கடித இலக்கியம்:ஒரு மூத்த சகோதரியின் அந்த நாள் ஞாபகங்கள்;பழைய சென்னை பற்றிய செய்திகள்.

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

லலிதா


அன்புள்ள பாப்பாவுக்கு,அனேக ஆசிகள்.

உன் பிறந்த நட்சத்திரம் பிறந்த தேதிக்கும் மருமகள் சாந்தியின் பிறந்த தேதிக்கும் நல்லபடி கொண்டாடவும், மகிழவும்வாழ்த்துகிறேன்.ரவி, சாந்தி,க்ருஷாந்த்,ச்ரவீணாவுக்கு, உமா,மப்பிள்ளை, அர்வின்,அச்வீனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சொல்லவும்.

உன் பிறந்தநாள் என்றவுடன் சென்ற சித்திரபானு வருடம் 1942 என் நினைவில் வந்தது. என் பத்தாவது வயது நிழலாடியது.இப்போது குழந்தைகள் சூட்டிகையாக நினைவாற்றல் அதிகம் உள்ளவர்களாகத் தோன்றுகிறது.நான் மிகவும் மந்தமாகத்தான் இருந்ததாக உணர்கிறேன். அந்த வருடம் என்ன படித்தேன் பரீட்சை எழுதினேனா என்று கூட நினைவில்லை. நம் வீடு மிகவும் துக்கத்துடன் மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இருந்ததால் எதுவுமே மனதில் நிற்கும்படியான விஷய மில்லை.அப்போது நம் பெற்றோருக்கு எவ்வளவு கடன் இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் கட்டாயம் இருந்திருக்கும். 35ல் வீடு வாங்கி 36ல் பிறந்த நாளுடன் சிம்பிளாக ஹோமம் செய்ததாகச் சொல்வார்கள்.37ல் பாமா பிறந்தபோது மாடி கட்டியாகிவிட்டது எனவே கடன் வாங்கி யிருக்கிறார்கள் அதே வருடம் பாபு கல்யாணம், தியாகு பிறப்பு,இறப்பு. பின் பாபு இறப்பும் முடிந்துவிட்டது.பிறகு சோகமே தான். வீட்டில் சிரிப்பும் மகிழ்ச்சியும் ஒளிந்துகொண்டது.

நானும் ஹேமாவும் ஸ்கூல் போய் வந்தோம். 42ல் ஊரே காலியாகிவிட்டது.அப்போது நீ அம்மாவின் வயிற்றிலிருந்தாய். நம் வீட்டில் குடித்தனங்கள் காலியாகி ரங்கராஜமாமா மாத்திரம் சில சாமான்களைப் பூட்டிவைத்துவிட்டு ஊர் சென்றுவிட்டார். அவர் வீட்டில் சிலர் கிராமத்திற்கும் சிலர் பூனாவிற்கும் போனார்கள். கெளரி அப்போது பூனாவிலிருந்தாள். சென்னை தெருக்களில் அப்போது நாய் கூட ஓடாது. வியாபாரம் எதுவுமே தெருவில் நடக்காது.தடதடவென்று மிலிட்டரி பூட்ஸ் நடமாட்டம் இருக்கும். மனதில் ஒரு வித திகில் ஏற்படும்.அரசாங்க ஊழியர்களுக்குக் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது.நாற்பது வயதிற்கு உட்பட்டவர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சி பெற்றனர் நம் அப்பாவிற்கு நாற்பத்தைந்து என்று நினைக்கிறேன். எனவே சேர்க்கப்படவில்லையென்று தோன்றுகிறது. அங்கங்கு ஷெல்டர்கள் கட்டி வைத்திருந்தார்கள். நீ பார்த்திருக்க முடியாது. கூண்டு வண்டி தெரியுமா ? குதிரைபூட்டி மாடு பூட்டி ஓடுமே அதைத்தான் சொல்வார்கள்.அதை எடுத்து தரையில் வைத்தது போல இருக்கும்.அதற்கு நுழை வாயில் வைத்திருப்பார்கள். அபாயச்சங்கு ஒலித்தால் தெருவில் நடமாடுபவர்கள் ஓடி அதில் நுழைந்து குப்புறப்படுக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் மாடிப்படியின் அடியில் குப்புறப் படுக்கவேன்டும் என்று சொல்லி மக்களை எச்சரித்திருந்தார்கள்.இன்னும் பல வழிகள். எனக்குத்தெரியவில்லை.

இரண்டுமுறை அபாயச்சங்கு ஒலித்ததைக் கேட்டிருக்கிறேன். பயிற்சிக்காக ஊதப்பட்டது. அபாயம் விலகிவிட்டது என்பதற்கும் வேறு வித ஒலி ஒலிக்கும்.தவிர விளக்குகள் எரிவது வெளியில் தெரியாமல் காகிதம் ஒட்டப்படும். ரேடியோ கிராமபோன் ஒலிகள் கேட்கக்கூடாது என்றும் இருந்தன. நம் வீட்டில் ஜன்னல் எதிரில் பெரிய மரஸ்க்ரீனை மறைத்து வைத்து உள்ளே நடமாடினோம். அப்பா வெளியில் பூட்டிக்கொண்டு ஆபீஸ் போய் வருவார். நம் வீட்டு டாகுமெண்டுகள் அனேகமாகக் கடனுக்காக பண்டாபீசிலேயே இருக்கும். அம்மா அதுவே பத்திரமான இடம் என்று சொல்லுவாள். அதில் எத்தனை கடன் அப்போது இருந்த தென்று தெரியவில்லை. புதிய புதிய நகைகள் எங்களுக்கு இருந்தன. கனமான பாம்பே கம்பி வளையல் இரண்டு ஜதையும் கதம்பச்செயின் கனமான ராமர் பட்டபிஷேக டாலருடன் நான் அணிந்திருந்தேன் டாலரின் பின்புறம் தாமரையில் நிற்கும் மகாலட்சுமி. அம்மா லட்சுமியை முன்னால் வைத்து அணிவித்தால் நான் ராமனை முன் வைத்து அணிவது வழக்கம். என் நகையே சுமார் பத்து சவரன் இருக்குமென்று நினைக்கிறேன். அதே போல ஹேமாவின் இரண்டு ஜதை கம்பி வளையலும் ஒரே டிசைனில் செயினும் ராஜாவர்த்தினி டாலரும் எட்டு சவரனுக்குக் குறையாது. பாமாவின் செயினும் முத்தும் செயினுமான டிசைனில் ஆலிலை கிருஷ்ணன் டாலர் மறுபுறம் சாயிபாபா வுடன் அழகானது.;இரண்டு ஜதை கம்பிவளையல் சிறியதானாலும் அழுத்தமானது.

சுமார் ஆறு சவரனிருக்கும் அம்மா நாயுருவிக்கொடியும் ,விபூதிப்பட்டைச்செயின் இரட்டைவடம், முத்துமாலை,தங்கத்தில் இரட்டைவடம், ஐந்து ஜதை பாம்பே கம்பிவளையலுடன் சைனாக் கொலுசும் அணிந்திருந்தாள். நாங்கள் எல்லாருமே மூன்று கல் வைத்த கிளாவர் தான் அணிந்திருந்தோம் உனக்குத்தான் பெரிய கல் வைத்த ஸ்டார் வாங்கிப் போட்டார்கள்.3 வயதிலேயே நான் தான் பாபுவுக்கு மூக்குக் குத்தும்போதே குத்திக்கொண்டிருந்ததால் ஒரு சிவப்புக்கல் மூக்குத்தி போட்டிருப்பேன்.அம்மாவின் நகையே 35 சவரனிருக்கும். ஊருக்குப் புறப்படும்போது எல்லா நகைகளையும் மார்வாடியிடம் வைத்துப் பணம் வாங்கி வந்ததாகத் தோன்றுகிறது. அந்தநேரத்தில் மிகக்குறைவான பணம் தான் கிடைத்திருக்கும். ஏனென்றால் ஊரே காலியான போது எதற்குமே விலையில்லை.டவுனில் தம்புச்செட்டித்தெரு டாக்டர் கோதண்டராமய்யராத்தில் நான் குடியிருந்தேனே நினைவிருக்கிறதா ? அவர்கள் எதிர் வீடு தெரியுமா ? பொன்னி,அம்மாப்பொண்ணு,மணி என்ற குழந்தைகள் இருப்பார்களே! அத்திம்பேர் கூட மணிக்கு டியூஷன் எடுப்பாரே! அவர்கள் அப்பா நாராயணசாமி ஐயர் ரயில்வேயில் வேலை செய்தார். 42ம் வருடத்தில் அந்த மாடி வீட்டை ஐயாயிரத்துக்கு மிக தைரியமாக வாங்கிவிட்டார்.ஹார்பர் அருகில் வீடு. மற்றவர்கள் பயந்து ஊரையே காலி செய்த நேரத்தில் வாங்கிப் பிறகு நமக்குத் தெரிந்து வக்கீல் சுப்பிரமணிய ஐயர் அவர்கள் வீட்டில் கீழே குடித்தனம் இருந்தார் வீட்டுக்காரர்கள் மாடியில் இருந்தனர்.இப்போது கடைகள் கட்டி விட்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கான பெறுமானமுள்ள வீடு. அப்படிப்பட்ட நேரத்தில் சென்னையில் மரச்சாமான்கள் ,பித்தளை மற்றும் வீட்டுச் சாமான்கள் விலையில்லாமல் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் மனதை உருக்கும் ஒரு சம்பவம் நடந்தது. சுமார் 25 வயது இளைஞன் ,திருமணமாகி மனைவியை மகப்பேற்றுக்காக பிறந்த வீடு அனுப்பியிருந்தான்.

அலுவலகத்தில் ராணுவப்பயிற்சி பெற்றுத்தேறி விட்டான். ஒரு நாள் தன் வீட்டு மொட்டை மாடியில் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது இரவுநேரம். ஒரு நண்பன் ‘ராஜா, நீ தான் வீரனாயிற்றே!இப்போது தீப்பிடித்து விட்டது என்று எண்ணிக்கொள். நீ எப்படி தப்பி எங்களை எப்படிக் காப்பாற்றுவாய் ? ‘என்று கேட்டான். ராஜா உடனே சுவரேறி வெளியே குதித்து விட்டான். இருட்டில் கீழே பாறை இருந்தது தெரியவில்லை. உணர்ச்சி வயப்பட்ட இளைஞன் இறந்தே போனான். எல்லாருமே சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்கள். நன்றாக நினைவிருக்கிறது. வீட்டினுள்ளேயே தாயார் இருந்திருக்கிறாள். இப்படி கதை எத்தனை எத்தனையோ நமக்கு எப்படித் தெரியும் ? நாங்கள் சென்னையை விட்டுக் கிளம்பும்போது அம்மாவும் பூச்சுநகைகள் தான் அணிந்திருந்தாள். வெளியூரில் தங்கும் வகையில் சில தட்டு முட்டுச் சாமான்களும் ருக்குமணி குக்கரும் எடுத்துக் கொண்டிருந்தோம். அம்மாவின் பிரசவத்திற்குத் தேவையான மருந்துப்பொடிகளும் சாம்பார்ப்பொடி, பருப்புப்பொடி ,மிளகுப்பொடி, போன்று சாப்பாட்டுக்கு வேண்டிய சில பொருள்களும் சேமித்து அம்மா எடுத்து வந்தது நினைவிலிருக்கிறது. அப்பா ஒரு மாதம் லீவு எடுத்திருந்தார் என்று தோன்றுகிறது.

நாங்கள் கிளம்பும்போது A.R.P. என்ற குழுவினர் ரோந்து சுற்றியபடி தெருக்களில் நடமாடிக்கொண் டிருந்தனர். அங்கங்கு மணல் மூட்டைகள் அடுக்கி ,பக்கெட்டுகளிலும் டிரம்களிலும் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. நம் பெற்றோர் மிகவும் வருத்தத்துடன் தான் புறப்பட்டார்கள் என்று இப்போது நினைக்கிறேன். அப்போது என்ன நினைத்தேனென்று தெரியவில்லை. எனக்கு யோசிக்கவே தெரியாதோ என்று கூடத் தோன்றுகிறது. அக்பர் சாஹிப் தெரு பெரியவீடு ,முனையிலிருக்கிறதே ,அதன் பக்கத்தில் இரட்டை வீடு இருக்கிறது , தெரியுமா ? உனக்குத் தெரிந்து டாக்டர் சீனிவாசன் குடியிருந்தார் அல்லவா ? இந்த வீடு அப்போது புத்தம் புதியது. அதில் போலீஸ் அதிகாரி ராவ் சாகிப் நடேச ஐயர் என்பவர் ,நம் அப்பாவின் நெருங்கிய நண்பர் இருந்தார் அவர் சீர்காழி அருகில் பெருந்தோட்டம் என்ற கிராமத்தில் வீடு , தோட்டம்,நிலங்களை வாங்கி அங்கேயே தங்கி விட்டார். நம்மையும் அங்கேயே வரும்படி அழைத்து முன்னூறு ரூபாயில் மிகப் பெரிய ஒரு வீடும் பேசி வைத்திருந்தார்.நாங்கள் சென்னையிலிருந்து அவர் வீட்டுக்குத்தான் போய் இறங்கினோம். அவர்கள் வீடு மிகப் பெரியது. .சென்னையைப்போலவே சகல வசதிகளும் செய்துகொண்டு நன்றாக வைத்திருந்தார்கள்.

கிணற்றிலிருந்து மோட்டார் போட்டு எல்லா இடத்திலும் தண்ணீர் வசதி இருந்தது. தண்ணீரும் நன்றாக இருந்தது. பாத்ரூமில் வென்னீர் வசதி செய்திருந்தார். தோட்டத்திலிருந்து காய்கறி ,பழங்கள், புஷ்பம் என்று புதிது புதிதாக பறித்து வந்தார்கள் வேலைக்காரர்கள். ஒரே மகளான சீதா மணமாகி புருஷனுடன் இருப்பவள் தாய் வீடு வந்திருந்தாள். நாங்கள் தங்கியிருந்த அறையில் ஒரு அழகான செலூலாயிடு பொம்மை இருந்தது. அதன் கழுத்தில் பாசி மணிமாலை கலர் கலரான மணியில் கோர்த்துப் பளபளப்பாயிருந்தது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. பொம்மைக்கு அழகான கவுனும் போட்டு, நன்றாயிருந்தது. ஏதோ தோன்றியபோது, நான் யாரும் பார்க்காத சமயம், அந்த மணி மாலையை எடுத்து ருக்குமணிக் குக்கருக்குள் போட்டுவிட்டேன். அதை அணிந்தால் நன்றாயிருக்குமா ? வேறு பொம்மைக்கு அணிவிப்பேனா ? எதற்கு எடுத்தேன் ? எனக்கே தெரியாது.பிறகு சாயங்காலம் சீதா வந்தபோது அம்மாவிடம் ‘ஏம்மா இந்த பொம்மை கழுத்தில் மணிமாலை ஏதோ போட்டிருந்தேனில்ல ? ‘ என்றாள். எனக்கு ‘திக் ‘ என்றிருந்தது. ‘என்னவோடி தெரியவில்லை, என்னவோ வெறிச்சுன்னு தான் தோணுகிறது ‘ என்றாள் மாமி. நான் மறுபடியும் குக்கரிலிருந்து எடுத்துப் பார்த்தபோது மணி சற்று அறுந்து சிலமணிகள் சிதறி ஆனாலும் பொம்மைக்கு அணிவிக்க முடிந்தது. அம்மா கவனித்தபோது கீழே மணிகளைப் பார்த்துவிட்டு இது எப்படி கிழே எல்லாம் சிதறிக்கிடக்கிறது என்று பொறுக்கிஎடுத்தாள். எனக்கு மிகவும் மனசுக்கு வருத்தமாயிருந்தது.இரண்டு மூன்று நாட்களில் திருவாரூர் புறப்பட்டோம். ஒருநாள் திருவெங்காடு போனோம். அங்கு அகோர வீரபத்திரர், வடக்கு நோக்கிய காளி மிக நன்றாயிருந்தது. அம்மா கர்ப்பவதியாயிருந்ததால் உக்கிர தெய்வம் பார்க்கக்கூடாதென்று தடுத்து விட்டார்கள். நாங்கள் மாத்திரம் பார்த்து வந்தோம். அந்த நடேசய்யர் தான் பின்னாளில் சிவானந்த சரஸ்வதிஸ்வாமிகளின் ஆத்ம சேடர் பிரும்மானந்தா.அவர் தாம் நம் ஹேமாவுக்கும் ஜெயராமனுக்கும் திருமணம் முடிக்க அடிப்படைக் காரணமானவர்.

அவர் ஒரு முறை ஹேமாவின் திருமணத்துக்குப்பிறகு ராமப்பிரேமி என்ற சீடருடன் நம்மாத்துக்கு வந்தார். அப்போது நான் பெருந்தோட்டத்தில் பாசி மணியை மறைத்த விஷயத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே ‘சிறுவயதில் நாம் எல்லாருமே இப்படி ஏதாவது செய்வோம். அதெல்லாம் பெரிய விஷயமில்லை ‘என்றார். ராமப்பிரேமி சிரித்தார். அத்திம்பேர் அந்த விஷயத்தை நினைவு வைத்துக் கொண்டு சொன்னதே அவருக்கு திருப்தி தந்திருக்கும் என்று என்னை மெச்சினார். அம்மாவுக்கு அந்த விஷயமே தெரியாதென்றாள். அதெல்லாம் கவனிக்க நேரமில்லை. எத்தனையோ கவலைகள் அம்மாவுக்கு. பெருந்தோட்டம் நமக்கெல்லாம் சரிப்படாது என்று நினைத்தாளோ என்னவோ, அப்பா எதுவும் சொல்லவில்லை.ந்டேசய்யருக்கு ஏமாற்றமாகத்தானிருந்திருக்கும். திருவாருர் அத்தை வீட்டில் குஞ்சிதபாதத்திற்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அத்தைக்கு ஏழு பிள்ளைகள் இல்லையா ? இன்னொரு பிள்ளைக்கு என்னைத் திருமணம் செய்து கொள்வதாக அப்பாவிடம் சொன்னாள். அப்பாவுக்கு அது புதிய விஷயமில்லையே! சாதாரண விஷயம் தான். கோவிலுக்குப் போனோம். அம்மாதான் கமலாம்பாவிடம் உருகி உருகி என்ன வேண்டினாளோ நீ பிறந்தபோது கமலா என்று பெயர் வைத்தார்கள். அத்தை எனக்கு ஒரு சிவப்பு மணிமாலையும்,ஹேமா பாமாவுக்கு பச்சை, நீலம் என்று கண்ணாடி மணிமாலைகளும் வாங்கித்தந்தாள். எனக்கு முதல் நாள் செலூலாயிடு பொம்மையின் பாசி மணிமாலை நினைவு வந்தது.நாலணா இருந்திருக்கும் . என் மனதில் அது ஒரு கரும்புள்ளீயை எற்படுத்தியது. பிறகு நாங்கள் பெரம்பூர் தாத்தா பாட்டியிடம் சென்றோம். சில வருடங்கள் ஆனபின் அத்தை எனக்காகச் சொன்ன பிள்ளை பிறகு ஒரு பணக்காரப்பெண்ணை மணந்தான். கண்களில் ஏதோ கோளாறு ஏற்பட்டு ரயில்வே வேலையை இழந்த விஷயம் கேள்விப்பட்டோம்.

தாத்தா பாட்டி தம் சொந்த வீடு பழசாகி ரிப்பேராய் இருந்ததால் வேறொரு வீட்டில் குடி யிருந்தார்கள். அப்பா அந்த வீட்டை நன்னிலம் கிருஷ்ணைய்யர் என்பவரிடம் விலைகொடுத்து வாங்கி எங்களை அங்கு விட்டு வைத்தார். மற்றும் நெல்,துவரை, பயிறு போன்ற சாமான்களை மொத்தமாக வாங்கி சேகரித்துக்கொடுத்தார். ஆனால் அம்மா கிராமத்தில் இருக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாள் பாட்டி எத்தனை தடுத்தும் கேட்கவில்லை. சொந்த வீடும் புருஷனும் போய் விட்டால் தான் இருந்து என்ன சாதிக்க முடியும், தானும் புருஷனுடன் எப்படியோ சமாளிப்பேன் செத்தாலும் கூடவே போவேன் என்றாள். தங்கள் பெயர் சொல்ல என்னையும் ஹேமாவையும் விட்டு விட்டு மாதாமாதம் செலவுக்குப் பணமும் அனுப்பி வந்தார்கள். நான் அந்த ஒரு வருடத்தை, படிப்புக்கு முக்கியமான நல்ல வயதை, நாட்களை வீணாக் கினேன்.எங்களை அதட்ட மிரட்ட தாத்தா பாட்டிக்கு மனமில்லை. ஏனென்றால் ஒரு மகளை மணமுடித்துப் பறி கொடுத்திருந்த தன் மகளை பின்னும் வருத்தப்படுத்த மனமில்லை. அந்தநாளில் படிப்பை முக்கியமாக, அதிலும் பெண்குழந்தைகளுக்கு , அதுவும் கிராமத்தில் நினைக்க மாட்டார்கள். எனவே தாத்தா பாட்டியைக் குற்றம் சொல்வது தவறு. எனக்குப் படிப்புக்கு அதிர்ஷ்டமில்லை. ஆனால் நந்தன் சரித்திரம்,ராமநாடகப்பாடல், அருணாச்சலக்கவிராயர்,ஒட்டக்கூத்தர் , காளமேகப்புலவர் பாடல் என்று தாத்தா சொல்வதும் பாட்டி பாடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆர்வத்துடன் கேட்பேன்.

கோபாலகிருஷ்ணபாரதியின் நடராஜர் பாடல்கள், டான்சுக்குப் பாடப்படும், அனேகம் எனக்குத் தானாகவே வந்தது. நந்தனாரை உடலுடன் ஏன் அழைத்துக்கொண்டிருக்கக் கூடாது என்று எனக்கு நடராஜ சுவாமியிடம் கோபம் உண்டு.மீரா, சக்குபாய் போன்ற பக்தைகள் கூட ஜோதி வடிவில் தான் போனார்கள் என்று படித்திருக்கிறேன். அதே பெரியாழ்வாருக்காக, துக்காராமுக் காக ,மாணிக்கவாசகருக்காக பிரத்தியட்சமாக வந்ததாக கதை இருக்கிறது. கடவுளுக்கு இந்த பாரபட்சம் ஏன் என்று தோன்றும். தாத்தா தமிழில் மாத்திரம் பண்டிதரில்லை. கிராமத்திலேயே இங்கிலீஷ் நன்றாகப் படித்து டியூஷன் எடுப்பவரும் அவரே.பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு அவர்கள் வீட்டிலேயே போய் பாடம் கற்பித்து வருவார். அப்படிப்பட்டவரிடம் நான் எத்தனை நன்றாகப் படித்திருக்க முடியும் ?என்னுடைய அதிர்ஷ்டம் நன்றாயிருந்திருந்தால் இன்று வரை ஆங்கிலம் கிலோ என்ன விலை யிருக்கும் என்ற நிலையிலேயே நிற்பேனா ? கிராமத்துக்குப் போனதில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பலனையும் சொல்ல வேண்டுமல்லவா ? ஆமாம், என் இரண்டு கால்களிலும் ஒருவிதமான சிரங்கு சுமார் மூன்று வயது முதல் இருந்தது. எப்படி என்றால் பாதங்களில் சிறு வெடிப்பு கூட இருக்காது.முழங்காலுக்கு மேலேயும் எந்தத் தொந்தரவும் இல்லை. நடுவில் எப்போதும் அரிப்பு,எரிச்சல்,என்னால் கவுனே போட முடியாது. ஸாக்ஸ் போன்றவை போட ஆசைப்பட்டாலும் முடியாது. சில வேளைகளில் சீழ் ரத்தம் இருக்கும்போது பாவாடை அதில் ஒட்டிக்கொண்டு பிய்க்க முடியாமல் அழுவேன்.பகலில் எப்படியோ சமாளித்தாலும் இரவில் தன்னை யறியாமல் சொறிந்து விட்டு எரிச்சல் தாங்காமல் அழுவேன். எத்தனையோ களிம்புகள் ,இஞ்செக்ஷன், மாத்திரைகள் தேங்காய் எண்ணை அபிஷேகங்கள் எதற்கும் சரி வராமல் நானும் தன் நிறத்துடன் கூடிய கால்களுடன் இருக்கமுடியுமா இந்தப்பிறவியில் என்று நம்பிக்கை இழந்திருந்தேன்.

சென்னை திரும்பும்போது எனக்கா இப்படியெல்லாம் இருந்தது என்று தோன்றும்படி தங்க நிறக் கால்களுடன் அழகாக வளர்த்தியாகச் சென்றேன் என்றால் ஆச்சர்யமில்லையா ? ஆமாம், நம் ஊர் கோரையாறு என்கிற காவேரியில் தினமும் உவர் மண்ணால் தேய்த்துக் குளித்தது தான். முதலில் மீன்களைப் பார்த்து பயப்பட்டேன். பிறகு நானே குளிக்க ஆரம்பித்து விட்டேன். நீச்சல் எல்லாம் பழகவில்லை. எனக்குப்பயம் அதிகம். எப்படியோ புதிய பிறவி எடுத்தது போல என் நோய் தீர்ந்தது அந்த இயற்கை வைத்தியத்தால் என்று நினைக்கிறேன்.

அக்டோபர் பிறந்தவுடன் மஞ்சள் தடவிய கடிதம் வந்தது. நீ பிறந்திருப்பதாக அப்பா எழுதி யிருந்தார்.சஷ்டியும் கிருத்திகையுமான தினமென்று வள்ளி என்றும் ,கமலாம்பாள் நல்லபடி வீட்டையும் ஊரையும் காப்பாற்றியதற்காக கமலா என்றும் ,ஊர்க் கலவரங்கள் அடங்கி நிம்மதி ஏற்பட்டதால் சாந்தா என்றும் பெயரிட்டு பாப்பா என்று இன்று வரை அழைக்கிறோம். உன் புண்ணியாவசனத்தன்று நவராத்திரி ஆரம்பித்து விட்டது. எனவே அம்மா பாமாவை உதவிக்கு வைத்துக்கொண்டு பெஞ்சின் மேல் வேஷ்டியை விரித்து சில பொம்மைகளைக் கொலு வைத்தாளாம். அப்போது பாமா தான் பெரிய நாய் பொம்மை மற்றும் சில பொம்மை களை உடைத்து விட்டாளாம். புண்ணியாவசனத்தன்று உன் வாயில் பாக்கைப் போட்டு விட்டு ‘பாப்பா பாக்கு திங்கரா ‘ என்றாளாம். நல்ல வேளை அவள் சொன்னதால் உடனே அம்மா விரலை விட்டுப் பாக்குகளை எடுத்துப் பிறகு தண்ணீரைப் போட்டி எப்படியோ சரியாகி விட்டதாம்.மற்றொரு முறை நீ எப்படியோ கட்டிலிலிருந்து கிழே விழுந்து விட்ட தாகவும் சொன்னாள். நான் சென்னை வரும்போது நீ சுவரைப் படித்து நடக்க ஆரம்பித்து விட்டாய் தாத்தாவுக்குத்தான் பேரனாகப் பிறந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமென்று அஞ்ஞானம்.தாத்தா எதுவுமே சொல்ல மாட்டார். எல்லாம் கடவுள் செயல் என்றிருப்பார்.

எனக்கு ஏனோ பெண்ணே நல்லது என்று தோன்றியது.காரணம்1. தியாகு பிறந்து இறந்துவிட்டது .2.ரங்கராஜமாமாவுக்கு ராமப்பிரசாத் என்று ஒரு அழகான பிள்ளை இறந்தது. 3.நம் ஜகன்னாத மாமாவுக்கு கிருஷ்ணன் என்று மிகவும் புஷ்டியான அழகான குழந்தை இறந்தது. எனவே பெண் என்றால் இறக்காது என்று தீர்மானம். நீ அழகான கண்களுடன் சுருட்டை முடியுடன் நன்றாயிருந்தாய். உன்னை நன்றாகப் படிக்க வைக்க நான் உதவியாயிருக்க வேணுமென்று அப்போதே எண்ணினேன். நான் சென்னை வந்தபின் அப்பா மார்வாடியிடம் வைத்திருந்த நகைகளை எடுத்து வந்தார். அவைகளை எல்லோரும் அணிந்து கொண்டோம். ஹேமாவைப் பாட்டியிடம் விட்டு விட்டு என்னை மாத்திரம் அம்மாவுக்கு உதவிக்காக அழைத்து வந்திருந்தார் அப்பா. அம்மா நகைகளை அம்மாவும், என் நகைகளை நானும் ,ஹேமா நகைகளை பாமாவும் பாமா நகைகளை உனக்கும் அணிவித்து ,பிறகு கழட்டி எல்லாவற்றையும் அப்பா எடுத்துச் சென்றார்.

பிறகு அந்த நகைகளை நான் பார்க்கவேயில்லை. அம்மா அதைப் பற்றியெல்லாம் என்னிடம் பேச மாட்டாள். நானும் கேட்கமாட்டேன். இப்போது நினைக்கிறேன். சென்னையில் குண்டு விழுந்து வீடு போய் விடுமோ என்று வீட்டை அடகு வைத்து, நகைவாங்கி நகை களவு போகாமல் அடகு வைத்து ,எல்லாம் போனாலும் குழந்தைகள் உயிருடனிருக்கவேண்டுமென்று ஊரில் விட்டு வைத்து , மறுபடி நகை களை விற்று வீட்டுக் கடனை அடைத்திருக்கிறார்கள். இப்படி நமக்காக நம் பெற்றோர் எத்தனையோ தியாகங்கள் செய்திருக்கிறார்கள்.

அம்மா பிரசவத்துக்குக் கூட உதவிக்கு ஆளில்லாமல் தைரியமாக இருந்தது பெரிய விஷயமில்லை.1952 வரை மாதவிலக்குடன் தானிருந்திருக்கிறாள் என்றால் சுமார் மூன்று குழந்தைகளைப் பெறாமல் தவிர்த்திருக்கிறாள். ஹேமா கல்யாணம் கழித்து காசியில் கங்கையில் தான் தன் உடல் சுத்தமானது என்று சொல்லியிருக்கிறாள். அந்த ரகசியத்தை நம் வீட்டில் குடி வந்த விமலா ,சித்திராவின் தாய்க்கும் கற்றுத் தந்ததாக நான் சமீபத்தில் தான் அறிந்தேன்.

சென்னை ப்ழைய சென்னையாக ஆன பின் நம் வீட்டுக்கு 15ரூபாய் வாடகை 20 ஆக உயர்ந்தது. குடித்தனங்கள் வந்து பழைய கலகலப்பு ஏற்பட்டது கடிதம் நீண்டு விட்டது. மற்றவை பிறகு.

ஆசீர்வாதங்கள்.

அன்புடன்

லலிதா —

[ஆரோவில் கையேடில் வெளியானது.]

Series Navigation

லலிதா

லலிதா