடியாக

இருந்தது. நேரே அர்ச்சனை சீட்டு விற்பவரிடம் சென்றேன். மிகவும் வயதானவர்

நிதானமாக பணத்தை எண்ணி அர்ச்சனைச் சீட்டைப் பற்றுவாடா செய்து

கொண்டிருந்தார். ஐந்து டொலர் தாளை எடுத்து நீட்டும்பொது நெஞ்சு சுhPர் என்றது.

சீட்டைப் பெற்றுக்கொண்டு உள் மண்டபத்துக்குள் ஒருவழியாக முன்னேறி

மூலஸ்தானத்திறற்கு அருகில் வந்து கண்ணை மூடிக் கொண்டு ~முருகா| என்றேன்.

சப்பாத்து சோடியாக கண்திரைக்குள் வந்தது.

வெடுக்கென்று கண்ணைத் திறந்து கொண்டேன். ஆவசரமாக ஐயர் அர்ச்சனைச்

சீட்டை வாங்கிக் கொண்டு போறபோக்கில் ஏதோ சொல்லிக் கொண்டு போனார்.

கண்மூடி ஒருதரம் தியானிப்போம் என்றால் பயமாக இருந்தது. அதைவிட சப்பாத்தும்

அதை வைத்த இடமும் நிழலாடியது.

மூலத்தானத்தை மூன்றுமுறை சுற்றிவந்த போதும் நவக்கிரகத்தைச் சுற்றிய போதும்

சப்பாத்து சுகமாயிருக்கவேணும்! ஏன்று கும்பிடாததைத் தவிர அதுவே மனம் முழுக்க

வியாபித்திருந்தது.

இப்போது பக்தர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். முடிந்தவரைக்கும்

மற்றவர்களை விலக்கி சப்பாத்து இருக்கும் இடத்திற்கு அருகில்; சென்று விட்டேன்.

பலர் சுற்றி நின்று தேடிக் கொண்டிருந்தார்கள். ஓன்றைக் கையில் வைத்துக்

கொண்டு மற்றதைத் தேடுவதும் இரண்டையுமே தேடுவதுமாக இருந்தனர். ஏனக்குத்தான்

அந்தப் பிரச்னையே இல்லை என்ற எண்ணத்துடன் குனிந்து நின்றவர்களை விலக்கி

சுவர்க்கரையைப் பார்த்தேன். அது வெறுமையாகக் கிடந்தது. பக்கத்தில்

சிறுபிள்ளைகளின் சப்பாத்துக்கள் சில சிதறிக் கிடந்தன.

‘’என்ர ஜக்கற்ற கானேல்லப்புள்ள” ஒரு வயோதிகரின் குரல் காதில அறைந்தது.

பத்து நாளைக்கு முன்னம் என்ர ஜக்கற்றும் இங்கதான் துலைஞ்சது” பக்கத்தில்

நின்றவர் அங்கலாய்த்தார்.

வேளியில் போவோரின் கால்களைப் பார்த்தவாறு கதவு மூலையில் நட்ட மரமாக

நான்.

இப்போது அர்ச்சனைச் சீட்டு விற்பவர் பணத்தை எண்ணி கட்டுக்களாக கட்டிக்

கொண்டிருந்தார். அவரிடம் கேட்கலாமா என்று மனம் ஒரு கணம் துடித்தது. அவர்

எடுத்திருக்க மாட்டார். கேட்டுப் பிரயோசனமில்லை.

ஏப்படியும் ஒரு சோடி சப்பாத்து மிஞ்ச வேணும். மூளை தீவிரமாகக் கணக்குப்

போடுகிறது. ஆத்துடன் கோயில் எப்போது காலியாகும் என்றும் கணக்குப் போடுகிறது

மனசு.

(குமார் மூர்த்தி காலம் சஞ்சிகையின் வெளியீட்டாளர். இவரது சிறுகதைத் தொகுதி

‘’முகம் தேடும் மனிதன்” காத்திரமான சிறுகதை எழுத்தாளர். கட்டுரையாளர்.)

kanchana3004@yahoo.com

Series Navigation

காஞ்சனா மணியம்

காஞ்சனா மணியம்