ஒன்பது கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

பாவண்ணன்




1. நிறைதல்

மொழி புரியாத கடற்கரை ஊரில்
தென்னந்தோப்போரம் நடந்துசெல்கிறேன்
கொட்டாங்கச்சி மேளத்தை
குச்சியால் தட்டியபடி
காற்றில் திளைத்திருக்கிறாள் ஒரேஒரு சிறுமி
அவள் தலைக்கூந்தல் அழகாக நெளிகிறது
ஆனந்தம் கொப்பளிக்கிறது அவள் கண்களில்
அருகில் நிற்பதை உணராமல்
அவளது விரல் குச்சியை இயக்குகிறது
அவள் தாளத்துக்குக் கட்டுப்பட்டு
குரங்குக்குட்டிகள்போல
உருண்டும்புரண்டும்
எம்பியும் தவழ்ந்தும்
நாடகமாடுகின்றன அலைகள்
கீற்றுகளின் கைதட்டல் ஓசை
கிறுகிறுக்கவைக்கின்றன அவற்றை
உச்சத்தைநோக்கித் தாவுகிறது ஆட்டம்
தற்செயலாகத் திரும்புகிறது சிறுமியின் பார்வை
தெத்துப்பல் காட்டிச் சிரிக்கிறாள்
அவளை தொடரும்படி சைகை காட்டுகிறேன்
கரையெங்கும் பரவி
நிறைகிறது மேளஇசை


2. கருணை

பூட்டிக் கிடக்கிற அந்த வீட்டின்
உடைந்த ஜன்னலின் ஓட்டை வழியே
வெளிச்சத்தைப் பொழகிறது சூரியன்

அதைக்கண்டு முகம் மலரும் பூக்களுமில்லை
அதற்குக் கன்னம் காட்டிச் சிரிக்க
ஒரு குழந்தையும் இல்லை
அதன் வரவால் களிப்பவர்களும் யாருமில்லை
அடர்ந்த குகைபோல
மூடிக் கிடக்கிறது அந்த வீடு

ஏற்றுக்கொள்ள யாருமற்ற நிலையிலும்
வெளிச்சத்தைப் பொழிகிறது சூரியன்


3. அதிசய மலர்

எப்படியோ புரியவில்லை
ஒருநாள் அதிகாலையில்
என் வாசலில் வைக்கப்பட்டிருந்தது ஒரு மலர்

அழகின் வசீகரத்தால்
தொட்டெடுக்கத் துடித்தேன் நான்
தொடாதே என்று தடுத்தன குரல்கள்
அக்கம்பக்கம்
ஆள்முகம் தெரிகிறதா என்று தேடினார்கள்
பார்க்காத பூ என்பதால்
சூடுவதற்கு அஞ்சினாள் மனைவி

ஒரு மலரை
மலரல்லாத காரணங்களுக்காக தள்ளமுடியுமா?
புத்தகஅடுக்கு நடுவே
மலருக்கு இடமொதுக்கி வைத்தேன்
படிக்கமுடியாத புத்தகம்போல்
இதழ்மலர்ந்து கிடந்தது வண்ணமலர்

அதிசய மலரின் அச்சத்தில்
விலகி இருந்தனர் வீட்டார்கள்
வனப்பின் ஈர்ப்பு நாள்பழக
கலவரம் துறந்து சிரித்தார்கள்

பனி புயல் மழை எதுவானாலும்
தவறாது கிட்டியது விசித்திர மலர்
அச்சம் உதறிய மனைவிக்கு
மலர்மீது பிறந்தது ஆசை
எடுத்துச் சூடிக்கொண்டாள்

மறுநாள் காலை
வெறிச்சிட்டிருந்தது மலரற்ற வாசல்



4. பூக்காரி

எஞ்சிய பூச்சரத்தை வாங்கும் ஆள்தேடி
அவசரத்தோடும் கவலையோடும்
பரபரக்கிறாள் பூக்காரி

வந்துநிற்கும் வாகனங்களைப் பார்க்கிறாள்
இறங்கிச் செல்லும் நடுவயதுப்பெண்களை
குழந்தையைத் தோள்மாற்றிக்கொள்ளும் தம்பதிகளை
தோள்பையுடனும் சோர்வுடனும் நடக்கும் முதிர்கன்னிகளை
சிரிப்பும் ஆனந்தமும் குமிழியிடும் இளம்பெண்களை
ஒருகணம் நின்று தலைவாரிச் செல்லும் இளைஞர்களை
திரைப்பாடலை முணுமுணுத்தபடி நடக்கும் நண்பர்களை
எல்லாரையும் பார்க்கிறாள் பூக்காரி

முழத்தின் விலைசொல்லி
வாங்கிச் செல்லுமாறு தூண்டுகிறாள்
பேரத்துக்குத் தயார் என்பதைப்போல்
அவள் குரல் தயங்கித்தயங்கியே ஒலிக்கிறது
நாலுமுழம் கேட்பவர்களிடம்
முழுச்சரத்தையும் தரும் முடிவிலிருக்கிறாள்
ஆனால் முகம்பாராமலேயே நடக்கிறார்கள் பலர்
நெருங்கிச் செல்லும்போது தள்ளி நடக்கிறார்கள் சிலர்
விலைசொல்லும் குரலையே நிராகரிக்கிறார்கள் சிலர்

ஏராளமான பேர்கள் தத்தம் வீட்டைத் தேடி
எல்லாத் திசைகளிலும் போய்க்கொண்டிருக்கிறார்கள்
வாகனங்களின் விளக்குகளால் கண்கள் கூசுகின்றன
மழைபெய்வதைப்போல வானம் இருள்கிறது

கைகோர்த்து நடந்து செல்லும்
இரு சிறுவர்களைப் பார்த்ததும்
அதிகரிக்கிறது வீட்டு ஞாபகம்
செய்யவேண்டிய வேலைகளின் பட்டியல்
மனத்தில் தோன்றியதும் பதற்றம் பெருகுகிறது

இன்னொரு வாகனத்தைப் பார்த்த பிறகு
கிளம்பும் முடிவுடன் நமிற்கிறாள் பூக்காரி



5. ஒரு பகுதிக் கனவு

எல்லாமே மறந்துபோக
நினைவில் தங்கியிருப்பது
மிகநீண்ட கனவின்
ஒரேஒரு பகுதி

மரங்கள் அடர்ந்த காடு
கீச்சுக்கீச்சென இசைக்கும் பறவைகள்
விசித்திரமான வால்களுடைய குரங்குகள்
எங்கோ இடம்பெயர்ந்து செல்லும் யானைகள்
சாரலுடன் விழும் இனிய அருவி
துறுதுறுவென அலையும் வண்ணத்துப்பூச்சிகள்
இரைவிழுங்கிய பின்னர் அசையும் மலைப்பாம்பு
இரு கிளைகளின் இடையே
அசையும் ஒர் ஊஞ்சல்

எவ்வளவோ யோசித்தப் பார்த்தும்
வேறு எதையுமே காட்சிப்படுத்த இயலவில்லை
ஊஞ்சலின் ஆனந்தம் உணர்ந்தபின்
எஞ்சிய கனவு அவசியப்படவும் இல்லை


6. இறுதிப் பயணம்

காற்றிழுத்த இழுப்புக்கெல்லாம்
உடல்நெளித்து
விழக் காத்திருக்கும்
கடைசி இலையை
எட்டுத் திசையெங்கும்
கிளைகளை நீட்டி
காலூன்றி நிற்கும் மரத்தால்
எப்படித் தடுக்கமுடியும்?

வயதைச் சொல்லி
துணைகோர முடியாது
வலிமையை வெளிப்படுத்தி
அச்சுறுத்தவும் முடியாது

துளிர்க்கும் பருவம்
மீண்டும் அரும்புமென்ற
திடமான ஒரு நம்பிக்கையை
தனக்குத்தானே ஊட்டியபடி
இலையின் இறுதிப்பயணத்தை
சங்கடம் கவிந்த மௌனத்துடன்
பார்க்கிறது அந்த மரம்

**

7. பாரம்

அருந்தும் ஆவல்
இன்னும் இருக்குமோ என்றறிய
வேப்பங்கொழுந்தின் சாந்து தடவி
கசப்பேற்றிப் பழக்கிய முலைக்காம்பை
உண்ணத்தருகிறாள் அவள்

குழந்தையோ
உதடு பதிக்க மறுத்து
வெள்ளைச் சிரிப்பைச் சிந்துகிறது
பூவிரல்களால் பற்றுகிறது
நாக்கை நீட்டியபடி
தொட்டுத்தொட்டுத் தள்ளுகிறது
கடைவாயில் எச்சில் வழிய
மழலைக் குரலால்
மீண்டும்மீண்டும் எதையோ சொல்கிறது

அவள் நெஞ்சை அழுத்துகிறது
ஒருபோதும் இனி
ஊட்டமுடியாத முலையின் பாரம்



8. மலர்வனம்

மதிலோரம் செம்பருத்தி மலர்ந்த
வீடுகள்மீது பார்வைபடர
இருள்பிரியாத கருக்கலில்
நடைப்பயிற்சி தொடங்குகின்றனர்
கணவனும் மனைவியும்

குழல்கலைக்கும் இளங்காற்றின்
விரல்படர இடமளித்து
மெய்மறந்து நிற்கும் பெண்களென
எங்கோ ஒருசில வீடுகளில்
பூத்திருக்கின்றன செம்பருத்திப் பூக்கள்

செடியருகில் யாரோ நிற்கும் தோற்றம்
முணுமுணுப்பதைப்போல ஒரு பாடலின் ஓசை
இலைகளிடையே புதைந்திருக்கும் முகம்
நெருங்கிநிற்கும் நொடிமுழுக்க
படபடப்பில் இதயம் வெடிக்கும்
தடுக்கவியலா தவிப்பில்
மௌனமாக உற்றுநோக்கும்
நூறுநூறு விழிகளென துடிக்கும்
மலரருகே விரிந்த இலைக்கூட்டம்
பறிக்கும் முகத்தைநோக்கி
ஏதோ பேச முனைவதைப்போல

உதடுகள் பதற நடுங்கும் கிளைகளை
வசமாகத் தாழ்த்துகின்றன கணவன் கைகள்
இலைவிலக்கி பூவைக் கிள்ள
நீள்கின்றன மனைவியின் விரல்கள்
கைநிறைய சேகரித்தபடி செல்கின்றனர்
தெருக்கோடிவரை

வீடு திரும்பி
பறித்துவந்த பூக்களை
மேசைமீது கொட்டுகின்றனர்

வாடகை அறை
ஒரே கணத்தில் மலர்வனமாக உருமாறுகிறது
சிலிர்ப்பூட்டும் காற்றில்
செடிகளிடையே புகுந்துவிளையாடும்
சின்னஞ்சிறுவர்களாக மாறுகிறார்கள்
கணவனும் மனைவியும்


9. எதிரொலி

பாடிக்கொண்டே
தள்ளுவண்டியில் பழம்கொண்டுவரும் தாத்தா
திடீரென ஒருநாள் காணவில்லை

எங்கே தாத்தா என்று
அம்மாவை நச்சரித்தனர் தெருக்குழந்தைகள்
தாத்தாவோடு பகிர்ந்துகொள்ள
குறும்புக் கதைகட்டி காத்திருந்த இளம்பெண்கள்
எட்டிஎட்டிப் பார்த்து ஏமாந்தார்கள்
கொசுறுப் பழங்களுக்காக
வண்டியைத் தொடரும் சிறுவர்கள்
அங்குமிங்கும்
பத்துநடை நடந்து சலித்துக்கொண்டார்கள்
நாட்டுமருந்து விளக்கத்துக்காக காத்திருக்கும்
கர்ப்பிணிப்பெண்கள்
குழப்பத்தோடு முணுமுணுத்துக்கொண்டார்கள்
ஏதோ ஒரு கோடையில்
பலாப்பழத்தை வெட்டி சுளையெடுத்துத் தந்த
தாத்தாவின் கைலாவகத்தை
நினைவுபடுத்தி சிலாகித்தாள் தொகுப்புவீட்டுப் பாட்டி

அடுத்தநாள்
அற்கும் மறுநாள் என
காலம் நகர்ந்தாலும்
தாத்தாவின் தள்ளுவண்டி வரவேயில்லை

நீட்டிமுழக்கும் அவர் குரல்மட்டும்
மீண்டும்மீண்டும் எதிரொலிக்கின்றன
காற்றில் மோதி


paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்