அதிகாரமும் அடிமைத்தனமும் ( துர்கனேவின் ‘முமூ ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 61)

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

பாவண்ணன்


ஆந்திரத்தில் துரோணாச்சலம் என்னும் இடத்தில் கொஞ்சகாலம் வசித்தோம். அவ்வளவாகத் தண்ணீர் வசதியில்லாத இடம். நாங்கள் குடியிருந்த தெருவின் முடிவில் ஒரு ஆழ்துளைக்குழாய் போட்டிருந்தார்கள். அங்கிருந்துதான் தண்ணீர் பிடித்துவரவேண்டும். நானும் என் மனைவியும் மட்டுமே இருந்ததால் எங்கள் தண்ணீர்த்தேவை மிகவும் குறைவு. காலையில் ஐந்து குடங்களும் மாலையில் ஐந்து குடங்களும் மட்டுமே எங்கள் தேவையைச் சரிக்கட்டின. ஒரு ஞாயிறு அன்று வீட்டில் தங்கியிருந்தபோதுதான் அருகிலிருந்த ஒரு பெரிய வீட்டையும் அவ்வீட்டு முகப்பில் ஒரு பெரிய தோட்டம் இருப்பதையும் பார்த்தேன். அந்தத் தெருவிலேயே தோட்டம் இருந்த வீடு அது ஒன்றுதான். நான்கு இளம்பெண்கள் காலையிலிருந்து குடம்குடமாகத் தண்ணீர் சுமந்து வருவதையும் வாசலிலிருந்தபடியே ஒரு அம்மா கண்காணிப்பதையும் பார்த்தேன். அப்பெண்கள் நீர்சுமந்து வந்ததும் அந்த அம்மாவைப் பார்ப்பார்கள். எந்தப் பக்கம் எந்தச்செடிக்கு ஊற்றுவது என்பதை அந்த அம்மாதான் தீர்மானிப்பார் . அவர் சுட்டிக்காட்டுகிற செடியில் ஊற்றிவிட்டு மீண்டும் தண்ணீர் சுமந்துவரச் செல்வார்கள் பெண்கள். குப்பை வாருதல், கொட்டுதல், துணிகளைத் துவைத்தல், உலர்த்தல் என ஒவ்வொரு செயலும் அந்த அம்மாவின் கட்டளைப்படியே நடந்தது. ஒரு குட்டி அரசாங்கம்போல ஏறத்தாழ நான்குமணி நேரமாக இந்த நிகழ்ச்சி நடந்தபடி இருந்தது.

மாலையில் என்னைப் பார்க்க வந்திருந்த அலுவலக நண்பரிடம் அச்சம்பவத்தைச் சொன்னேன். ஒரு சர்வாதிகாரி போல அந்த அம்மா அப்பெண்களிடம் வேலை வாங்கிய முறையை சிரிப்பும் வேதனையுமாக விவரித்தேன். வேலைக்காரிகள் என்றாலும் வேலை வாங்கும் முறைக்கு ஒரு நியதி இல்லையா என்று அங்கலாய்த்துக்கொண்டேன். சற்றே மெளனத்துக்குப் பிறகு அவர் அப்பெண்கள் வேலைக்காரர்கள் அல்லரென்றும் அவர்கள் அந்த வீட்டு மருமகள்கள் என்றும் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைவிட ஆச்சரியத்துக்குள்ளான விஷயம் அவர்கள் அனைவரும் அந்த அம்மாவின் ஒரே மகனின் மனைவிகள் என்று சொன்னபோது ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரிகள் என்றும் மூத்தவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்றதும் அடுத்தடுத்து எல்லாச் சகோதரிகனூம் அவரையே திருமணம் செய்துகொண்டார்கள் என்றும் சொன்னார். நான் தலையில் அடித்துக்கொண்டேன்.

என் மனைவியுடன் பேச்சுக்கும் கடைத்தெருவுக்குச் செல்லவும் துணையாகக் கிடைத்த எதிர்வீட்டுப்பெண் இன்னும் பல செத்திகளைச் சொன்னாள். அந்த அம்மா ஏதோ ஒரு ஜென்மத்தில் அரசியாக இருந்து அதிகாரம் செய்து பழகியவளாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கேலிசெய்தாள். காலையில் ஐந்துமணிக்கு அலாரம் அடித்ததும் எல்லா மருமகள்களும் எழுந்துவிட வேண்டும். முகம் கழுவிக்கொண்டு அந்த அம்மா முன்னால் நிற்க வேண்டும். வாசல் பெருக்க, பின்கட்டுத் தொழுவத்தைப் பெருக்க, சமையல்வேலை செய்ய, தண்ணீர் பிடிக்க என ஒவ்வொரு வேலைக்கும் அவர் யாரைச் சுட்டுகிறாரோ அவர்களே செய்ய வேண்டும். எவ்வளவு அரிசி சமைப்பது, என்ன காய் சமைப்பது, தேடிவரும் ஆட்களிடம் என்ன பேசுவது எல்லாவற்றையும் அந்த அம்மாவே தீர்மானிப்பார் என்றும் சொன்னாள். கடைசியாகக் குரலைத் தாழ்த்தி இரவில் தன் மகனுடன் எந்தப்பெண் படுக்கப் போகவேண்டும் என்பதைக்கூட அவர்தான் தீர்மானித்து அறிவிப்பார் என்றும் சொன்னாள்.

அந்த அம்மாவின் குரல் கணீரென்று நாலு ஊருக்குக் கேட்கிற மாதிரி இருக்கும். அவர்கள் வீட்டில் போடுகிற கட்டளை ஒவ்வொன்றும் துல்லியமாக எங்கள் வீட்டுக்குள் கேட்கும். அதைக் கேட்டுக்கேட்டு ஒவ்வொரு கட்டளையும் எங்களுக்கு மனப்பாடமாகிவிட்டது. குறிப்பிட்ட நேரத்தில் அவர் குரல் எழவில்லை என்றால் நாங்கள் குறுகுறுப்புடன் ‘என்ன இன்னும் அரசகட்டளை கேட்கவில்லை ? ‘ என்று எங்களுக்குள் கிண்டல் செய்துகொள்வோம். சிரித்துக்கொள்வோம். வேதனையாகவும் இருக்கும்.

அந்தக் குட்டித்தர்பாரைப் பார்த்தபடியே சில நாட்கள் கடந்துவிட்டன. ஒருநாள் அந்த வீட்டில் ஒரே ஆரவாரம். அந்த நான்கு பெண்களின் இளைய சகோதரியையும் அந்த அம்மாவின் மகன் திருமணம் செய்து அழைத்து வந்திருந்தார். செலவு குறைவாக ஸ்ரீசைலம் கோயிலில் திருமணத்தை முடித்துக்கொண்டார்கள். என் மனைவி அன்று இரவெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தாள். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று மனவேதனையை முன்வைத்தபடி இருந்தாள். அவளால் அந்த விஷயத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

ஆறேழு மாதங்கள் கடந்தபின்னர் அந்த இளம்பெண்ணும் கருவுறாமல் இருந்ததால் அனைவருக்கும் ஏமாற்றம் உண்டானது. அந்தப் பெரியம்மாவின் வசைகளுக்கும் கட்டளைகளுக்கும் அவளும் ஆட்பட வேண்டியிருந்தது. ஆனால் அது ரொம்ப காலத்துக்கு நடக்கவில்லை. தன் மூத்த சகோதரிகளேயானாலும் அவர்களைப்போலத் தன்னால் இருக்க முடியாது என்பதை அவள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டாள். அந்த வீட்டின் முதல் எதிர்ப்புக்குரல். பல்லாண்டுக் காலமாக அப்படி ஒரு குரலைக் கேட்டே அறியாத அக்குடும்பச் சூழல் அவளை எல்லாருக்கும் விரோதியாக்கியது. பல துன்பங்களுக்கு உள்ளானாள். அவற்றையெல்லாம் எதிர்த்து நின்றாள் அவள். தன் கணவனுடைய பலசரக்குக் கடையில் வேலை செய்யும் ஓர் இளைஞனுடன் துணிச்சலுடன் வீட்டைவிட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்டாள். அதே தெருவில் வேறொரு வீட்டில் எல்லாருடைய பார்வையிலும் படும்படி நடமாடிக்கொண்டிருந்தாள். அடுத்த மாதமே அவள் கருவுறவும் செய்தாள். தன் கைமீறி அடுக்கடுக்காக நடந்துவிட்ட எல்லா விஷயங்களும் அந்த அம்மாவைச் சாய்த்துவிட்டன. முக்கியமாக அந்த இளைய மருமகள் கருவுற்ற விஷயத்தை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நெஞ்சுவலி என்று சாய்ந்தவள் ஒரே இரவில் மரணமெய்தினாள்.

அந்த ஊரைவிட்டு நாங்கள் வெளியேறிய பின்னரும் அவ்வப்பொழுது அந்த அம்மாவின் அதிகார முகத்தைப்பற்றியும் அவர் நடவடிக்கைகள் பற்றியும் நானும் என் மனைவியும் அடிக்கடி பேசிக்கொள்வோம். அதிகாரத்தின் சுவைக்குப் பழகியவர்கள் மெல்லமெல்ல அற்ப விஷயங்களைக் கூடத் தாமே தீர்மானிக்கவேண்டும் என்கிற நிலைக்குச் செல்லக்கூடும் என்பதற்கும் தன் கைமீறி நடக்கிற விஷயம் அவர்களைக் கடுமையான நிலைகுலைதலுக்கு ஆளாக்கக் கூடும் என்பதற்கும் அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு பெரிய எடுத்துக்காட்டு என்று சொல்லிக் கொள்வதுண்டு. கூடவே ஒரு நாயை முன்னிறுத்தி அதிகாரச்சீமாட்டி ஒருத்தி நிகழ்த்திய ஆரவாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் துர்கனேவின் சிறுகதையொன்றையும் என் மனைவிக்குச் சொல்வதுண்டு.

அக்கதையின் முக்கியப் பாத்திரங்கள் கெராஸிம் என்கிற பண்ணையடிமையும் முமூ என்கிற பெயரில் அவன் வளர்க்கும் நாய்க்குட்டியும். கெராஸிம் வலிமையான உடல்வாகு கொண்டவன். நான்குபேர் செய்கிற வேலையை ஒருவனாகவே செய்யக்கூடியவன். குதிரைகளின் உதவியின்றிக் கலப்பையைத் தன் கைகளாலேயே அழுத்தி நிலத்தை உழுது விடுபவன். கிராமத்திலிருந்த அவனைத் தன் பண்ணைக்கு அழைத்துவந்து வேலைக்கு அமர்த்தி வைத்துக்கொள்கிறாள் விதவைச் சீமாட்டி. ஆனால் அவனுக்குக் காது கேட்பதில்லை. வாய்பேசவும் வருவதில்லை. பிறவிக் குறைகள். மேய்ச்சல் நிலத்தில் தளதளவென்று மண்டிய புல்நடுவே நின்று பழகிய எருதை புகைமண்டலங்களும் நீராவி அலைகளும் சூழ்ந்த ரயில்பெட்டியில் ஏற்றி அழைத்துச் சென்றால் எப்படி மிரளுமோ அப்படி மிரட்சி கொள்கிறான் கெராஸிம்.

ஏராளமான வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் கொண்ட அப்பண்ணையில் தத்தியானா என்னும் இளம்பெண் வேலை செய்கிறாள். அவள் மீது நாட்டம் கொள்கிறான் கெராஸிம். ஆனால் அது நிலைக்கவில்லை. அவளை அதே பண்ணையில் வேலைசெய்யும் மற்றொரு குடிகாரனுக்குத் திருமணம் செய்து வைக்கிறாள் சீமாட்டி. அப்பண்ணையில் அவள் சொல்கிற ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கட்டளை. யாரும் எதையும் எதிர்த்துச் செய்ய முடியாது. இத்திருமணச் செய்தியால் மனம் உடைந்தாலும் எதையும் செய்ய இயலாதவனாக இருக்கிறான் கெராஸிம். ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவரும்போது கைதவறிப் பீப்பாயை உடைத்துவிடுவதுதான் அவன் நடவடிக்கைகளில் நிகழும் ஒரே மாறுதல். அன்று மாலை மன ஆறுதலுக்காக ஆற்றோரமாக நடந்துகொண்டே செல்லும்போதுதான் கரையின் சேற்றுக்குழம்பலில் அகப்பட்டுத் தத்தளிக்கும் ஒரு நாய்க்குட்டியைக் காப்பாற்றி அறைக்குக் கொண்டுவருகிறான். அன்று முதல் அவனுடைய செல்லத்துணையாக மாறிவிடுகிறது அக்குட்டி. அதற்குச் செல்லமாக முமூ என்று பெயரிடுகிறான். ஊமையான அவன் எழுப்புகிற ஒலிகளாலேயே அப்பெயர் அமைந்துவிடுகிறது. தன் மனத்தில் தத்தியானாவுக்கு இருந்த இடத்தை அந்தக் குட்டி நாய்க்கு வழங்குகிறான் அவன். ஓராண்டு வரை எந்தப் பிரச்சனையுமின்றி ஒருவருக்கொருவர் அன்புத் துணையாக வாழ்கிறார்கள்.

கோடைகாலத்தில் ஒருநாள் தோழிகள் புடைசூழப் பண்ணையைச் சுற்றி வந்த சீமாட்டியின் கண்களில் முமூ பட்டுவிடுகிறது. தனக்குத் தெரியாமல் தன் பண்ணையில் ஒரு நாய் வளர்வது அவளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உடனே அதை உடைமை கொள்ள விரும்புகிறாள். தனக்கு அந்த நாய் வேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டுச் செல்கிறாள். தலைமைப் பணியாளன் படாதபாடு பட்டு அதைத் துரத்திப்பிடித்துத் துாக்கிக்கொண்டு வந்து விருந்தறையில் விடுகிறான். சீமாட்டி பரிவான குரலில் அந்த நாயை அருகே அழைக்கிறாள். ஆடம்பரமான சூழலுக்குப் பழக்கமில்லாத முமூ வாசலை நோக்கி ஓடப்பார்க்கிறது. ஆனால் மறுபடியும் பணியாளின் கையில் அகப்பட்டுவிடுகிறது. பால் ஊற்றியும் சாப்பிடக் கொடுத்தும் கூட அந்த நாயை வசப்படுத்த இயலவில்லை. நாயைத் தடவிக்கொடுப்பதற்குச் சீமாட்டி குனிந்த போது சட்டென தலையை உயர்த்திப் பற்களைக் காட்டுகிறது. சீமாட்டி வெடுக்கென கையைப் பின்னிழுத்துக் கொள்கிறாள். ஒரு கூட்டமே தனக்குப் பணியத் தயாராக இருக்கும்போது ஒரு சாதாரண நாயைப் பணிய வைக்க முடியாததில் சீமாட்டிக்கு ஆவேசமும் வெறுப்பும் பொங்குகின்றன. மறுகணமே வெளியே இழுத்துச் செல்லுமாறு கட்டளையிடுகிறாள். அன்று பகலும் இரவும் அமைதியின்றிப் பொழுதைக் கழிக்கிறாள் சீமாட்டி.

மறுநாள் காலை வழக்கத்துக்கு முன்னதாகவே தலைமைப் பணியாளனை வரவழைத்து பண்ணை முகப்பில் இரவெல்லாம் குலைத்துக்கொண்டிருந்த நாயால் துாக்கமே கெட்டுவிட்டது என்று புகார் செய்கிறாள். எந்தச் சத்தமும் தனக்குக் கேட்கவில்லையே என்கிற குழப்பமிருந்தாலும் சீமாட்டியை அமைதிப்படுத்த வேண்டி ‘ஊமையின் நாயைச் சொல்கிறீர்களோ ? ‘ என்று கேட்கிறான். அவன் கேள்வியையே பொருட்படுத்தாதவளாக ஏற்கனவே உள்ள பண்ணைநாயே போதுமென்றும் அன்றே அந்த நாய் விரட்டப்பட்டுவிட வேண்டும் என்றும் கட்டளையிடுகிறாள். நேரிடையாக கெராஸிமை அணுக அச்சப்பட்ட தலைமைப் பணியாளன் கள்ளத்தனமாக யாருமறியாமல் அந்தக் குட்டிநாயை அவன் அறையிலிருந்து துாக்கிச்சென்று ஊருக்கு வெளியே விட்டுவிடுகிறான். மாலையில் அறைக்குத் திரும்பிய கெராஸிம் முமூவைக் காணாமல் கவலையுடன் எல்லா இடங்களிலும் தேடுகிறான். எந்தப் பயனுமில்லை. வாழ்வையே பறிகொடுத்தவனைப்போலத் துக்கத்துடன் துாக்கமின்றி இரவைக் கழிக்கிறான்.

மறுநாள் இரவு சோகத்துடன் வைக்கோல் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும்போது அவனைத் தேடி முமூ வந்துவிடுகிறது. கெராஸிம் தாவி அக்குட்டியை எடுத்து அணைத்துக்கொள்கிறான். இவை அனைத்தும் சீமாட்டியின் வேலை என்பதை அவனால் ஊகித்துக்கொள்ள முடிகிறது. மீண்டும் அக்குட்டிநாய் யார் கண்ணிலும் படாதபடி அறைக்குள்ளேயே பாதுகாக்கிறான். வெளியுலகுக்கு நாய் தொலைந்துபோன சோகத்தில் இருப்பதாகவே காட்டிக்கொள்கிறான். ஆனால் அந்த நாடகம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

ஒருநாள் இரவில் கெராஸிமின் அறை இருந்த பக்கமாக நீண்டிருந்த வேலிப்படலையொட்டி ஏதோ ஒரு சலசலப்பு கேட்டது. சட்டென பழக்கத்தின் காரணமாக முமூ காதுகளைக் குத்திட நிமர்த்தி அப்பக்கமாக குரைத்தபடி ஓடியது. எவ்வளவோ முயன்றும் கெராஸிமால் அதைத் தடுக்கமுடியவில்லை. நாயின் திடார்க்குலைப்பு சீமாட்டியை எழுப்பிவிட்டது. உடனே அவள் புலம்பத் தொடங்கிவிட்டாள். அந்த நாயைப் பற்றிய புகார்களை அடுக்கத் தொடங்குகிறாள். தன் முதல் உத்தரவைச் சரிவர நிறைவேற்றாததை ஒட்டிப் பணியாளனைத் திட்டுகிறாள். ஊருக்கு வெளியே விரட்டப்பட்ட நாய் பண்ணைக்குள் மறுபடியும் துர்ப்பாக்கியவசமாக நுழைந்துவிட்டது என்றும் அடுத்தநாள் எப்படியும் அது கொல்லப்பட்டுவிடும் என்று உறுதியளிக்கிறான் அவன். மறுநாள் காலையில் பண்ணை வேலைக்காரர்கள் அனைவரும் கெராஸிமின் அறையின் முன் கூடிக் கதவைத் திறக்கும்படி கட்டளையிடுகிறார்கள். கும்பலாக அனைவரும் கோபாவேசத்துடன் வந்ததிலிருந்து அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொள்கிறான் கெராஸிம். வருத்தமும் கவலையும் அவனை அழுத்துகின்றன. வெகுநேரத்துக்குப் பிறகு கதவைத் திறக்கும் கெராஸிமிடம் நாயைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கேட்கிறது கும்பல். கெராஸிம் அவர்களைக் கூர்ந்து கவனித்து கொல்வதற்கா என்பதுபோலச் சைகையால் கேட்கிறான். உடனே கும்பல் ஆமாம் என்று தலையசைக்கிறது. சில நொடிகளுக்குப் பிறகு கும்பலை ஏறிட்டுப் பார்க்கும் கெராஸிம் தானே அக்குட்டியைக் கொல்வதாக சைகையால் மவாக்களிக்கிறான்.

சந்தடி அடங்கிய ஒருமணநேரத்துக்குப் பிறகு நாய்க்குட்டியுடன் அறையை விட்டு வெளியே வருகிறான் கெராஸிம். அதை நன்றாகக் குளிப்பாட்டித் துவட்டிவிடுகிறான். கடைக்கு அழைத்துச் சென்று மாமிசத் துணுக்குகளை வாங்கித் தின்னக்கொடுக்கிறான். குடிக்க சூப் வாங்கித் தருகிறான். பிறகு நடக்கத் தொடங்குகிறான். வழியில் இரண்டு செங்கற்களைத் தேடி எடுத்துக்கொள்கிறான். ஆற்றோரமாகவே நடந்துசென்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருந்த துடுப்புப்படகுக்குள் ஏறிக்கொள்கிறான். வேகவேகமாகத் துடுப்பையசைத்து நடு ஆற்றுக்குச் செல்கிறான். ஒருகணம் முமூவைக் கட்டித்தழுவியபடி சிலநொடிகள் அமர்ந்திருக்கிறான். கொடிய வேதனையும் கசப்பும் வெளிப்படும் முகபாவத்துடன் இரண்டு செங்கற்களையும் குட்டியின் உடம்போடு சேர்த்துக்கட்டிக் கயிற்றால் அதன் கழுத்தில் சுருக்குப்போடுகிறான். நம்பிக்கையுடனும் அச்சமின்மையுடனும் அவனைப் பார்த்து வாலாட்டுகிறது முமூ. கண்களை ஒருகணம் மூடித் திறந்த கெராஸிம் சட்டென ஆற்றுக்குள் குட்டியை எறிந்துவிடுகிறான்.

அதுவரை அவனைத் திருட்டுத்தனமாகப் பின்தொடர்ந்த ஒற்றன் பண்ணைக்குச் செய்தியைத் தெரியப்படுத்த ஓடுகிறான். ஆற்றங்கரையிலிருந்து பண்ணைக்குத் திரும்ப மனமில்லாத கெராஸிம் சொந்தக் கிராமத்தை நோக்கி நடக்கிறான். விஷயமறிந்த சீமாட்டி மனம்கொதித்துப் போகிறாள். முதலில் அவனை உடனே பண்ணைக்குத் திரும்பி அழைத்துவரும்படி கட்டளையிடுகிறாள். பிறகு உடனே அப்படி ஒரு நன்றிகெட்ட பிறவி வரவே வேண்டாம் என்று அறிவித்துவிடுகிறாள்.

இக்கதையில் பண்ணையடிமையாக வரும் பாத்திரம் ஊமையாக இருப்பதே நல்ல படிமமாக விளங்குகிறது. பேச்சுரிமையற்ற, எதிர்க்க வலிமையற்ற, அதிகாரத்துக்குப் பணிந்துபோகிற அடிமைத்தனத்துக்கும் அப்பாவித்தனத்துக்கும் பொருத்தமான படிமம். அதுவே இதன் சிறப்பு. ஒரு குட்டிநாயின் மெல்லிய சீற்றத்தையே தாங்கிக்கொள்ளவியலாத அதிகாரம் அடிமைகளின் மொத்த சீற்றத்தை எப்படித் தாங்கும் என்கிற திசையில் நம் எண்ணம் விரிவடையும்போது கதை கொடுக்கிற அனுபவம் மேலும் விரிவானதாக மாறும்.

*

ரஷ்ய மொழியின் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் துர்கனேவ். பண்ணையடிமை முறையின் மீது அவர் கொண்டிருந்த அருவருப்பையு ம் அடிமை ஆட்கள் மீது கொண்டிருந்த இரக்கத்தையும் அவர் படைப்புகள் புலப்படுத்துகின்றன. இவரது புகழ்பெற்ற நாவலானஏதந்தையரும் தனயர்களும்ஏ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முமூ என்னும் இச்சிறுகதை 1981 ஆம் ஆண்டில் முன்னேற்றப்பதிப்பகத்தின் வழியாக வெளிவந்த ‘ருஷ்யச்சிறுகதைகள் ‘ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மொழிபெயர்த்தவர் பூ.சோமசுந்தரம்.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்