பாரதியாரிடம் ஒரு வேண்டுகோள்

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

முனைவர்இரா.குமார்



கர்னனோடு கொடை போயிற்று- உயர்
கம்ப நாடனுடன் கவிதை போயிற்றென
கவன்று மக்கள் நின்ற காலத்து
வாராது வந்த மாமணியாய்!
நேர்ச்சியுடன் வந்துதித்த கவிதைச்சுடரொளியே
பேசுந்தமிழில் பெரும்பொருளைக் கூறிவிட்ட
வாசத் தமிழ் மலரே!
அறியாமைகொண்டுஅடிமை இருளுக்குள் மூழ்கி
தறிகெட்டுத் தடுமாறிக்கிடந்த மக்களை
வீறுகொண்டு எழச்செய்த விடியலே!
ஆண்மையிழந்து அடிமைப்பெண்ணாய்
ஆண்டுமெழாது இல்லுக்குள் முடங்கியவர்களை
சாட்டையெனும் கவிதையால்
சமருக்குக் கொண்டுவந்து
சாதிக்கச் செய்த செயல்வீரனே!

முறத்தினால் புலியைத்தாக்கிய
மொய்வரைக் குறப்பெண்போல
திறத்தினால் சமூகத்தில் கப்பிக்கிடந்த
தீங்குவிளைப் பெண்ணடிமையை
உறத்தினால் ஓட்டிய விழுச்செம்மலே!

துச்சாதனன் துயிலுரிவதை-நீ
கண்டிருந்தால் கண்ணன் வரும்வரைக்
காத்திராமல் தலைப்பாகை தந்து
தன்மானம் காத்திருப்பாய்

பாரத நாட்டின்மீது
பற்றுவையெனப் பகன்றாய்
இன்றோ
பண்பாடில்லாதவர்கள்
பாரத நாட்டைப் பற்ற வைக்கிறார்கள்

சாதிசமயம் பாராதேயெனப் பகன்றாய்
இன்றோ
சமமாகப்பேசி சண்டாளர்கள்
சாதியைச் சமமாகப்பேசி நாமெல்லாம்
சமமெனக் கொக்கரிக்கிறார்கள்

மண்ணுலகம் சீர்திருத்தி
விண்ணுலகம் சீர்படுத்தும் மாண்பாளா
உன்னிடத்து ஒரு வேண்டுகோள்
மண்ணுலகம் கெடுத்து
விண்ணுலகம் புகும்கயஆவிகளை
நரகமெனும் உலகிற்கு
தயங்காது அனுப்பிவிடு
இல்லையெனில்…
பாழ்படுவது திண்ணம்
விண்ணுலகம்

kumathu36@gmail.com

Series Navigation

முனைவர்இரா.குமார்

முனைவர்இரா.குமார்