கீதாஞ்சலி (88) பாழடைந்த ஆலயம்!

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



பாழடைந்து போன
ஆலயத்தில் உள்ள தெய்வம்!
அறுந்து போன வீணையின் நாண்கள்
ஊமையாய் தொங்கின,
உன் புகழ் பாடாமல்!
பொழுது சாயும் வேளையில்
தொழுதிடும் நேரத்தை
நினைவூட்டும்
ஆலயமணியும் அடிக்க வில்லை!
ஆடாமல், அசையாமல்
காற்று
அமைதியாய் நின்றது,
உன்னிருப்பை உணர்த்தாது!
வாழும் உந்தன்
பாழடைந்த கோயில்முன் கால் வைக்கும்,
வசந்த காலத் தென்றல்,
ஏந்தி வருகிறது,
பூக்களின் கூக்குரல்!
அர்ப்பணம் ஆவதில்லை நினது
ஆராதனைக்கு
அந்தப் பூக்கள்!
வயதான உன் பக்தனுக்கு நீ
வழங்க மறுத்தாய்,
வாஞ்சையாக விரும்பும் ஒன்றை!
கொளுத்தும் மாலை வெயில், நிழல் கலந்த
தூசி மூட்டத்தில்
வயோதிகன் உள்ளப் பசியோடு,
வாடிப் போய் மீண்டும் அணுகுவான்
பாழடைந்த ஆலயத்தை!
ஆரவார மின்றி வந்து போகும்,
தெய்வம் உனக்கு
அநேகக்
கொண்டாட்ட விழாக்கள்!
தொழுதிடும் பல இரவுகள்
கோயில் தீபம் ஏற்றப் படாமல்
நழுவிச் செல்கின்றன!
சூதான கலைத்துவக் குருநாதர்
புதுப்புதுச் சிற்பங்கள்
செதுக்கினார்!
அவற்றின் நேரம் வரும் போது
மறதி வெள்ளம் அடித்துச் செல்லும்!
பாழடைந்த
ஆலயத் தெய்வம் மட்டும்
ஆராதிக்கப் படாமல்,
மாளாத புறக்கணிப்பில்
மீளாமல் நிற்கும்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 23, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா