‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள் என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையைப் படித்து விட்டு வாய் விட்டுச் சிரித்தேன். சுஜாதாவும் இலக்கியமும் கட்டுரையின் ஒரு பகுதிதான் வெளியாகியிருக்கிறது, ஒமாலாஸ் சிறுகதை குறித்து குறிப்புகள்தான் தரப்பட்டிருந்தன.ஆனால் அதற்குள் அவர் எதைஎதையோ நினைத்துக் கொண்டு நான் கேட்காத கேள்விகளை தானேக் கேட்டுக்கொண்டு அவரது வழக்கமான பாணியில் எழுதியுள்ளார், அதாவது பிதற்றியுள்ளார்.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சும்மாவா சொன்னார்கள். அவர் எழுதிய பதிலில் அவர் இலக்கியம் குறித்து எழுதியுள்ளவை எப்படி அபத்தமானவை என்பதையும், அவரது கருத்துக்கள், வாதங்களின் பலவீனங்களை சுட்டிக்காட்டவும் எனக்கு இதன் மூலம் இன்னொரு முறை வாய்ப்பளித்துள்ளார்.அவருக்கு நான் நன்றி கூற வேண்டும். என் பதிலை இரண்டு கட்டுரைகளாக எழுதுகிறேன். இலக்கியம் குறித்த அவரது கருத்துக்களுக்கு [அ-ஏ] என் பதிலாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.அவரது கட்டுரையின் பிற பகுதிகளுக்கான என் பதில் தொடர்கிறது.

I

என் கட்டுரையில் நான் எழுதியுள்ளது

சுஜாதா குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.மறுக்க முடியாது.ஆனால் அவரது பாதிப்பு அவருக்குப் பின் எழுத துவங்கிய அனைத்து எழுத்தாளர்களிடமும் உள்ளது என்பது அதீத கற்பனை

நான் கேட்டிருந்து சில கேள்விகள்தான்.அதற்கான பதிலை கூற முடியாமல் அவர் பிதற்றுவது வேடிக்கை.தமிழ் எழுத்தாளர்களிடம் சுஜாதாவின் பாதிப்பு பற்றிய கேள்விகள் அவை.தலித் இலக்கியத்திற்கும், சுஜாதாவின் எழுத்திற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பினால் அதற்கு தொடர்பு உண்டு, இந்த படைப்புகளில் அவரது எழுத்தின் தாக்கம் உள்ளது (அ) இந்த எழுத்தாளர்களின் இந்த படைப்புகளை இதற்கு சான்று என்று காட்டமுடியும் என்றோ , அல்லது,அவரது எழுத்தின் தாக்கம் இல்லை என்றோ பதில் தரலாம்.நானாக எதையோ அனுமானம் செய்து கொண்டு இதை எழுதவில்லை.அவரது எழுதியதை முன்வைத்தே கேட்கிறேன். எனவே அவரது கருத்திற்கு அவரிடம் சான்றுகள்/ஆதாரங்கள் கேட்பது சரியே.பதில் சொல்ல முடியவில்லை என்றால் ஆதாரங்கள் இல்லை என்று கூறட்டும்.நான் எழுத்தாளர்களின் பெயரைக் குறிப்பிட்டும் கேள்வி எழுப்பியுள்ளேன். எனவே அவர் பதில் கூறாமல் நழுவ முடியாது.சுஜாதாவிற்கு பின் எழுத வந்த எழுத்தாளர்கள் அனைவரிடமும், ஒருவர் தவிர, அவரது தாக்கம் உள்ளது என்று எழுதினால்,அப்படியானால் அதற்கான ஆதாரங்களை காட்டுங்கள் என்று கேட்டால் இப்படி பதறியடித்துக் கொண்டு பிதற்றும் ஜெயமோகன் இப்படி ஒரு கருத்தை முன்வைத்தால் அது விவாதிக்கப்படும் போது சான்றுகள் தேவைப்படும் என்பதை யோசிக்காமல் எழுதக்கூடாது.

இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க சில வழிகள் இருக்கின்றன. என் எழுத்தில் சுஜாதாவின் தாக்கம் இருக்கிறது என்று ஓப்புகொள்கிறவர்களை மட்டுமே நான் எழுத்தாளர் என அங்கீகரிப்பேன் என்று ஜெயமோகன் அறிவித்து விடலாம்.சொல் புதிதில் அப்புறம் ‘அங்கீகரிக்கப்பட்ட ‘ எழுத்தாளர்கள் ‘ பட்டியலை வெளியடலாம்.இன்னொரு வழி: சுஜாதா எழுதததுவங்கியதற்குப்பின் எழுதிய,எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் பட்டியலை சொல் புதிதில் வெளியிட்டு 12 மணி நேரத்திற்குள் ஆட்சேபணையை எழுத்து மூலம் நேரில் தராதவர்கள் தங்கள் எழுத்தில் சுஜாதாவின் தாக்கம் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக கருதப்படும் என்று அறிவித்து விட்டு, ஒரு நாள் தலைமறைவாக இருந்து விடலாம்.எது வசதி என்பதை அவர் தீர்மானிக்கட்டும்.

ஜெயமோகன் எழுதுகிறார்

இ] ரவி சீனிவாஸ் நமது இந்திய கல்வி முறையில் படித்து வந்தவர். நமக்கு வெளிளையன் ஆங்கிலத்தில் சொன்னதே உண்மை. மேற்கோள் சேகரிப்பே ஞானத்தேடல். ‘கூகிள் ‘ தான் போதிவிருட்சம். அப்படி பார்க்கும்போது எலியட் சொன்னதை எஃப்.ஆர் லூயிஸ் மறுக்கிறார்[ எலியட்டுக்கு ஆங்கிலமே ஒழுங்காக தெரியாது என்கிறார் அன்னார்] அவர்கள் இருவரும் சொன்னதை ரோலான் பார்த் மறுக்கிறார். பார்த் சொன்னதை தெரிதா மறுக்கிறார். தெரிதாவை சாம்ஸ்கி மறுக்கிறார். ஆகவே கடைசியாக யார் சொன்னார்களோ அதுதான் உண்மை. ஆனால் உலகம் மிக பெரிது . நாம் உறங்கும்போது மறுபக்க பூமி விழித்திருக்கிறது. ஒரே வழி உறங்காமல் இருபத்திநாலு மணிநேரமும் ஒருவர் கூகிள் தேடியும் கையுமாக விழித்திருக்கவேண்டும். நொடிக்கு நொடி அக்கணத்துக்குரிய நவீனக் கருத்துக்களை அவர் கூவி அறிவிக்கவேண்டும் [ கடைசி செய்தி ! பிரதி இல்லை ஆசிரியன் இல்லை ஆசிரியனின் மச்சான் மட்டுமே உண்டு என்று ஜெர்மனியில் சொல்லிவிட்டார்கள். இதோ மின்னல் செய்தி !!! நெதர்லாந்திலே ழாக் தெரிதா அவுட்!!!! ]

ஜெயமோகன் பிறக்கும் போதே சங்க இலக்கியம் முதல் குவாண்டம் இயற்பியல் வரை அனைத்தையும்

புரிந்து கொண்டு பிறந்தாரா , அவர் பேசிய முதல் வார்த்தையே அகம் பிரம்மாஸ்மியா அல்லது

தத்வமசியா அல்லது சம்பவாமி யுகே யுகே யா,இமயத்தில் பாபாக்களிடம் கல்வி பயின்றாரா,லாமாக்களிடம் பெளத்த தத்துவம் பயின்றாரா இல்லை பயிற்றுவித்தாரா போன்றவை குறித்து யான் ஏதும் அறியேன்.நான் சாதரண இந்தியன் போல் பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி பயின்றவன்.ஒரு சாமான்யன், ஒரு பாமரன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.தெரிதா,… – இந்தப் பெயர்களையெல்லாம் நான் குறிப்பிடவில்லை.ஜெயமோகன் எழுதும் இலக்கிய விமர்சனத்தை தகர்க்க தெரிதா எதற்கு.அவர் எழுத்தில் உள்ள அபத்தங்களே, தர்க்க ரீதியான குழப்பங்களே போதும்.கொசுவை அடிக்க எதற்கு AK-47.

இன்று அக்கேள்விகளுக்கு பதிலை நாம் ஃபிரிஜோ காப்ராவில் ,காரி சுகோவில் , ரோஜர் பென் ரோஸில் , பால் டேவிஸில் அல்லது க ‘ர்ல் பாப்பரில் இருந்து எடுத்துச் சொல்லலாம் (http://www.thinnai.com/ar0617024.html)

இதை எழுதியது ஜெயமோகன்.நானல்ல.பெயர்களை மாற்றி, மேற்கோள் காட்டியுள்ளது போல் என்னால் எழுதமுடியும்.இதில் எத்தனை பெயர்கள். ஏதாவது தெளிவு இருக்கிறதா ? எந்த கருத்து யாருடையது, அது எந்த நூலில்/கட்டுரையில் உள்ளது, அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை/வேற்றுமைகள் என்ன – இப்படி எதுவும் குறிப்பிடாமல் பெயர்களை ஏதோ மந்திர உச்சாடனம் செயவது போல் எழுதும் ஜெயமோகன், நான் எழுதாததை நான் எழுதியது போல் எழுதி குழப்பும் பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளார். இவர் குறிப்பிடும் சிந்தனையாளரகள் எழுதியுள்ள ஒரே விஷயத்தினைப் பற்றியா இவர் குறிப்பிடுகிறார்.அப்படியென்றால் அது என்ன. ஜெயமோகன் அவர் எழுதிய,.நான் மேற்கோள் காட்டியுள்ள பகுதியை ஆதாரங்களுடன் தெளிவாக, தான் கூற வந்த கருத்துக்களை பக்கங்கள், நூல் விபரங்களுடன் மேற்கோள்களை குறிப்பிட்டு (உ-ம் பாப்பர் இந்த நூலில் முன்வக்கும் இந்த கருத்து, இந்தப் பக்கங்கள், இதில் நான் கூற விரும்புவது) எழுதட்டும்..தளையசிங்கம் குறித்த கட்டுரைகளில் அவர் எத்தனையோ பெயர்களை இப்படி உச்சாடனம் செய்துள்ளார். ஒம் காப்ராய நமஹா என்றுதான் எழுதவில்லை. அவருக்கு நானும் சொல்லலாம் காப்ராவின் நூலை அன்றே அறிவியலாளர்கள் பலர் நிராகரித்துவிட்டார்கள் என்று.இன்னமும் சொல்லலாம் பாப்பரிய கண்ணோட்டத்தில் காப்ரா போன்றவர்களது கருத்துக்களை எப்படி அணுகுவது என்று எனக்கு தெரியும், அது உங்களுக்கு தெரியாத ஒன்றாக இருக்கலாம், என்று. நான் இதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் அவர் கட்டுரைகள் பல காற்றைத் தாக்குபிடிக்க முடியாத கட் அவுட் போல் சரிந்து விழுந்துவிடும். ஜெயமோகனுக்கு கருத்துகளை ஒப்பிட்டு அணுகத்தெரியாது, அறிவியலின் தத்துவம் குறித்து அவர் எழுத்தில் தெளிவு இல்லை, குழப்பமே உள்ளது என்பதற்கு அவரது கட்டுரைகளே சான்று என்று என்னால் நிரூபிக்க முடியும்.

தானே நடத்திக் கொள்ளும் கருத்தரங்குகளில் படிக்கப்பட்ட கட்டுரையை வெளியிடுவதன் மூலம் தனனை பெரிய விமர்சகர் என்று காட்டிக்கொள்ள இவை உதவலாம். பதிப்பு(edit)க்கலை தெரிந்தவர்கள் இதைக் கண்டு சிரிப்பார்கள். முறையாக பதிக்கப்படும் எந்த அறிவார்ந்த நூலிலும் இத்தகைய அபத்தங்களை படிக்க முடியாது.

II

ஒமலாஸ் சிறுகதை பற்றி நான் முன்வைத்த குறிப்புகள் அவரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன என்று நினைக்கிறேன்.

நான் பல சான்றுகளை வைத்து இக்கதை எப்படி பல கோணங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது என்பதை

தெளிவாக்கியுள்ளேன், சான்றுகளுடன். குறிப்பாக உருஸ்லா கதையின் கரு எதிலிருந்து பெறப்பட்டது

என்று குறிப்பிட்டுள்ளதை, அந்த வாக்கியங்களுடன் குறிப்பிட்டுள்ளேன்.மற்றும் தாஸ்தாவஸ்கியின் படைப்பு,

லாட்டரி என்ற கதை/திரைப்படத்துடன் இது தொடர்புடையது/ஒப்பிடத்தக்கது என்று விவாதிக்கப்படுவதையும் சான்றுகளுடன் எழுதியுள்ளேன்.கதையின் பல பரிமாணங்களை புரிந்து கொள்ள ஒரு

திரைப்படம், ஒரு கருத்து ஆகியவை குறித்தும் எழுதியுள்ளேன். இது தவிர உருஸ்லாவின் எழுத்துக்கள்

குறித்த இரண்டு நூல்களை சுட்டிக்ககாட்டி, அதில் ஒன்றில் இக்கதை குறித்து முன்வைக்கப்படுள்ள கருத்தினை வாசகர் முன்வைத்திருந்தேன்.இதில் ஒரு நூல் முனைவர் பட்ட ஆய்வேட்டினை அடிப்படையாகக் கொண்டது, Liverpool Science Fiction Texts and Studies என்ற நூல் வரிசையில் வெளியடப்பட்ட நூல்.

இன்னொரு நூல் Understanding Contemproary American Literature என்ற நூல் வரிசையில் வெளியானவை. இரண்டும் பல்கலைகழகப் பதிப்பகங்களால் வெளியிடப்பட்டவை. எனவே இவை முக்கியமனவை.

ஆனால் அவர் இதையெல்லாம் மறைக்கப் பார்க்கிறார். அவரால் தன் தரப்பிற்கு அவர் எழுதியதைத்

தவிர வேறு சான்றுகள் தரமுடியவில்லை. நான் முன்வைத்த ஆதாரங்களை கேள்விக்குட்படுத்தி விமர்சிக்கவும்

முடியவில்லை.கதையை எழுதியவரே தன் கதைக்கு மூலக்கரு இந்த நூலிலிருந்து பெறப்பட்டது என்று

கூறியிருந்தாலும் அது பொருத்தமானது அல்ல என ஜெயமோகன் வாதிடலாம், வலுவான ஆதாரம் இருந்தால்.என் குறிப்பில் குறிப்பிட்ட மேற்கோள் பகுதியையும் கொடுத்திருந்தேன்.எனவே ஜெயமோகன் அவ்வாறு செய்திருக்கலாமே ? ஏன் செய்யவில்லை. கதையை எழுதியவரின் வாசிப்பை விட தன் வாசிப்பு பொருத்தமானது என்று வாதிட்டிருக்கலாம், ஆதாரங்கள் இருப்பின். எனவே நான் காட்டியிருக்கும் சான்றுகளை, முன்வைத்துள்ள வாதங்களை விமர்சன ரீதியாக சந்திக்க இயலாத,அவர் மனம் போன படி எழுதியிருக்கிறார்.நானும் இக்கதை குறித்து எழுதுகிறேன், ஜெயமோகனும் எழுதட்டும், இரண்டையும் சொல் புதிதில் வெளியிடத் தயாரா ?

ஜெயமோகனுக்கு தன்னைத் தவிர உலகில் யாருக்குமே எதுவுமே தெரியாது என்ற நினைப்பிருக்கல்லாம். ஆனால் அவருக்கு மேல் நிலைக் கல்வியிலும், ஆராய்ச்சியாளரகளாலும் ஒரு படைப்பு எப்படி அணுகப்படுகிறது, கற்றுவிக்கப்படுகிறது என்பது குறித்து ஒன்றும் தெரியாது என்றே தோன்றுகிறது. இணையத்திற்கு முன்பும் மாக்பெத் பற்றி பல நூல்கள்,நூற்றுக்கணக்கானகட்டுரைகள் இருந்தன.இணையம் தகவல் தொகுப்பை,பரவலாக்கத்தினை, கருத்து பரிமாற்றத்தை எளிதாக்கியுள்ளது.

அதற்காக யாரும் அவர் போல் குழம்பி பிதற்றவில்லை. இணையம்,கணினி , மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பிரதி,வாசிப்பு என்பதில் பல புதிய சாத்தியப்பாடுகளை கொண்டுவந்துள்ளன.இன்று CD ROM ல் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் கிடைக்கின்றன. ஆர்வமுள்ள வாசகன், விமர்சகன் இவற்றிலிருந்து பல வகையில் பயன் பெறமுடியும். இத்தனை ஆராய்ச்சி கட்டுரைகளா என்று பயப்படும் ஜெயமோகன்தான் காலமுரணாக, பரிதாபகரமாக நிற்கிறார். நான் ஆய்வு செய்யும் துறைகளில் யாரும் அறிவுப்பெருக்கம் கண்டு ஒடி ஒளிவதில்லை.

சர்வதேச அளவில் நூற்றுக்கணக்கான journals, அறிக்கைகள், நூல்கள், பட்ட ஆய்வேடுகள் என பலவற்றை

பயன்படுத்தாமல் இன்று ஆராய்ச்சி செய்ய முடியாது.இதில் இணையம் பெரும் உதவி. எனவேதான் இன்றைய ஆராய்ச்சியாளருக்கு அறிவுபெருக்கத்தை எப்படி அணுகுவது, ஆய்விற்கு எவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதும் கற்பிக்கப்படுகிறது.மாக்பெத் பற்றிய வாசிப்பும்,புரிதலும் மாக்பெத் பற்றிய ஒரு உரையின் வாசிப்பாக மட்டும் இன்று இல்லை.மாறாக மாக்பெத் பற்றிய பல நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றுடன் அகிரா குரோசுவாவின் இயக்கத்தில் உருவான, மாக்பெத்தை மூலமாகக் கொண்ட ஜப்பானிய பண்பாட்டுப் பிண்ணணியில் உருவான திரைப்படம் உட்பட பலவற்றையும் உள்ளடக்கிய ஒன்றாகத்தான் இன்று வாசிப்பும்,புரிதலும் அமைகிறது.(தமிழில் மாக்பெத்தை மூலமாகக் கொண்டு லார்வா என்ற நாடகம் The APTIST குழுவால் அரங்கேற்ப்பட்டதாக அறிகிறேன்).

III

இனி அவரது ‘விமர்சன மகா வாக்கியங்கள் ‘ பற்றி ஆராய்வோம். அவர் எழுதுகிறார்.

இந்தக் கதையில் அறிவியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நவீன கலாச்சாரமே குழந்தைப்பருவம் மீது செலுத்தப்ப்டும் வன்முறையின் மீது கட்டப்பட்டது என்ற கருத்து ஃப்ராய்ட் முதல் ழாக் லக்கான் வரை பிரபலமாக உள்ள ஒன்று. அக்கருத்தின் மறு ஆக்கமே இக்கதை.ஆனால் இதை நாம் அறிவியல் புனைகதைகளின் வரிசையில்சேர்க்கக் கூடாது. இதில் அறிவியல் ரீதியான ஊகம் இல்லை. அறிவியலின் தரிசன தளம் பரிசீலிக்கப்படவும் இல்லை.

இதில் அறிவியல் என்று எதைக்கொள்ள.அவர் கூறும் கருத்து (பிராய்டு முதல் லாக்கன் வரை) கறாரான அறிவியல் நோக்கில் அறிவியல் என்று ஏற்கதக்கதா ? பாப்பர் , பிராய்டிய உளவியல் பற்றி என்ன எழுதியுள்ளார். அதை அறிவியல் என்று ஏற்கிறாரா ?அது அறிவியலா இல்லையா என்று Empiricism என்ற நிரூபண முறை மூலம் கண்டறிய முடியுமா ?இது பற்றி விவாதிக்க ஜெயமோகன் தயாரா ?.அவர் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த அறிவியல் அணுகுமுறையின் அடிப்படையில் இதை அணுகலாமே ? இது தவிர மேலும் சில கேள்விகளையும் என்னால் எழுப்ப முடியும்.

இக்கதையை ஜெயமோகன் அறிவியல் புனைகதை வரிசையில் சேர்க்கக் கூடாது என்கிறார். இக்கதை பல அறிவியல் புனைகதைத் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது.(உ-ம் The Norton Book of Science Fiction: North American Science Fiction, 1960-1990 ).இக்கதை Hugo Awards for Science Fiction Writing and Art Work என்ற புகழ் பெற்ற பரிசிற்காக 1974ல் (சிறுகதை பிரிவு) தேர்ந்தெடுக்கப்பட்டது. அறிவியல் புனைகதைகளில் ஒரளவு பரிச்சியம் உள்ளவர்களுக்குக் கூட இப்பரிசு எப்படி கருதப்படுகிறது என்று தெரியும். அந்தப் பரிசு பெற்ற கதையை அறிவியல் புனைகதையில்லை என்று சொன்ன முதல் நபராக ஜெயமோகன் இருக்க வாய்ப்பு உள்ளது.(இதனை அவரது நூல்களின் பின்னட்டையில் வெளியிடுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை.)

இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவெனில் அறிவியல் புனைகதை என்றால் என்ன என்பதே அவருக்கு சரியாகத் தெரியாது.அது குறித்து நான் ஒரு தனிக்கட்டுரைதான் எழுத வேண்டும், அந்த அளவிற்கு குழப்பம் உள்ளது அவர் கட்டுரையில். அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் உள்ள வேறுபாடு என்பதில் துவங்கி அவர் எழுதிய கட்டுரையில் உள்ள பலவற்றை நான் விளக்கி வாசகர்களுக்கு அவரது புரிதலில் உள்ள குழப்பங்களை/பிழைகளை சுட்டிகாட்ட வேண்டிய நிலைதான் உள்ளது.

கவிதாசரணில் (பிப்ரவ்ரி-ஏப்ரல் 2003) அவரது நூல் குறித்து வெளியான விமர்சனக்குறிப்பையும் (வாசகர்கள் முட்டாள்களா-பொ. வேல்சாமி)வாசகர்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.http://www.geocities.com/kavithaasaran/ இது குறித்து ஜெயமோகனுக்கு சொல்வதற்கு ஏதேனும் உண்டா ?

வேல்சாமி முன்வைக்கும் குற்றசாட்டுகள் உண்மையில்லை என நீரூபிப்பாரா ?

IV

என் கட்டுரைகளில் முன்வைக்கப்பட்டுள்ள பல கருத்துகள்,வாதங்கள் தமிழில் நானறிந்த வரையில் முதன்முறையாக முன்வைக்கப்பட்டவை.அதனை அவரால் ஏற்க முடியவில்லை என்பதால் ‘சில அறிவியல் சார் துறைகளில் புதிய தகவல்களை சொல்பவர ‘ என்று என்னைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார் என யூகிக்கிறேன்.ஜெயமோகன் கண்களை மூடிக் கொண்டால உலகம் இருண்டுவிடாது. அவர் அதை உலகு குறித்த அகவய வாசிப்பு என வாதிடலாம். அதனால் உலகம் காணாமல் போய்விடாது.அது போல் என் எழுத்துக்களை ஏற்பதில் அவருக்கு பிரச்சினை இருந்தால், அவர் தகவல் தகவல் என்று கூக்குரலிடுவதால் அவை வெறும் தகவல்களாகிவிடா. அவருக்கு எது தகவல், எது வாதம், எது சான்று என்பது குறித்து தெரியாமலிருக்கலாம்.

1992 ரீயோ மாநாடு, பெண்ணிய நோக்கில் அறிவியல்,தொழில் நுட்பம் மீதான விமர்சனங்கள், அறிவுசார் சொத்துரிமைகள்,உயிரியல் தொழில் நுட்பத்தின் தாக்கங்கள் – என பலவேறு விஷயங்களை என் கட்டுரைகள் பேசியுள்ளன. நிறப்பிரிகையில் வெளியான பாலோ பிரையர் குறித்த கட்டுரையும் வெறும் அஞ்சலிக் கட்டுரையல்ல.நிகழ் சார்பாக, நான் எழுதிய உலக வர்த்தக அமைப்பும் இந்தியாவும் என்பது குறித்த சிறு நூலும் வெளியானது.ஜெயமோகனின் புரிதலுக்கு அப்பாற்ப்பட்ட விஷயங்களாக இவை இருக்கலாம்.

முன்பு தமிழில் எழுதிய போதும், சில காலம் தமிழில் எழுதாத போதும், இப்போது தமிழில் எழுதும் போதும் நான் ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதிவருகிறேன்..தமிழில் நான் எழுதாத பல விஷயங்கள் குறித்து நான் ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன், எழுதி வருகிறேன். என் எழுத்துக்களின் பட்டியல் தருகிறேன்..ஜெயமோகனால் முடியுமெனில் என் எழுத்துகள் மீதான தன் விமர்சனத்தை முன் வைக்கட்டும். ECONOMIC&POLITICAL WEEKLY உட்பட என் எழுத்துகளை வெளியிட்டுள்ள பத்திரிகைகளுக்கு தன் விமர்சனத்தை எழுதட்டும்.

திண்ணையில் நான் எழுதுவது குறித்த தன் விமர்சனத்தை, நான் குழப்புகிறேன், தவறாக வழி நடத்துகிறேன் என்று பொதுவாக எழுதாமல், விரிவாக சான்றுகளுடன் எழுதட்டும். திண்ணையில் அவர் எழுதியுள்ள பல கட்டுரைகளில் உள்ள குழப்பங்கள், உளறல்கள், பிதற்றல்கள் குறித்து என்னால் எழுதமுடியும்.அதன் மூலம் அவர் ஒரு charlatan என்று வாசகர் கருதும்படிச் செய்ய முடியும். அவர் கட்டுரைகள் பல diarrhea of words என்று கருதக்கவகையிலேயே உள்ளன.

ஒரு புத்தக மதிப்புரையில்/மதிப்புரைக் கட்டுரையில் எது பொருத்தமானது, எது பொருத்தமற்றது என்பது கூட அவருக்கு தெரியவில்லை. பல ஆங்கில நூல்களுக்கு நான் மதிப்புரைகள், மதிப்புரைக்கட்டுரைகள் எழுதியுள்ளேன், தொடர்ந்து எழுதி வருகிறேன்.இவற்றில் பெரும்பான்மையானவை journal களில் வெளியானவை.எனவே மதிப்புரை என்றால் என்ன என்பது எனக்கு தெரியும். தனக்கு தெரிந்தது,தோன்றியதையெல்லாம் மதிப்புரை,கட்டுரையில் எழுதுவதை விட பொருத்தமானதை தெளிவாக எழுதுவது மேல். தானும் குழம்பி, பிறரையும் குழப்ப முயல்வது வீண். இதை ஜெயமோகன் இப்போதாவது புரிந்து கொள்வாரா.ஆனால் தான் குழப்பத்திலிருக்கிறோம் என்பதையே அறியாதவர் பிறர் மட்டுமே குழப்பத்தில் இருப்பதாக,தான் தெளிவாக இருப்பதாக நினைக்ககூடும். அவர் அத்தகைய நிலையிலுள்ளார் என்றே தோன்றுகிறது.

விமர்சனங்களை நேர்மையான முறையில் எதிர்கொண்டு கருத்துகளை கருத்துக்களாலும், சான்றுகளை சான்றுகளாலும் சந்திக்க, விவாதிக்க அவர் தயாரா ?

***

ravisrinivas@rediffmail.com

Series Navigation