தமிழ் ஓவிய உலகின் அடையாளம்–ஒவியர் ஆதிமூலம் மறைவு

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

மோனிகா


தமிழ் நாட்டின் மூத்த ஓவியரான ஆதிமூலம் சனவரி 15ம் நாள் நம்மைவிட்டு மறைந்தார். இது தமிழகத்துக்கும் ஓவியச் சமூகத்துக்கும் ஒரு மீளாத் துயர்தரும் சம்பவம். ஆதிமூலம் அவர்கள் ஓவியர் மட்டுமல்லாது சிறுபத்திரிக்கை வட்டாரத்திற்கும் ஒரு சிறந்த நண்பர் ஆவார். அறுபதுகள் முதல் அவர் தனது ஓவியங்களை சிறுபத்திரிக்கைகளுக்கும் பத்திரிக்கைகளின் அட்டைப் படத்திற்கும் வழங்கி வந்தார்.

கோட்டோவியம் என்பது இந்திய ஓவியத்திற்கான அடையாளம் என்றொரு கண்டுபிடிப்பை அறுபதுகளில் உணர்வதற்கு முன்னரே பேனாவும் மையும் கொண்டு 1953ம் ஆண்டு காந்தியை கோட்டோவியமாய் வரையத் தொடங்கியவர் ஓவியர் ஆதிமூலம். அதன் பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னரே அவர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து காந்தியை சிற்பமாகவும் ஓவியமாகவும் வரைந்த ராய் செளத்ரி, தனபால் போன்றோரிடத்தில் ஓவியம் பயின்றார். காந்தியின் சித்தாந்தம் மீதும் கொள்கைகளின் மீதும் அவர் மிகப் பெரும் மரியாதை வைத்திருந்தார்.

கோட்டோவியத்தின்பால் அவருக்கு ஈர்ப்பு ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று பிக்காஸோவின் ஓவியங்களின்பால் அவருக்கு இருந்த நாட்டம். தனது கட்டுரை ஒன்றில் தியோடர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்: ‘காந்தியை பல கலைஞர்கள் தனது படைப்புகளில் வெளியிட்டுள்ளனர். கார்ட்டியர் ப்ரஸான் புகைப்படத்திலும், மேற்கில் டாவிட் லோ தனது கார்ட்டூன் சித்திரங்களாலும், நந்தலால் போஸ், சந்தான ராஜ் போன்றவர்கள் தங்களது ஓவியங்களாலும் சித்தரித்த போதும்கூட ஓவியர் ஆதிமூலம் அளவிற்கு காந்தி என்ற ஒரு உருவத்தை ஒரு அடையாளக் குறியீடாகக் கொண்டு எண்ணற்ற ஓவியங்களை வரைந்தவர் எவரையும் எனக்குத் தெரியாது’.

கோட்டோவியத்தின் மூலம் மண்ணின் அடையாளங்களை வரைந்து மக்களை இன்புறச் செய்தவர் ஓவியர் ஆதிமூலம். மீசை, தாடி, வாள், தலைப்பாகையுடன் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் அரசர்கள், ஐயனார் உருவங்கள், தாயும் சேயும் என அவரது கோடுகளின் வீச்சில் புதிய வெளிப்பாடு கொண்ட உருவங்கள் எண்ணிலடங்காதவை. தங்கு தடையின்றி பயணிக்கும் கோடுகள் அவரது ஓவியத்தின் முக்கிய அம்சம். அதன் ஓட்டத்தை தடைசெய்யாதிருக்கவேண்டி அவர் அவற்றை ஒரு நாளும் திருத்தி அமைத்தது கிடையாது. 1964 முதல் 1996 வரை அவர் வரைந்த கோட்டோவியங்கள் ‘Between the Llines’ என்ற பெயரில் 1997 ம் ஆண்டு புத்தமாக வெளிவந்தது. “The Art of Adimoolam” என்ற புத்தகம் 2007ல் வெளிவந்துள்ளது.

தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வருடா வருடம் கலை இரவு என்பதொன்றை நடத்தி வருகிறது. நான் ஓவியர் ஆதிமூலத்தை பல கூட்டங்களில் கண்டபோதிலும் மிக அருகாமையில் சந்தித்தது இந்த கூட்டங்களில்தான். டிசம்பர் 31ம் தேதி காலை பத்து மணி போல் தொடங்கி மாலை வரை நாங்கள் மக்கள் மத்தியில் ஒரு கொட்டகையிட்டு ஓவியங்களை வரைவோம். மாலை அது ஒரு கண்காட்சியின் வடிவில் வைக்கப்படும். மக்கள் மத்தியில் ஓவியங்களைக் கொண்டு செல்வது மூலம் அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு தளமாக ஓவியர்களான விஸ்வம், செழியன், தட்சிணா மூர்த்தி, சீனிவாஸன் மற்றும் நான் உட்பட்ட குழுவினர் இதைப் பார்த்தோம். கண்காட்சி நடக்கும் அதே நேரம் “ஊர் கூடி ஓவியம்” என்ற பெயரில் ஒரு பத்தடி கான்வாஸில் பொதுமக்களும் ஓவியர்களும் கூடி ஒரு ஓவியத்தை உருவாக்குவோம். இம் முயற்சியின் தொடக்கமாக ஆதிமூலம் அவர்கள் தனது காந்தி கோட்டோவியத்தை வரைவார். அக்கோடுகளின் எளிமையும் தெளிவும் லாவகமும் கருத்தாழமும் ஓவியர்களான எங்களை மட்டுமல்லாது பொதுமக்களையும் எவ்வாறு ஈர்ப்பு கொள்ளச் செய்தது என்று வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

இளம் ஓவியர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாது அவர்களது கண்காட்சியை தொடங்கி வைக்கச் சென்றபோதெல்லாம் ஒரு சிறிய தொகையை அவர்களை ஊக்குவிப்பதற்காக அளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் ஓவியர் ஆதிமூலம். அதே நேரம் தமிழ் நாட்டு ஓவியர்களுக்குள் இருக்கும் குழுக்கள் பலவற்றிற்கும் இடையே ஒரே அளவு நட்பு பாராட்டியவர் என்ற பெருமையும் அவரைச் சாரும். தமிழக ஒவிய உலகின் அடையாளமாகவும், குரலாகவும் இருந்த அவரது இடத்தை நிரப்புவது கடினம்.

நிறைத்த மீசை, நெடு நெடுவென்ற உயரத்துடன் கூடிய கம்பீரம், அளவான பேச்சு என்று எமக்கு தந்தைபோல் காட்சியும் ஊக்கமும் கொடுத்த ஓவியரை இனி காணமாட்டோம் என்று நினைக்கையில் கண்களில் நீர் பணிக்கிறது. கோடு ஓவியத்தின் அடி நாதம், அது கட்டியெழுப்பும் பிம்பத்தின் அடித்தளம். இவ்வோவியர் நம்மை விட்டு மறைந்தபோதும் அஸ்திவாரங்களில் அவரது கோடுகள் நம்மை தொடந்து நிற்க வைக்கும் என்ற இளைய தலைமுறையின் நம்பிக்கைகளுடன் என் இரங்கலை பதிவு செய்கிறேன்.


monikhaa@gmail.com

Series Navigation

மோனிகா

மோனிகா