கீதாஞ்சலி (99) – மௌனமான என் புல்லாங்குழல்!

This entry is part of 32 in the series 20061116_Issue

சி. ஜெயபாரதன், கனடாவடிவுள்ள பாதாளங்களில் நிரம்பிய
ஆழ் கடலில் குதித்து,
மூழ்கினேன்,
வடிவில்லாப் பூரண முத்தைத்
தேடிக் கைக்கொள்ளும்
நம்பிக்கை யோடு!
பருவக் காலத்தால்
துருப்பிடித்த எனது படகில்
துறைமுகம் ஒவ்வொன்றாய்ப்
பயணம் போக
முயல மாட்டேன் நான்!
அலைகள் கொந்தளிக்கும் வேளையில்
அம்மாதிரி
நீர்விளை யாட்டு புரிய
நெடு நேர மாகிறது!
ஆயினும் நான்
துணிவு செய்து விட்டேன்,
மரணமற்ற நிலைக்கு என்னுயிரை
மாய்த்திட!
வேட்பாளர் அமர்ந்துள்ள,
கான அரங்கத்தின் அடித்தளம்
காணா பாதாளத்தில்,
நாதத்தின் தொனி யில்லா
நாண்களில்
கீதம் பொங்கிடும் போதென்
வாழ்க்கைப் புல்லாங் குழலில்
வாசிக்கப் போகிறேன்!
கீதங்களுக் கேற்ப எப்போதும்
நாத நரம்புகளைச் சீராய்
மீட்டுவேன்!
கடைசிக் கானம்
பொங்கித் தணிந்து முடியும் போது,
மௌனமாய்ப் போன எந்தன்
புல்லாங்குழலை அர்ப்பணம் செய்வேன்,
மௌனியின்
பொற் பாதங்கள் மீது!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 13, 2006)]

Series Navigation